எம் ஜி ஆர் சந்திரபாபு மோதல் - ச. சுந்தரதாஸ்

 

தமிழ்த் திரையுலகிலும், அரசியலிலும் மங்காப் புகழ் பெற்று விளங்கியவர் மக்கள் திலகம் எம் ஜி ஆர். அவருடைய நூற்றி ஏழாவது பிறந்த தினம் இம்மாதம் பதின்னேழாம் திகதியாகும். 1917 ஜனவரி 17ம் திகதி பிறந்த அவர் தமிழக முதல்வராக பத்தாண்டுகளுக்கு மேல் பதவி வகித்து மறைந்த பின்னரும், அதாவது முப்பத்தியேழாண்டுகள் கழிந்த பின்னும் இன்னும் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கிறார்.


நல்லவராக, கொடைவள்ளலாக, ஏழைகளுக்கு இரங்குபவராக, தாய்க்குலத்தை மதிப்பவராக அவருக்கென்று ஓர் இமேஜ் , பிம்பம் இன்று வரை இருந்து வருகின்ற போதும் , அவருக்கு எதிரான விமர்சனங்களும், எதிர்மறை கருத்துகளும் அவ்வப்போது வைக்கப் பட்டே வருகின்றன. அவற்றில் ஒன்று தான் நகைச்சுவை நடிகர் ஜே பி சந்திரபாபுவின் திரையுலக வாழ்வை அவர் சீரழித்து விட்டார், அவர் இயக்கிய படத்தில் தொடர்ந்து நடிக்க மறுத்து அதனால் அவரை மன உளைச்சலுக்கும், பொருளாதார சீர்குலைவுக்கும் ஆளாக்கி விட்டார் என்பதாகும். இன்றும் அவர் மீது இப் பழிச்சொல் சுமத்தப் பட்டு வருகிறது. ஆனால் இது பற்றிய உண்மை விவரங்களை எம் ஜி ஆர் என்றும் வெளிப்படுத்தியதில்லை. சந்திரபாபு ஒருசில விவரங்களை சொன்ன போதும் அவை முழுமையாக இல்லை. பிரபல கதாசிரியரும், வசனகர்த்தவுமான ஆரூர்தாஸ் தான் எழுதிய ஒரு நூலில் இது தொடர்பான சில தகவல்களை எழுதியிருந்தார். அத் தகவல்களும் பூரண விளக்கத்தை தரவில்லை.

ஆனால் இந்த விஷயங்கள் நடந்து அறுபது ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது மேலும் சில புதிய தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன. அந்த தகவல்களை வெளியிட்டவர் வேறு எவருமில்லை , சந்திரபாபுவின் கூடப் பிறந்த சகோதரர் , இன்று உயிரோடு இருக்கும் ஒரே தம்பி ஜவஹர் தான் அவர்!

தூத்துக்குடியில் கிறிஸ்துவ மீனவ சமூகத்தில் பிறந்து சிறு வயதிலேயே இலங்கைக்கு சென்று வளர்ந்து, அங்கு தனது ஆங்கில அறிவையும், நாகரீகத்தையும் பெற்றுக் கொண்டு மீண்டும் சென்னைக்கு திருப்பியவர் சந்திரபாபு. நடிப்பின் மீது இருந்த அதீத ஆர்வத்தால் கடும் முயற்சி செய்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை தேடிக் கொண்ட சந்திரபாபு மிக குறுகிய காலத்தில் பிரபல நகைச்சுவை நடிகராக உருவானார்.

அன்றிருந்த பெரிய பட நிறுவனங்களான மாடர்ன் தியேட்டர்ஸ், ஏவி எம் புரடக்சன்ஸ் , ஆர் ஆர் பிக்ச்சர்ஸ் , ஜெமினி பிலிம்ஸ், போன்ற பட நிறுவனங்கள் சந்திரபாபுவை தங்கள் படங்களில் நடிக்க வைப்பதில் ஆர்வம் காட்டின. பத்மினி பிக்சர்ஸ் அதிபரான இயக்குனர் பி ஆர்
பந்துலு தான் டைரக்ட் செய்த சபாஷ் மீனா படத்தில் சந்திரபாபுவை நடிக்க வைக்க ஒரு இலட்சம் ரூபாயை 1958ம் வருடமே கொடுத்து சந்திரபாபுவின் நட்சத்திர அந்தஸ்தை உறுதி செய்தார். அதே போல் ஏவி எம் செட்டியார் தான் தயாரித்த சகோதரி படத்துக்கு சந்திரபாபுவின் காமெடி அவசியம் என்று உணர்ந்து அவசர அவசரமாக அவருக்கு என்று ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் அவரை நடிக்க வைத்து அதனால் படமும் வெற்றி பெற்றது.

எம் ஜி ஆரை பொறுத்த வரை அவரின் படங்களுக்கு சந்திரபாபு
இந்தியமையாதவராகவே கணிக்கப்பட்டார். குலேபகாவலி, மகாதேவி, புதுமைப்பித்தன், போன்ற அவரின் படங்களில் சந்திரபாபுவின் பாத்திரம் பேசும் படியாகவே இருந்தது. அதிலும் எம் ஜி ஆர் தான் சொந்தமாக தயாரித்துப் உருவாக்கிய நாடோடி மன்னன் படத்துக்கு சந்திரபாபுவையே நகைச்சுவைக்கு ஒப்பந்தம் செய்தார். இவ்வாறு சந்திரபாபுவின் திறமையை நன்கு கணித்தவராகவே எம் ஜி ஆர் விளங்கினார்.

சந்திரபாபுவிடம் இருந்த ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் கோட்டு சூட்டு போட்டு ஆங்கிலம் பேசி மேற்கத்திய ஸ்டைலிலும் அவரால் நடிக்க முடியும், மெட்ராஸ் தமிழ் பேசியும் அவரால் நடிக்க முடியும். இதற்கு மேலாக சொந்தக் குரலில் படி நடிக்கும் ஆற்றலும் அவரிடம் இருந்தது. இது தவிர கதாசிரியர்க்குரிய திறமையும் அவரிடம் காணப்பட்டது. சிவாஜி நடித்து வெள்ளிவிழா கண்டா பாவ மன்னிப்பு படத்தின் கதை அவர் எழுதியது என்பதை அப்படியே அமுக்கி விட்டார்கள்!

இத்தனை திறமை பெற்ற சந்திரபாபு படம் ஒன்றை டைரக்ட் செய்யப் போகிறார், அதில் எம் ஜி ஆர் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்றவுடன் திரையுலகம் பரபரப்படைந்தது. விநியோகஸ்தர்கள் படத்தை போட்டி போட்டு வாங்க தயாரானார்கள். படத்தை தயாரிக்க முன்வந்தவர்கள் ஜூபிலி பிக்சர்ஸ் பட நிறுவனமாகும். இவர்கள் ஏற்கனவே அன்பு எங்கே, பார்த்திபன் கனவு ஆகிய படங்களை தயாரித்தவர்கள். ஆதலால் விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.

எம் ஜி ஆரின் நடிப்பில் சந்திரபாபுவின் இயக்கத்தில் உருவாகவிருந்த படத்துக்கு மாடி வீடு ஏழை என்று பெயரிடப்பட்டு படப்பிடிப்பும் சொன்ன நாளில் தொடங்கி நடந்தது. படத்துக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் கூற்றுப்படி அன்றைய பொழுது இனிதாகவே கனிந்தது. ஆனால் பின்னர் படப்பிடிப்பு தொடரவில்லை.

இங்குதான் எம் ஜி ஆர் மீது குற்றசாட்டு எழுந்தது. சந்திரபாபு மீது அவருக்கு இருந்த அதிருப்தி காரணமாக கால்ஷீட் கொடுக்காமல் படத்தில் நடிக்காமல் விட்டு விட்டார் என்று கூறப்பட்டது. சந்திரபாபு வழங்கிய ஒரு பேட்டியில் சிறந்த நடிகர்கள் இருவர்தான் , ஒருவர் தான், மற்றையவர் சிவாஜி கணேசன் என்று பேட்டி கொடுக்க அது எம் ஜி ஆருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்திவிட்டதால் படத்தில் இருந்து ஒதுங்கி விட்டதாக கூறப்பட்டது. கால்ஷீட் தொடர்பில் சந்திரபாபுவுக்கும், எம் ஜி சக்ரபாணிக்கும் இடையில் நடைபெற்ற சூடான வாக்குவாதத்தில் போது இது விடயமாக பேசப்பட்டது என்று ஆரூர்தாஸ் எழுதியிருந்தார்.

அது எவ்வாறு இருந்தாலும் இப்போது சந்திரபாபுவின் தம்பி ஜவஹர் வழங்கிய ஒரு ஒளி பேட்டியில் மாடி வீட்டு ஏழை நின்று போனதுக்கு புதுக் காரணம் ஒன்றை சொல்லியுள்ளார்.

மாடி வீடு ஏழை படத்தின் கதாநாயகியாக , எம் ஜி ஆருக்கு

ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானவர் நடிகையர் திலகம் சாவித்திரி. முதல் நாள் படப்பிடிப்பின் போது சாவித்திரியை பார்த்த எம் ஜி ஆர் அவர் உடல் பருமளை சுட்டிக் காட்டி தனக்கு ஏற்ற ஜோடியாக அவர் திகழ மாட்டார் என்று கருதி சாவித்திரியை படத்தில் இருந்து நீக்கி வேறு ஒரு நடிகையை கதாநாயகியாக்க சிபாரிசுக்கு செய்தார் என்றும் அதனை சந்திரபாபு ஏற்கவில்லை என்றும் அதனால் படப்பிடிப்பு நிரந்தரமாக நின்று விட்டது என்று கூறியுள்ளார்.

சாவித்திரியும் சந்திரபாபுவும் மிக நெருங்கிய நண்பர்கள். அப்படியிருக்கும் போது அவரை படத்தில் இருந்து நீக்க சந்திரபாபுவால் முடியாது போயிருக்கலாம். அதே போல் தனது இமேஜுக்கு தகுந்தபடி ஒரு நடிகை தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று எம் ஜி ஆரும் விடாப்பிடியாக இருந்திருக்க கூடும். இதனிடையே சந்திரபாபு கொடுத்த பேட்டியும் எம் ஜி ஆருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்க கூடும் . இவை எல்லாம் சேர்ந்து மாடி வீடு ஏழை படத்தை ஆரம்பத்திலேயே முடக்கியிருக்கலாம்!

இது போன்ற காரணங்களால் பல படங்கள் தடைப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இந்தப் படத்தில் எப்படியோ எம் ஜி ஆரின் தலை உருட்டப்பட்டிருக்கிறது. என்றாலும் சில ஆண்டுகள் கழித்து தான் தயாரித்த அடிமைப் பெண் படத்திலும், பறக்கும் பாவை , கண்ணன் என் காதலன் படங்களிலும் நடிப்பதற்கு எம் ஜி ஆர் சந்திரபாபுவுக்கு வாய்ப்பை வழங்கியிருந்தார் என்பதை மறந்து விடக் கூடாது.

தன்னுடைய சில குணாம்சம் காரணமாகவே சந்திரபாபு பல பட வாய்ப்புகளை இழந்தார் என்பதனையும் சந்திரபாபுவின் சகோதரர் ஜவஹர் தனது பேட்டியில் பதிவு செய்தும் உள்ளார் !

No comments: