இலங்கைச் செய்திகள்

கோவில் காணி கிணற்றில் ஆயுதங்கள் மீட்பு; விசாரணைகள் ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க USNS கப்பல்

முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக வட,கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை மூவர் மரணம் 25 பேர் காயம் 75 ஆயிரத்து 734 பேர் பாதிப்பு 1138 வீடுகள் சேதம்

30 வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை இன்று முதல் பிரதமர் மோடி காணொளி மூலம் தொடக்கி வைக்கின்றார்


கோவில் காணி கிணற்றில் ஆயுதங்கள் மீட்பு; விசாரணைகள் ஆரம்பம்

October 13, 2023 2:08 pm 

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மன் கோவில் காணி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கிணறு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்றையதினம் வியாழக்கிழமை (12) குறித்த கிணற்றை துப்பரவு செய்த போது இவ்வாறு அதிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது, LMG துப்பாக்கி தோட்டாக்கள் 57, ரி 56 ரக துப்பாக்கி ரவை மெகசின்கள் இரண்டு, 261 தோட்டாக்கள், 0.22 துப்பாக்கிக்குரிய வெற்று தோட்டாக்கள் 46 அதற்குரிய தோட்டாக்கள் 3, எம் 16 துப்பாக்கிக்குரிய தோட்டாக்கள் 11, சுடர் துப்பாக்கி (Flare Gun) ஒன்று என்பன மீட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான் - நன்றி தினகரன் 




கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க USNS கப்பல்

October 13, 2023 8:15 am 

அமெரிக்க கடற்படைக் கப்பலான யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக் (USNS Brunswick) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நேற்று முன்தினம் புதன்கிழமை ( 11 ) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பல் எதிர்வரும் 15 ஆம் திகதி இங்கிருந்து புறப்படவுள்ளது. 103 மீற்றர் நீளமுள்ள கப்பலில் 24 பேர் கொண்ட பணியாளர்கள் உள்ளனர், மேலும் இந்தக் கப்பலுக்கு கப்டன் ஆண்ட்ரூ எச் பெரெட்டி தலைமை தாங்குகிறார்.

கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் பணியாளர்கள் நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தளங்களுக்குச் செல்லவுள்ளனர்.   நன்றி தினகரன் 

 




முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக வட,கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

- இன ஒடுக்குமுறையை சுட்டிக்காட்டியும், கண்டித்தும் போராட்டம்

October 10, 2023 9:56 am 

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியமை தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்குள்ளாகுவதை சுட்டிக்காட்டியும், கண்டித்தும் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 20ஆம் திகதி ஹர்த்தால் போராட்டத்தை நடத்தவுள்ளன.

ஹர்த்தால் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நேற்று (09) இடம்பெற்றது.

இதன்போதே எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன.

குறித்த கலந்துரையாடலில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியுன் தலைவர் விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிறீகீந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும், ரெலோ சார்பில் முன்னாள் தவிசாளர் நிரோஷ் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

யாழ்.விசேட நிருபர் - நன்றி தினகரன் 





மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை மூவர் மரணம் 25 பேர் காயம் 75 ஆயிரத்து 734 பேர் பாதிப்பு 1138 வீடுகள் சேதம்

October 10, 2023 7:40 am 

நாட்டில் நிலவும் கடும் மழை, காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலையால், மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 25 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இதில், 13 மாவட்டங்களில் 75,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் வீட்டின் மேல் பாரிய கல் ஒன்று புரண்டு விழுந்ததில், காலி பிரதேசத்தில் அமரசேன விஜேசிங்க என்ற 78 வயது நபர் மரணமடைந்துள்ளார்.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பகுதியில் மின்னல் தாக்கி நபர் ஒருவரும் கடும் மழையின் போது முச்சக்கர வண்டி குடைசாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, மாத்தறை மாவட்டத்திலேயே அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும்,இம்மாவட்டத்தில்

10 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர் கொண்டுள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது. அப்பகுதிகளில் 22 ஆயிரத்து பன்னிரண்டு குடும்பங்களை சேர்ந்த 55,775 பேர் தனது சொந்த இடங்களிலிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக மாத்தறை மாவட்டச் செயலாளர் வை. விக்ரமசிறி அறிவித்துள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக 11 ஆயிரத்து 692 குடும்பங்களைச் சேர்ந்த 41,726 பேர் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 





30 வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை இன்று முதல் பிரதமர் மோடி காணொளி மூலம் தொடக்கி வைக்கின்றார்

October 10, 2023 6:40 am 0 comment

இந்தியா, இலங்கைக்கிடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று 10 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக துறைமுக அபிவிருத்தி, கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் இன்று காலை தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து இக்கப்பல் சேவை ஆரம்பமாகவுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் இந்தக் கப்பல் சேவையை உத்தியோகபூர்வமாக தொடக்கி வைக்கவுள்ளார்.

‘செரியாபாணி’ என்ற மேற்படி இக்கப்பல் இன்றைய தினம் தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரை முதலாவது கப்பல் சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

மேற்படி கப்பல் நேற்றும் நேற்று முன் தினமும் பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இப்பரீட்சார்த்த சேவை

வெற்றிகரமாக அமைந்ததாக சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.குளிரூட்டப்பட்ட நவீன வசதியுடன் கூடிய ‘செரியாபாணி’பயணிகள் கப்பல் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரை பயணிப்பதற்கு.6000 லீற்றர் எரிபொருள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கப்பல் பயணத்திற்காக ஒரு வழி கட்டணமாக 27,000 ரூபாவும் இருவழி கட்டணமாக 53,500 ரூபாவும் அறவிடப்படவுள்ளது. இதுபற்றிய விபரங்களை இந்திய கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கப்பலில் பயணம் செய்யும் பயணிகள் தம்முடன் 40 கிலோ எடையுள்ள பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும். குறித்த இக்கப்பல் இந்தியாவின் நாகப்பட்டினத்திலிருந்து மூன்று மணி நேரத்தில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.     லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 




No comments: