உலகச் செய்திகள்

யெமன் ஹூத்திக்கள் மீது அமெ., பிரிட்டன் தாக்குதல்

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஹேகில் ஆரம்பம்

போயிங் விமானங்கள் அவசர தரையிறக்கம்

காசா போர் 4ஆவது மாதத்தை தொட்டது: உயிரிழப்புகள், பிராந்திய பதற்றம் உச்சம்

காசாவில் கடும் தாக்குதல்களுக்கு மத்தியில் பிராந்தியத்தில் போர் பரவுவதை தடுப்பதற்கு பிளிங்கன் மும்முரமாக பேச்சு: போரைத் தொடர இஸ்ரேல் உறுதி



யெமன் ஹூத்திக்கள் மீது அமெ., பிரிட்டன் தாக்குதல்

செங்கடலில் பதற்றம் அதிகரிப்பு

January 13, 2024 6:14 am 

செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வரும் யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வான் மற்றும் கடல் வழியாக தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலை அடுத்து யெமனின் பல பகுதிகளிலும் வெடிப்புகள் இடம்பெற்றதை ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. தேவை ஏற்பட்டால் மேலும் நடவடிக்கை எடுக்கத் தயங்கப்போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.ஹூத்திக்களுக்கு ஆதரவு அளித்து வரும் ஈரான் இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளது. மறுபுறம் இஸ்ரேலை நோக்கிச் செல்லும் கப்பல்கள் தொடர்ந்து இலக்கு வைக்கப்படும் என்று ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து பேசுவதற்கு உடன் பாதுகாப்புச் சபையை கூட்டும்படி ரஷ்யா கோரியுள்ளது.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவே செங்கடலில் செல்லும் இஸ்ரேலுடன் தொடர்புபட்ட கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்துவதாக ஹூத்திக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஆளில்லா விமானங்கள், பளிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள், ராடார் மற்றும் வான் கண்காணிப்பகம் ஆகிய ஹூத்திக்களின் திறன்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

தலைநகர் சனாவுடன் சாதா மற்றும் தார், அதேபோன்று ஹுதைதா நிர்வாகப் பகுதிகளில் தாக்குதல்கள் இடம்பெற்றதாக ஹூத்தி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதலை “அமெரிக்க – சியோனிச – பிரிட்டன் ஆக்கிரமிப்பு” என்று வர்ணித்துள்ளார்.   நன்றி தினகரன்   





இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஹேகில் ஆரம்பம்

January 12, 2024 1:37 pm 

இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை வழக்கு ஹேகில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்ததோடு, இஸ்ரேல் ஐ.நா இனப்படுகொலைக்கு எதிரான சாசனத்தை மீறியதாக வழக்கை தொடுத்த தென்னாபிரிக்கா குற்றம்சாட்டியது.

காசாவில் இஸ்ரேல் நடத்தும் இராணுவ நடவடிக்கையை உடன் நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா கோரிக்கை விடுத்தது. இதனை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.

“ஒரு நாட்டின் மீதான எந்த ஒரு தாக்குதலும், அது எவ்வளவு தீவிரமாக இருந்தபோதும், இந்த சாசனத்தை மீறுவதை நியாயப்படுத்தவோ அல்லது பாதுகாக்கவோ முடியாது” என்று தென்னாபிரிக்க நீதி அமைச்சர் ரொனால்ட் லமோலா குறிப்பிட்டார். ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்தே இஸ்ரேல் படை நடவடிக்கையை ஆரம்பித்தது.

1948 ஆம் ஆண்டு ஹோலோகாஸ்ட் படுகொலையை தொடர்ந்து கையொப்பமிட்ட உடன்படிக்கையான ஐ.நா. இனப்படுகொலை சாசனத்தை இஸ்ரேல் மீறி இருப்பதாகவே தென்னாபிரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

நேற்று ஆரம்பமான இந்த வழக்கு விசாரணை இன்றும் தொடரவுள்ளது.   நன்றி தினகரன் 





போயிங் விமானங்கள் அவசர தரையிறக்கம்

January 8, 2024 11:15 am 

அமெரிக்காவில் போயிங் மெக்ஸ் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் இந்த அவசர உத்தரவைப் பிறப்பித்தது. அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பறந்துகொண்டிருக்கும்போது விமானத்தின் பாகம் தூக்கி எறியப்பட்டது. அந்த விமானம் கலிபோர்னியா நோக்கிப் புறப்பட்ட சிறிது நேரத்தில் அழுத்தத்தை உணர்ந்ததாக விமானப் பணியாளர்கள் கூறினர். அதில் இருந்த 171 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து 170க்கும் அதிகமான போயிங் மெக்ஸ் விமானங்கள் அனைத்தும் பறப்பதற்குத் தகுதியானவையா என்று உடனே சோதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அமெரிக்காவின் போயிங் நிறுவனம் நிர்வாகத்தின் உத்தரவை ஆதரிப்பதாகக் கூறியது. புதிய உத்தரவால் அலஸ்கா ஏர்லைன்ஸ் நூற்றுக்கும் அதிகமான பயணங்களை ரத்துச் செய்தது.   நன்றி தினகரன் 






காசா போர் 4ஆவது மாதத்தை தொட்டது: உயிரிழப்புகள், பிராந்திய பதற்றம் உச்சம்

போர் பரவுவதை தடுக்க இராஜதந்திர முயற்சிகள்

January 8, 2024 6:00 am

காசாவில் போர் நேற்றுடன் (7) 3 ஆவது மாதத்தை பூர்த்தி செய்த நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் இருப்பதோடு இந்தப் போர் பலஸ்தீன நிலப்பகுதியை தாண்டி பரவுவதை தடுப்பதற்கான இராஜதந்திர முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன.

இந்தப் போர் லெபனான், ஆக்கி

ரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் செங்கடல் கப்பல் பாதையில் பரவுவதை தடுக்கும் முயற்சியாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த இராஜதந்திரியான ஜோசெப் பொரல் ஆகியோர் பிராந்தியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

லெபனான் எல்லையில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான பரஸ்பரம் தாக்குதல்கள் தீவிரமடைந்திருப்பதோடு மேற்குக் கரையில் பெரும் கொந்தளிப்பு சூழல் நீடித்து வருகிறது. காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தும் வரை செங்கடலில் உள்ள கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவதாக ஈரான் ஆதரவு யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் உறுதியாக உள்ளனர்.

துருக்கி மற்றும் கிரேக்க நாடுகளுக்குச் சென்ற பிளிங்கன் ஜோர்தான் தலைநகர் அம்மானை சென்றடைந்துள்ளார். பொரல் லெபனானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். மோதல் பரவுவதை தடுப்பதற்கே தாம் முன்னுரிமை அளித்து வருவதாக இந்த இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

“இந்த மோதல் பரவுவதை தடுப்பதில் நாம் தீவிர அவதானம் செலுத்தியுள்ளோம்’” என்று ஜோர்தான் செல்வதற்கு முன் கிரேக்கத்தில் இருந்து பிளிங்கன் குறிப்பிட்டிருந்தார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் காசா போர் வெடித்தது தொடக்கம் பிளிங்கன் பிராந்தியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது இது நான்காவது முறையாகும்.

இந்தப் போரின் மூன்று மாத நிறைவையொட்டி கடந்த சனிக்கிழமை இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் ரியர் அட்மிரல் டானியல் ஹகரி அது தொடர்பில் விபரங்களை வெளியிட்டிருந்தார். காசாவில் அதிகரித்துள்ள உயிரிழப்புகள் மற்றும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியில் இஸ்ரேல் தனது படை நடவடிக்கையை தணிக்கும் சமிக்ஞைகளை அண்மைய நாட்களில் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் வடக்கு காசாவில் ஹமாஸ் ஆயுதக் குழுவின் ‘இராணுவ கட்டமைப்பை’ முழுமையாக தகர்த்ததாக ஹகரி குறிப்பிட்டுள்ளது. அந்தப் பகுதியில் 8,000 போராளிகள் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். “தற்போது மத்திய மற்றும் தெற்கு காசா பகுதிகளில் ஹமாஸை செயலிழக்கச் செய்வதில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்” என்று ஒன்லைன் வழியாக அளித்த விபரத்தில் அவர் கூறினார்.

“2024 ஆம் ஆண்டிலும் போர் தொடர்ந்து நீடிக்கும். வடக்கு மற்றும் தெற்கில் ஹமாஸை செயலிழக்கச் செய்யும் போர் இலக்குகளை அடையும் பொருட்டு நாம் தொடர்ந்து செயற்படுவோம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலில் 1200 பேர் வரை கொல்லப்பட்டு 240 பேர் வரை பணயக்கைதிகளாக கடத்தப்பட்டதை அடுத்தே இந்தப் போர் வெடித்தது.

தொடர்ந்து 100க்கும் அதிகமான பணயக்கைதிகள் ஹமாஸ் பிடியில் இருப்பதாக நம்பப்படுகிறது.

எனினும் காசாவில் இஸ்ரேலிய தரைப்படை பலஸ்தீனன் போராளிகளின் எதிர்ப்பை தொடர்ந்து சந்தித்து வருவதோடு வடக்கு காசாவில் கட்டுப்பாட்டை கொண்டுவந்ததாக இஸ்ரேல் கூறியபோதும் அங்கு பலஸ்தீன போராளிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.ஹமாஸை ஒழிப்பதாகக் கூறி இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்த உயிரிழப்பு எண்ணிக்கையில் காசா சுகாதார அமைச்சு போராளிகள் மற்றும் பொதுமக்களை பிரித்துக் கூறாதபோதும் கொல்லப்பட்டவர்களில் 70 வீதமானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர். இந்தப் போரினால் காசாவில் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அனைவரும் போல் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதோடு வீடுகள் மற்றும் சிவில் கட்டுமானங்கள் தகர்க்கப்பட்டு உணவு, நீர் மற்றும் மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

“அவர்கள் தொடர்ந்தும் எம் மீது

குண்டு போடுகிறார்கள்”

தெற்கு காசாவின் பிரதான நகரான கான் யூனிஸில் மோதல்கள் தீவிரம் அடைந்திருப்பதோடு அங்கு இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் சரமாரியாக குண்டுகளை வீசி வருகின்றன. கான் யூனிஸில் அல் நப்ரிஸ் குடும்பத்திற்கு சொந்தமான வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் (06) நடத்திய வான் தாக்குதலில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு கூறியது.

கான் யூனிஸின் அல் அமல் மருத்துவமனைக்கு அருகில் கடுமையான ஷெல் குண்டுகள் வீசப்பட்டு வருவதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது. ஆளில்லா விமானங்களில் இருந்து குண்டு விசும் சத்தங்களுக்கு மத்தியில் கூர்மையான பாகங்கள் மருத்துவமனைக்குள் விழுந்து வருவதாகவும் அந்த அமைப்பு சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு குடியிருப்பு கட்டடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டு 50 பேர் வரை காயமடைந்ததாகவும் மத்திய காசாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் நான்கு பேர் வரை கொல்லப்பட்டதாகவும் பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வபா கூறியது.

கான் யூனிஸில் பிணவறை ஒன்றுக்கு வெளியில் நின்று கொண்டிருந்த 11 வயது மஹ்மூத் அவாத் இஸ்ரேலிய வான் தாக்குதலில் தமது பெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினார். “நாம் அல் ஷட்டி அகதி முகாமில் இருந்தபோது காசாவில் போர் நடப்பதாக அவர்கள் துண்டு பிரசுரங்களை வீசினார்கள், எனவே நாம் பாதுகாப்பான இடம் என்பதால் கான் யூனிஸுக்கு தப்பி வந்தோம், அவர்கள் தொடர்ந்தும் எம் மீது குண்டு போடுகிறார்கள்” என்று அந்த சிறுவன் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

நூறாயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்துள்ள காஸாவின் தெற்கு நகரமான ரபாவில் நேற்று முன்தினம் அதிகாலை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஏ.எப்.பி செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

பஞ்சம் தலைவிரித்தாடுவதாலும், நோய் பரவுவதாலும் தீவிரமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து ஐ.நா எச்சரித்துள்ள நிலையில், தொடர்ந்து தாக்குதல்களால் பொதுமக்கள் மேலும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

மத்திய காசாவின் அகதிகள் முகாமிலிருந்து ரபாவுக்கு தப்பிச் சென்ற 60 வயதான அபு முகம்மது, காசாவின் எதிர்காலம் ‘இருண்டு கிடக்கிறது, மிகவும் சிரமமானது’ என்று கூறினார்.

அவ்வட்டாரத்தின் பெரும்பகுதி ஏற்கனவே சிதைந்துகிடக்கிறது. “காசா வாழ முடியாததாக மாறிவிட்டது” என்று ஐ.நா மனிதாபிமான தலைவர் மார்ட்டின் கிரிபித்ஸ் அறிவித்துள்ளார்.தாக்குதல், ஊட்டச்சத்துக் குறைபாடு, சுகாதார சேவைப் பற்றாக்குறை ஆகியவை காசாவில் ‘1.1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை பயமுறுத்துகிறது’ என்று ஐ.நா குழந்தைகள் அமைப்பு எச்சரித்தது.

காசாவின் 36 மருத்துவமனைகளில் பெரும்பாலானவை தாக்குதல்களால் செயலிழந்துவிட்டதாகவும் எஞ்சியுள்ள மருத்துவ வசதிகளில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனினிலும் அறுவர் பலி

இதேவேளை ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் ஜெனின் நகரில் பொதுமக்கள் ஒன்று கூடல் ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று (07) காலை நடத்திய குண்டுவீச்சில் குறைந்தது ஆறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜெனின் நகருக்கு அருகில் இருக்கும் தியாகிகள் சதுக்கத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் ஒன்றுகூடல் ஒன்றின் மீதே இஸ்ரேல் குண்டு வீசியதாக பார்த்தவர்களை மேற்கோள்காட்டி அனடொலு செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் ஜெனின் அரச மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜெனின் நகர் மற்றும் அங்குள்ள அகதி முகாமில் இஸ்ரேலியப் படை நேற்று சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன்போது துப்பாக்கி மற்றும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்த முகாம் மீது ஹெலிகொப்டர்கள் மூலமும் குண்டுகள் வீசப்பட்டபோதும் பாதிப்புகள் குறித்து உறுதி செய்யப்படவில்லை.காசாவில் போர் வெடித்தது தொடக்கம் கிழக்கு ஜெரூசலம் உட்பட மேற்குக் கரையில் குறைந்தது 325 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மறுபுறம் இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேலின் மெரோன் மலையில் உள்ள வான் கண்காணிப்பு நிலையத்தின் மீது 60க்கும் அதிகமான ரொக்கெட் குண்டுகளை பாய்ச்சியதாக ஹிஸ்புல்லா அமைப்பு கூறியது. அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் ஹிஸ்புல்லாவின் வட்டாரத்தில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதலைத் தொடுத்ததாகக் கூறியது.

பிராந்தியத்துக்கான தனது ஒரு வார பயணத்தை ஆரம்பித்திருக்கும் பிளிங்கன் கடந்த சனிக்கிழமை துருக்கி மற்றும் கிரேக்க தலைவர்களை சந்தித்த நிலையில் இஸ்ரேல், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை, ஜோர்தான், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா மற்றும் எகிப்துக்கு பயணிக்கிறார்.

ஸ்தான்பூலில் அவர் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹகன் பிதான் மற்றும் ஜனாதிபதி தையிப் எர்துவானை சந்தித்தபோது, காசா மீதான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை தொடர்பில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டார். மற்ற நேட்டோ நாடுகளைப் போலன்று ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்க்காத துருக்கி மத்தியஸ்த நடவடிக்கைகளுக்கு முன்வருகிறது.

மறுபுறம் பெய்ரூட் சென்றிருக்கும் பொரல், போரில் லெபனானைச் சம்பந்தப்படுத்துவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்தார். “இராஜதந்திர வாயில்கள் திறந்தே உள்ளன. போர் மாத்திரம் தீர்வல்ல – அது மோசமான தீர்வு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.   நன்றி தினகரன் 





காசாவில் கடும் தாக்குதல்களுக்கு மத்தியில் பிராந்தியத்தில் போர் பரவுவதை தடுப்பதற்கு பிளிங்கன் மும்முரமாக பேச்சு: போரைத் தொடர இஸ்ரேல் உறுதி

January 9, 2024 6:00 am

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் ஒருங்கிணைந்த அமைதி முயற்சி இல்லாத பட்சத்தில் இந்தப் போர் பிராந்தியம் எங்கும் பரவக் கூடும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் எச்சரித்துள்ளார்.

பிராந்தியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிளிங்கன், நேற்று (08) ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவூதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்திய பின் இஸ்ரேலுக்கு விரைந்துள்ளார். பிராந்தியத்தில் போர் பரவும் அச்சுறுத்தலை தவிர்க்கும் முயற்சியாகவே பிளிங்கன் ஐந்து நாள் விஜயமாக பிராந்தியத்திற்கு பயணித்துள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோர்தான் மற்றும் கட்டார் நாடுகளுக்குச் சென்ற அவர் இந்த வாரத்தில் மேற்குக் கரை மற்றும் எகிப்துக்கும் பயணிக்கவுள்ளார்.

“பிராந்தியத்தில் பெரும் பதற்றமான தருணம் ஒன்றாக இது உள்ளது. அதிக பாதுகாப்பற்ற மற்றும் வேதனைகளுக்குக் காரணமான எளிதாகப் பரவக்கூடிய மோதல் ஒன்றாக இது உள்ளது” என்று அபூதாபி செல்வதற்கு முன் டோஹாவில் செய்தியாளர்களை சந்தித்த பிளிங்கன் கூறினார்.

டோஹாவில் பேசிய அவர் மேலும் கூறும்போது, தற்போது நான்கு மாதங்களை தொட்டிருக்கும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரில் இடம்பெயர்ந்துள்ள பலஸ்தீனர்கள் தமது வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இஸ்ரேல்–ஹமாஸ் போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் இஸ்ரேலின் லெபனானுடனான வடக்கு எல்லையில் கொந்தளிப்பு நீடிப்பதோடு யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் மற்றும் இஸ்ரேலை இலக்கு வைத்து 100க்கும் அதிகமான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

காசா போர் வெடித்தது தொடக்கம் நான்காவது முறையாக பிராந்தியத்திற்கு சென்றிருக்கும் பிளிங்கடன் இன்று இஸ்ரேலிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இஸ்ரேலுக்கு பல பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை வழங்கும் அதன் நெருங்கிய கூட்டாளியாக அமெரிக்கா இருந்தபோதும், இந்தப் போரினால் உயர்ந்து வரும் உயிரிழப்பு எண்ணிக்கை கவலையை அதிகரித்திருப்பதோடு சர்வதேச அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதிக்கும்படியும் காசாவில் அவசர நடவடிக்கையாக உதவிகளை அதிகரிக்கும்படியும் பிளிங்கன் இஸ்ரேலை கேட்கவிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும் 73 பேர் பலி

எனினும் காசா மீதான இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 73 பேர் கொல்லப்பட்டு 99 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. மத்திய காசாவில் டெயிர் அல் பலாஹ்வுக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் எட்டுப் பேர் கொல்லப்பட்டனர்.

“நான் படுக்கையில் இருந்து விழிக்கும்போது இது ஒரு பயங்கரக் கனவு என்று நினைத்துக் கொண்டே விழிக்கிறேன். என்றாலும் இது உண்மையானது” என்று காசா குடியிருப்பாளரான 51 வயது நபீல் பாத்தி கூறுகிறார். “எமது வீடு மற்றும் எனது மகனின் வீடு தகர்க்கப்பட்டிருப்பதோடு எமது குடும்பத்தில் 20 பேர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். நான் உயிருடன் இருந்தால் எங்கு போவது என்று எனக்குத் தெரியவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எகிப்துடனான எல்லையை ஒட்டிய தெற்கு காசாவின் ரபாவில் கடந்த ஞாயிறன்று கட்டாரைத் தளமாகக் கொண்ட அல் ஜசீரா தொலைக்காட்சி நிறுவனத்தின் இரு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் சென்று கொண்டிருந்த கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஏ.எப்.பி மற்றும் ஏனைய ஊடக நிறுவனங்களுக்காகவும் பணியாற்றி வரும் முஸ்தபா துரியா மற்றும் அல் ஜஸீராவின் காசா அலுவலகத் தலைவரின் மகன் ஹம்ஸா வயீல் தஹ்து ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் அல் ஜஸீராவின் காசா அலுவலகத் தலைவர் ஏற்கனவே தனது மனைவி மற்றும் மேலும் இரு குழந்தைகளை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போர் ஆரம்பித்தது தொடக்கம் அதிகப் பெரும்பான்மையான பலஸ்தீனர்களான குறைந்தது 79 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக மத்திய காசாவை இலக்கு வைத்து இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருப்பதோடு பீரங்கி குண்டுகள் இரவு வானை ஒளியூட்டி வருவதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் காசாவில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 22,835 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர். மேலும் 58,416 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மத்திய காசாவில் உள்ள அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனையின் நூற்றுக்கணக்கான நோயாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் காணாமல்போயுள்ளனர். பொரும்பாலான மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சுமார் 600 நோயாளர்கள் அந்த மருத்துவ வளாகத்தில் இருந்து அறியப்படாத இடம் ஒன்றுக்கு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நிலையில் அவர்கள் எங்கே உள்ளனர் என்பது தெரியவில்லை என உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளன.

ஹமாஸ் அதிருப்தி

அமெரிக்காவின் செல்வாக்கை பயன்படுத்தி அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஜோர்தான் மன்னர் அப்துல்லாஹ், பிளிங்கனை வலியுறுத்தி இருப்பதோடு, இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையை தொடர்வது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.

எனினும் தொடர்ந்து போரிடப்போவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.

“ஹமாஸை ஒழிப்பது, அனைத்து பணயக்கைதிகளும் திரும்புவது மற்றும் இஸ்ரேலுக்கு காசா தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இல்லை என்பதை உறுதி செய்வது ஆகிய அனைத்து இலக்குகளையும் நாம் அடையும் வரை போர் நிறுத்தப்படாது” என்று ஞாயிறன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தை ஆரம்பித்து பேசும்போது நெதன்யாகு வலியுறுத்தினார். “இதனை நாம் எமது நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இருவருக்கும் கூறிக்கொள்கிறோம்” என்றார்.

எனினும் காசாவில் ஏற்பட்டுள்ள அழிவுகள் சர்வதேச அளவில் போர் நிறுத்தத்திற்கான அழைப்பை வலுக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்குத் தொடுத்திருக்கும் தென்னாபிரிக்காவுக்கு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் இன்னும் ஆதரவு வழங்காதது தொடர்பில் ஹமாஸ் அதிகாரியான சமி அபூ சுஹரி, எக்ஸ் சமூகதளத்தில் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

“இதற்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம், இல்லையெனில் இந்த உத்தியோகபூர்வ மெளனம் காசாவில் எஞ்சியிருப்போரையும் ஒழிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஓர் ஆணையாக அமையும்” என்று அவர் கூறினார்.

தென்னாபிரிக்கா தொடுத்திருக்கும் இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் ஹேகிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் பகிரங்க விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கு துருக்கி, மலேசியாவுடன் தற்போது பொலிவிய நாடும் தென்னாபிரிக்காவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளன.

மேற்குக் கரை கொந்தளிப்பு

காசாவுக்கு வெளியில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வன்முறை அதிகரித்திருப்பதோடு கடந்த சில வாரங்களில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் குடியேறிகளுடனான மோதல்களில் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜெனின் நகரில் துருப்புகள் மீது தாக்குதல் நடத்திய பலஸ்தீன போராளிகளுக்கு எதிராக வான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. இதில் ஏழு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஜெனின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இஸ்ரேலிய எல்லை பொலிஸ் அதிகாரி ஒருவரின் வாகனம் வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மறுபுறம் மேற்குக் கரையில் மோதுவதற்கு வந்ததாக சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்றின் மீது இஸ்ரேலிய படையினர் சூடு நடத்தியபோது மற்றொரு காரில் இருந்த பலஸ்தீன சிறுமி ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அவசர சேவை பிரிவு குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 





No comments: