உலகச் செய்திகள்

 பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை காசாவில் ‘முழு முற்றுகை’ தொடரும் -தொடரும் வான் தாக்குதல்களுக்கு மத்தியில் இஸ்ரேல் உறுதி

காசா மீதான தாக்குதல் உக்கிரம்!

காசா மீதான தரைவழி தாக்குதலுக்கு 300,000 இஸ்ரேலிய படைகள் குவிப்பு

இஸ்ரேலுக்கு நெருக்கமாக அமெ. போர் கப்பல்கள் நிலைநிறுத்தம்

காசாவில் இஸ்ரேல் இடைவிடாது குண்டு மழை: உயிரிழப்பு 1,100 ஆக அதிகரிப்பு


பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை காசாவில் ‘முழு முற்றுகை’ தொடரும் -தொடரும் வான் தாக்குதல்களுக்கு மத்தியில் இஸ்ரேல் உறுதி

October 13, 2023 7:11 am 

ஹமாஸ் அமைப்பினால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்படும் வரை காசாவில் செயற்படுத்தப்படும் முழு முற்றுகை கைவிடப்படாது என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

காசாவில் உள்ள மருத்துவமனைகள் பிணவறைகளாக மாறுவதை தவிர்க்க எரிபொருளைத் தரும்படி
 செஞ்சிலுவை சங்கம் கோரிக்கை விடுத்த நிலையிலேயே இஸ்ரேல் நேற்று (12) இந்த நிபந்தனையை விடுத்தது.

ஏற்கனவே இஸ்ரேலின் முற்றுகையில் இருக்கும் காசாவில் நீர, மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவு விநியோகத்தை இஸ்ரேல் கடந்த திங்கட்கிழமை (09) தொடக்கம் துண்டித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இஸ்ரேலுக்கு ஊடுருவிய பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் அதிகமான யூதர்கள் கொல்லப்பட்ட நிலையில், காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்பதாக இஸ்ரேல் உறுதி பூண்டுள்ளது.

சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்த இஸ்ரேலியர்கள் எண்ணிக்கை 1,300ஆக அதிகரித்துள்ளது. பொதுப்பாலானவர்கள் தமது வீடுகள், வீதிகள் மற்றும் நடன நிகழ்ச்சி ஒன்றில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன்போது பலஸ்தீன போராளிகளால் கடத்திச் செல்லப்பட்ட 97 பணயக்கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காசா எல்லையில் இருக்கும் இஸ்ரேலிய நகரங்களை பலஸ்தீன போராளிகளிடம் இருந்து விடுவித்து அங்கு மேற்கொண்ட தேடுதல்களின்போது மேலும் சடலங்கள் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு பதிலடியாக 2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் முழு முற்றுகையில் உள்ள காசா மீது இஸ்ரேல் இதுவரை இல்லாத அளவு சரமாரி வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன மோதலின் 75 வருட வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்தத் தாக்குதல் தீவிரம் அடைந்திருப்பதோடு பல குடியிருப்புப் பகுதிகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குண்டு தாக்குதல்களில் 1,200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு 5,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக காசா நிர்வாகம் நேற்று தெரிவித்தது. எனினும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் உயிரிழப்பு எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.

அங்குள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் நிறுத்தப்பட்டதோடு மருத்துமனைகளின் அவசரமின்பிறப்பாக்கிகளுக்கான எரிபொருளும் தீர்ந்து வருகிறது.

இந்த அவசர மின்பிறப்பாக்கிகளுக்கான எரிபொருள் விரைவில் தீர்ந்து வருவதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் எச்சரித்துள்ளது.

“இந்த மோதலில் மனிதத் துயரங்கள் வெறுக்கத்தக்க வகையில் இருப்பதோடு பொதுக்களின் துன்பத்தை குறைக்க (மோதலில் ஈடுபடும்) தரப்புகளை கேட்டுக்கொள்கிறோம்” என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிராந்திய பணிப்பாளர் பப்ரிசியோ கர்போனி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

“காசாவில் மின்சாரம் இல்லை என்பது, மருத்துவமனைகளிலும் மின்சாரம் இல்லாமல்போகும், பிறந்த குழந்தைகளை இன்குபேட்டரில் வைப்பது மற்றும் வயதான நோயாளர்களுக்கு ஒட்சிசன் வழங்குவதில் அச்சுறுத்தல் ஏற்படுவதோடு, சீறுநீரக இரத்தமாற்று சிகிச்சை நிறுத்தப்பட்டு, எக்ஸ்ரே எடுக்க முடியாத நிலை ஏற்படும். மின்சாரம் இல்லை என்பது மருத்துவமனைகள் பிணவறைகளாக மாறும் அச்சுறுத்தல் உள்ளது” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எனினும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுக்காவிட்டால் முற்றுகைக்கு விலக்கு அளிக்க முடியாது என்று இஸ்ரேலிய வலுசக்தி அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

“காசாவுக்கான மனிதாபிமான உதவிகளா? இஸ்ரேலிய பணயக்கைதிகள் வீடு திரும்பும்வரை மின்சார பொத்தான்கள் திறக்கப்படாது, நீர் விநியோகம் திறக்கப்படாது மற்றும் எரிபொருள் டிரக்குகள் அனுமதிக்கப்படமாட்டாது. மனிதாபிமானத்திற்காக மனிதாபிமானம். யாரும் ஒழுக்கத்தை மீற முடியாது” என்று காட்ஸ் ட்விட்டர் என்று முன்னர் அழைக்கப்பட்ட எக்ஸ் சமூக தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை தொடக்கம் காசாவில் இஸ்ரேல் 2,600க்கும் அதிகமான இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதோடு காசாவில் இருந்து இஸ்ரேல் மீது 5000க்கும் அதிகமான ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

இதேவேளை காசாவின் எகிப்து எல்லையான ரபா மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தும்படி எகிப்து வெளியுறவு அமைச்சு இஸ்ரேலை கேட்டுள்ளது. இந்த எல்லைக் கடவை திறந்திருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

காசா மீது இஸ்ரேல் முழு முற்றுகையை அமுல்படுத்தி இருக்கும் நிலையில் அங்கிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழியாக எகிப்துடனான ரபா எல்லை உள்ளது. எனினும் இஸ்ரேலின் வான் தாக்குதல்களால் அந்த எல்லைப் பகுதி நேற்று முன்தினம் மூடப்பட்டிருந்தது. அது திறக்கப்பட்டாலும் எல்லைக் கடவையை கடந்து செல்வதற்கான பட்டியல் நீண்டுள்ளது. சாதாரணமாக இந்த எல்லை வழியாக நாளொன்றுக்கு சுமார் 400 பேர் பயணிப்பதற்கே அனுமதி உள்ளது.

தரைவழி தாக்குதல் பற்றி முடிவில்லை

காசா பகுதியின் தெற்கில் உள்ள பிரதான நகரான கான் யூனிஸ் மருத்துவமனையில் தனது வீடு தாக்கப்பட்ட நிலையில் அழும் சிறுமி ஒருவரை பெண் ஒருவர் சமாதானம் செய்து வருகிறார். அந்த சிறுமி “எனக்கு எனது தாய் வேண்டும்” என்று கூச்சலிட்டு அழுகிறார்.

“அவள் தனது தாயை தேடி அழுகிறாள். தாய் எங்கே என்று எமக்குத் தெரியவில்லை” அந்த சிறுமியை கைகளில் சுமந்துகொண்டிருக்கும் அந்தப் பெண் குறிப்பிட்டார்.

காசாவின் அல் ஷட்டி அகதி முகாம் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில் குடியிருப்பாளர்கள் இடிபாடுகளில் உயிர்தப்பியோரை தேடி வெறுங் கைகளால் கற்குவியல்களை அகற்றி வருகின்றனர். போதுமான எரிபொருள் மற்றும் இந்த கட்டட இடிபாடுகளை அகற்றும் கருவிகள் இல்லை என்று மீட்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த நான்கு நாட்களில் காசாவில் குறைந்தது 340,000 காசா மக்கள் வீடுகளை இழந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்களில் கிட்டத்தட்ட 220,000 பேர் ஐ.நாவினால் நடத்தப்படும் 92 பாடசாலைகளில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

மறுபுறம் தெற்கு இஸ்ரேலின் அஷ்கோல் நகரில் காசாவில் இருந்து நேற்று வீசப்பட்ட ரொக்கெட் குண்டுகளில் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் இஸ்ரேலுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேலை சென்றடைந்தார். போர் பரவுவதை தடுப்பது, அமெரிக்கப் பிரஜைகள் உட்பட பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் பிளிங்கன் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர் இன்று (13) ஜோர்தான் சென்று ஜோர்தானிய மன்னர் அப்துல்லா மற்றும் பலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸை சந்திக்கவுள்ளார்.

பலஸ்தீனர்களின் அவலங்களை புறக்கணித்ததே வன்முறை அதிகரிக்கக் காரணம் என்று குற்றம்சாட்டியிருக்கும் அப்பாஸ், காசாவுக்கு வெளியில் இருக்கும் பலஸ்தீனர்களும் இஸ்ரேலிய இராணுவத்தை எதிர்க்கும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேலில் போர் காலத்திற்கான அவசர ஐக்கிய அரசு ஒன்று கடந்த புதன் அன்று அமைக்கப்பட்டது. இதன்மூலம் எதிர்க்கட்சியினரும் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

காசா மீதான தரைவழித் தாக்குதல் ஒன்றுக்கு வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் இஸ்ரேல் ஆயிரக்கணக்கான மேலதிக படைகளை குவித்து வைத்துள்ளது. எனினும் அவ்வாறான ஒரு படையெடுப்பு பற்றி இன்னும் இறுதி முடிவு ஒன்று எடுக்கப்படவில்லை. ஆனால் நாம் அதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் லெப்டினன்ட் கேணல் ரிச்சார்ட் ஹெட்ச் நேற்று தெரிவித்தார்.

இந்தப் போர் பிராந்தியத்தில் இராஜதந்திர முயற்சிகளையும் சீர்குலைத்துள்ளது. சவூதி அரேபியாவுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த இஸ்ரேல் முயற்சித்து வந்த நிலையிலேயே இந்த மோதல் ஏற்பட்டது.

இதேவேளை இஸ்ரேல்–காசா சண்டை மேலும் மோசமடைவதைத் தடுக்க வேண்டு மென்று ஐக்கிய நாட்டு சபை வலியுறுத்தியுள்ளது.

சண்டையில் பலஸ்தீன வட்டாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் பாடசாலையைச் சேர்ந்த ஊழியர்களும் மாணவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

குறைந்தது 11 ஊழியர்களும் 30 மாணவர்களும் உயிரிழந்திருப்பதாக ஐக்கிய நாட்டு அமைப்பு உறுதிப்படுத்தியது.

காசாவில் சிக்கியுள்ள பலஸ்தீனர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் வழிகளை அமெரிக்கா, எகிப்து, இஸ்ரேல் ஆகியவை ஆராய்ந்துவருகின்றன.

காசா நெருக்கடி குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நாளை இன்று (13) கூடவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளர் ஆன்ட்டோனியோ குட்டெரஸ் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்தார். இஸ்ரேலும் காசாவும் வன்செயல் சூழலில் சிக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

காசாவில் பிணை பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார். எல்லா நேரமும் சர்வதேச சட்டம் மதிக்கப்பட வேண்டுமென குட்டெரஸ் கேட்டுக்கொண்டார்.

காசாவிலுள்ள ஐக்கிய நாடுகள் கட்டடங்களில் சுமார் 220,000 பலஸ்தீனர்கள் தங்கியுள்ளதாக அவர் சொன்னார். அந்தக் கட்டடங்கள் மீது ஒருபோதும் தாக்குதல் நடத்தப்படக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

பலஸ்தீன வட்டாரங்களுக்கு மனிதாபிமான உதவி சென்று சேருவதைத் தடுக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

தென் லெபனானிலிருந்து தாக்குதல் நடக்கும் சாத்தியம் குறித்து அவர் அச்சம் தெரிவித்தார்.

சிரியா மீது தாக்குதல்

மறுபுறம் சிரிய தலைநகர் டமஸ்கஸ் விமானநிலையம் மற்றும் அலப்போ நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக சிரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏவுகணை தாக்குதல்களால் விமானநிலையம் சேதமடைந்திருப்பதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது. சிரிய வான் பாதுகாப்பு அமைப்பு பதில் நடவடிக்கை எடுத்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அலெப்போவில் பல வெடிப்புகள் இடம்பெற்றதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சர் சிரியா பயணிக்கவுள்ள நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சிரியா மற்றும் ஈரான் இரு நாடுகளும் இஸ்ரேலை எதிரி நாடாக கருவதுவதோடு ஈரான், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் ஈரானுடன் தொடர்புபட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதோடு அது பற்றி அரிதாகவே வெளிப்படையாக கூறிவருகிறது.   நன்றி தினகரன் 





காசா மீதான தாக்குதல் உக்கிரம்!

October 12, 2023 8:34 pm 
– வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்களை நடாத்துமாறு ஹமாஸ் கோரிக்கை
– மக்களுக்கு கைத்துப்பாக்கியை வழங்க இஸ்ரேல் நடவடிக்கை

நன்றி தினகரன் 





காசா மீதான தரைவழி தாக்குதலுக்கு 300,000 இஸ்ரேலிய படைகள் குவிப்பு

வான் தாக்குதல்களில் காசாவில் உயிரிழப்பு 1000ஐ தாண்டியது, இஸ்ரேலிலும் பலி 1200ஆக உயர்வு

October 12, 2023 6:48 am 

காசா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் ஒன்றுக்குத் தயாராகி வரும் நிலையில் நேற்று (11) ஐந்தாவது நாளாகவும் பலஸ்தீன பகுதி மீது சரமாரி வான் தாக்குதல்கள் இடம்பெற்றன.

இஸ்ரேலின் காசா எல்லையை ஒட்டி 300,000 துருப்புகள் குவிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. “தமக்கு வழங்கும் பணியை நிறைவேற்ற தயாராக இருப்பதாக” அது குறிப்பிட்டுள்ளது.

எல்லையில் இருக்கும் இஸ்ரேலிய துருப்புகளிடம் கடந்த செவ்வாய்க்கிழமை பேசிய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட், “நாம் வான் வழியாக தாக்குதல்களை ஆரம்பித்தோம், பின்னர் நாம் தரையில் இருந்தும் வருவோம். நாங்கள் 2ஆம் நாளிலிருந்து அந்தப் பகுதியைக் கட்டுப்படுத்தி வருகிறோம், நாங்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளோம். அது தீவிரமடையும்” என்றார்.

ஏற்கனவே காசா மீது வான் தாக்குதல்களை நடத்தி பெரும் உயிர் மற்றும் உடைமை சேதங்களை ஏற்படுத்தி வரும் நிலையிலேயே தரைவழியாகவும் காசாவுக்குள் முன்னேற இஸ்ரேல் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

எனினும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த குறுகலான, மக்கள் செறிந்து வாழும் நிலப் பகுதியில் கணிசமான இஸ்ரேலிய பணயக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இஸ்ரேல் தரைவழியாக முன்னேறுவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

காசா மீதான தாக்குதல்கள் நேற்றும் அதே தீவிரத்தில் நடத்தப்பட்ட நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று (11) பின்னேரம் வரை காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 1055 ஆக அதிகரித்திருந்ததோடு மேலும் 5100 பேர் வரை காயமடைந்திருப்பதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் 200க்கும் அதிகமான சிறுவர்கள் அடங்குகின்றனர். அதேபோன்று காயமடைந்த 60 வீதமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்று காசா சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தொடக்கம் காசாவில் 200க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது. இதில் காசாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியும் தாக்கப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது. மறுபுறம் இஸ்ரேலில் உயிரிழப்பு 1,200ஆக உயர்ந்திருப்பதாகவும், இதில் 155 படையினர் அடங்குவதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.

காசாவில் அவலம் தொடர்கிறது

காசாவில் இஸ்ரேல் மின்சாரம், நீர் மற்றும் உணவு விநியோகத்தை துண்டித்து முழு முற்றுகையை செயற்படுத்தி வரும் நிலையில் காசாவில் மின்சாரத்தை பெறுவதற்கான ஒரே மூலமாக இருக்கும் சூரிய சக்தி ஆலையில் 12 மணி நேரத்தில் எரிபொருள் தீர்ந்து விடும் என்று பலஸ்தீன வலு அதிகாரசபை தலைவர் தபர் மெல்ஹம் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் காசா மக்கள் தொகையில் 10 வீதத்திற்கும் அதிகமாக இடம்பெயர்ந்துள்ள 200,000 க்கும் அதிகமான மக்களுக்கான தங்குமிட வசதிகளை வழங்க ஐ.நா முயன்று வருகிறது.

உணவுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் சிறிய அளவான உணவை பெறும் எதிர்பார்ப்பில் பேக்கரிகளில் நீண்ட வரிசை காணப்படுகிறது. வங்கிகள் குறைந்த அளவான பணத்தையே விடுவிப்பதோடு எரிபொருள் நிலையங்களும் குறைந்த அளவே எரிபொருளை வழங்கி வருகின்றன.

இங்குள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களில் 24 மணி நேரத்தில் மருந்துகள் தீர்ந்துவிடும் என்று சுகாதார அமைப்பு நேற்று எச்சரித்திருந்தது.

இந்நிலையில் காசாவில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான பாதை ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் இஸ்ரேல் மற்றும் எகிப்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

என்றாலும் காசா மற்றும் எகிப்துக்கு இடையிலான ராபா எல்லை கடவை மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த எல்லைக் கடவையின் பலஸ்தீன பக்கமாக நான்கு ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக எகிப்திய உள்ளுர் மனித உரிமை அமைப்பொன்று தெரிவித்துள்ளது. இதில் இரண்டாவது தாக்குதல் எகிப்து மற்றும் பலஸ்தீன வாயில்களுக்கு இடையில் இடம்பெற்றிருப்பதோடு இதனால் பலஸ்தீன பக்கமுள்ள மண்டபம் சேதமடைந்துள்ளது.

காசாவில் உள்ள மக்கள் இஸ்ரேல் தவிர்த்து வெளியேற முடியுமான ஒரே எல்லைப் பகுதியாக இந்த ராபா எல்லைக்கடவை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

25 மைல் நீளமான காசா நிலப் பகுதி இஸ்ரேல், எகிப்து மற்றும் மத்தியதரைக் கடலால் சூழ்ந்துள்ளது. 2007 ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றியது தொடக்கம் இஸ்ரேல் தரை, கடல் மற்றும் வான் வழியாக முற்றுகையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

38 ஆண்டுகள் நீடித்த ஆக்கிரமிப்புக்குப் பின் இஸ்ரேலிய துருப்புகள் காசாவில் இருந்து 2005 ஆம் ஆண்டே வாபஸ் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

“எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை”

காசாவின் தெற்கு நகரான கான் யூனிஸ் மற்றும் மத்திய காசாவில் புரைஜ் அகதி முகாமில் இருக்கும் வீடுகள் மீது வான் தாக்குதல்கள் இடம்பெற்றதாக பலஸ்தீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் ஹமாஸ் ஆயுதப் பிரிவின் தலைவர் முஹமது தைப்பின் தந்தைக்கு சொந்தமான வீடும் தாக்கப்பட்டுள்ளது. இதன்போது தைப்பின் சகோதரர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பல கட்டடங்கள் தகர்க்கப்பட்ட நிலையில் சுமார் 50 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதோடு அவர்களை காப்பற்றும்படி மீட்புக் குழுவினருக்கு அங்குள்ள குடியிருப்பாளர்கள் சமூக ஊடகத்தில் அழைப்பு விடுத்துள்ளனர்.

“அவர்கள் எல்லா இடத்தையும் தாக்குவதால், காசாவில் எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை” என்று தற்காலிக முகாம் ஒன்றில் தனது குடும்பத்துடன் தஞ்சமடைந்திருக்கும் 35 வயதான அலா அபூ டயிர் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை தொடக்கம் இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களில் 22,600 குடியிருப்புகள், 10 சுகாதார வசதிகள் மற்றும் 48 பாடசாலைகள் அழிக்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

“அப்பட்டமான மனிதாபிமானமற்ற தன்மை மற்றும் மக்களை அடிபணிய வைக்கும் வகையில் குண்டு வீசுவது, பட்டினியை பயன்படுத்துவது போன்ற போர் நடவடிக்கை மற்றும் அவர்களின் தேசிய இருப்பை ஒழிப்பது என்பது இனப் படுகொலைக்குக் குறைவானதல்ல” என்று ஐ.நாவுக்கான பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூர் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு செவ்வாக்கிழமை எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த வன்முறை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்திற்கும் பரவியுள்ளது. அங்கு இஸ்ரேலிய படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டில் மேலும் இரு பலஸ்தீனர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை தொடக்கம் இஸ்ரேலிய இராணுவத்துடன் மோதலில் ஈடுபட்ட 21 பலஸ்தீனர்கள் மேற்குக் கரையில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு அமெரிக்க வெடிபொருள்

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு மத்தியில் அமெரிக்காவின் வெடிபொருட்களை ஏற்றிய முதல் விமானம் நேற்று இஸ்ரேலை அடைந்துள்ளது. ஹமாஸுடனான போருக்கு வான் பாதுகாப்பு, மற்றும் ஏனைய பாதுகாப்பு உதவிகளை இஸ்ரேலுக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்த நிலையிலேயே இந்த வெடிபொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த வெடிபொருட்கள் தவிர, பலஸ்தீன ரொக்கெட் குண்டுகளை இடைமறித்து வரும் இஸ்ரேலிய ‘அயன் டோம்’ வான் பாதுகாப்பு அமைப்புக்கு அதிக இடைமறிப்பு ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்குவதாக நம்பப்படுகிறது. காசாவில் இருந்து இஸ்ரேலின் பல இலக்குகள் மீது சரமாரியாக வீசப்பட்டு வரும் ரொக்கெட் குண்டுகளில் இருந்து இந்த அயன் டோம் அமைப்பே பாதுகாப்பு வழங்கி வருகிறது.

இஸ்ரேல் நீண்ட காலமாக அமெரிக்காவின் இராணுவம் மற்றும் நிதி உதவிகளை பெற்று வருகிறது. 2016 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையில் இஸ்ரேலுக்கு 10 ஆண்டுகளுக்கு 38 பில்லியன் டொலர் இராணுவ உதவியை வழங்க அமெரிக்க ஒப்புக்கொண்டது. அமெரிக்கா ஒரு நாட்டுக்கு வழங்கிய அதிக இராணுவ உதவியாக இது உள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலில் சிறுபான்மை அேரபியர் மற்றும் பெரும்பான்மை யூதர்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் துப்பாக்கி உரிமம் பெற்ற பொதுமக்களுக்கு கைத்துப்பாக்கிகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இராணுவ உதவிகள் செல்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கான தனது ஆதரவை மீண்டும் ஒரு முறை உறுதி செய்ததோடு, கடந்த சனிக்கிழமை ஹமாஸ் நடத்திய தாக்குதலை “ஒரு தீய செயல்” என்று வர்ணித்தார்.

இந்த நிலையை சாதகமாக பயன்படுத்த எதிர்பார்ப்பவர்கள் விலகி இருக்கும்படி எச்சரித்த பைடன், பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ நிலைகள் பலப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அரபுலகம் எங்கும் வரும் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்களை நடத்தும்படி ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் காலித் மஷால் அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவு செய்யப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இந்த அழைப்பை விடுத்துள்ளார். “அக்சா வெள்ளத்தின் வெள்ளிக்கிழமையாக வரும் வெள்ளிக்கிழமை அரபு மற்றும் முஸ்லிம் உலகின் சதுக்கங்கள் மற்றும் வீதிகளுக்கு செல்லுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். காலித் மஷால் தற்போது ஹமாஸின் புலம்பெயர் அலுவலகத்தின் தலைவராக உள்ளார்.

இஸ்ரேலின் வடக்கிலும் பதற்றம்

இஸ்ரேலின் லெபனானுடனான வடக்கு எல்லையில் மூன்றாவது நாளாக நேற்றைய தினத்திலும் ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றன. மறுபுறம் சிரியாவில் இருந்தும் இஸ்ரேலை நோக்கி ஷெல் குண்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்த குண்டுகள் திறந்த வெளியில் விழுந்ததாகவும் பதில் நடவடிக்கையாக பீரங்கி மற்றும் மோட்டார் குண்டுகளை வீசியதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் லெபனானுக்குள் ஹிஸ்புல்லாவின் கண்காணிப்புத் தளம் ஒன்றின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லா நடத்திய புதிய ரொக்கெட் தாக்குதலுக்கு பதில் கொடுக்கும் வகையில் இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 




இஸ்ரேலுக்கு நெருக்கமாக அமெ. போர் கப்பல்கள் நிலைநிறுத்தம்

October 10, 2023 9:28 am 0 comment

இஸ்ரேலுக்கு ஆதரவை வழங்கும் வகையில் தமது இராணுவ கப்பல்கள் மற்றும் விமானங்களை இஸ்ரேலுக்கு நெருக்கமாக நிலைநிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கான இராணுவ உதவிகள் மற்றும் வெடிபொருள் விநியோகத்தை அதிகரிப்பதாகவும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் அஸ்டன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு பலஸ்தீனர்களுக்கு எதிரான ‘ஆக்கிரமிப்பு’ என்று ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது. “ஆக்கிரமிப்பை ஆதரித்து விமானதாங்கி கப்பலை வழங்கும் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு உண்மையில் எமது மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பில் பங்கேற்பதாகும்” என்று ஹமாஸ் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவை நேற்று முன்தினம் (08) தொலைபேசியில் தொடர்புகொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேலிய இராணுவத்திற்கான மேலதிக உதவிகள் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 




காசாவில் இஸ்ரேல் இடைவிடாது குண்டு மழை: உயிரிழப்பு 1,100 ஆக அதிகரிப்பு

October 10, 2023 6:18 am 

காசா மீது இஸ்ரேல் நேற்றைய (09) தினத்திலும் இடைவிடாது வான் தாக்குதல்களை நடத்தியதோடு இஸ்ரேலுக்குள் பல பகுதிகளிலும் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலிய துருப்புகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் இடம்பெற்று வந்தது. தீவிரமடைந்திருக்கும் இந்த மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100 ஐ தாண்டி வேகமாக அதிகரித்து வருகிறது.

முற்றுகையில் உள்ள காசா பகுதி மீது செவ்வாய் இரவு மற்றும் திங்கள் அதிகாலையில் 500க்கும் அதிகமான இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது.

இஸ்ரேலுக்குள் ஊடுருவி எதிர்பாராத தாக்குதலை நடத்திய ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் மீது சரமாரியாக ரொக்கெட் குண்டுகளை வீசி, இஸ்ரேலியர்களை சுட்டுக்கொன்று குறைந்தது 100 பேரை பணயக் கைதிகளாகப் பிடித்த நிலையிலேயே போர் உக்கிரம் அடைந்துள்ளது.

காசா எல்லையை ஒட்டிய இஸ்ரேலிய பகுதிகளுக்கு தொடர்ந்து போராளிகளை அனுப்பி ஹமாஸ் சண்டையிட்டு வரும் நிலையில் ஏழு தொடக்கம் எட்டு இடங்களில் நேற்றைய தினத்திலும் மோதல் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் காசா எல்லையை ஒட்டி இஸ்ரேல் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான துருப்புகளை குவித்து வைத்துள்ளது. இது காசா மீது தரைவழி தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.

இதேவேளை காசாவில் “மின்சாரம், உணவு, எரிபொருள் இன்றி” முழுமையான முற்றுகை ஒன்றுக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன் உத்தரவிட்டுள்ளார்.

காசாவின் வான் பகுதி மற்றும் அதன் கடற்கரைகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருப்பதோடு அந்தப் பகுதிக்கு எந்த பொருட்களை அனுமதிப்பது மற்றும் எவைகளை வெளியே கொண்டுவருவது என்பது இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

அதேபோன்று காசாவின் எகிப்து எல்லையை எகிப்து கட்டுப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காசா பகுதியில் ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பு மீது இஸ்ரேல் கடந்த ஞாயிற்றுக்கிழமை போர் பிரகடனத்தை வெளியிட்டதோடு “நீண்ட மற்றும் கடினமான” போர் ஒன்றுக்கு இஸ்ரேல் தயாராவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த பாரிய தாக்குதல் நடவடிக்கை தொடக்கம் 700க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. தவிர, 1,200 பேர் காயமடைந்திருப்பதோடு பலரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

இதில் தெற்கு இஸ்ரேலின் பாலைவனப் பகுதியில் இடம்பெற்று வந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற 260 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை நேற்று (09) மாலை வரை 493 ஐ தொட்டுள்ளது என்று பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 2,751 பேர் காயமடைந்துள்ளனர். எனினும் இஸ்ரேல் உக்கிரமாகத் தாக்கி வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

காசாவில் 123,538 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. அச்சம், பாதுகாப்பு பற்றிய கவலை மற்றும் தமது வீடுகள் அழிக்கப்பட்டதாலேயே பெரும்பாலானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதாக அது தெரிவித்துள்ளது.

2.3 மில்லியன் மக்கள் செறிந்து வாழும் காசா மீது இஸ்ரேல் பதில் தாக்குதலை ஆரம்பிக்கும் முன்னர் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறும்படி அது எச்சரித்திருந்தது.

“காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் பீரங்கிகள் கொண்டு 500க்கும் அதிகமான ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது” என்று இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.

“நாம் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறோம். காசாவை சூழவுள்ள ஏழு தொடக்கம் எட்டு திறந்த பகுதிகளில் எமது வீரர்கள் தொடர்ந்து பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்” என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் வான் தாக்குதல்களால் காசாவில் குடியிருப்பு கோபுரங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் மத்திய வங்கிக் கட்டடம் ஆகியன தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதோடு எல்லைகள் மூடப்பட்டிருப்பதால் அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனினும் காசாவில் உள்ள மக்கள் உறுதியான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி வருகின்றனர். “நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம், இங்கேயே இருப்போம்” என்று 23 வயது முஹமது சாக் அல்லா ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். “இது எமது நிலம். எமது நிலத்தை நாம் கைவிடமாட்டோம்” என்றும் அவர் கூறினார்.

மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இருக்கும் பலஸ்தீனர்கள் காசாவில் உள்ள மக்களுக்கு ஆதரவாக பேரணிகைள நடத்தி வருவதோடு இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த சனிக்கிழமை மோதல் வெடித்தது தொடக்கம் இங்கு 15 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பலஸ்தீன ஆதரவாளர்கள் ஈராக், பாகிஸ்தான், அமெரிக்க மற்றும் பல நாடுகளிலும் ஆதரவு பேரணிகளை நடத்தி வருவதோடு ஜெர்மனி மற்றும் பிரான்ஸில் யூதக் கோவில்கள் மற்றும் பாடசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான தாக்குதல்களில் பிரேசில், பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, மெக்சிகோ, நேபாளம், தாய்லாந்து, உக்ரைன் மற்றும் அமெரிக்க நாட்டு பிரஜைகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பல நாடுகளும் தமது பிரஜைகளை இஸ்ரேலில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளன.   நன்றி தினகரன் 


No comments: