எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 91 முதல் விருதை அரைநூற்றாண்டுக்கு ( 1972 இல் ) முன்பே எனக்கு வழங்கிய ரத்தினசபாபதி அய்யர் ! அய்யரின் அமுத விழாக்காலத்தில் எனக்கு பாராட்டு விழா !! முருகபூபதி


இம்மாதம் 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மெல்பனில்,  Berwick  என்ற இடத்தில் அமைந்துள்ள மூத்த பிரஜைகள் மண்டபத்தில், நான் அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினர் எனக்கு பாராட்டு விழாவை நடத்தினார்கள்.

கடந்த ஆண்டு,  கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருதையும், பிரான்ஸில் வென்மேரி அறக்கட்டளை  வழங்கிய வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் விருதையும் நான் பெற்றுக்கொண்டமையினால், இந்த பாராட்டுவிழாவை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை சங்கத்தின் முன்னாள் தலைவரும், சமகால செயற்குழு உறுப்பினருமான இலக்கிய நண்பர் சட்டத்தரணி, பாடும் மீன் சு. ஶ்ரீகந்தராசா அவர்கள் முன்வைத்து,  தனது முழு உழைப்பினையும் வழங்கி அனைவரையும் இணைத்து  நடத்தி முடித்துவிட்டார்.

  இந்த விழா அவசியமில்லை.  நான் எனக்குத்தெரிந்த தொழிலையே


செய்து வருகின்றேன்.  “ என்று நான்  எடுத்துக்கூறியிருந்தேன். எனினும்  என்னை சம்மதிக்கவைத்து அவர் நடத்தினார்.

இந்த விழா கடந்த ஆண்டு இறுதியில்தான் நடக்கவிருந்தது.  எதிர்பாராதவகையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு வந்தமையால், நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

எனினும், அவர் விடாப்பிடியாக எடுத்த பணியை நிறைவேற்றியே தீருவோம் என்ற மனப்பான்மையோடு தீவிரமாக இயங்கியிருந்தார்.  சங்கத்தின் தலைவர் எழுத்தாளர் ஓவியர் கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்களின் தலைமையில் விழா நடந்தது. 

அன்று  கடுமையான மழைநாள்.  எனினும் பலரும் திரளாக வருகை தந்து சிறப்பித்தனர். கலந்துகொண்ட  அனைவரும் தங்கள் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

இதனால் எனக்கு எந்தப்புகழும் இல்லை. அனைத்துப்புகழும் விழாவை ஒழுங்கு செய்வதில் முன்னின்று உழைத்த நண்பர் பாடும் மீன் ஶ்ரீகந்தராசா அவர்களையும்,  அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தலைவர் உட்பட அனைத்து  செயற்குழு உறுப்பினர்களையும் நிகழ்ச்சியில் உரையாற்றியவர்களையும் இணைந்து கொண்டவர்களையும்தான் சாரும்.

என்னைப்போன்ற எழுத்தாளர்கள் அனைவருமே விருதுகள், பாராட்டுரைகள்,  பரிசுகள் எதனையும் எதிர்பார்க்காமலேயே இந்தத் துறைக்கு வந்தவர்கள்.

இவையெல்லாம் எழுதத் தொடங்கி சிறிது காலத்தின் பின்னர் அல்லது  பல ஆண்டுகளுக்குப்பின்னர்தான் எழுத்தாளர்களுக்கு கிடைத்திருக்கின்றன.

சிலருக்கு கிடைக்காமலே போயிருக்கின்றன. பலர் விருதுகளை காணாமலேயே கண்களை நிரந்தரமாக மூடிவிட்டனர்.

 அதனால், விருது கிடைக்காதவர்கள் அனைவருமே சிறந்த எழுத்தாளர்கள் இல்லை என்ற முடிவுக்கு நாம் வந்துவிட முடியாது.

படைப்பிலக்கியம் மற்றும் ஊடகத்துறைக்குள் நான் பிரவேசித்து  அரைநூற்றாண்டும் கடந்துவிட்டது.

இந்த ( 2024 )  ஆண்டு ஜூலை மாதம் வந்தால்,  எனது முதலாவது சிறுகதை கனவுகள் ஆயிரம் வெளிவந்து, 52 வருடங்களாகப்போகிறது.

அதன்பின்னர், அச்சிறுகதையும் இடம்பெற்ற சுமையின் பங்காளிகள் என்ற எனது முதலாவது சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு 1976 ஆம் ஆண்டில் இலங்கையில் தேசிய சாகித்திய விருதும் கிடைத்துவிட்டது.


அதன்பின்னர்தான் பல இலக்கிய விருதுகள் வரவாகின.

ஆயினும், என்னைப்பற்றிய எதுவித முன்னறிமுகமும் இல்லாமலேயே எனது முதல் சிறுகதையை படித்துவிட்டு, 1972 ஆம் ஆண்டு வெளியான மல்லிகை இதழில்  தனது வாசிப்பு அனுபவத்தை எழுதி, என்னை திகைப்பில் ஆழ்த்திய அன்பர் கடந்த 07 ஆம் திகதி நடந்த பாராட்டு விழாவுக்கும் வருகைதந்து வாழ்த்தினார்.

எனது ஏற்புரையில்,  “ எனக்கு முதல் விருது தந்தவரே அரைநூற்றாண்டு காலம் கடந்த நிலையில் மீண்டும் நேரில் தோன்றி வாழ்த்துகிறார் “  என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டேன்.

அவர் அன்று – அரைநூற்றாண்டுக்கு முன்னர் தந்த சான்றிதழே 


எனக்குக் கிடைத்த முதல் விருது.

அந்த அன்பர்தான்  எழுத்தாளர் பா. ரத்தினசபாதி ஐயர்.

முதல் சந்திப்பு என்ற தொடரை கடந்த ஒரு வருடகாலமாக  யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் தீம்புனல் வார இதழில் எழுதி வருகின்றேன்.

57 ஆவது அங்கத்தில் நான் எழுதிய குறிப்புகளில்   ரத்தினசபாதி ஐயர் அவர்களைப் பற்றித்தான் எழுதியிருக்கின்றேன். இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி எண்பதாவது பிறந்த தினம்.


அமுதா விழா கண்டுள்ள,  எனக்கு முதலாவது விருதை தனது எழுத்துக்களினால்  வழங்கிய அன்பர் ரத்தினசபாபதி ஐயரை   

எனது எழுத்துலக வாழ்வில் என்றைக்குமே என்னால் மறக்கமுடியாது   அன்பர் ரத்தின சபாபதி ஐயர் பற்றிய எனது குறிப்புகளை வாசகர்கள் இனி படிக்கலாம்.

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த தெணியான்  எழுதிய

பொற்சிறையில் வாடும் புனிதர்கள்  தொடர்கதையாக யாழ்ப்பாணத்தில் முரசொலி பத்திரிகையில் 1987 ஆம் ஆண்டில்   45 நாட்கள் வெளிவந்தது.

அடிநிலை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை  பிராமணர்களும்


வேறு ஒரு ரூபத்தில் எதிர்கொள்கின்றார்கள் என்பதையும், பெரும்பாலான, எழுத்தாளர்கள் பார்க்கத்தவறிய பக்கத்தையும்  இலக்கியத்தில் பதிவுசெய்தவர் தெணியான்.

தெணியான் வேறு ஒரு சமூகத்தைச்சேர்ந்தவர். அவருக்கு அந்நியப்பட்ட பிராமண சமூகம் பற்றி அவரால் எப்படி எழுதமுடிந்தது? இங்குதான் மற்றும் ஒரு சுவாரசியமான முன்கதைச்சுருக்கத்தை நாம் அறிகின்றோம்.

எழுத்தாளரும் இலக்கிய ஆர்வலருமான பா. ரத்னசபாபதி ஐயர் இலங்கையில் வடமராட்சியைச்சேர்ந்தவர். அவர் பிராமண சமூகத்தில் பிறந்திருந்தாலும், புரோகிதர் வேலை தெரிந்திருந்தாலும்  ஒரு தபால் அதிபராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.  தற்பொழுது லண்டனில் இருக்கிறார்.


அவர் தந்திருக்கும் பல அரிய தகவல்களின் பின்னணியில் அந்த நாவலை தெணியான் எழுதினார்.  1983 வன்செயல்களையடுத்து கொழும்பிலிருந்து ஊருக்கு வந்துசேர்ந்த ரத்னசபாபதி ஐயரும் தெணியானும் வடமராட்சியில் சந்திக்கிறார்கள்.

ஐயர் தங்கள் சமூகத்தின் கதைகளைச் சொல்கிறார். தெணியான் மேலும் தரவுகளை திரட்டுகிறார். மூத்த எழுத்தாளர் கே. டானியலும் இதுவிடயத்தில் உதவுகிறார்.

முதலில் தெணியான் இரண்டு சிறுகதைகளை எழுதி பத்திரிகை , இதழ்களுக்கு அனுப்பியும் ஓராண்டு காலமாக அவை வெளிவரவில்லை. மீண்டும் எழுதி மல்லிகைக்கு அனுப்புகின்றார். அக்கதைகளை பிரசுரிப்பதில் மல்லிகைக்கு எந்தவித தயக்கமும் இல்லை.

பின்னர் நாவல் எழுதுகிறார். அத்தியாயங்களை பிரித்து


தொடர்கதையாக்குகிறார்.

எஸ்.திருச்செல்வம்,  ஆசிரியராக விருந்த முரசொலி வெளியிடுகிறது.

இக்கதை முரசொலியில் வெளிவந்த காலப்பகுதியின் அரசியல் பின்னணி குறித்து இந்த நாவல் பேசவில்லை. இரண்டு பெரிய இராணுவத்தினதும் ஆக்கிரமிப்புக்குள் சிக்கியிருந்த வடமராட்சியின் பின்னணியில் இக்கதை நகர்கிறது. ஆனாலும், இதில் இராணுவங்களினதும் இயக்கங்களினதும் நடவடிக்கைகள் வரவேயில்லை.

இந்தத்தகவல்களுடன் இந்த முதல் சந்திப்பு தொடரின் 57 ஆவது அங்கத்தில்  ரத்தினசபாபதி அய்யரை நான்  எங்கே சந்தித்தேன் என்பதைச்  சொல்ல வருகின்றேன்.


1972ஆம் ஆண்டு ஜுலை மாதம் மல்லிகையில்,  எனது முதலாவது சிறுகதை கனவுகள் ஆயிரம் வெளிவருகிறது.  அதற்கு அடுத்த மாதம் ஓகஸ்டில் வாசகர் கடிதத்தில் அக்கதை பற்றி சுலோ ஐயர் என்பவர் நயப்புரையை எழுதியிருந்தார்.

யார் இந்த சுலோ ஐயர்..? என நான் தேடிக்கொண்டிருந்தபோது,  ரத்தினசபாபதி ஐயர் என்ற தபால் அதிபர்தான் தனது மனைவியார் சுலோசனாவின் பெயரின் முதல் எழுத்துக்களையும் இணைத்து அதனை எழுதியிருக்கிறார் என்பது தெரியவந்தது.

ரத்தினசபாபதி ஐயரின் சிறுகதைகளை, கட்டுரைகளை அவ்வப்போது மல்லிகையில் படித்திருக்கின்றேன். எனினும் அக்காலப்பகுதியில்  அவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.

எனது முதல் சிறுகதையை படித்துவிட்டு, ஊக்கமூட்டும் வகையில்


எழுதியிருந்தவரைத் தேடி,  அவர் அப்போது கொட்டாஞ்சேனையில் வசித்த இல்லத்திற்கு ஒரு மாலைவேளையில் சென்றபோது,  அவர் இல்லை.  அந்த இல்லத்தின்  வாயிலில் அவரது மனைவியார் சுலோசனாவையும், பிறந்து சில மாதங்களேயாகியிருந்த அவர்களது முதல் குழந்தை பானுவையும்தான் நான்  பார்த்தேன்.

பல நாட்களின் பின்னர்தான் ரத்தினசபாபதி ஐயரை, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக அமைந்திருந்த ராஜேஸ்வரி பவான் சைவ உணவகத்தில் முதல் முதலில் சந்தித்தேன்.


அன்று இருவரும் ஒரு மேசையில் அமர்ந்து உணவருந்தியவாறு இலக்கியம் பேசினோம்.  அவருடனான உறவு கடந்த அரைநூற்றாண்டையும் கடந்து விக்கினம் எதுவுமின்றி தொடருகின்றது என்பதற்கு இம்மாதம் 07 ஆம் திகதி நான் வதியும் மெல்பனில் எனக்கு நடந்த பாராட்டுவிழாவில் அவரும் அவரது துணைவியாரும், மகள் பானுவும் மருமகன் கலாநிதி ஶ்ரீகௌரி சங்கரும் வருகை தந்து சிறப்பித்ததிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

இலக்கிய சொந்தம்,   எப்போதும் எனக்குத்  தொடர்கதைதான் !

கடந்த டிசம்பர் மாதம் தனது எண்பது வயது அமுத விழாவைச்


சந்தித்திருக்கும் ரத்தினசபாபதிஐயர், பருத்தித்துறையில்                                   07-12 – 1943 ஆம் திகதி,  ஏழு பிள்ளைகளைக்கொண்ட  ஒரு நடுத்தரக்குடும்பத்தில்  கடைசிப் பிள்ளையாகப் பிறந்து, பருத்தித்துறையில் ஆரம்ப, இடை நிலை கல்வியை முடித்துக்கொண்டு,  தபால் திணைக்களத்தில் தொழில் நிமித்தம் இணைந்தவர்.

தனது பாடசாலைப் பருவத்திலேயே வாசிப்பதில் தீவிர ஆர்வம் காண்பித்திருக்கும் இவர் இலக்கியப்பிரதிகளும் எழுதத் தொடங்கினார்.


மல்லிகை ஜீவா, தெணியான், கே. டானியல்,  ஏ. ஜே. கனகரட்னா, மு. கனகராஜன், எஸ். வி. தம்பையா,  முதலான எழுத்தாளர்களுடன் நட்புறவு கொண்டிருந்த ரத்னசபாபதி ஐயர்,  எப்போதும் மலர்ந்த முகத்துடன் சுவாரசியமாக உரையாடுபவர்.

சிறிய கெமரவை வைத்துக்கொண்டு தான் தரிசிக்கும் அற்புதமான காட்சிகளையும் படம் எடுப்பதில் அலாதிப்பிரியம் கொண்டிருந்தவர்.

கண்டி கச்சேரியில் சிறிது காலம் சிறாப்பராகவும் பணியாற்றியிருக்கும் ரத்தினசபாபதி ஐயர்,  வடக்கு, கிழக்கு, மலையகம் எங்கும் பல பிரதேசங்களில் தபால் அதிபராக பணியாற்றியமையால், சிங்கள மொழியையும் சரளமாகப்பேசக்கூடியவர்.

நீச்சல் விளையாட்டிலும்  ஆர்வம் காண்பித்தவர்.  ஒரு தடவை,


பேலியாகொடை பூபால விநாயகர் ஆலயத்தின் அருகில் ஓடும் களனி கங்கையின்  ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு நீந்திச்சென்று சாகசம் காண்பித்தவர். 

 மஹகம சேகர ( 1929 – 1976 )  என்ற பிரபல சிங்களக்  கலைஞரின் ஞாபகார்த்தமாக இலங்கை அரசு முத்திரை வெளியிட்டுள்ளது. அத்துடன் அவரது பெயரில் தென்னிலங்கையில் ஒரு வீதியும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

 ஒரு தடவை,  மஹகமசேகரவின் மனைவிக்கு  தமது கணவரின் ஞாபகார்த்த முத்திரை தேவைப்பட்டபோது, அதனை தாமதிக்காமல் தேடிக்கொடுத்தவர்தான் இந்த ரத்தினசபாதி ஐயர். அமுதா விழா கண்டிருக்கும் அவரை இந்தப்பதிவின் ஊடாக  வாழ்த்துகின்றேன்.

 ---0----

No comments: