எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 84 கலை, இலக்கியம் உருவாக்கும் உறவுப்பாலம் ! இந்திய ஆளுமைகளிடம் கற்றதும் பெற்றதும் ! ! முருகபூபதி


எழுத்தும் வாழ்க்கையும் தொடரில் கடந்த 83 ஆவது அங்கத்தில்  இலங்கையைச் சேர்ந்தவர்கள், இலங்கையிலிருந்து ஏனைய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்கள் பற்றியெல்லாம் நான் முன்னர் எழுதியிருந்த பதிவுகள் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

அயல்நாடான இந்தியாவில்  வாழ்ந்தவர்கள் – மறைந்தவர்கள்  - தற்போதும் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுமான பல ஆளுமைகள் பற்றியும் எழுதி வந்திருக்கின்றேன்.

அவர்களில் மகாத்மா காந்தி முதல் கடந்த ஜூன் மாதம் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழாவில் நான் சந்தித்த எழுத்தாளர் பாவண்ணன் வரையில் பல பதிவுகளை எழுதியிருக்கின்றேன்.

அப்பா வழி உறவில்   எனது தாத்தாவான  தமிழ் நாட்டின் மூத்த


படைப்பாளி – பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு. சிதம்பர ரகுநாதனை, அவர் 1956 ஆம் ஆண்டு இலங்கை வந்தபோது முதல் முதலில் பார்த்திருக்கின்றேன். அப்போது எனக்கு ஐந்து வயது.

பின்னாளில் அவர் எனது இலக்கிய நட்பு வட்டத்திலும் இணைந்தார்.  சமகாலத்தில் அவரது நூற்றாண்டு நடந்துகொண்டிருக்கிறது. எனது பறவைகள் ( 2002 )  நாவலை ரகுநாதனுக்கே சமர்ப்பித்திருக்கின்றேன்.

ரகுநாதன் , மீண்டும் 1983 இல் பாரதி நூற்றாண்டு காலத்தில் இலங்கைக்கு வருகைதந்தவேளையில், அவருடன் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன்.

அவருடனான நினைவுகளை விரிவாகவும் எழுதியிருக்கின்றேன். தமிழ்நாடு அம்ருதா இதழிலும் அக்கட்டுரை வெளியாகியிருக்கிறது.

அவரது அண்ணனும் பாளையங்கோட்டை  முன்னாள் ஆட்சித் தலைவருமான தொ.மு. பாஸ்கரத்  தொண்டமான்  அவர்களை 1960 ஆம் ஆண்டில் முதல் தடவையாக நான் சந்தித்தபோது எனக்கு 11 வயது.  எங்கள் நீர்கொழும்பூர் இல்லத்திற்கு அவரை அழைத்து விருந்துபசாரம் செய்தோம்.

இவர்கள் இருவரும் உடன்பிறந்த அண்ணன் தம்பிகளாக இருந்தபோதிலும்,  ஆளுக்கு ஆள் கருத்து ரீதியாக முரண்பட்டு ஒருவரோடு ஒருவர் நீண்டகாலம் பேசாமலும் இருந்திருக்கின்றனர்.

பாஸ்கரன்  தனது பெயருக்குப்பின்னால் தொண்டமான் என்ற குலப்பெயரை வைத்துக்கொண்டார்.  தமிழக அரசின் உயர் பதவியையும் பெற்றார்.  காங்கிரஸ் ஆதரவாளர்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி,  இரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் ஆகியோரின் ஆத்ம நண்பர்.

கங்கை முதல் வேங்கடம் வரையில் முதலான நூல்களையும் இந்திய திருத்தலங்கள் பற்றியும் எழுதி வந்தவர்.

ஆனால், ரகுநாதன், அண்ணனின்  எழுத்துக்கள் மற்றும் பணிகளிலிருந்து முற்றாக வேறுபட்ட தளத்தில் இயங்கியவர்.

இடதுசாரி சித்தாத்தங்களில் மூழ்கியிருந்தவர்.  ரகுநாதனின் முதலிரவு என்ற நாவல் இந்திய அரசினால் தடைசெய்யப்பட்டது.  ரகுநாதன் நடத்திய சாந்தி இலக்கிய இதழில்தான் ஜெயகாந்தன், சுந்தரராமசாமி ஆகியோரின் ஆரம்ப கால படைப்புகள் வெளியாகின. புதுமைப்பித்தனின் ஆத்ம நண்பர். புதுமைப்பித்தனின் வாழ்க்கை சரிதமும் எழுதிய  இலக்கிய விமர்சகர்.


உடன்பிறந்த அண்ணன் பாஸ்கரத்தொண்டமான், அரச அதிகாரியாக பணியாற்றிக்கொண்டு,  அந்த ஆளும் அதிகார வர்க்கத்தின் ஏவலாளியாக இருந்தது குறித்து சிறைக்கும் சென்று திரும்பியிருக்கும் ரகுநாதனுக்கு கடும்கோபம்.

அண்ணன் பாஸ்கரத்தொண்டமான் 1961 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி மறைந்தபோது,  அவர் வாழ்ந்த அதே தெருவில் குடியிருந்த தம்பி ரகுநாதன் அஞ்சலி செலுத்த செல்லவில்லை.

உறவினர்கள் பலரதும் உருக்கமான வேண்டுகோளையடுத்து,  அஞ்சலி செலுத்தச்சென்ற ரகுநாதன், அந்த வீட்டு முற்றத்தில் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார். அண்ணனின் பூதவுடல் இறுதி ஊர்வலத்திற்கு தயாரானபோது  “ அண்ணா  “ என்று பெருங்குரல் எடுத்து கதறிவிட்டு,  அவ்விடத்தை விட்டு நகர்ந்தாராம்.

இப்படியும் வைராக்கியம் மிக்க ஒருவர் எழுத்துலகில், எங்கள் அப்பா


வழி உறவிலிருந்திருக்கிறார் என்பது எனக்கு பேராச்சரியம்.  திருநெல்வேலி பாஸ்கரத்தொண்டமான் வீதியில் எமது உறவினர்கள் வசிக்கிறார்கள்.

இந்த அண்ணன் – தம்பிமார் பற்றிய செய்திகள் தமிழ்நாடு பத்திரிகைகளில் வெளியாகும்போது கோயம்புத்தூரிலிருக்கும் எமது  இலங்கைத் தாய் மாமனார்  மகன் முருகானந்தன், அச்செய்திகளின் நறுக்கை  எனக்கு அனுப்பி வைக்கிறார்.

'மறுவாசிப்பில் தொ.மு.சி.ரகுநாதன்'  என்ற தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரையாற்றியிருக்கிறார். குறிப்பிட்ட காணொளியை இத்துடன் இணைக்கின்றேன்.

 


இந்திய கலை, இலக்கிய ஆளுமைகள் பற்றிய எனது பதிவுகளை தொகுத்து பாலம் என்ற பெயரில் ஒரு நூலை வெளியிடவிருக்கின்றேன்.

எனது அருமை நண்பர் எழுத்தாளர் – ஓவியர் கிறிஸ்டி நல்லரெத்தினம் அந்த நூலுக்கு முகப்போவியம் வரைந்துள்ளார்.

இலங்கையில் நான் 36 வருடங்களும்,  அவுஸ்திரேலியாவில் 36 வருடங்களும் வாழ்ந்திருக்கின்றேன்.

இந்திய ஆளுமைகள் சிலரை  இலங்கையிலும், இந்தியாவிலும்,  அவுஸ்திரேலியாவிலும் பிற நாடுகளிலும் சந்தித்திருக்கின்றேன். அவர்களில் சிலர் எனது வீடுகளுக்கும் வந்து சென்றிருக்கிறார்கள்.  சிலருடன் பயணங்களும் மேற்கொண்டிருக்கின்றேன். அந்த நினைவுகள் பசுமையானவை.

அவர்களிடம் கற்றதும் பெற்றதும் அநேகம்.

எனது பாலம் தொகுப்பில் இடம்பெற்றிருப்பவர்களை பாருங்கள்.

 

 

01.    மகாத்மா காந்தி  ( 1869 – 1948 )

 

02.    தொ.மு. பாஸ்கரத்  தொண்டமான்  ( 1904 – 1965 )


 

03.   கோவை ஞானி  ( 1935 – 2020 )

 

04.    தொ. மு. சிதம்பர ரகுநாதன் ( 1923 – 2001 )

 

05.   ராஜம் கிருஷ்ணன்  ( 1925 – 2014 )

 

06.    ஜெயகாந்தன்  ( 1934 – 2015 )

 

07.   ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் (  1931 – 2015 )

 

08.   கவியரசு கண்ணதாசன்  ( 1927 – 1981 )

 

09.     கவிஞர் வாலி   ( 1931 – 2013 )

 

10.   கலைஞர் கருணாநிதி ( 1924 – 2018 )

 

11.   தி. க. சிவசங்கரன் ( 1925 – 2014 )

 

12.   தா. பாண்டியன்  ( 1932 – 2021 )


 

13.   அசோகமித்திரன் ( 1931 – 2017 )

 

14.   சுஜாதா ( 1935 – 2008 )

 

15.   ‘ சிட்டி  ‘  சுந்தரராஜன் ( 1910 – 2006 )

 

16.   பாலுமகேந்திரா  ( 1939 – 2014 )

 

17.   ‘ முள்ளும் மலரும்  ‘  மகேந்திரன் ( 1939 – 2019 )

 

18.    ஓம்பூரி  ( 1950 – 2017 )

 

19.   யுகமாயினி சித்தன்

 

20.   பரீக்‌ஷா ஞாநி ( 1954 – 2018 )

 

21.  கலைவாணன் கண்ணதாசன்

 

22.   கி . வா. ஜகந்நாதன்  ( 1906 – 1988 )

 

23.   வெங்கட் சாமிநாதன்  ( 1933 – 2015 )

 

24.    கி. ராஜநாராயணன் ( 1923 – 2021 )


 

25.   சார்வாகன்  ( 1929 – 2015 )

 

26.   பாலகுமாரன்  ( 1946 – 2018 )

 

27.   எம். பி. ஶ்ரீநிவாசன் ( 1925 –  1988 )

 

28.   அகிலன்  ( 1922 – 1988 )

 

29.    ‘ க்ரியா  ‘ எஸ். ராமகிருஷ்ணன் ( 1945 – 2020 )

 

30.    லதா மங்கேஷ்கர்  ( 1929 – 2022 )

 

31.   கவிக்கோ அப்துல் ரகுமான் ( 1937 – 2017 )

 

32.   கவிஞர் மேத்தா தாசன்

 

33.    நாமக்கல் கு. சின்னப்ப பாரதி  ( 1935 – 2022 )

 

34.   ‘’ மண்டலின் ‘’ ஶ்ரீநிவாசன்  ( 1969 – 2014 )

 

35.   இந்திரா பார்த்தசாரதி

 

36.   தமிழச்சி சுமதி தங்கபாண்டியன்


 

37.   கவிஞர் சல்மா

 

38.    எஸ். வைதீஸ்வரன்

 

39.  மாலன்

 

40. எஸ். ராமகிருஷ்ணன்

 

41. ஜெயமோகன்

 

42.  பேராசிரியர்  க. பஞ்சாங்கம்

 

43.  பாவண்ணன்

 

இலக்கிய – ஊடக உலகில் கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நின்று நிலைப்பதற்கு எனக்கு பெருந்துணையாகவிருந்தது தொடர்பாடல்தான். அதனால்  பல நாடுகளிலும் வாழ்ந்தவர்கள் பற்றிய நினைவுகளை தொடர்ந்தும் எழுத முடிந்திருக்கிறது.

 

தொ.மு. சி. ரகுநாதன் - மறுவாசிப்பு - பாரதி கிருஷ்ணகுமார் ( காணொளி ) 

( தொடரும் )

 

No comments: