இலங்கைச் செய்திகள்

யாழில். புகைத்தலுக்கு எதிராக போராட்டம்

தாய்லாந்திற்குள் நுழைவதற்கு இனி விசா தேவையில்லை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முடிவினை தரும் வரைக்கும் போராட்டம் தொடரும்

ஸ்ரீலங்கன் விமான சேவை மறுசீரமைப்பு; 3 நிறுவனங்கள் விலைமனு கோரல்

ரூ. 3,329 மில்: வவுனியாவில் புதிய இருதய, சிறுநீரக நோய்ப் பிரிவு திறப்பு


யாழில். புகைத்தலுக்கு எதிராக போராட்டம்

May 31, 2024 2:28 pm 

சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான போராட்டம் ஒன்று இன்று (31) சங்கானை பஸ் நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்றது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘அழகான இளைஞர்களின் உடல் அழகையும் முகத்தின் வசீகரத்தையும் சிதைக்கும் போதைப்பொருள் பாவனைக்கு ஏமாறமாட்டோம்’, ‘எமது பிள்ளைகளை புகையிலைக் கம்பனிகளிடமிருந்து பாதுகாக்க அனைவரும் அணிதிரள்வோம்’, ‘புகைப்பதால் உன் அழகு புன்னகை இழக்கும்’, ‘உடலை உருக்கும் சிகரெட் பாவனை எதற்கு?’, ‘சினிமாவில் புகைப்பதை பார்த்து உன் கல்வியை அழிக்காதே’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷம் எழுப்பினர்.

வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் நிர்வாகத்தினர், அங்கத்தவர்கள், சங்கானை பிரதேச செயலக பிரதேச செயலர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

போதைப் பொருளுக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணியொன்று “போதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம். வலுவான தேசம் ஒன்றினை நிதமும் கட்டியெழுப்புவோம் ” எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணத்திலும் முன்னெடுக்கப்பட்டது.

நல்லை ஆதீனத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணியானது அங்கிருந்து நல்லூர் பிரதேச செயலகம் வரை சென்று நிறைவடைந்த்து.

இதன் போது மகிழ்ச்சியான குடும்பத்திற்கு புகைத்தலே முதல் எதிரி, இளைஞர்களின் ஆண்மையை இல்லாது செய்யும் புகைத்தல் எதற்கு, புகைத்தலை கைவிடு உனது வாழ்வில் மகிழ்ச்சி இருமடங்காகும், மானிடத்தின் உயிர்கொல்லி மதுவே நீ ஒழிக, அதிகரித்த இளவயது விவாகாரத்திற்கு காரணம் போதைப்பொருளே, போதைபொருளை கைவிடு வாழ்வு வளமாகும், போதையில்லாத வாழ்வே எப்போதும் மகிழ்ச்சியை தரும் உட்பட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களை எழுப்பி பேரணியாக சென்றனர்.

இப் பேரணியில் சமுர்த்தி அதிகாரிகள், நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்திப் பயனாளிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





தாய்லாந்திற்குள் நுழைவதற்கு இனி விசா தேவையில்லை

- விசா இல்லாமல் 60 நாட்கள் தங்கி இருக்கலாம்

May 30, 2024 1:14 pm 

இலங்கையில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் புதிய விசா ஊக்குவிப்புகளுக்கு தாய்லாந்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி இலங்கை சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்குள் நுழைவதற்கு இனிவரும் நாட்களில் விசா தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விசா இல்லாமல் 60 நாட்கள் தாய்லாந்தில் தங்கி இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.   நன்றி தினகரன் 





காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முடிவினை தரும் வரைக்கும் போராட்டம் தொடரும்

May 30, 2024 3:40 pm 

மன்னார் மாவட்டத்தின் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் இன்று (30) மன்னார் நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியது.

இதன்போது அதிகமான பெண்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து பதாதைகளை ஏந்தியவாறு இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின்போது தாய்மார் மற்றும் உறவுகள் தங்கள் கரங்களில் ஏந்தியிருந்த பதாதைகளில்,

‘அரசே உங்களிடம் சரணடைந்த எம் உறவுகள் எங்கே?’ ‘ஓஎம்பி நம்பிக்கை இல்லை. ஓஎம்பி வேண்டாம்.’ ‘சர்வதேச விசாரணை வேண்டும்’ ,வெள்ளை வேனில் கடத்தப்பட்ட எம் உறவுகள் எங்கே?’ என்பன காணப்பட்டன.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவகளின் சங்கத்தின் சார்பாக திருமதி உதயச்சந்திரா இங்கு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கையில்,

அரசாங்கமானது உள்நாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும்போது அரசானது தங்கள் பாதுகாப்பு படைகளையும் தங்கள் இனத்தையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளிலேயே காணப்படுகின்றது.

எங்கள் வீடுகளிலிருந்து எங்கள் கண்முன்னே படைகளால் அழைத்துக் கொண்டு சென்ற எங்கள் பிள்ளைகளுக்காகவே இன்று (30) நாங்கள் இந்த இடத்திலிருந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகள் உறவினர்களுக்காக போராடிக் கொண்டு நிற்கின்றோம்.

நாங்கள் இறந்த பிள்ளைகளுக்காக போராடவில்லை. மாறாக எங்களிடமிருந்து அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளைகளுக்காகவே போராடிக் கொண்டு இருக்கின்றோம். ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்களை கொன்று குவித்தது இந்த அரசு.

அப்பொழுது உலக நாடு புதினம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. இருந்தும் நாங்கள் இன்று சர்வதேச நாடுகளிடம் கேட்டு நிற்பது எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த 15 வருடங்களாக எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது.? இவர்களை ஒழித்து வைத்திருக்கின்றார்களா? இதைத்தான் நாங்கள் கேட்டு நிற்கின்றோம்.

எங்கள் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு ஏமாத்து வித்தையாகவே காணப்படுகின்றது.

ஒவ்வொரு மனித ஆணைக்குழுவும் எங்களுடைய துன்பங்களையும், வேதனைகளையும் அறிந்து செல்வதிலேயே அக்கறைக் காட்டுகின்றனர்.

ஆனால் என்ன நடக்கின்றது என்பதே எமக்குத் தெரியவில்லை. வடக்கு கிழக்கில் மனித உரிமையே கிடையாது.

மனித உரிமைய இல்லாத நாட்டில்தான் நாங்கள் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எங்களுக்கு இங்கு எந்தவிதமான சுதந்திரமும் கிடையாது.

நாங்கள் இப்பொழுது கேட்டு நிற்பது எங்கள் பிள்ளைகள் எங்கே என்பதுதான். சர்வதேசம் எங்களுக்கு இதற்கான முடிவினை தரும் வரைக்கும் எங்கள் போராட்டம் தொடரும் என்பது மட்டும் உண்மை என இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

தலைமன்னார் விஷேட நிருபர் – வாஸ் கூஞ்ஞ - நன்றி தினகரன் 





ஸ்ரீலங்கன் விமான சேவை மறுசீரமைப்பு; 3 நிறுவனங்கள் விலைமனு கோரல்

- பொருத்தமான நிறுவனத்தை தேர்ந்தெடுக்க நடவடிக்கை

May 28, 2024 9:31 am

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு 3 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவற்றில் 2 வெளிநாட்டு நிறுவனங்களாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றில் ஒரு நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு, ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் கூறினார்.

இதற்காக விலைமனு கோரலை சமர்ப்பித்துள்ள நிறுவனங்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து பொருத்தமான நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை தற்போது விலைமனுக்கோரல் சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக விலைமனு கோரலை சமர்ப்பிக்க வழங்கப்பட்டிருந்த காலப்பகுதி, கடந்த மார்ச் 5ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது.

எனினும் குறித்த காலப்பகுதியை 45 நாட்களால் நீடிப்பதற்கு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நடவடிக்கை எடுத்திருந்தார்.ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கான முதலீட்டாளரைக் கண்டறிவதற்காக 1.2 பில்லியன் டொலர் பெறுமதியான கடன் பெறுமதியை குறைப்பதற்கு உலக வங்கியின் முதலீட்டு ஆலோசனை நிறுவனமான சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் எனப்படும் IFC நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 





ரூ. 3,329 மில்: வவுனியாவில் புதிய இருதய, சிறுநீரக நோய்ப் பிரிவு திறப்பு

- கொழும்பிற்கு அடுத்தபடியாக வடக்கில் வலுவான சுகாதார சேவை அமைக்கப்பட்டுள்ளது

May 27, 2024 3:19 pm 

– மருத்துவம், சுற்றுலாவிற்கும் பெரும் பங்களிப்பு செய்யும்

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதிஉதவியுடன் ரூ. 3,329 மில்லியன் செலவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இருதய மற்றும் சிறுநீரக நோய் பிரிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (26) திறந்து வைக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது இந்த திட்டத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த புதிய மூன்று அடுக்கு கட்டடத்தில் இருதய சிகிச்சை பிரிவு, ஆய்வு கூடம்(Cath Lab), கார்டியோடோராசிக் தியேட்டர் (Cardiothoracic theatre), இருதய அவசர சிகிச்சைப் பிரிவு (Cardiac ICU), எக்கோ கார்டியோகிராபி (Echo Cardiography), உடற்பயிற்சி ECG,நடமாடும் இரத்த அழுத்த கண்காணிப்பு பிரிவு (Ambulatory BP Monitoring),நடமாடும் ECG கண்காணிப்பு பிரிவு(Ambulatory ECG monitoring),போன்ற நவீன வசிகள் உள்ளன. சிறுநீரகவியல் பிரிவில் டயாலிசிஸ் பிரிவு, ஸ்கேன் அறை மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான விசேட வசதி அறை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு போன்ற வசதிகள் உள்ளன.

பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து இதய நோய் மற்றும் சிறுநீரக நோய் பிரிவு அடங்கிய புதிய கட்டடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, வடமாகாண மக்களுக்காக நெதர்லாந்து அரசாங்கத்தின் ஆதரவின் கீழ் கிடைத்துள்ள இந்த சுகாதார வசதிகளை மேலும் மேம்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

வடமாகாண மக்களுக்காக நவீன மற்றும் அதிநவீன வைத்தியசாலை கட்டமைப்பு வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஏ9 வீதியில் பலப்படுத்தப்பட்டுள்ள இந்த நவீன வைத்தியசாலை கட்டமைப்பு இந்நாட்டின் மருத்துவ சுற்றுலா வர்த்தகத்திற்கு பெரும் உறுதுணையாக அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மேலும் உரையாற்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

இப்பிரிவு திறக்கப்படுவதன் மூலம் வடமாகாண சுகாதார சேவை தொடர்ந்து மேம்படுத்தப்படும். மன்னார் மாவட்ட வைத்தியசாலையை புனரமைத்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இந்த மருத்துவப் பிரிவை நிர்மாணிப்பதற்காக அப்போதைய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் நான் நெதர்லாந்து அரசாங்கத்துடன் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கு பாடுபட்டேன். இன்று அதனைத் திறந்து வைப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்காக தங்களை அர்ப்பணித்த அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

பொறுமையுடன் இந்தத் திட்டத்தை நிறைவு செய்வதற்குப் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவையை வலுப்படுத்த நெதர்லாந்து அரசாங்கம் பரந்த பங்களிப்புகளை செய்துள்ளது. தற்போது யாழ்ப்பாண வைத்தியசாலையுடன் பருத்தித்தறை வைத்தியசாலையும் வடமாகாண மக்களுக்கான சுகாதார வசதிகளை வழங்கி வருகிறது.

ஏ9 வீதி இலங்கையின் முதுகெலும்பைப் போன்றது. அந்த வீதியின் ஊடாக வவுனியா, மாங்குளம், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் மூன்று நவீன வைத்தியசாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கராபிட்டி வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றிய பின்னர் யாழ்ப்பாண வைத்தியசாலையையும் தேசிய வைத்தியசாலையாக மாற்ற தீர்மானித்துள்ளோம்.

மேலும், ஏ9 வீதியின் அடுத்த நிறைவில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை உள்ளது. அத்துடன் வவுனியா வைத்தியசாலையை அபிவிருத்தி செய்து போதனா வைத்தியசாலையாக மாற்றுமாறு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் என்னிடம் கோரியிருந்தார். அநுராதபுரத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் 65 கி.மீ தூரம் மட்டுமே உள்ளது. இன்று இந்த மாகாணம் மிகவும் வலுவான மருத்துவமனை கட்டமைப்பை பெற்றுள்ளது. இது கொழும்பிற்கு வெளியே வேறு எந்த மாகாணத்திலும் பார்க்க முடியாத நிலை என்றே கூற வேண்டும்.

வடமாகாண மக்களுக்கான இந்த சுகாதார சேவைகளை எவ்வாறு மேலும் வலுப்படுத்துவது என்பதை நாம் ஆராய வேண்டும். கொழும்பைத் தவிர, அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் வரையான ஏ9 வீதியும் சுகாதாரப் பாதுகாப்பின் முக்கிய மையமாக மாறியுள்ளது. மேலும் இதன் மூலம் மருத்துவ சுற்றுலாவுக்கு பல வாய்ப்புகள் உருவாகியுள்ளன. மேலும், இந்நாட்டு மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான முக்கியமான திட்டமாக இது அமையும். இந்த திட்டத்தை மேலும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தத் திட்டத்தைத் தொடர நெதர்லாந்து அரசாங்கம் எதிர்காலத்தில் எங்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்,

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் பிரிவை நிர்மாணிப்பதில் பங்களிப்பு வழங்கிய நெதர்லாந்து அரசாங்கத்திற்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த எமது நாட்டை பொறுப்பேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாட்டை படிப்படியாக அபிவிருத்தி செய்து வருகிறார். அதற்காக ஜனாதிபதிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. ஆபத்தான நிலையில் இருந்த இந்த நாட்டை நல்ல நிலைக்கு அவர் மாற்றியுள்ளார்.

இங்குள்ள பல மருத்துவமனைகள் பணியாளர்கள் மற்றும் பௌதீக வளங்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியில், அந்தப் பிரச்சினைகளையெல்லாம் ஒரேயடியாகத் தீர்க்க முடியாது. ஆனால் ஜனாதிபதி அந்த பிரச்சினைகளை படிப்படியாக தீர்த்து வருகின்றார். எதிர்காலத்தில் எங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக நாம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கான நெதர்லாந்தின் தூதுவர் பொனி ஹோபெக் (Bonnie Horbach),

இன்று நாம் திறக்கும் நான்காவது மருத்துவமனை இது. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி தெதர்லாந்து நிறுவனமான VAMED மற்றும் இலங்கை சுகாதார அமைச்சுடன் கைச்சாத்திடப்பட்ட ஒத்துழைப்பு உடன்படிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட பயணம் இன்று வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் வடமாகாணத்திற்கு அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் நான்கு வைத்தியசாலைகள் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகையில் 75% சலுகைக் கடனாகவும், எஞ்சிய தொகை நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியாகவும் வழங்கப்பட்டது. நெதர்லாந்து அரசாங்கம் வழங்கும் மானியத்தின் பெறுமதியை மொத்த செலவில் 35% ஆக உயர்த்த முடிவு செய்தது. இந்த மானியத்தின் அதிகரிப்பு, இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதிலும், வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவைகளுக்கு ஆதரவளிப்பதிலும் நெதர்லாந்து அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், குலசிங்கம் திலீபன், வடமாகாண பிரதம செயலாளர் லட்சுமணன் இளங்கோவன், வடமாகாண சபை அதிகாரிகள், மாகாண சுகாதார அதிகாரிகள், வைத்தியசாலை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நன்றி தினகரன் 


No comments: