திவ்யா சர்வேஸ்வரனின் வேணுகான அரங்கேற்றம் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 

குரு சுதந்திரறாஜ் அவர்களின் சிஷ்ஷை

திவ்யா சர்வேஸ்வரனின் வேணுகான அரங்கேற்றம்

-    நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 

திவ்யா சர்வேஸ்வரனின் வேணுகான அரங்கேற்றம் 8-10-2023 பரமாட்டா Riverside Theater-இல் வெகு விமரிசையாக நடந்தேறியது. திவ்யா குரு சுதந்திரறாஜ் அவர்களிடம் வேணு இசையை சிறு வயதிலேயே கற்க ஆரம்பித்து, சிறந்த கலைஞராக உருவாகி உள்ளதை அன்று கண்டு களித்தோம்.

அவர் கச்சேரியை மல்லாரியுடன் ஆரம்பித்தார். கண்ட ஜாதி அட தாளத்தில் அமைந்த பைரவி வர்ணத்தைத் தொடர்ந்தார். ஹம்சதொனியில் வினாயகா ஆரம்பித்ததுமே கச்சேரி களை கட்டியது. பார்வையாளரை தன் இசையால் கவர்ந்தார் திவ்யா. இசை தென்றலென வருடி இன்பமூட்ட, தியாக பிரமத்தின் பஞ்சரத்தின கிருதியில் ஒன்றான “எந்தரோ மகானுபாவுலு” இசை கலைஞர்கள் இணைந்து வாசித்து, இசை எனும் இன்ப சாகரத்தில் எம்மை மூழ்கடித்தனர். மண்டபம் நிறைந்த கூட்டம். வருகை தந்தவர்களில் பலர் கர்னாடக இசைக் கச்சேரிகளுக்கு வராதவர்கள். ஆனால் அன்று கர்னாடக இசையை இரசித்து மகிழ்ந்ததைக் காண முடிந்தது. இங்குதான் வாத்திய இசையின் மகிமையை உணர முடிந்தது. தியாக பிரமத்தின் பஞ்சரத்தினமாக இருந்தால் கூட குரலிசையில் வார்த்தையாக வெளிவரும்போது அர்த்தத்தை புரிய முயலும் எம்மவர் புரியாத மொழியில் பாடினால் எப்படி இரசிக்க முடியும் என கேள்வி எழுப்புவார்கள். இங்கோ இசையுடன் இணைந்து அவர்கள் உள நிறைவாக இரசிப்பதை உணர முடிந்தது

கரிகேச நல்லூர் முத்தையா பாகவதரின் அமிர்தவர்ஷினி, திவ்யா அநாயாசமாக வாசித்து பலத்த கரகோஷத்தைப் பெற்றார்.

இசை நிகழ்வின் தொகுப்பாளரான சுபாங்கன் நிர்மலேஸ்வரன், எழுதிக் கொடுத்ததை வாசிக்கும் தொகுப்பாளர் அல்ல. இசைக் கலையின் பல விஷயங்களை அறிந்து எடுத்துக்கூறி இசைக்கு மேலும் மெருகூட்டினார். அவருக்கு எமது பாராட்டுகள்.

“நகுமோ” வேணுவைத் தொடர்ந்து வயிலின் என இரு கலைஞர்களும் ஆபேரி இராகத்தை வாசித்த போது, மெய் சிலிர்த்தது. அவர்கள் தொடர்ந்தும் வாசிக்க மாட்டார்களா என ஏங்க வைத்தனர். தாளவாத்தியக் கலைஞர்கள் நீண்ட நேரத்தை எடுத்ததனால் எதையுமே விரிவாக வாசிக்க முடியவில்லை. அதனால் தொடர்ந்த உருப்படிகள் யாவும் நேரம் குறைக்க வேண்டியதாகிவிட்டது. அரங்கேற்றத்தின் அடுத்த நாள் ஒரு இசைக் கலைஞரை சந்தித்தபோது, அவர் கூறியது, “இசை அரங்கேற்றம் திவ்யாவிற்கே, மற்றைய கலைஞர்கள் அரங்கேற்றம் சிறப்புற அனுசரணையாக வாசிக்க வேண்டியவரே” என.

இடைவேளையை அடுத்து ராகம் தானம் பல்லவி இடம்பெற்றது. திவ்யா வேணுவும் தொடர்ந்து வயலின் வித்துவான் அனந்தகிறிஷ்ணனும் தெய்வீக இசையை அள்ளி வழங்கினார்கள்.

ஆழமான கர்னாடக இசையினை அடுத்து கச்சேரியில் சில பிரபல பாடல்களை இசைப்பது மரபு. அந்த வகையில் அருணகிரிநாதரின் திருவடிகள், பாரதிதாசனின் துன்பம் நேர்கையில் என தொடர, என்னை அழைத்து வந்தவர்கள் மறுநாள் வேலைக்குப் போகவேண்டும், அடுத்து மோகன கல்யாணி தில்லானா மட்டுமே என நாம் மண்டபத்தை விட்டு வெளியேறினோம்.



திவ்யாவை கலைஞராக உருவாக்கிய குரு சுதந்திரறாஜ் வேணுகானம், மிருதங்க வாத்தியம் இரண்டையும் புலம் பெயர்ந்த மண்ணில் வேர் ஊன்ற வைத்தவர். அவர் மூலம் எமது இளம் சமுதாயம் எமது பாரம்பரிய இசையைக் கற்று வருகிறார்கள். இவரது விடாமுயற்சியால் பலர் இன்று தேர்ந்த கலைஞர்களாக வளர்ந்துகொண்டுள்ளனர். அவரைப் போன்ற குரு கிடைக்க சிட்னி இளம் சமுதாயம் அதிர்ஷ்டம் பெற்றதே. அவர் இந்த கலையை மேலும் வளர்க்க இறைவன் எல்லா சுகத்தையும் அவருக்கு வழங்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவர் மூலம் கலையைக் கற்ற சிஷ்யர் மூவர் திவ்யாவின் அரங்கேற்றத்தில் வாசித்து தமக்கும் தம் குருவுக்கும் பெருமை சேர்த்தார்கள்.


ஜனகன் அவர் மகள், இங்கு வருகை தரும் பிரபல இசைக் கலைஞர்களுக்கு கஞ்சிரா வாசித்து அவர்கள் பாராட்டைப் பெற்று வருகிறார். இங்கு நடைபெறும் பரத நாட்டிய நிகழ்வுகளில் அவரை மிருதங்கக் கலைஞராகவும் காண முடிகிறது. பிரணவன் ஜெயராசா, பிரவீணன் ஜெயராசா சகோதரர்கள் கடம், மோர்சிங்கை வாசித்து யாவரின் பாராட்டையும் பெற்றனர்.

திவ்யா அரங்கேற்றத்தை சிறப்புற நடத்த மிருதங்க மேதை மேலை காவேரி ஸ்ரீ K. பாலாஜியும், வயலின் இசைக்க, M.S. அனந்த கிறிஷ்ணனும் வந்திருந்தார்கள். இவர்களோ பல விருதுகளைப் பெற்ற உன்னத பாரம்பரியத்தைக் கொண்ட கலைஞர்கள். இத்தகைய கலைஞர்கள் பக்க பலமாக எமது இளைஞர்களுக்குக் கிடைக்க, வழிநடத்தும் சுதந்திரறாஜ் மேலும் பல இளம் கலைஞர்களை உருவாக்க இறையருள் வேண்டி நிறைவு செய்கிறேன்.  



No comments: