கந்தசஷ்டி சிறப்புத் துதிகள்


 
கந்தசக்ஷ்டி  1ம் நாள் 
நம்பிடும் அடியார் நற்றுணை நீயே  !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியாஉருகிடு மடியார் உளமுறை வோனே 
மருள் நிலையகல வரமருள் வோனே
கருணையி னுருவாய் திழந்திடு வோனே
கந்தா கடம்பா காத்திடு எம்மை 

ஆசா னாகியே அப்பனுக் குரைத்தாய்
அறு படையேகி அமர்ந்தே கொண்டாய் 
அவ்வைப் பாட்டியின் அருந்தமிழ் சுவைத்தாய்
ஐயா கந்தா அடைக்கலம் நீயே 

மாறா மனத்தை மாற்றிட வல்லாய்
ஆறா சினத்தை அடக்கியே வைப்பாய்
பாறாங் கல்லென இருப்பார் தம்மை
பக்குவ மாக்குவாய் பரமனின் மைந்தா 

தாகம் தீர்ப்பாய் வேகந் தடுப்பாய்
மோகம் கலைப்பாய் முறுவல் கொடுப்பாய்
நாளு மாவாய் கோளு மாவாய்
நம்பிடு  மடியார் நற்றுணை நீயே 

 
        கந்தசக்ஷ்டி  2ம் நாள் 
கருணைக் கடவுளாய் மலர்ந்தாய் கந்தாய்
  
ஓசையும் நீயே ஒளியும் நீயே 
மாசே இல்லா மாணிக்கம் நீயே
ஆசை அறுக்கும் அப்பனும் நீயே
ஐயா கந்தா ஆறுதல் நீயே

எல்லா விடத்தும் இருப்பாய் கந்தா
தொல்லை களைய வைப்பாய் கந்தா
நல்லைப் பதியில் உறையும் கந்தா
நாளும் துணையே நீயே கந்தா 

செல்வச் சன்னதி தெரிவாய் கந்தா
சீரும் சிறப்பும் தருவாய் கந்தா
உள்ள முருகிப் பாடு மடியார்
உயர் வாயிருக்க அருள்வாய் கந்தா 

மயிலில் விரும்பி அமர்ந்தாய் கந்தா
மயக்கும் வினையை அறுப்பாய் கந்தா 
கயிலை மலையான் கனன்ற பொறியால்
கருணைக் கடவுளாய் மலர்ந்தாய் கந்தா 


கந்தசக்ஷ்டி  3 ம் நாள் 
சங்கடம் அனைத்தும் போக்கிடு கந்தா
    
  சக்ஷ்டி விரதம் நோற்கிறோம் கந்தா
  சங்கடம் அனைத்தும் போக்கிடு கந்தா
  காவடி சுமந்து சேவடி வருவோம் 
  காத்திடு எம்மை கருணைக் கடவுளே

 இல்லம் அனைத்தும் சிறக்க வேண்டும்
 இருக்கும் குறையும் அகல வேண்டும்
 சொல்லும் செயலும்  நல்லாய் இருக்க
 நல்லைக் கந்தா அருள்வாய் நாளும் 

மனதில் உறுதி நிலைத்திட வேண்டும்
வாக்கில் வாய்மை நிறைந்திட வேண்டும்
கனவும் நனவும் உந்தன் நினைப்பை 
மனத்தில் இருக்க அருள்வாய் கந்தா 

நாளும் உன்னை நயமாய் பாட
நற்றமிழ் வல்லமை தந்திடு முருகா
சேவற் கொடியுடன் மயிலில் அமர்ந்து
சீரா யிருக்கச் செய்திடு முருகா 


              கந்தசக்ஷ்டி  4 ம் நாள் 
பாதம் பணிகிறோம் பார்த்திடு முருகையா 

பெற்ற வரத்தை பேணிடா நின்று
குற்ற மிழைத்தார் கொடிய அசுரர் 
அசுரர் மாற அவதாரம் செய்தாய்
ஆறு முகவா அடிதொழு கின்றோம் 

மாறா சூரர் மாறிட வைத்தாய்
சேவலாய் மயிலாய் உன்வச மாக்கினாய் 
அருளைக் கொடுத்தாய் ஆணவம் போக்கினாய்
அரனின் மைந்தா அழகுடைக் குமரா 

வேலை ஏந்தினாய் வெற்றியைக் காட்டினாய்
மூலப் பொருளாய் ஆகியும் நின்றாய் 
வேதம் விளக்கினாய் விண்ணவர்க் குதவினாய்
பாதம் பணிகிறோம் பார்த்திடு முருகையா 


              கந்தசக்ஷ்டி  5 ம் நாள் 
மனதார வேண்டுகிறோம் துணையே  நீகந்தா 

போரொழிய வேண்டும் பேரமைதி வேண்டும்
தீராத பேயாசை தீவிழுங்க வேண்டும் 
யாவருமே உறவென்னும் நல்லுணர்வு மலர
நல்லுரான் கந்தா நீயருள வேண்டும் 

நல்லாட்சி வேண்டும் நற்றலைமை வேண்டும்
பொல்லாத சிந்தனைகள் பொசுங்கவே வேண்டும்
நல்வழியில் நாளும் எல்லாரும் நடக்க 
நல்லை நகர்கந்தா நீயருள வேண்டும்

 அறமோங்க வேண்டும் மறமழிய வேண்டும் 
 புறங்கூறு மெண்ணம் புதையுண்ண வேண்டும்
 நலமான எண்ணம் உளமமர வேண்டும்
 நல்லையின் கந்தா வழிகாட்டு நாளும் 

 அருளுடை ஆறுமுகம் அமைந்த பெருமாளே
 அபயகரம் பனிரெண்டு கொண்ட பெருமாளே
 வள்ளி தேவயானையுடன் மயிலேறி வந்து
 மாவருளைத் தந்தெம்மைக் காத்திடுவாய் கந்தா 

 கலியுகத்தில் கண்கண்ட தேய்வம் நீகந்தா 
 கருணையே உருவான கடவுளே கந்தா 
 வைதாரை மனமேற்கும் மால்மருகா கந்தா 
 மனதார வேண்டுகிறோம் துணையே  நீகந்தா No comments: