இலங்கைச் செய்திகள்

பாகிஸ்தான் தூதுவர் மீதான கொலைக் குற்றச்சாட்டு; தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 16 வருடங்களின் பின் விடுதலை நீண்ட விசாரணையின் பின் நீதிபதி விடுவித்தார் 

அரசியல் தீர்வு விடயத்தில் அவுஸ்திரேலியா உதவ வேண்டும் மத்தியஸ்தம் வகிக்கவும் இரா. சாணக்கியன் கோரிக்கை

சிவனொளிபாத யாத்திரை டிசம்பர் 26 முதல் ஆரம்பம் கலந்துரையாடலின் பின்னர் தீர்மானம்

பாராளுமன்றில் இடம்பெற்ற சம்பவம் இராஜாங்க அமைச்சர் டயனாவின் விசாரணை அறிக்கை கையளிப்பு

சீனத் தூதுவர் நயினையில் வேட்டி அணிந்து வழிபாடு

சுவஸ்திகாவை யாழ். பல்கலையில் உரையாற்ற அனுமதிக்க வேண்டும் - யாழ் .பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கைபாகிஸ்தான் தூதுவர் மீதான கொலைக் குற்றச்சாட்டு; தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 16 வருடங்களின் பின் விடுதலை நீண்ட விசாரணையின் பின் நீதிபதி விடுவித்தார் 

November 11, 2023 7:20 am 

கடந்த 2006ஆம் ஆண்டு கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் அப்போதைய இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பயணித்த வாகனத்தொடரணி மீது இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் இந்தத் தீர்ப்பை வழங்கினார். குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையால், அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக, நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

யோகராஜா நிரோஜன், கரன் எனும் சுப்பிரமணியம் சுரேந்திர ராஜா மற்றும் கனகரத்தினம் ஆதித்தியன் ஆகிய மூவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்கள் மூவரும் சுமார் 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டியில் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பசீர் அலி முகமது பயணித்த வாகனத்தொடரணி மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தி, அவரை படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டே இம்மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கில் அரச தரப்பில் சிரேஷ்ட அரச சட்டத்தரணி யோகான் அபேவிக்ரம முன்னிலையானதுடன், கனகரத்தினம் ஆதித்தியன் சார்பாக சட்டத்தரணி தர்மராஜாவின் அனுசரணையுடன் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, சட்டத்தரணி கனில் மத்துமகே ஆகியோர் முன்னிலையாகினர்.

ஏனைய பிரதிவாதிகள் சார்பாக சட்டத்தரணிகளான கனகா சிவபாதசுந்தரம் மற்றும் தனுக மத்துமகேயும் முன்னிலையாகினர்.   நன்றி தினகரன் 

அரசியல் தீர்வு விடயத்தில் அவுஸ்திரேலியா உதவ வேண்டும் 

மத்தியஸ்தம் வகிக்கவும் இரா. சாணக்கியன் கோரிக்கை

November 11, 2023 7:10 am 

“எமக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும்” என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸை சந்தித்துக் கலந்துரையாடிய போதே,

இர.சாணக்கியன் எம்.பி. இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த சந்திப்புத் தொடர்பாக இரா.சாணக்கியன் எம்.பி. மேலும் தெரிவித்த போது, “இந்தச் சந்திப்பானது சமகால அரசியல் தொடர்பாகவும் குறிப்பாக மயிலத்தமடு, மாதவனைப் பகுதிகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான முழு விபரங்களை அறியும் முகமாகவும் அதற்கான தீர்வுகளை பற்றியதாகவும் இருந்தது. அத்துடன், எமது கட்சியின் எதிர்கால மாநாடு தொடர்பாகவும் இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பாகவும் கலந்துரையாடினோம். அவுஸ்திரேலியாவும் எமது நாட்டைப் போல் கூட்டாட்சி அரசியல் அமைப்பைக் கொண்ட நாடாகும். அங்கு மாநிலங்கள் போல் இங்கு மாகாணமாக காணப்படுகின்றது. அங்கு மற்றைய நாடுகளை போல் அல்லாது, இலங்கையை சேர்ந்த புலம்பெயர்ந்த சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்களாகிய பலர் வாழ்ந்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கமானது அவுஸ்திரேலியாவை நடுநிலைமை வகிக்கும் நாடென்ற வகையில் ஏற்றுக்கொள்ளுமெனும் ரீதியில் அவுஸ்திரேலிய அரசாங்கம் எமக்கான அரசியல் தீர்வு விடயத்தில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 

சிவனொளிபாத யாத்திரை டிசம்பர் 26 முதல் ஆரம்பம் கலந்துரையாடலின் பின்னர் தீர்மானம்

November 11, 2023 6:00 am 

எதிர்வரும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி பௌர்ணமி பூரணை தினத்துடன் சிவனொளிபாத மலைக்கான யாத்திரையை ஆரம்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நல்லதண்ணி பிரதேசத்திலுள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, இந்தத் தீர்மானம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சிவனொளிபாத மலைக்கு யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 

பாராளுமன்றில் இடம்பெற்ற சம்பவம் 

இராஜாங்க அமைச்சர் டயனாவின் விசாரணை அறிக்கை கையளிப்பு

November 10, 2023 6:38 am 

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மற்றும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே அண்மையில் இடம்பெற்ற குழப்பகரமான சம்பவம் தொடர்பில்

ஆராயவென நியமிக்கப்பட்ட குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கை, எதிர்வரும் திங்கட்கிழமை (13) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவதர்னவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரை வழங்க பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையிலான குழு நேற்று (09) மூன்றாவது முறையாக கூடி இறுதி அறிக்கையை தயாரிப்பதற்கு முடிவெடுத்தது.

இதன்படி, சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார திஸாநாயக்க மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோருக்கு சில காலம் பாராளுமன்றத்துக்கு வருவதற்கு தடை விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த சில்வாவும் குழு முன் நேற்று ஆஜராகி சாட்சியமளித்தார். பாராளுமன்றத்தின் கீழ் தளத்தில் கடந்த மாதம் (20) இம்மூவருக்கும் இடையில் இந்த குழப்பகரமான சம்பவம் இடம்பெற்றது.   நன்றி தினகரன் 

சீனத் தூதுவர் நயினையில் வேட்டி அணிந்து வழிபாடு

November 10, 2023 6:16 am 

யாழ். மாவட்டத்துக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர், நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதன்போது சீனத் தூதுவர் கி ஸென் ஹொங் இந்து சமய முறைப்படி வேட்டி அணிந்து ஆலய தரிசனங்களில் ஈடுபட்டார்..

நயினாதீவுக்கு விஜயம் செய்த சீன தூதுக்குழு, சீன அரசின் உலர் உணவுப் பொதிகளையும் மக்களுக்கு வழங்கினார். அத்துடன் சிவில் சமூகத்தினர், புத்திஜீவிகள், வர்த்தக சமூக பிரதிநிதிகளையும் சீனத் தூதுக்குழு யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியது.

(யாழ். விசேட நிருபர்) - நன்றி தினகரன் 

சுவஸ்திகாவை யாழ். பல்கலையில் உரையாற்ற அனுமதிக்க வேண்டும் - யாழ் .பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை

November 9, 2023 9:47 am 

சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையிலே தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க‌ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள‌ வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் உரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கடந்த 31ஆம் திகதி நிறுத்தப்பட்டமை தொடர்பிலான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

கடந்த அக்டோபர் 31ஆம் திகதி அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்டு சட்டத்தரணிசுவஸ்திகா அருலிங்கம் “நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம்” என்ற தலையங்கத்திலே உரையாற்ற இருந்தார்.

இந்த உரையாடல் இறுதி நேரத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பிரிவினரின் நெருக்கடி காரணமாக கைவிடப்பட்டது.

இதற்கு மாணவர்களினால் சொல்லப்பட்ட காரணம் சட்டத்தரணி சுசுவஸ்திகா  தென்னிலங்கையில் ஒரு நிகழ்ச்சியிலே பேசும் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை பாசிஸ அமைப்பு என விபரித்தமையே ஆகும்.

ஒருவர் வெளியிட்ட தனிப்பட அரசியற் கருத்தின் அடிப்படையில் அவரைப் பல்கலைக்கழகத்திலே பேச அனுமதிக்கக் கூடாது எனப் பல்கலைக்கழக மாணவர்கள் நிர்வாகத்துக்கு நெருக்குவாரம் கொடுத்தமை மிகவும் தவறான ஒரு செயல் என்பதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இந்த அறிக்கையில் பதிவிடுகிறது.

சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையிலே தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க‌ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிருவாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள‌ வேண்டும்.

பல்கலைக்கழகத்தினுள் கருத்துச் சுதந்திரம், கல்விச் சுதந்திரம், மாற்றுக் கருத்துக்களுக்கான இடம் என்பவற்றினைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது தொடர்பாக மாணவர்களுடனும், பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்புக்களுடனும் உரையாடுவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான செயற்பாடுகளில் நாம் விரைவில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

யாழ்.விசேட நிருபர் - நன்றி தினகரன் No comments: