உலகச் செய்திகள்

 காசா மருத்துவமனைகளின் மீது இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்குதல் போர் குறித்து ஈரான் எச்சரிக்கை: மேற்குக் கரையிலும் பதற்றம் அதிகரிப்பு

 வடக்கு காசாவில் போர் உக்கிரம்: பல்லாயிரம் பலஸ்தீனர்கள் தெற்கை நோக்கி வெளியேற்றம்     -தொடர்ந்தும் இடைவிடாது வான் தாக்குதல்

ஹமாஸ் கோட்டையான காசாவில் இஸ்ரேல் தரைவழி மோதல் - தொடர்ந்தும் வான் தாக்குதல்

சிறுவர்களின் மயானமாக மாறிவரும் காசா நகரம்       ஐ.நா. செயலாளர் எச்சரிக்கையுடன் கவலை

காசா போருக்கு ஒரு மாதம் எட்டிய நிலையில் இஸ்ரேல் தொடர்ந்தும் இடைவிடாது தாக்குதல்          காசாவை அப்பாஸிடம் கொடுக்க பேச்சு

மத்திய கிழக்கு விரைந்தது அமெரிக்க அணு நீர்மூழ்கி


காசா மருத்துவமனைகளின் மீது இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்குதல் போர் குறித்து ஈரான் எச்சரிக்கை: மேற்குக் கரையிலும் பதற்றம் அதிகரிப்பு

November 11, 2023 6:34 am 

இஸ்ரேலின் காசா மீதான போரில் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் பாதிப்பு தவிர்க்க முடியாத வகையில் இந்த மோதலின் விரிவாக்கத்திற்கு காரணமாகும் என்று ஈரான் எச்சரித்திருப்பதோடு காசாவில் உள்ள மருத்துவமனைகள் அல்லது அதற்கு அருகில் இஸ்ரேல் வான் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொஸைன் ஆமிர் அப்துல்லாஹியான் வெளியிட்டிருக்கும் கருத்து பிராந்தியத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போர் பிராந்தியத்தில் பரவும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்கா மத்தியதரைக் கடலின் கிழக்கில் விமானதாங்கிக் கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்தி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

“காசாவின் சாதாரண பொதுமக்களுக்கு எதிரான போரின் தீவிரம் அதிகரிப்பதால், போரின் எல்லை விரிவடைவது தவிர்க்க முடியாதது” என்று கட்டார் வெளியுறவு அமைச்சர் ஷெய்க் முஹமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியுடன் கடந்த வியாழக்கிழமை இரவு (09) பேசிய அப்துல்லாஹி தெரிவித்துள்ளார்.

இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பில் ஈரான் தொலைக்காட்சியான பிரெஸ் டிவி வெளியிட்ட செய்தியில் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

காசா மீது இஸ்ரேல் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முழு முற்றுகையை மேற்கொண்டு இடைவிடாது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது அங்கு பெரும் மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தி இருப்பதோடு அந்த குறுகலான நிலத்தில் தொடர்ந்து ஒருசில மருத்துவமனைகளே செயற்பட்டு வரும் நிலையில் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு சிகிச்சைக்காக அல்லது அடைக்கலம் பெற்றுள்ளனர்.

போர் வலயங்களில் இயங்கும் இவ்வாறான மருத்துவமனைகள் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன.

“கடந்த சில மணி நேரங்களில் பல மருத்துவமனைகள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் ஒரே நேரத்தில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்” என்று காசா சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் கித்ரா, அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு நேற்று தெரிவித்தார்.

இஸ்ரேலிய தரைப்படையின் முற்றுகையில் இருக்கும் காசா நகரில் உள்ள அல் ஷிபா மருத்துவமனையின் முற்றவெளியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் உயிரிழப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் கித்ரா தெரிவித்தார். இந்தோனேசிய மருத்துவமனை போன்று ஏனைய மருத்துவமனைகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

அல் ஷிபா மருத்துமனையில் இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் வாகன தரப்பிடத்தில் இஸ்ரேலிய தாக்குதலுக்கு பின்னரான வீடியோ காட்சிகளை பலஸ்தீன ஊடகம் நேற்று வெளியிட்டிருந்தது. அதில் தூக்குப்படுக்கையில் உயிரிழந்தவர் ஒருவரின் உடல் இருப்பது அதற்கு அருகில் இரத்தக் குளமாக இருப்பதும் தெரிகிறது.

“தற்போது இடம்பெற்று வரும் தாக்குதல்கள் மற்றும் (அல் ஷிபா மருத்துவமனைக்கு) அருகில் நீடிக்கும் மோதல்கள் சிகிச்சைக்காகவும் அடைக்கலத்திற்காகவும் வந்திருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பல சிறுவர்கள் தொடர்பில் கவலையை ஏற்படுத்தியுள்ளது” என்று மனித உரிமை கண்காணிப்பகம் எக்ஸ் சமூகதளத்தில் தெரிவித்துள்ளது.

அல் ரன்டிசி சிறுவர் மருத்துமனை மற்றும் அல் நாசிர் சிறுவர் மருத்துவமனைகள் மீதும் வெள்ளிக்கிழமை (நேற்று) நேரடித் தாக்குதல்கள் இடம்பெற்றதாக கித்ரா தெரிவித்துள்ளார். அல் ரன்டிசி மருத்துவமனையில் தரைப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததாக தெரிவித்தார்.

வடக்கு காசாவில் அமைந்துள்ள இந்தோனேசிய மருத்துவமனை மீதான தாக்குதலில் அந்த மருத்துவமனைக்கு சேதம் ஏற்பட்டிருப்பதை இந்தோனேசிய வெளியுறவு அமைச்சு நேற்று உறுதி செய்தது.

“பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் பொருட்கள், குறிப்பாக காசாவில் உள்ள மனிதாபிமான வசதிகள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை இந்தோனேசியா மீண்டும் ஒருமுறை கண்டிக்கிறது” என்று அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குண்டுவீச்சுகளால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது எரிபொருள் இல்லாததன் காரணமாக 35 மருத்துவமனைகளில் 18 மருத்துவமனைகளும் மேலும் 40 சுகாதார நிலையங்களும் செயலிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தினசரி சண்டை நிறுத்தம்

மத்திய காசா நகரில் இஸ்ரேலிய தரைப்படை முன்னேற்றம் கண்டு வரும் நிலையில் அதன் டாங்கிகள் அல் ஷிபா மருத்துவமனையில் இருந்து சுமார் 1.2 கிலோமீற்றர் வரை நெருங்கி வந்திருப்பதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இது பொதுமக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் அல்லது மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் மருத்துவ நிலையத்தை பாதுகாப்பது தொடர்பிலான சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறுவதாக உள்ளது.

ஏற்கனவே அகதி முகாம்கள், மருத்துவ வாகனங்கள் மற்றும் மருத்துமனைகளுக்கு அருகில் இஸ்ரேல் தொடர்ந்தும் வான் தாக்குதல்களை நடத்தி வருவது இஸ்ரேலின் மேற்கத்தேய கூட்டணி நாடுகள் இடையிலும் கூட விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காசா மீது நடத்தும் தாக்குதலை மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்கா அளித்த நெருக்கடிக்குப் பின் இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் (9) தெரிவித்தார்.

பொதுமக்கள் தாக்குதலிலிருந்து தப்பிக்கவும் உதவி நாடவும் தற்காலிகச் சண்டைநிறுத்தம் துணைபுரியும் என்றார் அவர்.

ஒவ்வொரு நாளும் காசாவின் வட பகுதியில் 4 மணி நேரத்துக்கு சண்டை நிறுத்தப்படும் என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டது. 3 மணி நேரத்துக்கு முன் தற்காலிகச் சண்டை நிறுத்தம் குறித்து அறிவிக்கப்படும் என்றது வெள்ளை மாளிகை.

எனினும் சண்டை கைவிடப்பட்டதற்கான அறிகுறியும் தெரியவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சண்டை நிறுத்தம் இரு மனிதாபிமான பாதை வழியாக வடக்கு காசாவில் உள்ள மக்கள் தெற்கை நோக்கி செல்ல அனுமதிப்பதோடு பணயக்கைதிகள் விடுவிக்கப்படுதற்கும் பயன்படுத்த முடியும் என்றும் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.

எனினும் எந்த ஒரு போர் நிறுத்தமும் அங்கொன்று இங்கொன்றுமாக இடம்பெறும் ஒன்றாக இருக்கும் என்றும் தொடர்ச்சியான போர் நிறுத்தம் ஒன்று உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

மோதல் நிறுத்தம் ஒன்று பற்றி நெதன்யாகுவிடம் பொக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் கேட்டபோது, “இல்லை. ஹமாஸ் எதிரிகள், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான மோதல் தொடர்ந்து இடம்பெறும். ஆனால் குறிப்பிட்ட இடங்களில் ஒருசில மணி நேர காலத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சண்டை நிறுத்தம் இருக்கும். போர் வலயங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கான பாதுகாப்பான வழியை ஏற்படுத்த விரும்புகிறோம். அதனையே நாம் செய்கிறோம்” என்று பதிலளித்தார்.

இந்நிலையில் வடக்கு காசாவில் இருந்து கடந்த புதன்கிழமை தொடக்கம் பொதுமக்கள் கால்நடையாகவும், கழுதை வண்டிகளிலும் தெற்கை நோக்கி வெளியேறி வருகின்றனர்.

எனினும் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்கள் மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் வீதிகள் சேதமடைந்திருக்கும் நிலையில் மக்கள் வெளியேறுவதிலும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் பெரும் எண்ணிக்கையானோர் தெற்கில் உள்ள பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் ஏனைய இடங்களில் அடைக்கலம் பெற்று பெரும் நெரிசலை உருவாக்கியுள்ளது.

மறுபுறம் தெற்கு மற்றும் மத்திய காசாவிலும் இஸ்ரேல் தொடர்ந்து வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தெற்கின் பிரதான நகரமான கான் யூனிஸில் மக்கள் தினசரி இஸ்ரேலிய தாக்குதலில் தகர்க்கப்பட்ட கட்டடங்களில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மறுபுறம் வடக்கு காசாவை மையப்படுத்தி பலஸ்தீன போராளிகள் மற்றும் இஸ்ரேலிய தரைப்படைகள் இடையிலான மோதல் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இந்த மோதலில் நேற்றும் ஒரு இஸ்ரேலிய வீரர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது.

21 வயதான போர் மருத்துவ பிரிவைச் சேர்ந்த சார்ஜென்ட் கிலாட் ருசன்பிலிட் வடக்கு காசாவில் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் போர் வெடித்தது தொடக்கம் கொல்லப்பட்ட இஸ்ரேலிய படையினரின் எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளது. இதில் காசாவில் தரைவழி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின் 41 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

மறுபுறம் மேற்குக் கரையிலும் பதற்றம் தீவிரம் அடைந்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் வடக்கில் உள்ள அகதி முகாம் மற்றும் ஜெனின் நகரில் இஸ்ரேல் இராணுவம் நேற்று முன்தினம் நடத்திய சுற்றிவளைப்புகளில் குறைந்தது 10 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த முகாமில் கடும் மோதல் ஏற்பட்ட நிலையில் நகருக்கு மேலால் கறும்புகை வெளியாவது தெரிந்ததோடு துப்பாக்கி மற்றும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன.

இதன்படி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது.

மேற்குக் கரையின் பல நகரங்களிலும் இஸ்ரேல் இராணுவம் தினசரி சுற்றிவளைப்புகளை நடத்தி வருவதோடு அங்கிருக்கும் சட்டவிரோத குடியேறிகளின் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.   நன்றி தினகரன் 


வடக்கு காசாவில் போர் உக்கிரம்: பல்லாயிரம் பலஸ்தீனர்கள் தெற்கை நோக்கி வெளியேற்றம்     -தொடர்ந்தும் இடைவிடாது வான் தாக்குதல்

November 10, 2023 6:26 am 

காசாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்றும் (09) சரமாரி குண்டுமழை பொழிந்ததோடு
 தரைப்படையினர் ஹமாஸ் போராளிகளுடன் வீதி வீதியாக உக்கிர சண்டையில் ஈடுபட்டு வரும் நிலையில் வடக்கு காசாவில் இருந்து ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் பாதுகாப்பைத் தேடி தமது வீடுகளை விட்டு தெற்கை நோக்கி வெளியேறி வருகின்றனர்.

ஒரு மாதத்திற்கு மேலாக இஸ்ரேல் இடைவிடாது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் போர் வலயங்களில் போதுமான உணவு மற்றும் நீர் இன்றி மோசமான மனிதாபிமான நெருக்கடியை சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் உள்ள இரு வீடுகள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 30 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வாபா தெரிவித்துள்ளது.

இந்த வான் தாக்குதல்களில் பல டஜன் பேர் காயமடைந்திருப்பதோடு மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. காசா நகரின் அல் சப்ரா பகுதியில் இருக்கும் மற்றொரு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய கான் யூனிஸில் இருக்கும் அல் இக்லாஸ் பள்ளிவாசலுக்கும் அங்கிருக்கும் அல் முஸ்தபா பள்ளிவாசலுக்கும் இஸ்ரேல் நேற்று குண்டு வீசியது. இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் இதுவரை நான்கு பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டிருப்பதாக வாபா குறிப்பிட்டது.

இஸ்ரேல் கடந்த மூன்று நாட்களில் எட்டு மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முற்றுகை பகுதியில் போர் வெடித்த கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதிக்குப் பின்னர் 18 மருத்துவமனைகள் செயலிழந்திருப்பதாகவும் அது கூறியது.

வடக்கு காசா பகுதியில் உள்ள பெயித் லஹியா சிறு நகரில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக ஏ.பீ. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை இரவிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்திருந்ததோடு வடக்கு காசாவை மையப்படுத்தியே போர் தீவிரம் அடைந்துள்ளது.

காசாவில் உயிரிழப்பு 11 ஆயிரத்தை நெருங்கி இருப்பதோடு மேற்குக் கரையிலும் வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் எட்டுக் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதன்படி கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 171 உயர்ந்துள்ளது.

ஜெனின் நகரில் நேற்று அதிகாலை இஸ்ரேல் இராணுவம் நடத்திய சுற்றுவளைப்பிலேயே பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்திருப்பதோடு காயமடைந்த சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தரைவழி மோதல்

மறுபுறம் தரைவழி மோதலும் தீவிரம் அடைந்துள்ளது. ஹமாஸின் கோட்டையாக கருதப்படும் காசா நகரின் மையப் பகுதியை நோக்கி முன்னேறுவதாக இஸ்ரேல் கூறியிருப்பதோடு எதிரிகளுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியதாக ஹமாஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

காசா நகரில் குண்டு வீச்சுக்கு மத்தியில் வீதிகளில் கடும் மோதல் இடம்பெறுவதை காட்டும் வீடியோவை ஹமாஸ் ஆயுதப் பிரிவு கடந்த புதனன்று (08) வெளியிட்டது. நிலத்தடி சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி அதிரடி தாக்குதல்களை நடத்தும் பலஸ்தீன போராளிகளின் எதிர்ப்பை இஸ்ரேலிய டாங்கிகள் சந்தித்து வருவதாக ஹமாஸ் மற்றும் மற்றொரு போராட்டக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கு காசாவின் ஜபலியாவில் உள்ள ஹமாஸ் புறக்காவல் நிலையத்தை 10 மணி நேர சண்டைக்குப் பின் கைப்பற்றியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை எக்ஸ் சமூகதளத்தில் தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவில் ஹமாஸ் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக இஸ்ரேலிய தலைமை இராணுவப் பேச்சாளர் ரியர் அட்மிரல் டனியோல் ஹகரி தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய போர் நிலை பொறியியலாளர்கள் வெடிபொருட்களை பயன்படுத்தி பல நூறு கிலோமீற்றர் நீண்ட சுரங்கப் பாதைகளை அழித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இதுவரை 130 சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலிய துருப்பினர் கடந்த புதனன்று காசா நகர விளிம்புப் பகுதிக்கு செய்தியாளர்களை அழைத்துச் சென்றிருந்தனர். அந்த நகரம் பேரழிவை சந்தித்திருப்பதை கண்டதாக அங்கு சென்ற செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டங்களின் சுவர்கள் தகர்ந்து அனைத்து இடங்களிலும் துப்பாக்கி குண்டுகளின் துளைகள் தெரிவதோடு பனை மரங்களும் துண்டாடப்பட்டு காணப்படுவதாக அவர்கள் விபரித்துள்ளனர்.

பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை போர் நிறுத்தம் ஒன்றை செயற்படுத்துவதை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து மறுத்து வருகிறார்.

இந்நிலையில் 6 அமெரிக்கர்கள் உட்பட 12 பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக ஹமாஸ் அமைப்புக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

ஹமாஸுடன் தொடர்பு கொள்ள வழி இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபை பேச்சாளர் ஜோன் கிர்பி, முயற்சிகளை சீர்குலைக்கும் என்பதால் விபரத்தை வெளியிட மறுத்துள்ளார்.

“அவர்களை (பணயக்கைதிகள்) அவர்களின் குடும்பங்களுடன் இணைப்பதற்கு எம்மால் முடியுமான அனைத்தையும் செய்வோம்” என்றும் அவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தத்தை மறுக்கும் இஸ்ரேலுக்கு அமெரிக்காவும் ஆதரவு வழங்குவதோடு ஜப்பானில் புதன்கிழமை கூடிய ஜி7 வெளிநாட்டு அமைச்சர்கள் கூட்டத்திலும் “மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் பாதைகளுக்கே” அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

சுரங்கப் பாதைகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய தரைப் படை தாக்குதல்களை நடத்தி வான் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் அதேநேரம் வடக்கு காசாவில் இருந்து மக்களை தெற்கை நோக்கி வெளியேறும்படி கூறி இஸ்ரேல் துண்டுப் பிரசுரங்களையும் வீசி வருகிறது.

வடக்கு காசாவின் போர் வலயத்தில் இருந்து கடந்த புதன்கிழமை சுமார் 50,000 பேர் வெளியேறியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இது இந்த வார ஆரம்பத்தை விடவும் பெரும் அதிகரிப்பாக உள்ளது. ஏற்கனவே 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவின் பாதிக்கும் அதிகமான 1.5 மில்லியன் மக்கள் அந்தக் குறுகிய நிலப்பகுதியின் தெற்குப் பக்கமாக அடைக்கலம் பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வாதி காசா மாவட்டத்தின் வடக்கு போர் வலயங்களில் நிலைமை மோசமடைந்திருப்பதாக ஐ.நா மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் எச்சரித்துள்ளது.

“இடம்பெயர்ந்தவர்கள் உட்பட காசாவின் வடக்கில் தொடர்ந்து தங்கியுள்ள ஆயிரக்கணக்கானவர்கள் மோசமான மனிதாபிமான நிலையை எதிர்கொண்டிருப்பதோடு உயர்வாழ்வதற்கான குறைந்த அளவான உணவு மற்றும் நீரை பெறுவதற்கும் போராடி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவின் பெயித் லஹியாவில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனையில், வான் தாக்குதலில் கொல்லப்பட்ட தனது இரண்டு வயது மகன் முஹமது அபூ கமரின் உடலை கட்டிப்பிடித்தபடி தந்தை ஒருவர் அழுதுகொண்டிருப்பாதை காணமுடிந்தது.

“அவனை பிரேத அறையில் வைக்க வேண்டாம், எனக்கு வீட்டுக்கு எடுத்துச்செல்ல தாருங்கள். நாளை அவனை நான் அடக்கம் செய்கிறேன்” என்று தந்தையான நிதால் அழுதபடி கூறியதோடு அருகில் அவரது மனைவியும் அழுதபடி காணப்பட்டார்.

காசா மீதான குண்டுவீச்சு மற்றும் அங்குள்ள மக்களை வெளியேற உத்தரவிட்டிருக்கும் இஸ்ரேலுக்கு ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் வோல்கர் துர்க் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

“பொதுமக்களை சட்டவிரோதமாக வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது போன்று பலஸ்தீன பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் கூட்டுத் தண்டனையும் ஒரு போர் குற்றமாகும்” என்று காசாவுடனான ரபா எல்லையில் எகிப்தில் இருந்து செய்தியாளர்களிடம் பேசிய துர்க் தெரிவித்தார்.

இஸ்ரேலின் எச்சரிக்கையை அடுத்து இஸ்ரேலிய வான் தாக்குதல்களால் அழிவடைந்திருக்கும் கட்டட இடிபாடுகள் மற்றும் அதற்குக் கீழ் தொடர்ந்து சிக்கி இருக்கும் சடலங்களைத் தாண்டி பலரும் தெற்கை நோக்கி பயணித்தபோதும் மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்ந்தும் வடக்கில் தங்கியுள்ளனர்.

காசாவின் தென் பகுதி பாதுகாப்பானது என இஸ்ரேல் வாக்குறுதி அளித்தபோதும் அந்தப் பகுதியும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது. தெற்கு மற்றும் மத்திய காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 3,600க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் தெற்கை நோக்கி வெளியேறும் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 

ஹமாஸ் கோட்டையான காசாவில் இஸ்ரேல் தரைவழி மோதல் - தொடர்ந்தும் வான் தாக்குதல்

November 9, 2023 8:51 am 

– ஈரானின் ஏற்பாட்டில் சவூதியில் அவசர மாநாடு

இஸ்ரேல்–காசா போர் இரண்டாவது மாதத்தை எட்டியிருக்கும் நிலையில் ஹமாஸ் அமைப்பின் கோட்டையாக இருக்கும் காசா நகரின் மையப்பகுதியை நோக்கி முன்னேறுவதாக இஸ்ரேல் கூறியிருக்கும் அதேநேரம் ஆக்கிரமிப்பு படைகளுடன் கடுமையாக சண்டையிட்டு வருவதாகவும் இழப்புகளை ஏற்படுத்தி இருப்பதாகவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தபோதும் அங்கு இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ந்தும் இடைவிடாது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் காசா பகுதி எங்கும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. அல் ஷிபா மற்றும் இந்தோனேசிய மருத்துவமனைகள், அதேபோன்று கான் யூனிஸ், நுசைரத் மற்றும் ஜபலியா அகதி முகாம்களுக்கு அருகிலும் தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் மேலும் 241 பேர் கொல்லப்பட்டதாக அந்தப் பகுதியின் சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதன்படி போர் வெடித்த கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 10,569 ஆக அதிகரித்துள்ளது. இதில் 4,324 சிறுவர்கள், 2,823 பெண்கள், 649 வயதானவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இதில் 1,350 சிறுவர்கள் உட்பட 2,550 பேர் காணாமல்போயிருப்பதோடு இதில் பெரும்பாலானவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தவிர 193 மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு 45 அம்புலன்ஸ் வண்டிகள் தாக்கப்பட்டுள்ளன.

இதனால் காசாவில் கொல்லப்பட்ட, காயமடைந்த மற்றும் காணாமல்போனவர்கள் எண்ணிக்கை 40,000ஐ தாண்டி இருப்பதாக காசாவின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலிய தரைப்படைகள் நிலத்தடியில் இருக்கும் ஹமாஸ் அமைப்பின் பரந்த சுரங்கப்பாதை கட்டமைப்புகளை கண்டுபிடித்து அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே காசா பகுதியை இரண்டாக பிரித்திருப்பதாகவும் காசா நகரை சுற்றிவளைத்திருப்பதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் இஸ்ரேலிய தரைப்படை, சுரங்கப்பாதைகளில் மறைந்திருந்து அதிரடி தாக்குதல்களை நடத்தும் பலஸ்தீன போராளிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேற்றைய தினம் வடக்கு காசாவில் இடம்பெற்ற மோதல்களில் மேலும் ஒரு இஸ்ரேலிய வீரர் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்ததாக இஸ்ரேலிய இராணுவம் உறுதி செய்துள்ளது. இதன்படி கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி இஸ்ரேல் தரைவழி நடவடிக்கையை ஆரம்பித்தது தொடக்கம் காசாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை குறைந்தது 31 ஆக உயர்ந்துள்ளது.

இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறுவதற்கு உதவியாகவும் காசா நகரின் கிழக்கு பக்கமாக உள்ள கட்டடங்களை இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கி அழித்து வருவதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அந்த டாங்கிகள் காசா நகரின் மையப் பகுதியை நோக்கி முன்னேற வழி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தெற்கிலும் அவலம்

போதிய எரிபொருள், நீர் மற்றும் மா இல்லாதது மற்றும் வான் தாக்குதல்களால் ஏற்பட்டிருக்கும் சேதங்கள் காரணமாக வடக்கு காசாவில் இருக்கும் அனைத்து பேக்கரிகளும் மூடப்பட்டுள்ளன.

ஒருவருக்கு தினசரி தேவைக்கு 50 தொடக்கம் 100 லீற்றர் நீர் தேவைப்படும் நிலையில் காசாவில் குடிப்பது மற்றும் துப்புரவு உட்பட அனைத்துத் தேவைகளுக்காகவும் ஒருவருக்கு சராசரியாக மூன்று லீற்றர்களே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

காசாவில் உணவு விநியோகம் தீர்ந்து வருவதாக குறிப்பிட்டிருக்கும் உலக உணவுத் திட்டம் அங்கு ஐந்து நாட்களுக்கு போதுமான உணவுகளே கையிருப்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

காசா போர் வெடிப்பதற்கு முன் அங்கு தினசரி 500 லொறி வண்டிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி தொடக்கம் குறைந்தது 451 லொறிகளே காசாவுக்குள் நுழைந்துள்ளன. இதில் 158 வண்டிகள் மாத்திரமே உணவுப் பொருட்கள் ஏற்றிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசா நகரை சுற்றிவளைத்திருக்கும் இஸ்ரேல் அந்த குறுகிய நிலத்தின் வடக்கில் இருந்து மக்கள் தெற்கை நோக்கி செல்ல அனுமதித்தபோதும் அங்கு எந்தப் பகுதியிலும் பாதுகாப்பு இல்லை என்பது உயிரிழப்புகள் காட்டுகின்றன. மத்திய மற்றும் தெற்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சுமார் 3,600 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசாவில் இருக்கும் மக்கள் வடக்கில் இருந்து தெற்கை நோக்கி வெளியேறுவதனால் அவர்கள் எதிர்கொள்ளும் அவலநிலை தீர்ந்துவிடாது. அங்கு ஏற்கனவே பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தினால் நடத்தப்படும் 92 தற்காலிக முகாம்களில் 550,000க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

இந்த முகாம்களில் வசதிகள் குறைவாக இருப்பதோடு நோய்களும் வேகமாக பரவி வருகின்றன.

இங்கே 600க்கும் அதிகமானவர்கள் ஒரு கழிப்பறையை பகிர்ந்து வருவதாக ஐ.நா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இங்கிருப்பவர்கள் இடையே கடுமையான சுவாச நோய், தோல் தொற்று நோய்கள், வயிற்றுப்போக்கு மற்றும் சின்னம்மை நோய்கள் பரவி இருப்பதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. இங்கிருப்பவர்கள் உணவை பெறுவதும் கடினமாக உள்ளது என்று அது தெரிவித்துள்ளது.

காசாவின் எதிர்காலம்

காசாவில் மேற்கொள்ளும் தரைவழி நடவடிக்கை ஹமாஸ் அமைப்பினால் பிடித்து வைத்திருக்கும் பணயக்கைதிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று இஸ்ரேல் அஞ்சுகிறது. இந்தப் பணயக்கைதிகள் சுரங்கப் பதையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை போர் நிறுத்தம் இல்லை என்று இஸ்ரேல் கூறி வருகிறது. மறுபுறம் காசா தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

“பொதுமக்களைக் கொல்வதைத் தவிர வேறு எந்த இராணுவ சாதனையையும் தரையில் நிகழ்த்த முடிந்ததா, என்ற (இஸ்ரேலுக்கு) நான் சவால் விடுகிறேன்” என்று மூத்த ஹமாஸ் அதிகாரியான காசி ஹமாத், அல் ஜசீரா தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.

“காசா முறியடிக்க முடியாதது என்பதோடு அமெரிக்கர்கள் மற்றும் சியோனிஸ்ட்களின் தொண்டையில் முள்ளாக தொடர்ந்து இருக்கும்” என்றும் ஹமாத் தெரிவித்தார்.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்று ஹமாஸுக்கு உதவியாக அமையும் என்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நம்புகின்றன. எனினும் பிரதமர் நெதன்யாகு சண்டை நிறுத்தம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செவ்வாயன்று (07) வலியுறுத்தி இருந்தார்.

ஹமாஸை ஒழிப்பதாக சூளுரைத்து வரும் இஸ்ரேல் காசாவில் எதிர்காலம் பற்றியும் பேசியுள்ளது. போருக்குப் பின்னர் ஒரு காலவரையற்ற காலத்திற்கு காசாவின் பாதுகாவலராக இருக்கப்போவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

எனினும் காசாவில் ஆட்சிபுரிய இஸ்ரேல் விரும்பவில்லை என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போரை முடித்த பின் இஸ்ரேலோ அல்லது ஹமாஸோ காசாவில் ஆட்சி புரியாது என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கல்லன்ட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை காசா ஆட்சியில் ஹமாஸ் அங்கமாக இருக்காது என்றும் போருக்குப் பின்னரான காசா தொடர்பிலும் எவ்வாறான ஆட்சி இருக்க வேண்டும் என்பது தொடர்பில் ஆரோக்கியமாக பேச்சுவார்த்தை தேவை என்றும் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிர்பி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்திருக்கும் ஹமாஸ் அமைப்பு, காசா அரசு என்பது முழுமையாக பலஸ்தீன விவகாரம் என்றும் அந்த உண்மையை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

1967 ஆறு நாள் போரின் மூலம் இஸ்ரேல் ஆக்கிரமித்த காசா பகுதியில் இருந்து அது 2005 ஆம் ஆண்டு வாபஸ் பெற்றது. தொடர்ந்து இடம்பெற்ற தேர்தலில் பலஸ்தீன அதிகாரசபையை தோற்கடித்து ஹமாஸ் அமைப்பு அங்கு ஆட்சியை கைப்பற்றியது. 2014 ஆம் ஆண்டிலும் காசாவுக்கு இஸ்ரேல் தனது தரைப்படையை அனுப்பியிருந்தது.

சவூதியில் மாநாடு

இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்வரும் நாட்களில் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் மாநாட்;டை சவூதி அரேபியா கூட்டவுள்ளதாக அந்நாட்டு முதலீட்டு அமைச்சர் கலீபா அல் பாலஹ் தெரிவித்துள்ளார்.

“இந்த வாரத்தின் அடுத்த சில நாட்களில் ரியாதில் அவசர அரபு மாநாட்டை நடத்த நாம் எதிர்பார்த்துள்ளோம்” என்று சிங்கப்பூரில் நடைபெறும் ப்ளும்பர்க் புதிய பொருளாதார மன்றத்தில் நேற்று (08) உரையாற்றிய பாலிஹ் தெரிவித்தார்.

“அடுத்த சில நாட்களில் இஸ்லாமிய மாநாடு ஒன்றையும் சவூதி அரேபியா கூட்டவுள்ளது. மோதலுக்கு அமைதித் தீர்வு ஒன்றை எட்டும் நோக்கிலேயே சவூதி அரேபியாவின் தலைமையின் கீழ் குறுகிய காலத்தில் இந்த மாநாடுகள் மற்றும் ஒன்றுகூடல்கள் நடத்தப்படுகின்றன” என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரானிய ஜனாதிபதி இப்ராஹி ரைசி வரும் ஞாயிற்றுக்கிழமை (12) சவூதி அரேபியா பயணிக்கவிருப்பதாக ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் சீனாவின் மத்தியஸ்தத்தில் ஈரான் மற்றும் சவூதி அரேபியா பல ஆண்டுகள் நீடித்து வந்த முறுகலை முடிவுக்குக் கொண்டுவந்த பின் ஈரானிய அரச தலைவர் ஒருவரின் முதல் விஜயமாக இது உள்ளது.   நன்றி தினகரன் 

சிறுவர்களின் மயானமாக மாறிவரும் காசா நகரம்       ஐ.நா. செயலாளர் எச்சரிக்கையுடன் கவலை

November 8, 2023 1:25 pm 

சிறுவர்களின் மயானமாக காசா நகர் மாறிவருவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரஸ் மிகக் கவலையுடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது, மனிதாபிமான நெருக்கடியைவிடவும் மனித குலத்தின் நெருக்கடியாகுமென அவர் தெரிவித்துள்ளார்.

தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்கள் கொல்லப்படுகின்றனர். உடனடியாக போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இணங்க வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார். காசா போர் ஆரம்பித்து ஒரு மாதத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதலில் இதுவரையில், 10 ஆயிரத்து 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 04 ஆயிரத்து 104 சிறுவர்களும் அடங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 


காசா போருக்கு ஒரு மாதம் எட்டிய நிலையில் இஸ்ரேல் தொடர்ந்தும் இடைவிடாது தாக்குதல்          காசாவை அப்பாஸிடம் கொடுக்க பேச்சு

November 8, 2023 6:46 am 

காசா மற்றும் இஸ்ரேல் போர் வெடித்து நேற்றுடன் ஒரு மாதம் எட்டிய நிலையில் இஸ்ரேலின் வான் மற்றும் தரைவழி தாக்குதல்கள் இடைவிடாது நீடித்து வருவதோடு போர் நிறுத்தத்திற்கான அழைப்பையும் இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தொடர்ந்து மறுத்து வருகிறார்.

காசாவில் உயிரிழப்பு 10,000ஐ தாண்டி இருப்பதோடு காசா நகரை சுற்றிவளைத்ததாக குறிப்பிட்டிருக்கும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பின் வளாகம் ஒன்றையும் கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது. எனினும் நிலத்தடி சுரங்கப்பதைகளில் இருந்து பலஸ்தீன போராளிகள் தொடர்ந்து இஸ்ரேலிய படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்.

தெற்கு காசா நகரங்களான கான் யூனிஸ் மற்றும் ரபா மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரித்துள்ளது.

வடக்கு காசாவிலும் தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெற்றபோதும் அங்குள்ள மக்கள் தெற்கை நோக்கி சலாஹ் அல் தீன் பாதை வழியாக பயணிக்க இஸ்ரேல் இராணுவம் நேற்று நான்கு மணி நேரம் அவகாசம் வழங்கி இருந்தது.

காசாவில் இதுவரை 12,000க்கும் அதிமான இலக்குகள் மீது வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. தரைவழி துருப்புகளை அனுப்பியிருக்கும் இஸ்ரேல் காசா பகுதியை இரண்டாக பிரித்திருப்பதாகவும் காசா நகரை சுற்றிவளைத்ததாகவும் கூறியது.

கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1400 பேரை கொன்று 240 பேரை பணயக்கைதிகளாக கடத்திச் சென்றது தொடக்கம் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

போர் நிறுத்தத்திற்கான அழைப்பு அதிகரித்தபோதும் அதற்கான சாதகமான நிலைப்பாடு வெளியாகவில்லை. போர் நிறுத்தத்திற்கு முன்னர் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேல் கூறும் அதே நேரம் காசா தாக்குதலுக்கு இலக்காகும் நிலையில் அவர்கள் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று ஹமாஸ் கூறுகிறது.

போர் நிறுத்தம் இஸ்ரேலின் போர் நடவடிக்கையை சீர்குலைத்துவிடும் என்றும் அமெரிக்கா ஆதரிக்கும் மனிதாபிமான காரணத்திற்கான போர் நிறுத்தம், சூழலுக்கேற்ப முன்னெடுக்கப்படும் என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

“மூலோபாய ரீதியில் அங்கும் இங்கும் போர் நிறுத்தங்களை நாம் முன்னெடுப்பதோடு நாம் இதனை முன்னரும் செய்துள்ளோம். மனிதாபிமான உதவிகள் வருவதற்கு அல்லது எமது பணயக்கைதிகள், தனிப்பட்ட பணயக்கைதிகள் வெளியேறுவதற்கான சூழலை நாம் சரிபார்க்கிறோம்” என்று ஏ.பி.சி நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இவ்வாறான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த திங்கட்கிழமை நெதன்யாகுவுடன் தொலைபேசியில் ஆலோசித்துள்ளார். இஸ்ரேலுக்கு நாம் ஆதரவு அளிக்கும் அதே நேரம் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலைப் போன்றே போர் நிறுத்தம் ஒன்றை ஹமாஸ் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என்று அமெரிக்காவும் அச்சத்தை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்த ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், காசா குழந்தைகளின் கல்லறையாக மாறி வருவதாக தெரிவித்தார்.

“இஸ்ரேலிய படை தரைவழி நடவடிக்கையை மேற்கொள்வதோடு பொதுமக்கள், மருத்துவமனைகள், அகதி முகாம்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் முகாம்கள் உட்பட ஐ.நா நிலைகள் மீதும் தாக்குகிறது. யாரும் பாதுகாப்பாக இல்லை” என்று குட்டரஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“அதேநேரம் ஹமாஸ் மற்றும் ஏனைய போராட்ட அமைப்புகள் பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துவதோடு இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது” என்றும் அவர் கூறினார்.

30 ஆண்டுகளில் வேறு எங்கும் நடக்காத அளவுக்கு இந்த 4 வாரத்தில் அதிகமான செய்தியாளர்களும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியாளர்களும் பலியாகிவிட்டனர் என்றும் அவர் கூறினார்.

காசாவில் இஸ்ரேலினால் 48 செய்தியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனைகளால் காயமடைந்தவர்களை கையாள முடியாதிருப்பதோடு உதவி விநியோகங்கள் கிட்டத்தட்ட முடியும் நிலையை எட்டியிருக்கும் சூழலில் உணவு மற்றும் சுத்தமான நீர் தீர்ந்து வருவதாகவும் சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.

வடக்கு காசாவில் தொடர்ந்தும் 350,000 பொதுமக்கள் இருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருக்கும் நிலையில் அங்கு வீடு வீடாக இடம்பெறும் கடுமையான மோதல் தொடர்பில் இராணுவ ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். காசாவில் இருந்து இஸ்ரேல் 2005 ஆம் ஆண்டு வாபஸ் பெற்றதோடு 2014 ஆம் ஆண்டு அது கடைசியாக தரை வழி தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தது.

கடந்த 15 ஆண்டு காலத்தில் ஹமாஸ் தரைக்குக் கீழும், தரை மட்டத்திலும், தரைக்கு மேலும் பாதுகாப்பை பலப்படுத்த அவகாசம் இருந்திருப்பதாக வொஷிங்டனைச் சேர்ந்த சிந்தை அமைப்பின் மைக்கல் நைட்ஸ் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

அந்த அமைப்பின் தற்பாதுகாப்பில் கண்ணிவெடிகள், மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள், கவசவாகன எதிர்ப்பு கண்ணிவெடிகள் மற்றும் கட்டடங்களை சிதைக்கக் கூடிய பொறிகளும் இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் ஹமாஸிடம் நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் வரை செல்லக் கூடிய சுரங்கப்பாதைகள் இருப்பதோடு, கடத்தப்பட்டிருக்கும் பணயக்கைதிகள் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இஸ்ரேலின் போர் நடவடிக்கை சிக்கலை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு பயணத்தின் பின் ஜி7 வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்புக்காக ஜப்பான் விஜயம் மேற்கொண்டுள்ளார். அந்த மாநாட்டில் காசா விவகாரம் தொடர்பில் பொதுவான நிலைப்பாடு ஒன்றை பெற அவர் முயல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் போர் முடிவில் காசாவை யார் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பிலும் பிளிங்கன் பேசியுள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற பிளிங்கன், பலஸ்தீன அதிகாரசபையின் கீழான ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்தபோது காசாவின் கட்டுப்பாட்டை ஏற்கும்படி கேட்டுள்ளார்.

எனினும் இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினைக்கு விரிவான தீர்வொன்று எட்டப்பட்டாலேயே பலஸ்தீன அதிகாரசபை காசாவில் அதிகாரத்தை பெறும் என்று அப்பாஸ் தெரிவித்துள்ளார். எனினும் காசாவில் பொம்மை அரசாங்கத்தை ஏற்கமாட்டோம் என்று ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது. உலகில் எந்த சக்தியாலும் தம்மை நிர்மூலமாக்க முடியாது என்று லெபனானில் உள்ள ஹமாஸ் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தான் தெரிவித்துள்ளார்.

ஐ.நா பாதுகாப்புச் சபையும் திங்களன்று மூடிய அறையில் கூடியது. இந்தப் போர் தொடர்பில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் நான்கு முயற்சிகள் தோல்வியடைந்த நிலையிலேயே 15 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பாதுகாப்புச் சபை மீண்டும் கூடியுள்ளது.

இதேவேளை தென்னாபிரிக்காவும் இஸ்ரேலுக்கான தனது தூதுவரை திரும்ப அழைத்துள்ளது. காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் கூட்டுத் தண்டனையை மேற்கொள்வதாக அது தெரிவித்துள்ளது.

இதன்படி போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேலுக்கான தூதுவர்களை திரும்ப அழைத்துக் கொண்ட நாடுகளின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது. தவிர, பொலிவியா இஸ்ரேலுடனான உறவை துண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

மத்திய கிழக்கு விரைந்தது அமெரிக்க அணு நீர்மூழ்கி

November 7, 2023 10:30 am 

அமெரிக்கா தனது அணு சக்தி நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றையும் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது. இஸ்ரேல் மற்றும் காசா போர் வெடித்தது தொடக்கம் அமெரிக்கா பிராந்தியத்தில் படை பலத்தை பலப்படுத்தி வருகிறது.

ஏற்கனவே இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் துருப்புகளை இஸ்ரேலை ஒட்டி, பிராந்தியத்தில் அதிகரித்துள்ளது. எனினும் தமது படைகளை இஸ்ரேலுக்கு அனுப்பும் எண்ணம் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் 40,000க்கும் அதிகமான படைகள் நிலைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. பணிப்பாளர் வில்லியம் பேர்ன்ஸ் நேற்று முன்தினம் இஸ்ரேல் பயணமானார். அங்கு அவர் இஸ்ரேலிய தலைவர்கள் மற்றும் உளவுப் பிரிவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தொடர்ந்து பிராந்திய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.   நன்றி தினகரன் 


No comments: