தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடாத்திய இனிய இலக்கிய சந்திப்பு


“இது இரண்டு நிமிடக் காணொளிகளையே பார்க்கப் பொறுமை இல்லாத உலகம்!

இந்த நிலையில் யார் தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்கு வரப் போகின்றார்கள்?”

இது நாம் அடிக்கடி கேட்டுப் பழகிப் போன வாசகம்.

இந்த நிலையை மாற்றிக் காட்டி இருக்கின்றார்கள் சிட்னி தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தினர்.

இவர்கள் சென்ற பன்னிரண்டாண்டுகளாகத் தொடர்ந்து இனிய இலக்கிய சந்திப்பு என்ற தொடரில் மிகச் சிறந்த பேச்சாளர்களைத் தமிழகத்தில் இருந்து வரவழைத்து சிந்தைக்கினிய இலக்கியச் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்து வருகின்றார்கள்.

இத் தொடரில் சென்ற ஞாயிற்றுக்கிழமை ஒரு மிகச் சிறந்த இலக்கிய விழாவை நடாத்திப் பெரும் வெற்றி கண்டிருக்கின்றார்கள்.

நாம் விழா நடந்த துர்க்கா கோயில் மண்டபத்துக்குப் போன போது விழா தொடங்க முன்னரே மக்கள் திரளாக வந்து அரங்கத்தை நிறைத்திருந்த அதிசயத்தைக் கண்டு வியந்து போனோம்.  பேச்சாளர்கள் மெல்போர்னில் இருந்து அன்று தான் வந்தமையால் ஏற்பட்ட தாமதத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

விழாவுக்கு வந்திருந்தோரை இரத்தினச் சுருக்கமாகக் கழகத்தின் தலைவர் திரு. கர்ணன் சிதம்பர பாரதி அவர்கள் வரவேற்றுப் பேசினார்.  அதைத் தொடர்ந்து கழகத்தின் செயலாளர் திரு அனகன் பாபு அவர்கள் கழகத்தின் செயற்பாடுகளை விள்க்கிக் கூறினார்.  எதிர்காலத்தில் கழகத்துக்கு ஓர் இடத்தைத் தேட வேண்டும் என்றும் அதன் முதற் கட்டமாக ஒரு வீட்டை வாங்கத் திட்டமிட்டு வருவதாகவும் சொன்னார்.  $10,000 தருபவர்களின் பெயர் வீட்டில் பொறிக்கப்படும் என்றும் சொன்னார்.  சிந்தித்துப் பார்த்ததில் இது ஒரு மிக நல்ல திட்டமாகவே பட்டது. 

அடுத்து சிட்னி கவிஞர் கலைமணி அவர்கள் ஒரு வரவேற்புக் கவிதையைப் படித்தார்கள்.  அது ஓர் உருவகக் கவிதையாகவும் அமைந்தது சிறப்பாக இருந்தாலும் சற்று நீண்டு விட்டது!  கவிதை இல்லாத இலக்கியமா!

தமிழகத்தில் இருந்து மூன்று பேச்சாளர்கள் அன்று பேச வந்திருந்தார்கள்.  இவர்கள் ஒவ்வொருவருமே சொற்பொழிவாற்றல் கலையில் தமக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து மக்கள் மனதிலே இடம்பிடித்தவர்கள்.

இந்த மூன்று பேருடைய பேச்சுகளுக்கும் இலக்கியத்தில் உணர்ச்சி, இலக்கியத்தில் அறிவாற்றல், இலக்கியத்தில் மேலாண்மை என்று மிகச் சாதுரியமாகத் தலைப்புக் கொடுத்து மக்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் விழாவைக் கழகத்தினர் அமைத்திருந்தமை பாராட்டுக்குரியது.

இலக்கியத்தில் உணர்ச்சி என்ற தலைப்பிலே மொழியரசி பர்வீன் சுல்தானா அவர்கள் அற்புதமாகப் பேசினார்கள். 


தந்தையார் உருது மொழிக் கவிஞர்.  கவிஞராக இருந்தாலே ஏழ்மையும் ஒட்டிக் கொண்டுவிடும்.  அதுவும் உருது மொழிக் கவிஞராக இருந்தால் கேட்கவே வேண்டாம்.  வீட்டிலே கிழிந்த பாய்களில் படுத்துக் கொண்டே அம்மா சொல்லும் பறக்கும் கம்பளக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார் சுல்தான் பர்வீனா.  கற்பனையும் இலக்கியத் தேடலும் கூடவே வளர்ந்தன.  வானொலியில் இலக்கிய இரசனை உள்ள பாடல்கள் ஒலிபரப்பாகும் போது தாயார் அவரை எழுப்பிக் கேட்டு இரசிக்க வைப்பார்.  இதுவே இந்த இலக்கியத் தேடலை மேலும் தூண்டிவிட்டது. 

தமிழ் இலக்கியக் கடலில் ஆழ்ந்து தோய்ந்து சில நன்முத்துகளைத் தேடி வந்து அவற்றை அன்று அவர் எம்முடன் பகிர்ந்து கொண்டார்.  இலக்கியம் என்றாலே பல்வேறு உணர்ச்சிகள் நிறைந்த களம் அல்லவா! அவற்றிலே சிலவற்றைத் தன் வித்தியாசமான சிந்தனையில் பார்த்து எமக்குச் சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது.

சிலப்பதிகாரத்திலே கோவலனைப் பாண்டிய மன்னனின் காவலர்கள் கொல்ல முன்னரே கண்ணகியின் செயல் அவனை அரைவாசி கொன்றுவிட்டது என்று சொல்லி எம்மைச் சிந்திக்க வைத்தார்.

மாதவியிடம் எல்லாச் செல்வத்தையும் இழந்து ஒன்றுமே இல்லாதவனாகக்


கண்ணகியிடம் திரும்பி வந்து நின்று தன் நிலையை எடுத்துச் சொல்லி வெட்கப்படுகின்றான் கோவலன்.  கண்ணகி தன் காலிலே இருந்த சிலம்பைக் கழற்றிக் கொடுத்து முறுவலோடு “சிலம்புகள் உள்ளன, எடுத்துக் கொள்ளும்” என்கின்றாள்.  அந்தக் கணத்தில் கோவலன் உயிரற்ற நடைப்பிணமானான் என்று பர்வீன் சுல்தானா சொன்ன போது அந்தக் கணத்தின் வலி மிகுந்த உணர்வை அனுபவித்தோம்.

இப்படியாகத் திருக்குறளிலும் மற்றைய இலக்கியங்களிலும் இருந்து பல விடயங்களைக் காட்டி மிகவும் சிறப்பாகப் பேசி மக்களின், குறிப்பாகத் தாய்க்குலத்தினரின் பாராட்டைப் பெற்றார்.

அதன்பின் பேராசிரியர் கலைமாமணி கு. ஞானசம்பந்தன் அவரகள் இலக்கியத்தில் அறிவாற்றல் என்ற பேச்சில் நகைச்சுவையுடன் பேசினார்.  தான் பேராசிரியராகக் கடமையாற்றிய போது மாணவர்கள் கேட்ட சாதுரியமான கேள்விகள் பலவற்றைச் சொல்லி எம்மைச் சிந்திக்க வைத்தார்.  அனுமான், இராம- இராவண யுத்தத்தில் இறந்த இராமனின் வீரர்களை உயிர்ப்பிக்கச் சஞ்சித பர்வத மலையைக் கொண்டுவந்த போது ஏன் இராவணின் வீரர்கள் உயிர் பெற்று எழவில்லை?,  விலங்குகளைக் கால்நடை என்போம், மனிதர்களும் காலால் தான் நடக்கின்றார்கள் ஆனால் அவர்களை ஏன் கால்நடை என்பதில்லை?, தருமிக்கு உதவ மனித வடிவிலே வந்த சிவபெருமான் ஏன் தன் பாட்டிலே பிழை கண்ட நக்கீரரைத் தன் நெற்றிக் கண்ணைக் காட்டி எரித்தார்?, பிட்டுக்கு மண் சுமந்த கூலியாளாக வந்த


சிவபெருமானைப் பாண்டியன் அடித்த அடி எல்லா உயிர்களுக்கும் பட்டதென்றால் அவர் உண்ட பிட்டும் எல்லார் வயிற்றையும் நிறைத்ததா? போன்ற பல சிந்திக்க வைக்கும் கேள்விகளைக் கேட்டு அவற்றுக்கெல்லாம் இலக்கியங்களில் இருந்தே பதிலைத் தந்து நல்ல சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் பேசினார். 

இடைவேளையின் பின்னர் சொல்வேந்தர் சுகி. சிவம் அவர்கள் மிகவும் அருமையாகப் பேசினார்கள்.  அறிவையும் உணர்வையும் எப்படிக் கட்டியாண்டு சமநிலையில் வைத்து வாழ்விலே வெற்றி பெறலாம் என்பதை அன்றாட வாழ்க்கையின் சாதாரண நிகழ்வுகளைக் கொண்டே அற்புதமாக விளக்கினார்.  ஆழ்மனதில் இருந்து வரும் செயல்கள் தான் ஒருவரின் உண்மையான தன்மையைக் காட்டும் என்றும் சொன்னார்.  இது இலக்கியப் பேச்சை என்பதையும் தாண்டி நல்லதோர் மனோதத்துவப் பாடமாகவும் இருந்தது.

நிகழ்ச்சியிலே சமூகத்திலே பல பணிகள் செய்து சாதனை படைத்துவரும் சமூக சேவையாளர்கள் பலருக்கு ஆஸ் தமிழ் தொலைக்காட்சியினரால் விருதுகள் வழங்கப்பட்டன.  சமூக சேவை செய்ய முன்வருவோர் தொகை நலிந்து வரும் தற்போதைய நிலையில் இத்தகைய ஊக்குவிப்புகள் மிகவும் நல்ல பயனைத் தரும் என்பது நிச்சயம்.

நீண்ட காலத்துக்குப் பின் மன நிறைவைத் தந்து எம்மைச் சிந்திக்கவும் வைத்த நல்லதோர் இலக்கிய நிகழ்வில் கலந்து கொண்ட மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினோம்.

இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த சிட்னி தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்துக்கும் அதனை நடாத்தி வரும் தலைவர் திரு கர்ணன் சிதம்பர பாரதி அவர்களுக்கும், அவருக்குப் பக்கபலமாக இருந்துவரும் நிர்வாகக் குழுவினருக்கும் இவர்களுக்கெல்லாம் மிகப்பெரிய உந்து சக்தியாக விளங்கி வரும் திரு அனகன் பாபுவுக்கும் எமது உளமார்ந்த பாராட்டுகள்!  இவர்களது தமிழ்ப்பணி என்றைக்கும் தொடரட்டும்.

கவிஞர் த. நந்திவர்மன்

 

 

 

         

No comments: