இலங்கைச் செய்திகள்

 இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஜப்பான் நிதி அமைச்சர் பாராட்டு

03 பேரிடமும் விட்டுக்கொடுப்பு இல்லாததால் தமிழரசுக் கட்சி தலைமை தெரிவுக்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு

ஜனாதிபதியை சந்தித்த பிரித்தானிய இளவரசி ஆன்

சுற்றுலா இலக்குகள் இலங்கை 04 ஆவது இடம்

ஜனாதிபதித் தேர்தல்: ஐ.தே.க வேட்பாளராக ஜனாதிபதி ரணில்இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஜப்பான் நிதி அமைச்சர் பாராட்டு

- ஜனாதிபதியின் சரியான பொருளாதார வேலைத்திட்டமே காரணம்

January 12, 2024 5:16 pm

– ஜப்பான் உதவியில் கைவிடப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிப்பதில் கவனம்

இலங்கை பொருளாதார ரீதியில் அடைந்துள்ள சிறந்த முன்னேற்றங்களுக்கு ஜப்பான் நிதி அமைச்சர் ஷூனிச்சி சுசூகி (Shunichi Suzuki) பாராட்டு தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி மற்றும் பணவீக்க குறிகாட்டிகளில் காணக்கூடிய முன்னேற்றங்களை சுட்டிக்காட்டிய ஜப்பான் நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான பொருளாதார வேலைத்திட்டத்தின் பலனாகவே அந்த முன்னேற்றங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜப்பான் நிதியமைச்சர் Shunichi Suzuki, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜப்பான் – இலங்கை பொருளாதார உறவுகளை பலப்படுத்திக்கொள்ளும் நோக்கிலேயே ஜப்பான் நிதி அமைச்சர் இலங்கைக்கு இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.இலங்கையின் பொருளாதரத்தை நிலைப்படுத்தி மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் கடன் நிலைப்படுத்தல் தொடர்பில் கவனம் செலுத்தி பல்வேறு சிறப்பான பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொண்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் இலங்கையின் கடன் நீட்டிப்பு முயற்சிகளுக்கு ஜப்பான் வழங்கிய சிறப்பான ஒத்துழைப்புக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கு ஜப்பான் யென்களாக வழக்கப்பட்டுவந்த கடன்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் ஜப்பான் நிதி அமைச்சர், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் சங்கத்துடனான புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மேற்பார்வையின் பின்னர் கடன் நிலைத் தன்மை தொடர்பில் அறிவிப்பு விடுத்த பின்னர் மேற்படி கடன்களை மீள வழங்கும் இயலுமை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் கடல் பாதுகாப்பு தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும், இலங்கையின் எதிர்கால பயணத்திற்காக ஜப்பானினால் வழங்க முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

ஜப்பான் – இலங்கை தொடர்புகளை மேலும் பலப்படுத்த, தான் அர்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

வர்த்தக துறையை சிறந்த மட்டத்தில் பாதுகாப்பதற்கு ஏற்றுமதி தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, இலங்கைக்கான புதிய பொருளாதார முறைமை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதன்போது இலங்கையின் கடன் நீடிப்பு செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் விளக்கமளித்த இலங்கை தரப்பினர், கடன் நீடிப்பை இவ்வருடத்தின் முதற் காலாண்டில் நிறைவு செய்வதே இலங்கையின் இலக்காகும் என தெரிவித்தனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மீள் நிர்மாண பணிகள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டதோடு, ஜப்பான் நிதி உதவியில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடைநடுவில் கைவிடப்பட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில், ஜப்பான் தூதுக் குழுவினர் மற்றும் இலங்கை சார்பில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.   நன்றி தினகரன்    


03 பேரிடமும் விட்டுக்கொடுப்பு இல்லாததால் தமிழரசுக் கட்சி தலைமை தெரிவுக்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு

January 12, 2024 6:49 am 


இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் பதவிக்காக போட்டியிடும் மூவரும் விட்டுக்கொடுப்பு இல்லாததால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தி தலைவரை தெரிவு செய்வதென நேற்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் பதவிக்காக போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர்களான சி. சிறிதரன், எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பியோகேஷ்வரன் மூவரும் நேற்று (11) மு.ப. 10.45 மணிக்கு மாதிவெல, சிறிதரனின் விடுதியில் கூடி பேசினர்.

இந்த சந்திப்பில் எவருமே வேட்பாளர் தெரிவிலிருந்து ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அவரவர் பக்க நியாயங்களைபேசினர். எனவே இதனையடுத்து எதிர்வரும் 21ஆம் திகதி திருகோணமலையில் பொதுக்குழு கூட்டத்தில் ஜனநாயமுறையில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தி தலைவர் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைப் பதவிக்குபோட்டியிடும் எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் கூடிப்பேசுவதற்குநேற்று முன்தினம் இணக்கப்பாடு எட்டப்பட்டது. இதற்கென, அவர்களுக்கு ஒருநாள் அவகாசமும் வழங்கப்பட்டது.

இதன் பின்னரே தேர்தலை நடத்துவதா? இல்லை இணக்கப்பாட்டுடன், சம்பிரதாய அடிப்படையில் தலைவரை ஏகமனதாக நியமிப்பதா? என்று தீர்மானிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் கொழும்பில் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் (11) பிற்பகல் மாவை.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போதே கால அவகாசம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், தவராசா கலையரசன்,வடமாகாண தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்.ப.சத்தியலிங்கம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம், பொருளாளர் கனகசபாபதி, கொழும்புக்கிளைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, முன்னாள் செயலாளர் துரைராஜசிங்கம், ஒழுக்காற்றுக்குழுத் தலைவர் சீனித்தம்பி யோகேஸ்வரன், திருமலை மாவட்டக்கிளைத் தலைவர் குகதாசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

எதிர்வரும் 21ஆம் திகதி கட்சியின் புதிய தலைமைக்கான தெரிவு தொடர்பில் பேசப்பட்டது.

இந்த விடயம் சம்பந்தமாக, இரா.சம்பந்தன், மாவை, தவராசா,கனகசபாபதி, உள்ளிட்டவர்கள் கட்சியின் கடந்த காலச் சம்பிரதாயத்துக்கு அமைவாக இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய தலைமை தெரிவு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டனர்.   நன்றி தினகரன் 

ஜனாதிபதியை சந்தித்த பிரித்தானிய இளவரசி ஆன்

January 11, 2024 10:49 am 

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி (Her Royal Highness Princess Anne, the Princess Royal) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் (Vice Admiral Sir Timothy Laurence) ஆகியோர் நேற்று (10) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினர்.

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த இளவரசி ஆன் உள்ளிட்ட பிரித்தானிய தூதுக்குழுவுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் வரவேற்பளிக்கப்பட்டது.

அதனையடுத்து இளவரசி ஆன் உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினர்.இந்நிகழ்வை நினைவுக்கூரும் விதமாக ஜனாதிபதி மாளிகையிலிருக்கும் விருந்தினர் பதிவேட்டில் இளவரசி ஆன் நினைவுக் குறிப்பொன்றை பதிந்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.

பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் 75 வருட பூர்த்தியை முன்னிட்டு, பிரித்தானிய இளவரசி ஆனின் விஜயம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று (10) பிற்பகல் 1.00 மணியளவில் இலங்கை வந்தடைந்த பிரித்தானிய இளவரசிக்கு பெரும் வரவேற்பு…

கட்டுநாயக்கவில் உள்ள MAS தொழிற்சாலைக்கு நேற்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்தார்…

லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு விஜயம்…

Save the Children அரச சார்பற்ற தொண்டு நிறுவனத்திற்கும் விஜயம்

நன்றி தினகரன் 


சுற்றுலா இலக்குகள் இலங்கை 04 ஆவது இடம்

Forbes சஞ்சிகை தரப்படுத்தல்

January 11, 2024 8:50 am

2024ஆம் ஆண்டுக்கான மிகவும் பிரபல்யமான பத்து, தனிப்பயண சுற்றுலா இலக்குகளுக்கான பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

பிரபல வணிக சஞ்சிகையான ஃபோர்ப்ஸ் இந்த தரப்படுத்தலை செய்துள்ளது. 30 முதல் 50 வயதுக்கிடைப்பட்ட சுற்றுலாப் பயணிகளை சிறு குழுவாக இணைத்து அவர்களுக்கான பயணங்களை ஏற்பாடு செய்யும் ஃப்ளாஷ் பேக் என்ற நிறுவனத்தின் அண்மைய கணக்கெடுப்புக்கமைய இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டில் தனிப் பயணிகளுக்கு நான்காவது மிகவும் பிரபல்யமான இடமான இலங்கை, பயணிகளுக்கு மெதுவான ரயில் பயணம் உள்ளிட்ட முக்கிய பயணப் போக்கை அனுபவிக்க வாய்ப்பளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்குள்ளானதன் பின்னர், இலங்கை மீண்டும் ஒரு பாரிய மீட்சியை நோக்கி முன்னேறிவருகின்றதையடுத்து இந்த தரப்படுத்தல் மேலும் பல சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு வழிவகுக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜப்பான், அர்ஜென்டினா, எகிப்து, கொலம்பியா, ஈக்வடோர், ஜோர்தான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் பாலி தீவுகளுக்கு மத்தியில் இலங்கை நான்காவது நாடாக பட்டியல் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 
ஜனாதிபதித் தேர்தல்: ஐ.தே.க வேட்பாளராக ஜனாதிபதி ரணில்

கட்சியின் முகாமைத்துவ கூட்டத்தில் ஏகமனதாக முடிவு

January 11, 2024 6:01 am 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நிறுத்துவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

கட்சியின் கூட்டம் நேற்று முன்தினம் (09) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் கூடியது.இதன்போதே இது குறித்து கட்சியில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. மேலும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு கூடியது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன மற்றும் வஜிர அபேவர்தன உட்பட்ட ஐ.தே.க முக்கியஸ்தர்கள் இதில், கலந்துகொண்டனர்.

தேர்தலில் அரசியல் கூட்டணி அமைப்பது உட்பட தேர்தல் விடயங்களை கையாளும் பொறுப்பு முன்னாள் எம்.பி ரவி கருணாநாயக்க விடம் ஒப்படைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தேர்தலை நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு கூடியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன மற்றும் வஜிர அபேவர்தன உட்பட்ட ஐ.தே.க முக்கியஸ்தர்கள் இதில், கலந்துகொண்டனர்.   நன்றி தினகரன் 


No comments: