மனிதரில் மாணிக்கம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 பொதுவில் சிவாஜி நடிக்கும் படங்களில் இணை கதாநாயகர்களாக,


உப கதாபாத்திரங்களாக ஏவி, எம் ராஜன், முத்துராமன், சிவகுமார் போன்றோர் நடிப்பதுண்டு. ஆனால் ஏவி எம் ராஜன் ஹீரோவாக நடித்த ஒரு படத்தில் சிவாஜி இணை கதாநாயகனாக நடித்து ஒரு படம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. அந்த படம் தான் மனிதரில் மாணிக்கம்.


உச்ச நடிகராக சிவாஜி விளங்கிக் கொண்டிருந்த காலத்தில் இப்படி ஒரு படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டது நடிப்பின் மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தையே வெளிப்படுத்தியது. அது மட்டும் அன்றி படத்தின் இயக்குனர் சி வி ராஜேந்திரன் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையையும் காட்டியது. அதே போல் இந்த படத்தில் சிவாஜி ஏற்ற வேடமும் மிக வித்யாசமான, சுவாரஸ்யமான வேடமாகும்.

கொள்ளை, கடத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வரும் பூபதி

சந்தர்ப்ப சூழ்நிலையால் பொன்னி என்ற பெண்ணை ஓர் ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறான். அதனை தொடர்ந்து இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. தன்னை கைது செய்ய துடிக்கும் போலீஸ் அதிகாரியின் குழந்தையை கடத்தி பொன்னியிடம் வருகிறான் பூபதி. குழந்தையோடு அவனை காணும் பொன்னி அவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்து அவளுக்கு பிறந்த குழந்தை என்று சந்தேகிக்கிறாள். இதனால் அவன் மீது சந்தேகப் பட்டு ,அவனை ஏசி விரட்டி விடுகிறாள். அது மட்டுமன்றி அவளுக்கு சித்தப் பிரமையும் ஏற்பட்டு விடுகிறது.

அவளுக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர் ஆனந்த் சமயத்தில் கோமாளியாகவும், சில சமயம் சிடு மூஞ்சியாகவும், வேறு நேரத்தில் கருணை உள்ளம் கொண்டவராகவும் திகழுகிறார். அவருடைய குணாம்சத்தை அனுமானிக்க முடியாதுள்ளது. போலீசுக்கு மறைந்து வித்தை காட்டுபவனாக வாழ்ந்து வரும் பூபதி குழந்தையை உயிருக்கு உயிராக வளர்கிறான். குழந்தை , பூபதி, பொன்னி இவர்களின் எதிர்காலம் என்னாயிற்று என்பதே மீதி படம்.

படத்தில் சிவாஜியின் நடிப்பு பிரமாதம். கோமாளியாக, சிடு மூஞ்சியாக, வினோத பேர்வழியாக நடிப்பததற்கு தனித் துணிவு தேவை. தன் இமேஜ் பற்றி சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருந்தார் நடிகர் திலகம். ஐ வில் ஸிங் போர் யூ பாடலில் அவர் ஆட்டமும், நடிப்பும் சூப்பர்! ஏவி எம் ராஜன் ஏற்கனவே சிலப்படங்களில் ஏற்று நடித்த கொள்ளைக்காரன் வேடத்தை அதே பாணியில் இதிலும் நடித்திருந்தார். பொன்னியாக வரும் பிரமிளா ஓகே. இவர்களுடன் சுந்தரராஜன், எம் என் ராஜம் , சோ, மனோரமா,மாஸ்டர் முரளி, ஆர் எஸ் மனோகர், சுருளிராஜன் ஆகியோரும் நடித்திருந்தனர்.


படத்தின் கதையை டாக்டர் நிஹார் ரஞ்சன் குப்தா எழுதியிருந்தார். வசனங்களை வியட்நாம் வீடு சுந்தரம் எழுதினார். பாடல்களை கண்ணதாசன், வாலி இருவரும் எழுதியிருந்தார்கள். ஸ்ரீகாந்த் ஒளிப்பதிவு செய்தார். அன்றைய கால கட்டத்தில் சிவாஜி படங்களையே தொடர்ந்து டைரக்ட் செய்து வந்த சி வி ராஜேந்திரன் இந்த படத்தையும் இயக்கியிருந்தார்.

1973ம் வருடம் சிவாஜியின் நடிப்பில் கௌரவம், ராஜபார்ட் ரங்கதுரை,

பாராதாவிலாஸ் , எங்கள் தங்க ராஜா போன்ற படங்கள் கலரில் வெளிவந்தன. இந்தப் படங்களில் எல்லாம் சிவாஜியின் பாத்திரம் உணர்ச்சிகரமாக , அழுத்தமாக உருவாக்கப் பட்டிருந்தன. இவற்றுக்கு மத்தியில் சிவாஜிக்கு ஜோடி இல்லாமல், கருப்பு வெள்ளை படமாக மனிதரில் மாணிக்கம் வெளிவந்தது.

தொடர்ந்து சிவாஜியை ஒரே விதமாக பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு இப்படத்தில் அவர் ஏற்ற சிடுமூஞ்சி பாத்திரம் பிடிக்கவில்லை. இதனால் படம் சராசரி படமாகவே அமைந்தது.

No comments: