ஜனாதிபதி தேர்தலை கையாளுதல்!

 January 10, 2024


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன் பொது வேட்பாளர் யோசனையை வரவேற்றிருக்கின்றார்.
கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் ஏற்கனவே இது தொடர்பில் தாம் பரிசீலித்து வருகிறாரெனக் கூறியிருந்த நிலையில் செல்வம் அடைக்கலநாதன் அந்த யோசனையை வரவேற்றிருக்கின்றார்.
ஏனைய கட்சிகளுடன் இது தொடர்பில் பேசவுள்ளதாகவும் கூறியிருக்கின்றார்.
எனினும், தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் இதுவரையில் தெளிவான நிலைப்பாடுகள் இல்லை.
இதேவேளை, வழமைபோல் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டுமென்று கூறியிருக்கின்றார்.
2009இற்கு பின்னர் இடம்பெற்ற மூன்று தேர்தல்களின் போதும் அவர் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்தார்.
ஆனால், அவரின் கோரிக்கையை மக்கள் கருத்தில் கொள்ளவில்லை.
தேர்தல் பகிஷ்கரிப்பு ஓர் உசிதமான யோசனை அல்ல – ஆனால், தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சிறந்தது – ஆனால், அதற்கு அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும்.
அவ்வாறில்லாது போனால் இந்த விடயத்தை முன்னெடுக்க முடியாது.
பொது வேட்பாளரை நிறுத்துவதா அல்லது இல்லையா என்பதற்கு அப்பால் – முதலில், ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு கையாள்வது என்பதில் தெளிவான புரிதல் இருக்கவேண்டியது அவசியம்.
அது தொடர்பில் தீர்க்கமான முடிவு ஒன்றுக்கு வரவேண்டும் – அதாவது, வழமைபோல் தென்னிலங்கையின் வேட்பாளர் ஒருவரின் வாக்குறுதிக்கு செவிசாய்த்து அவரை ஆதரிப்பதா அல்லது தமிழ் மக்களின் நலனை கருத்தில்கொண்டு ஜனாதிபதி தேர்தலை ஒரு பேரம் பேசுதலுக்கான துருப்புச்சீட்டாக கையாள்வதா? வழமைபோல்தான் தேர்தலை கையாள்வது என்றால் இது பற்றிய விவாதங்கள் தேவையில்லை.
ஆனால், பேரம் பேசுதலுக்கான உத்தியாக கையாள்வது என்றால் இது தொடர்பில் உரையாடப்பட வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல்களின்போது, தென்னிலங்கை வேட்பாளர்கள் எல்லோருமே தமிழ் மக்களுக்கு ஆதரவாகவே பேசுவது உண்டு.
இதனை நம்பியே தமிழ் மக்கள் வாக்களிப்பது உண்டு.
கடந்த மூன்று ஜனாதிபதி தேர்தல்களின்போதும், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் ஆகக்குறைந்தது, தமிழ் மக்களின் நியாயங்களை சிங்கள
மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூட முயற்சிக்கவில்லை.
இந்த மூன்று தேர்தல்களின்போது, 2015 ஜனாதிபதி தேர்தலின் போது மட்டும்தான் தமிழ் மக்களின் வாக்குகள் வெற்றியில் பங்களித்தது.
இந்தத் தேர்தலுக்கு பின்னர் புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டுவருவதன் ஊடாக தமிழ் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வை காணப்போவதான நம்பிக்கை ஊட்டப்பட்டது.
ஆனால், அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.
பொன்சேகாவிடம் எழுத்துமூல உடன்பாடு செய்யப்பட்டதாக சம்பந்தன் பொது மேடைகளில் கூறினார்.
ஆனால், இன்றுவரையில் அந்த உடன்பாட்டை தமிழ் மக்கள் முன்னால் வைக்கவில்லை.
தீர்மானம் எடுக்கும் இடத்தில் இருக்கும் கட்சிகளின் தலைவர்கள் என்போர் காலத்துக்கு காலம் தீர்மானங்களை எடுப்பதும் – அந்தத் தீர்மானங்கள் தோற்றுப்போனவுடன் அரசாங்கம் ஏமாற்றிவிட்டது என்பதும் கட்சிகளின் தலைவர்களுக்கு சாதாரணமானதாகவே இருக்கின்றது.
ஆனால், தலைமைகளை நம்பி வாக்களிக்கும் மக்களுக்கோ தொடர்ந்தும் ஏமாற்றமாகவே இருக்கின்றது.
இந்த நிலையை எவ்வாறு மாற்றியமைப்பது – என்னும் கேள்வியிலிருந்துதான் இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.    நன்றி ஈழநாடு 




No comments: