நவராத்திரி சிறப்பம்சம்

 image0.jpeg





அன்னையே துர்க்கையே அரவணைப்பாய் தாயே ! 
 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 
  இன்பகலா வாழ்க்கை எனக்கருள வேண்டும்
  ஈரமொடு வீரம் மனமமர வேண்டும் 
  துன்பது என்னைத் தொற்றாம லிருக்கத்
  துணையாக இருப்பாய் துர்கையம்மா நீயும்

  வாதமிடு குணத்தை வதைத்திடுவாய் அம்மா
  மோதவரும் பகையை விலக்கிடுவாய் அம்மா
  சோதனைகள் அனைத்தும் சாதனையாய் ஆக்க
  துணையாக இருப்பாய் துர்க்கையம்மா நீயும்

 வார்த்தையிலே இனிமை சேர்த்திடுவாய் தாயே
 வம்பர்தமை வாழ்வில் அகற்றிவிடுவாய் அம்மா
 காப்பாக இருப்பாய் கண்டிப்பாய் இருப்பாய்
 கண்ணுக்குள் மணியாக இருக்கின்றாய் நீயும் 

வாழ்வாக இருப்பாய் வளமாக இருப்பாய்
தாழ்வாக இருப்பாரைத் தாங்கியே நிற்பாய்
ஆழமாய் இருக்கும் அருட்கடலும் ஆவாய்
அன்னையே துர்க்கையே அரவணைப்பாய் தாயே 



அருளான இலக்குமியே அடிபணிந்தேன் அம்மா !
  

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 
  


  சங்கநிதி பதுமநிதி தந்திடு தாயே 
  சஞ்சல மணுகாமல் காத்திடுவாய் நீயே 

  பஞ்சமெனும் இருள்சூழா பார்த்திடுவாய் தாயே
  பாதமலர் சரணடைந்தோம் பராபரமே உன்னை 

  உணவோடு  உடையுறைள் உவந்தளிப்பாய் தாயே
  உலகோர்கள் இகழாமால் வாழ்வளிப்பாய் தாயே 
  அளவோடு செல்வமதை அளித்திடுவாய் தாயே
  ஆசையது பெருகாமல் பார்த்துவிடு அம்மா

   பொருளில்லார்க் கிவ்வுலகு இல்லையாம் அம்மா
   பொருளீய்ந்து எந்தனைக் காத்திடுவாய் அம்மா
   பொருளோடு ஈகையையும் மனமமரச் செய்வாய்
   அருளான இலக்குமியே அடிபணிந்தேன் அம்மா

   இருப்பாரும் இல்லாரும் தேடுகிறார் தாயே
   எவரெவர்க்கு எதுவேண்டும் என்பதை நீயறிவாய்
   கொடுக்கின்ற தருணமதில் கொடுத்துமே உயர்வாய்
   கோணாத குணமதனை தந்திடுவாய் அம்மா 

   பொருளும் அருளும் ஒன்றாய் இணைய
   கருணை புரிவாய் இலக்குமித் தாயே
   தருமம் உலகில் தளைக்க அருள்வாய்
   தனமாய் ஒளிரும் இலக்குமித் தாயே 






No comments: