உ
தை மலர்ந்து - தமிழ்ப் புத்தாண்டு மலர்ந்து –
வையகம்
வாழ் தமிழர் வாழ்வும்
இறையருளால் மலர வேண்டி வாழ்த்துவோம்.
தை மலர்ந்து
வருக வருகவே!
பொங்கல்தனை இனிமைபொங்கப் “பொங்கலோ பொங்கல்
பொலிந்திடுக” என்றேபுத் தரிசி கொண்டு
பொங்கியதைப் புடவிவாழப் பொற்கதிர் வழங்கும்
பொற்புமிகு பரிதிக்குப் படையல்செய்து
பொங்கிநிற்கும் இந்நாளில் தமிழ ரெல்லாம்
புகலரிய ஒற்றுமையை மனதிற் பொங்கிப்
பொங்குமின்பத் ‘தமிழ்த்தாயை’ நினைந்து வணங்கிப்
போற்றிடவே தைமலர்ந்து வருக வருகவே!
பழையபொருள் கழித்திடவே சேர்த்துத் தீயில்
பலர்கூடி எரித்திடுவர் ‘போகி’ யன்று!
கழைவதற்கு மனதிற்குள் பலபல இருந்தும்
கழிவுகளைச் சிலர்என்றும் ஒழிப்ப தில்லை
உழைத்துழவர் பெற்றபுது அரிசி பொங்கி
உயர்பண்பாம் நன்றிக்கடன்
செலுத்து முன்பு
திழைத்திருப்போர் மனஅழுக்கை எரித்துப் போக்கிச்
சீர்செய்யத் தைமலர்ந்து வருக வருகவே!
“தையும்வர வழிபிறக்கும்” என்ற கூற்றைத்
தாரகமந் திரமெனவே அன்று தமிழன்
ஐயமின்றி நம்பிவாழ்ந்தான்! பயனும் பெற்றான்!
அவசியமென் றேநல்ல விழுமி யங்கள்
மெய்யாக வழிவழியாய்த் தெடர வைத்தான்!
விரும்பாத சிலரின்று அவற்றை மறந்து
பொய்வாழ்க்கை வாழ்கின்றார்! மனதை மாற்றிப்
புடஞ்செயவே தைமலர்ந்து வருக வருகவே!
முந்துதமிழ் முச்சங்கம் எல்லாம் கண்டு
முதுசொம்பல
கொண்டதமிழ்! எல்லாம் பெருமை!
சந்ததிக்குத் தமிழைநாம் எடுத்தல் வேண்டும்!
தமிழைச்சிறார்
வெட்கமின்றி எங்கும் பேசி
“எந்தநாட்டில் வாழ்ந்தாலும் தமிழை என்றும்
என்னுயிராய்ப் போற்றிடுவேன்” என்று மனதில்
வந்திடுமிப் பொங்கலன்று உறுதி கொள்ள
வைத்தருளத்
தைமலர்ந்து வருக வருகவே!
நன்றிக் கடன்செயும் பண்டிகை தைப்பொங்கல்!
தேனிறைந்த புதுமொட்டு முகையவிழந்து விரிய
தேடிவண்டு இரீங்காரம் இடுங்காலை நேரம்
ஆனமட்டும் தம்குரலில் திருப்பள்ளி எழுச்சி
ஆர்ப்பரித்துச் சிறகடித்துச் சேவல்கள் பாடக்
கானமெனக் கிஞ்சுகங்கள் துணையுடனே கூடிக்
காதலொடு திருமுறையை ஓதிநின்று வாழ்த்த
வானிலெழும் வாழ்வுதரும் கதிரவனை நினைந்து
வணங்கிநன்றிக் கடன்செயும்
பண்டிகை தைப்பொங்கல்!
புதுப்பானை அடுப்பேற்றிப் புனல்பாலால் நிரப்பிப்
பொங்கிவரும் வேளைநாமும்
"பொங்கலோபொங் கல்" என
வதுவையரும் புத்தரிசி யுடன்பயறும் இட்டு
வேகிவரச் சர்க்கரையை முந்திரி திராட்சையொடு
மதுரமிகு தேன்சேர்த்து நெய்யுமிட்டுப் பதமாய்
மங்களமாய்ப் பொங்கியதைத்
தலைவாழை இலையில்
கதுமைமிகு கதிரவனை நினைந்துருகிப் படைத்துக்
கால்நடைக்கும்
விருந்துவைக்கும் பண்டிகை தைப்பொங்கல்!
உற்றாரை அழைத்தினிய விருந்தோம்பல் செய்வோம்!
உளமகிழ நண்பருடன் வாழ்த்துக்கள் பகிர்வோம்!
கற்றாரைக் கலந்தவர்நல் லுரைகளையுங் கேட்போம்!
காதல்மிகு வார்த்தைபேசித் துணைவியரைக்
கூட்டிப்
பெற்றோரை நினைந்தவரின் நல்லாசி பெறுவோம்!
பெரும்பேறு தரவல்ல பரம்பொருளைப் பாடி
வற்றாத நலமருளும் வெய்யோனின் கருணை
மறக்காது நினைவுகூரும் பண்டிகை
தைப்பொங்கல்!
தைப்பொங்கல் அன்பு வாழ்த்து!
புலர்ந்தவுடன் எழுந்துகடன்
முடித்துக் குளித்துப்
புத்தாடை
அணிந்துவெண் ணீறும் பூசியன்
றலர்ந்திட்ட நறுமலர்கள் கொய்தெ டுத்து
அந்திவண்ணன்
அருள்வேண்டி அருச்சித் தன்பு
கலந்திட்ட அமுதுபடைத் தினிய திருமுறை
காதலொடு
பாடியேத்தும் வேளை யந்தோ!
மலர்ந்துவரும்; தமிழ்த்தைப்புத்
தாண்டு உங்கள்
வாழ்வில்ஒளி
காலவைக்க வாழ்த்து கின்றேன்!
இல்லமெலாம்
எழில்பொங்க இனிமைபொங்க
இதயங்கள்
அனுதினமும் அன்பிற் பொங்க
நல்லுளங்கள் வாழ்த்திடவெம் நலங்கள் பொங்க
நனிசிறந்து
வாழ்வுயர மகிழ்ச்சி பொங்க
நெல்வழங்கும் உழவர்வளம் நிரம்பிப் பொங்க
நினைந்திறைவன்
தாழ்தொழுது வாழ்த்து கின்றேன்
எல்லையிலா உயிர்களுக்கு ஒளியைப் பொங்கும்
எழுகதிரோன்
அருள்பொங்கப் பொங்கு வோமே!
இயற்றியவர் -
சிவ ஞானச் சுடர் - பல்வைத்திய கலாநிதி
பாரதி இளமுருகனார்
வாழ் நாட் சாதனையாளர்
No comments:
Post a Comment