குடும்பக் கதைகளிலும், புராணப் படங்களிலும் நடித்து புகழ் பெற்றுக் கொண்டிருந்த சிவாஜி கணேசனை அடிதடி, மசாலா பாணிப் படங்களில் நடிக்க வைத்த பெருமை நடிகர் பாலாஜியை சாரும். அந்த வரிசையில் 1973ம் ஆண்டு ஈஸ்ட்மேன் கலரில் எங்கள் தங்க ராஜா படம் வெளிவந்தது. ஆனால் இந்தப் படத்தை பாலாஜி தயாரிக்கவும் இல்லை, அதில் நடிக்கவும் இல்லை. படத்தை தயாரித்து , டைரக்ட் செய்தவர் ராஜேந்திர பிரசாத் ஆவார். தெலுங்கில் பிரபலமான இவர் , தான் உருவாக்கிய தெலுங்கு படத்தை தழுவி தமிழில் இந்தப் படத்தைத் தயாரித்தார். அது மட்டுமன்றி அது வரை எம் ஜி ஆருடன் ஜோடியாக நடித்து வந்த மஞ்சுளா இந்தப் படத்தின் மூலம் சிவாஜிக்கு ஜோடியானார்.
அமைதியும் அடக்கமும் நிறைந்த டாக்டர் ராஜா, அடாவடித்தனமும், முரட்டுத்தனமும் கொண்ட பட்டாக்கத்தி பைரவன் இந்த இருவேறு மாறுபட்ட குணாம்சங்களை ஏற்று நடிக்க ராஜேந்திர பிரசாத் சரியான நடிகரையே தேர்வு செய்தார். அவர் தேர்வு வீண் போகவில்லை என்பதை காட்சிக்கு காட்சி தன் நடிப்பின் மூலம் நிரூபித்தார் சிவாஜி. அமைதியான அடக்கமான ராஜா பாத்திரம் அவருக்கு வழக்கமானது. ஆனால் பட்டாக்கத்தி பைரவன் பாத்திரத்தில் அவர் காட்டும் நடிப்பும், ஸ்டைலும் பிரமாதம்! மஞ்சுளா, நாகேஷ், மனோகர் , சௌகார் இவர்கள் நால்வரிடமும் அவர் காட்டும் ஆக்ட்டிங் ஓவர் ஆக்டிங் அல்ல ! எஸ்ஸ்ட்ரா ஓர்டனரி .
கதாநாயகியாக வரும் மஞ்சுளா அழகுப் பதுமையாக வந்து, வித விதமான சேலை அணிந்து , சிவாஜியிடம் கெஞ்சியும், கொஞ்சியும் பேசி ரசிகர்களை கவர்கிறார்.
சௌகார் ஜானகி படம் முழுவதும் கலங்குகிறார். அபலை பெண்ணாக வாடுகிறார். சுந்தரராஜன் இஸ்லாமியராக வந்து இதமாக நடிக்கிறார். ராஜா நாம உப்பு விற்கப் போனா மழை பெய்யுது, ,மாவு விக்கப் போனா காத்தடிக்குது என்று அவர் சொல்வது நல்ல டச். படத்தில் சிவாஜியுடன் மோதுபவர் ஆர் எஸ் மனோகர். இவர் இல்லாவிட்டால் சிவாஜியின் பாத்திரம் தள்ளாடி இருக்கும் என்பது போல் படம் முழுதும் மிடுக்குடன் வந்து மோதுகிறார். நாகேஷ் வரும் காட்சிகளில் எல்லாம் எப்படியோ சிரிப்பும் வந்து விடுகிறது. வேலை இல்லாமல் கஷ்டப்படுறியா என்று சிவாஜி கேட்க , வேலை இருந்தாலும் கஷ்டப்படுவேன் , கஷ்டமில்லாத வேலையா இருந்தா நல்லது என்று நாகேஷ் சொல்வது நல்ல காமெடி.
எஸ் வி ராமதாஸ், காந்திமதி, சி ஐ டி சகுந்தலா, ரமாப்ரபா, மாலி ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். விலைமாது விடுதி நடத்தும் காந்திமதி, அவரின் அடியாள் ராமதாஸ் , அவர்களை துச்சமென மதிக்கும் சௌகார் மூவர் நடிப்பும் குட் .
சிறு வயதிலே வில்லனின் அட்டகாசத்தால் தாயை இழந்து, அக்காவை பறி கொடுத்து குடும்ப நண்பர் தயவில் படித்து டாக்டர் ஆகிறான் ராஜா. அவன் விலகி விலகிப் போக வழிய வந்து அவனைக் காதலிக்கிறாள் வசந்தி. இருமணமும் சேரும் போது தான் தெரிய வருகிறது வசந்தி தன் குடும்பத்தை கெடுத்த வேதசலத்தின் மகள் என்று. அதே சமயம் பட்டாக்கத்தி பைரவன் என்ற முரடன் நுழைந்து எல்லோரையும் கதி கலங்க செய்கிறான். அது மட்டுமன்றி ராஜா காணாமல் போகவே பைரவன், வேதாசலம் மீது சந்தேகம் வலுக்கிறது. வசந்தியோ ராஜாவை நினைந்து உருகுகிறாள்.
படத்தில் இடம் பெற்ற கண்ணதாசனின் பாடல்கள் எல்லாம் கே வி மகாதேவன் இசையில் இனிமையாக அமைந்தன. கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா, இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை , முத்தங்கள் நூறு அது தித்தித்திக்கும் பாரு பாடல்கள் இன்றும் ஒலிக்கின்றன. கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம் பாடல் மனதை கனக்கச் செய்கிறது.
படத்துக்கு கதை வசனம் எழுதியவர் பாலமுருகன். வசனங்கள் கூர்மையாக அமைந்தன. நல்ல பெண் கற்பை ஒரு நாளும் பாரமா நினைக்க மாட்டாள் , வில்லா வலைச்சது உங்க அப்பா நான் அம்பா மாறியது தப்பா , போன்ற வசனங்கள் படம் முழுவதும் விரவிக் கிடந்தன. சபாஷ் பாலமுருகன்.
படத்துக்கான ஒளிப்பதிவு எஸ் வேங்கடரத்னம். படத்துக்கு கிருஷ்ண ராவ் போட்ட செட் அருமை. அதனை தனது கமராவில் பதிவு பண்ணிய ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஷாட்! சண்டைக் காட்சிகளும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருந்தன .
ஒரு ஹீரோ சாது, மற்றைய ஹீரோ முரடன் என்ற கதைக் கரு பி யு சின்னப்பா காலத்து கதை என்ற போதும் அதனை தன்னுடைய நடிப்பால் நியாயப் படுத்தியிருந்தார் சிவாஜி . அது மட்டுமன்றி ஆட்டம், பாட்டம், உணர்ச்சிகரம், சோகம் , வீரம் என்று பலவித உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தார் அவர். முதல் தடவையாக தமிழில் படம் தயாரித்த ராஜேந்திர பிரசாத்துக்கு கிடைத்த பிரசாதம் சிவாஜி. படம் இந்தியா, இலங்கை இரண்டு நாடுகளிலும் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது.
1 comment:
இலங்கையில் பெரிய வெற்றியை பெற்ற படம் , யாழ் ராஜா திரையரங்கில் முதன்முறையாக மினியேச்சரில் கட் அவுட் வைத்திருந்தார்கள். 150 நாட்களுக்கு மேல் ஒடி வசூல் குவித்தது. பட்டாக்கத்தி பைரவனின் கதாபாத்திரமும் , மோட்டார் பைக் ஒட்டமும் , K.V. மகாதேவனின் BGM உம் பட்டையை கிளப்பியது.
Post a Comment