வடிவழகன் நல்லூரான் தேர்பார்ப்போம் வாருங்கள் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 .  மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

         மெல்பேண் .... அவுஸ்திரேலியா

நல்லூரான் தேர்காண எல்லோரும் வந்திடுவார்
தேர்வடத்தைப் பிடிப்பதற்கு முந்தியவர் நின்றிடுவார்
ஊர்கூடி வந்தங்கே தேருழுத்து நின்றுவிடும்
நல்லூரான் தேரமரந்து நற்காட்சி தந்திடுவான் 

ஆதவனின் ஒளியணைக்க ஆறுமுகன் அருள்சுரந்து

அசைந்துவரும் தாமரையாய் அரன்மகனும் வந்திடுவார்
தேரடியில் திரண்டிடுவர் தெரிசனத்தைக் காண்பதற்கு
ஆறுமுகன் தேரேற அழகுடனே வந்திடுவார்

ஊரெல்லாம் நல்லூரான் உவந்துவரும் தேர்காண
வெண்மணலில் விதைத்துவிட்ட  நன்மணியாய் நிறைந்திருப்பார்
தேர்வடத்தைத் தொட்டுவிட்டால் செய்தவினை அகலுமென
தொட்டுவிட  அடியார்கள் கிட்டக்கிட்டச் சென்றிடுவார்

தேரடியில் மலையாக தேங்காய்கள் குவிந்திருக்க
கூடிநிற்கும் அடியார்கள் குறையகற்ற உடைத்திடுவார்
சிதறிவிடும் தேங்காய்போல சிக்கலெலாம் ஆகவென
சிந்தையிலே அடியார்கள் செறிவாக நிறைத்திடுவார்

ஆடம்பரம் இல்லாத ஆலயமாம் நல்லூர்
அமைதியொடு ஆன்மீகம் ஆலயத்தின் சொத்து
வேண்டாத சிக்கல்களை உள்வாங்காக் கோவில்
வேலவனின் அருளொழுகும் கோவிலது நல்லூர் 

ஏழை பணக்காரெலாம் இணைந்தங்கே நிற்பார்
எல்லோரும் நல்லூரான் அடியாராய் வருவார்
தேரோடும் வீதியெலாம் திரளாக நிற்பார்
தேரேறி வருமழகன் திருமுகத்தைக் காண 

பெரியவரும் சிறியவரும் காவடிகள் எடுப்பார்
வருவினைகள் போக்குவென மனநினைப்பார் அவரும்
நடைபவனி மேற்கொண்டும் வந்திடுவார் அடியார்
நல்லூரன் தேர்காண பலரங்கே குவிவார் 

காவடிகள் ஆடிவரும் கந்தனது சன்னதியில்
கரங்குவித்து அடியவர்கள் கந்தன்முகம் காணநிற்பார்
ஆறுமுகன் விதிவர ஆதவனும் வரவேற்பான்
அரோகரா எனுமொலியோ ஆகாயம் தொட்டுவிடும்

ஊரெல்லாம் உற்சாகம் ஊற்றெடுத்து நிற்கும்
தேர்பார்க்க யாவருமே விருப்புடனே திரள்வார்
பந்தலிட்டி பானகத்தை பலருக்கும் கொடுப்பார்
எம்பெருமான் தேர்காண எல்லோரும் விரைவார்

பட்டுடுத்தி பெண்களெல்லாம் பக்குவமாய் வருவார்

வேட்டியுடன் சால்வையுடன் ஆடவரும் விரைவார்
சிறியவரும் முதியவரும் கூடவே இணைவார்
சிவன்மைந்தன் முருகனும் தேரேறி வருவான்

வானொலிகள் தொலைக்காட்சி வர்ணனைகள் நடக்கும்

மனம்விரும்பி அடியார்கள் இசைமுழங்கி நிற்பார்
வானவரும் மகிழ்வுடனே மலர்மாரி சொரிவார்
மண்ணகத்தில் நல்லூரான் தேர்பவனி நடக்கும்
 
அரனாரின் திருக்குமரன் தேரமர்ந்து வருகிறான்
ஆணவத்தை அகவிருளை அகற்றிடவே வருகிறான்
வடிவழகன் நல்லூரான் தேரிழுப்போம் வாருங்கள்
அருளிடுவான் ஆறுமுகன் அவனடியைப் பற்றிடுவோம் 

வடிவழகன் நல்லூரான் தேர்பார்ப்போம் வாருங்கள்
மனவழுக்கை நல்லூரான் போக்கிடுவான் நம்புங்கள்
நினைவெல்லாம் நல்லூரான் நினைப்பாக நிறுத்துக்கள்
நீள்நிலத்தில் பலவளமும் நல்லூரான் அளித்திடுவான் 

வீதிவரா பலவடியார் வீடிருந்து பார்ப்பதற்கு
நாடிருக்கும் தொலைக்காட்சி நற்றுணையாய் ஆகிவிடும்
வானொலிகள் வருணனனை மனமிருத்த வந்துநிற்கும்
வடிவேலன் தேரசைந்து வண்ணமுற வீதிவரும் 

No comments: