எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 81 லண்டனில் ஊன்றுகோலுடன் பயணித்து இலக்கியம் பேசிவரும் ராஜேஸ்வரி அக்கா ! முருகபூபதி


கடந்த ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி லண்டன் விம்பம் அமைப்பினால் நடத்தப்பட்ட  பெண் படைப்பாளிகளின் நூல்களின் விமர்சன அரங்கிற்கு வருகை தந்திருந்த எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ,  “ தம்பி,  நாம் வேளைக்கே புறப்படுவோம். ரயில்,  பஸ் ஏறித்தான்  எனது வீட்டுக்குச்செல்லவேண்டும்.  “ என்றார்.

எனது தொடர் பயணத்தில் அன்றை மாலைப்பொழுது அவருடன்தான் ஆரம்பித்தது.

எனது பொதிகளையும் சுமந்துகொண்டு அவரைப் பின்தொடர்ந்தேன்.

அவரது கையில் ஒரு ஊன்றுகோல்.  அதன் துணையோடுதான் அவர்


லண்டன் மாநகரெங்கும் சுற்றி அலைகிறார்.  பஸ்ஸிலும் ரயிலிலும் சில வேளைகளில் ட்ராம்களிலும் பயணிக்கின்றார்.

அவர் எனக்கு ஒரு வாரத்திற்கான பயண அனுமதிச்சீட்டும் வாங்கித்தந்தார்.    லண்டனைவிட்டுப்  புறப்படும்போது யாரிடமாவது அதனைக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். “  என்றார்.

நான் அவர் சொன்னதை முற்றாக மறந்துவிட்டேன்.  அந்த அனுமதிச்சீட்டு என்னோடு புறப்பட்டு அவுஸ்திரேலியாவுக்கே வந்துவிட்டது.

அது கலாவதியாகிவிட்டது.

ஆனால், இலக்கிய உலகில் இன்னமும் காலாவதியாகாமல் தொடர்ந்தும் இயங்கிக்கொண்டிருக்கும் ராஜேஸ்வரி அக்காவை, முதல் முதலில் 1980 களில் அவரது எழுத்தின்மூலமே தெரிந்துகொண்டேன்.

அறச்சீற்றத்துடன் பேசும் அவருடன் பழகினால்,  குழந்தைகளுக்கே உரித்தான அவரது இயல்புகளை புரிந்துகொள்ளமுடியும்.

அன்றைய தினம், அவர் தனது ஊன்றுகோலைக் காண்பித்தே அந்த இரட்டைத்தட்டு பஸ்ஸை நிறுத்தியபோது, நான் அவர் பின்னால் ஓடிச்சென்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவரைத் தொடர்ந்து ஏறினேன்.

 கோபம் இருக்குமிடத்தில்தான் குணமும் இருக்கும் என்பார்கள்.  அந்த உண்மையை ராஜேஸ்வரி அக்காவிடமிருந்தும் தெரிந்துகொண்டேன்.

அவருடைய வீட்டில் இரண்டு நாட்கள் நான் தங்கியிருந்தபோது, உடன் பிறந்த தம்பி மீது காண்பிக்கும் கரிசனையோடு கவனித்துக்கொண்டார்.

அவரது வீட்டில் எங்கு திரும்பினாலும் புத்தகங்கள்தான்.

அவருடைய வீட்டை  அன்று நெருங்கும்போது வீதியோரத்தில் ஒரு முதிய ஆங்கிலேயப்  பெண்மணி, தனது வீட்டு வாசலில் தூசு தட்டி சுத்தம் செய்துகொண்டிருந்தார்.

ராஜேஸ்வரி அக்கா, சற்றுத்  தரித்து அந்தப்பெண்ணுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார்.

அந்தப்பெண்ணின் கணவர் சில நாட்களுக்கு முன்னர்தான் இறந்திருக்கிறார்.  இறுதிச்சடங்கிற்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது.

வெளிநாடு ஒன்றிலிருந்து உறவினர்கள் வரும் வரையில் காத்திருப்பதாக அந்தப்பெண் சொன்னார்.

   இனி அந்தப்பெண்ணின் வாழ்க்கை தனிமையில்தான் கழியப்போகிறது. தனிமையை போக்க அவவும் ஏதும் பணிகளில் ஈடுபடவேண்டும்  “ என்று அனுபவத்தில் சொன்ன ராஜேஸ்வரி அக்கா பற்றி எனது யாதுமாகி நூலில் இவ்வாறு எழுதியிருக்கின்றேன்.


இலங்கையில்  கிழக்கு மாகாணத்தில்  இயற்கை  எழில்  கொஞ்சிய  அழகிய  கிராமத்திலிருந்து -  அதேவேளை   கல்வியிலும்  பொருளாதாரத்திலும் பின்தங்கியிருந்தாலும்,  கூத்துக்கலைகளில்  முன்னிலை வகித்த தமிழர்களும்  முஸ்லிம்களும்  ஒரு  தாய்  மக்களாக  வாழ்ந்த அக்கரைப்பற்று  கோளாவில்  கிராமத்திலிருந்து -  பல  நாடுகளை தனது   ஆளுகைக்குள்  கட்டிவைத்திருந்த  முடிக்குரிய  அரசாட்சி நீடித்த   வல்லரசுக்கு  புலம்பெயர்ந்து  சென்ற  ராஜேஸ்வரி அக்காவை நினைக்கும்தோறும்   எனக்கு  வியப்பு  மேலிடுகிறது.

புலம்பெயர்   தமிழ் இலக்கியத்தின்  முன்னோடியான  அவரது  எழுத்துக்களை   இலங்கையில்  1980  களில்   படிக்கநேர்ந்தபொழுது, அவர்  பற்றிய எந்த அறிமுகமும்  எனக்கு இருக்கவில்லை. பம்பலப்பிட்டி சரஸ்வதி  மண்டபத்தில்  ராஜேஸ்வரி  எழுதி, அலை வெளியீடாக  வந்திருந்த  ஒரு  கோடை  விடுமுறை  நாவல் வெளியீட்டு     அரங்கிற்கு  சென்றிருந்தேன்.

பெண்ணியவாதி   நிர்மலா,  மூத்த  எழுத்தாளர்  செ.கணேசலிங்கன்


உட்பட  சிலர்  அங்கு  உரையாற்றினார்கள்.  ஆனால்,  அவர்களின் கருத்துக்களுக்கு  ஏற்புரை  சொல்ல  அந்த  மண்டபத்தில் ராஜேஸ்வரி இருக்கவில்லை.

ஓர்  ஈழத்தமிழனின் புகலிட வாழ்வுக்கோலத்தை முதல்  முதலில்  புகலிட இலக்கியத்தில் பதிவுசெய்த  முன்னோடி நாவல் ஒரு கோடை விடுமுறை.    இறுதியில்  அந்நாவலின்  நாயகன்  தனது  காரில் சென்று விபத்துக்குள்ளாகி  மடிகின்றான். அது தற்கொலையா... விபத்தா .... என்பது  மறைபொருளாகியிருந்தது.

வாழ்வில்   மன அழுத்தம்  என்பது  என்ன  என்பதையும்  அந்த  நாவல்   பூடகமாக  சித்திரித்திருந்தது.  ராஜேஸ்வரியின்   வாழ்வையும் பணிகளையும் கவனித்தால் அவர் நான்கு    தளங்களில்  ஒரேசமயத்தில் இயங்கியிருப்பதை  அவதானிக்கலாம்.


படைப்பிலக்கியம்,  பெண்ணிய மனித உரிமைச்செயற்பாடு, ஆவணத்திரைப்படம், இவற்றுக்கு மத்தியில்  தொழில்முறையில் மருத்துவத்தில் தேர்ச்சிபெற்றவர். 

இவருடைய  தந்தையார் குழந்தைவேல்தான்  இவரது  ஆதர்சம்.  அவர் வைத்தியராகவும் கூத்துக்கட்டும்  கலைஞராகவும் பல தலைவர்களின்  வாழ்க்கை  வரலாறுகளைப் படித்தவராகவும் விளங்கியவர். அத்துடன்  வேளாண்மை  வயல்களை பராமரிக்கும் வட்டை விதானையார்.

அவரிடமிருந்த கலை ஆர்வம், ஆளுமைப்பண்பு, வாசிப்பு  அனுபவம் என்பன  சிறுமி ராஜேஸ்வரிக்கு அன்றே   இடப்பட்ட பலமான அத்திவாரமாக இருந்திருக்கவேண்டும்.

அவரது   கிராம வாழ்க்கை,   யாழ்ப்பாணத்தில் பெற்ற தாதியர் மருத்துவ பயிற்சி,  எழுதத்தொடங்கிய  பருவம் -  முதல்  கவிதை  வெளியான  வீரகேசரி   பத்திரிகையில்  தாயார்  யாருக்கோ  வீட்டுத்தோட்டத்தில்  வளர்ந்த  கீரையை பறித்து  சுற்றிக்கொடுத்ததினால் அந்தக் கன்னிப்படைப்பை  


தொலைத்துவிட்ட சோகம், யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பு  முறையையும் அதன்கொடுமையையும்  நேரில் பார்த்து  கொதித்தெழுந்த தர்மாவேசம்,  இடதுசாரி சிந்தனையுள்ள  கணவருடன்  அவரது நண்பர்கள்   மார்க்ஸ்,   லெனின்,  ஏங்கல்ஸ்  பற்றி உரையாடும்பொழுது , அவர்கள்  கொழும்பில்  வசிக்கும்  கணவரின்  நல்ல   நண்பர்கள் போலும்  என்று  நம்பிக்கொண்டிருந்த அப்பாவித்தனம் -  லண்டனுக்கு  புலம்பெயர்ந்த  பின்னர்  ஈடுபட்ட பெண்ணிய   மற்றும்  மனித  உரிமைச்செயற்பாடுகள், திரைப்படத்துறையில் முன்னேற  எடுத்துக்கொண்ட  முயற்சிகள், முதலான பல்வேறு    விடயங்களையும் அவர் மனம் திறந்து பகிர்ந்துகொண்ட  விரிவான  நேர்காணலை ஷோபா சக்தி  தமது தோழர்களுடன்  இணைந்து  பதிப்பித்த  கனதியான இலக்கியத்தொகுப்பு   குவர்னிகாவில்  படித்திருக்கின்றேன். 


என்னையும் ஒரு வாசகனாக  மதித்து தொடர்ந்து என்னுடன் கடிதத்தொடர்புகளை அவர் மேற்கொண்டார். அவரது  நாவல்களை விரும்பிப்படித்தேன்.    தினக்குரலிலும்  அவர்  பற்றிய  கட்டுரையை  முன்னர் எழுதியிருக்கின்றேன்.

நான்  அறிந்தவரையில்  எமது  சமூகம்  மட்டுமல்ல,  கீழைத்தேய மற்றும்   மத்திய  கிழக்கு  நாடுகளின்  சமூகங்களும்  பெண்களை அடக்கியாள்வதில்தான் பெருமை பெற்றன. பெண்கள் பிள்ளை பெறும்  இயந்திரங்களாகவும்  சமையல்கட்டுக்குரியவளாகவும் ஆண்களின்  தேவைக்கு  ஏற்ப  போகப்பொருளாகவும்  இருந்தால் மாத்திரம்  அதுவே  பெண்மைக்கு  இலக்கணம்  என்று  கருதிய ஆணாதிக்க   சமுதாயத்தில் -  ஒரு  பெண்   துணிந்து  கற்று ஆசிரியராக,   மருத்துவ  தாதியாக,  மருத்துவராக  வந்துவிட்டால் ஓரளவு  பொறுத்துக்கொள்கிறது.   தப்பித்தவறி  நாட்டியத்தாரகையாக மிளிர்ந்தாலும்   ஏற்றுக்கொள்கிறது.

ஆனால் -  அறிவுஜீவியாக  பெண்ணியவாதியாக  அதற்கும்  மேல்


ஆளுமையுள்ள  படைப்பாளியாகவோ   ஊடாகவியலாளராகவோ மாறிவிட்டால் அவளது  பெண்மைக்கே  களங்கம்  விளைவிக்கும் அளவுக்கு   தயங்காமல்  அவதூறுகளை  அள்ளிச்சொரியும். உயிருக்கும்   உலை வைத்துவிடும்.  நானறிந்த  பல  பெண் படைப்பாளிகள்   எதிர்கொண்ட  இன்னல்கள் அறிவேன்.

ஸர்மிலா  ஸய்யத்,  தஸ்லீமா  நஸ்ரின்,  அருந்ததி  ராய்,  கமலா  தாஸ்,   வாசந்தி,   திலகவதி,  தாமரை,  மாலதி  மைத்ரி,  கருக்கு  பாமா, லீனா  மணிமேகலை, சல்மா.... இவர்களின்  வரிசையில்  ராஜேஸ்வரி.

அச்சுறுத்தல்களுக்கு   மத்தியில்  அவர்கள்  படைப்பு இலக்கியத்துறையில்  தாக்குப்பிடித்தார்கள்.

 பெண்  ஊடகவியலாளர்கள்  கடத்தப்பட்டார்கள்.   செல்வி  (செல்வநிதி) , ரஜினி  திரணகம,   இசைப்பிரியா ஆகியோர்  கொல்லப்பட்டார்கள்.


ராஜேஸ்வரி  தமது  கதைகளில் பெண்களின்  உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும்  முக்கியத்துவம்  வழங்கிய  பெண்ணியவாதி. அத்துடன்    எழுத்துப்போராளி.   எழுதுவதுடன்  தமது  பணி ஓய்ந்துவிட்டதாக   கருதாமல்  ஒரு  செயற்பாட்டாளராகவே (Activist) மாறியவர்.

ராஜேஸ்வரி,  இலண்டன்  வாழ்க்கையில் சுகபோகம் அனுபவிக்காமல் எமது  மக்களின் குரலாக  இயங்கினார். இலங்கையில்   நிகழ்ந்த  இனவாத  வன்செயல்களை  அம்பலப்படுத்தி  - மூவின  மக்களின்  ஒற்றுமையையும்  வலியுறுத்தி இங்கிலாந்து   அரசியல்  தலைவர்கள்  முதல்  மனித உரிமைச் செயற்பாட்டாளர்  வரையில்  தொடர்ச்சியாக 


அழுத்தங்கள் பிரயோகித்தவர்.    இலங்கையில்  மனித  அவலங்களை  சித்திரிக்கும் ஆவணப்படங்கள்  இயக்கினார்.   தமிழகத்தில்  தஞ்சமடைந்த  ஈழத்து அகதிகளின்   முகாம்களுக்குச்சென்று  படங்களுடன்  திரும்பிவந்து  லண்டனில்    கண்காட்சி வைத்தார்.   கருத்தரங்குகள்,   கண்டன ஊர்வலங்களில்  பங்கேற்றார்.

இலங்கையில்   நீடித்த  மனித உரிமை   மீறல்கள்  தொடர்பாக  இவர் இயக்கிய   ஆவணப்படத்தை,  இன்று  முள்ளிவாய்க்கால்  இறுதி யுத்தப்பேரழிவை அம்பலப்படுத்திய செனல் 4   தொலைக்காட்சி அன்று நிராகரித்திருக்கிறது.

இலங்கையில் நீடித்த போர் எமது தமிழ் மக்களையும் தாயகத்தையும் இறுதியில்  எங்குகொண்டுசென்று  நிறுத்தும் என்பதை  அறிந்துவைத்திருந்த  தீர்க்கதரிசி  அவர். அதனால்  அன்டன்  பாலசிங்கம்  முதல்  இலங்கை  அரசுத்தலைவர்கள் வரையில் அவர் தனித்தும் பலருடனும்  பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தார்.

ராஜேஸ்வரி அப்பொழுதும் சோர்ந்துவிடவில்லை.

தமது  நண்பர்கள்  சிலருடன்  இணைந்து  முகாம்களில்


தடுத்துவைக்கப்பட்டிருந்த  முன்னாள்   பெண்போராளிகளினதும் கணவரை   இழந்து  தவித்த  விதவைத்தாய்மாரினதும் கண்ணீரைத் துடைக்கச்சென்றார்.

ராஜேஸ்வரி,   தமது  இலக்கியப்படைப்புகள்  திரைப்படத்துறை முதலானவற்றில்   மாத்திரம்  முழுமையாக  கவனம் செலுத்தியிருந்தால்   எமது  தமிழ்  சமுதாயத்திற்கு  ஒரு  அபர்ணா சென்னோ,   ஒரு  மீரா நாயரோ,   ஒரு  தீபா  மேத்தாவோ கிடைத்திருப்பார்.

ஆனால் , அவர்  தமது  பணிகளை  எமது  தேசத்தில்  பாதிக்கப்பட்ட மக்கள்பக்கம்,  குறிப்பாக பெண்கள்  பக்கம்  தொடர்ந்தார். உண்மையான  படைப்பாளி  -  பத்திரிகையாளர்  எப்பொழுதும் பாதிக்கப்பட்டவர்கள்   பக்கம்தான்  நிற்பார்.   அதற்கு  சிறந்த முன்னுதாரணம்   ராஜேஸ்வரி.

தமிழ்நாட்டில்   மூத்த  இலக்கிய  விமர்சகர்  கோவை  ஞானி, ராஜம்கிருஷ்ணன்,    பாலுமகேந்திரா,   சுஜாதா, மாலன்   உட்பட  பலருடன் ஆரோக்கியமான    நட்புறவைப்பேணியவர்.   ஜெயகாந்தனுடன்  கருத்து ரீதியாக  மோதியிருப்பவர்.

திரைப்படத்துறையில்    இவருக்கிருந்த  ஆர்வத்தை   அறிந்து இயக்குநர்  ராஜீவ் மேனனிடம்  இவரை   அனுப்பினார்  சுஜாதா.   ராஜீவ்  மேனன்,   சங்கர்  முதலான  பல  இயக்குநர்களின்  படங்களுக்கு  வசனம்  எழுதியவர்  சுஜாதா.

ஆயினும்   ராஜேஸ்வரியின்  வாழ்வில்  திரைப்படத்துறையைவிட பாதிக்கப்பட்ட   மக்களின்  துயரமே  அதிகம்  தாக்கத்தை   செலுத்தியது. அதனால்   தமது  எழுத்தையும்  குரலையும்  செயற்பாடுகளையும் இம்மக்கள்   பக்கமே  திசை  திருப்பினார்.

அமைதியாக இயற்கை  எழில் கொஞ்சும்தோற்றத்துடன்  துலங்கிய


ஒரு   கிராமத்தின்  சராசரிப்  பெண்ணின்  கனவுகள்,   பனியில்  மூழ்கும்  தேசம்சென்ற  பின்னரும்   தொடர்ந்தன.   அவற்றுள்  எத்தனை   நனவாகின...?  எத்தனை   நிராசையாகின...?  என்பதை அவரது  மனச்சாட்சியிடம்தான்  கேட்க முடியும்.

அயலி வெப்சீரியலின்  கதை தன்னுடையது என்றும் போர்க்குரல் எழுப்பியிருந்தார். அதற்கு எதிர்வினையாக நானும் ஒரு விரிவான கட்டுரை எழுதினேன்.

இந்த ஆண்டு நடுப்பகுதியில் வெளியான எனது சினிமா : பார்த்ததும் கேட்டதும் நூலிலும் அக்கட்டுரை இடம்பெற்றுள்ளது.

தனது குரலுக்கு எதிர்க்குரல் எழுப்பியவன்தான் நான் என்பதையும் பொருட்படுத்தாமல், கருத்தை கருத்தாக மாத்திரம் ஏற்றுக்கொண்டு என்னை சகோதர வாஞ்சையுடன் கவனித்துக்கொண்ட  அவரது படைப்புகள் ஆங்கிலத்தில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

( தொடரும் )   

                                                       

No comments: