நிலத்தினில் தீபாவளி நிறைவினைத் தரட்டும் !

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா
உல்லாசம் பொங்க உள்ளம் மகிழ்ந்திட 
உறவுகள் கூட உணர்ச்சி பொங்கிட
ஒளியில் இல்லம் மூழ்கிச் சிறந்திட
வருகின்ற நாளே மனமுறை தீபாவளி 

பட்டாசு மத்தாப்பு கைகளை நிறைக்க
பாங்குடன் சிறியவர் பெரியவர் மகிழ
வெடித்திடும் போதும் விரிந்திடும் போதும்
வேதனை துன்பம் காணாமல் போகுமே 

சமயமும் சேரும் சமூகமும் சேரும் 
சாத்திரம் சடங்கு சேர்ந்துமே நிற்கும்
இல்லமும் இணையும் இன்பமும் இணையும்
நல்லதை உணர்த்திடும் நம்தீபா வளியும் 

மணமக்கள் வாழ்வில் மகிழ்வினை ஊட்ட
மாமனார் வீட்டை நாடியே நிற்க
விருந்துகள் நடக்க வெகுமதி கிடைக்க
நலந்திகள் தீபாவளி நல்வழி சமைக்கும் 

புத்துடை மனதில் புத்துணர் வூட்டும் 
புதுப் பொலிவுடனே யாவரும் திகழ்வார் 
தித்திக்க பண்டம் வீடெலாம் மணக்கும்
தித்திக்கும் உணர்வை ஊட்டுமே தீபாவளி 

இசையுடன் விழாக்கள் எங்குமே நடக்கும்
இயற்றமிழ் அரங்கம் சிறப்பாய் இருக்கும் 
ஆடலும் பாடலும் அரு விருந்தாகும் 
அனைவரும் இணைந்து ஆனந்தம் அடைவார் 

ஆலயம் நோக்கி அனைவரும் ஏகுவார்
ஆண்டவ னிடத்து வேண்டுவார் பலவரம் 
பரவசப் பக்தியில் மூழ்குவார் பலருமே
பண்ணிசை பாடியே பரவுவார் பணிவுடன் 

சிறியவர் ஓட பெரியவர் தடுக்க
விழுந்தவர் எழும்ப இளசுகள் சிரிக்க
குதூகலம் என்பது விதம் விதமாக
தீபா வளியின் அங்கமாய் மிளிரும் 

இருப்பவர் இனிப்பை நிறையவே சுவைப்பார்
இல்லார் இனிப்பை எண்ணியே ஏங்குவார்
கொடுத்துமே மகிழ்வோம் கொண்டாட்டம் சிறக்கும்
நிலத்தினில் தீபாவளி நிறைவினைத்  தரட்டும் 

நிம்மதி மனத்தில் நிலைத்திடச் செய்வோம்
சொல்லினைச் சுவையாய் கொடுத்துமே நிற்போம்
இல்லவர் உள்ளவர் பேதத்தைக் களைவோம்
எல்லோர் மனத்திலும் இன்பத்தை நிறைப்போம்


No comments: