மும்முனை போட்டியில் தமிழரின் வாக்குகள்?

 May 30, 2024


தென்பகுதி தேர்தல் களம் கொதிநிலையடைந்து வருகின்றது. மும்முனை போட்டிக்கான வாய்ப்பே அதிகம் தென்படுகின்றது. இவ் வாறானதொரு சூழலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாஸ வுக்கும் இடையிலான கூட்டிணைவு தொடர்பிலும் உரையாடல்கள் நடைபெறுகின்றன என்று நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதன் சாத்தியமின்மை தொடர்பான தகவல்களும் சமநிலை யில் வெளிவருகின்றன. எவ்வாறெனினும், தேசிய மக்கள் சக்தியின் செல் வாக்கு அதிகரித்துவரும் நிலையில் பிரதான இரண்டு போட்டியாளர்க ளின் ஒன்றிணைவு கட்டாயம் என்றும் அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன.
அரசியலில் எதிரிக்கு எதிரி நண்பன் என்னும் கூற்று உண்டு. அதற்கு அமையவே விடயங்கள் இடம்பெறும். தற்போதைய நிலையில் சஜித் மற்றும் அநுரவே பிரதான போட்டி யாளர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில், ரணிலின் வியூகங்கள் எவ்வாறு அமையும் என்பதே கேள்வியாகும். ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரையில் அவரின் திறமை தொடர்பில் அனைவருமே அறிவர்.
எனினும், அவரின் அரசியல் வாழ்வில் ஒருமுறைகூட, மக்கள் ஆணையுடன் ஜனாதிபதியாக முடியவில்லை. 2005இல் அதற்கான வாய்ப்பு கிடைத்த போதிலும்கூட தமிழ் மக்க ளின் தேர்தல் பகிஷ்கரிப்பால் அது சாத்தியப்படாமல் போய்விட்டது. இவ்வாறானதொரு சூழலில் இது அவருக்கான கடைசி சந்தர்ப்பம். இந்த சந்தர்ப்பத்தை தக்கவைத்துக்கொள்ள அவர் எவ்வாறான உத்திகளையும் கையாளக்கூடும்.
இவ்வாறானதொரு சூழலில்தான் ரணில் – சஜித் இணைவின் ஊடாக இலகுவாக அதிகாரத்தை கைப்பற்ற முடியுமென்னும் வியூகம் தொடர்பில் சிந்திக்கப்படுகின்றது.
ஒருவேளை இது நடைபெற முடியாது போனால் மும்முனை போட்டி நிச்சயமானது. இந்த மும்முனை போட்டியில் தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானகரமான இடத்தை வகிக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், இதனை தமிழ் மக்கள் எவ்வாறு கையாளப் போகின்றனர் என்பதுதான் கேள்வியாக இருக்கின்றது.
தமிழர் தரப்புகளால் அது முடியுமா என்பது இன்னொரு கேள்வி. தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் ஊடாக விடயங் களை கையாள முடியுமென்னும் அடிப்படையில்தான் விடயங்கள் இது வரையில் கையாளப்பட்டுவந்தன. எனினும், அனைத்து கட்சிகளும் இதுவரையில் தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் கருத்தொற்று மையுடன்கூடிய உடன்பாட்டுக்கு வரவில்லை. அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணையாது விட்டால் வெறுமனே சிவில் சமூக அமைப்புகளால் அவ்வாறானதொரு பொது வேட்பாளரை நிறுத்தி எதிர்பார்த்த வெற் றியை பெற முடியுமா என்பதுதான் கேள்வி.
கடந்த 15 வருடங்களில் தமிழ் தேசியவாத தரப்புகள் என்பேரால் ஒன்றுபட்டு ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியவில்லை. குறிப்பாக கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட எந்தவோர் இணக்கப்பாட்டு முயற்சியின்போதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒத்துவரவில்லை. இதேபோன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உடன்படக்கூடிய ஏனைய தரப்புகள் அனைவரையும் இணைக்கும் முயற்சிக்கு தமிழ் அரசு கட்சி உடன்படவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில்தான் அனைத்து ஒன்றுமை முயற்சிகளும் தோல்வியடைந்தன. இந்த அனுபவத்தின் வழியாக நோக்கினால், தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு வருவதற்கான சாத்தியங்கள் மிகவும் பலவீன மாகவே இருக்கின்றன.
ஆனால், இந்த மும்முனை போட்டிக்கான தேர்தல் களத்தில் தமிழ் வாக்குகள் பிரதான இடத்தை பெறப் போகின் றன. இதனை கையாள்வதில்தான் தமிழருக்கான அடுத்த கட்ட அரசியல் இருக்கின்றது.   நன்றி ஈழநாடு 

No comments: