என் தந்தையின் வார்த்தைகளை உங்களிடம் கண்டேன் - சௌந்தரி கணேசன்

 .

வானொலி மாமா நா.மகேசன் அவர்களின் அஞ்சலிக்கு கவிதை 

புகழைத் தேடும் மனிதர் நடுவில்

சுற்றிச் சுழன்று சத்தம் செய்யாது

பற்றி நின்று பணி புரிந்தவர் நீங்கள்

 

நீங்கள் நேர்மையானவர்

எவராலும் வாங்க முடியாதவர்

தோழமையாகப் பழகத் தெரிந்தவர்

பொதுவாழ்வில் நடிக்கத் தெரியாதவர்

கடவுளைப் போல் கருணை கொண்டவர்

 

எங்கிருந்தோ வந்து என் எதிரிலும் நின்றீர்கள்

என்னோடும் பேசினீர்கள்

என்னோடும் நடந்தீர்கள்

என்னோடும் சிரித்தீர்கள்

 

என் தந்தையின் வார்த்தைகளை உங்களிடம் கண்டேன்

என் சொந்தம் போல் உங்களையும் கொண்டாடினேன்

எனக்காகவே உங்களை நான் நேசித்து மகிழ்ந்தேன்

 

உங்கள்மீது கொண்ட பாசம் மனசுக்குள் புகைவதால்

வார்த்தைகள் அழுவதற்கு காத்திருக்கின்றன

ஆனாலும் இது அழுகின்ற நேரமல்ல

 

முத்தமிழை முன்னிறுத்தி

நீங்கள் முக்காலமும் செய்த பணி

எக்காலமும் எம் நினைவோடு கூடவர

உங்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டிய நேரமிது

 

தமிழர் வாழும் திசைகளெல்லாம்

ஐம்பெரும் இலக்கியத்தின் உரை நடையை

வானலையில் பம்பரமாய் சுற்றிவரச் செய்த

உங்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டிய நேரமிது

 

காலத்தைத் திரும்பிப் பார்க்கின்றேன்

 

எங்கள் பக்கத்தில் நின்றீர்கள்

எங்கள் வெற்றிகளைக் கொண்டாடினீர்கள்

எங்கள் தோல்விகளை ஏற்றுக்கொண்டீர்கள்

எங்கள் பிரச்சனைகளை புரிந்து கொண்டீர்கள்

எங்களுக்கு முன்மாதிரியாகி வாழ்ந்தீர்கள்

 

உங்களைப் போலவே உச்சரிக்க விரும்புகிறோம்

உங்களைப் போலவே நேசிக்க விரும்புகிறோம்

உங்களைப் போலவே வாழ விரும்புகிறோம்

 

உங்களின் அந்தச் செல்லப் புன்னகை

உங்களின் அந்த அக்கறையுள்ள இதயம்

உங்களின் அந்த அரவணைக்கும் பாராட்டு

உங்களுடன் பகிர்ந்து கொண்ட அந்தப் பொன்னான நேரங்கள்

அனைத்திற்கும் இப்போது நாம் நன்றி கூறுகிறோம்

 

நீங்கள் அறிந்ததை விட

நாங்கள் உணர்ந்ததை விட

எங்கள் சமூகத்திற்கு நீங்கள் தேவை

இன்னும் இன்னும் அதிகம் தேவை

 

கடினமான காலங்களில்

உங்கள் பகுத்தறிவின் குரல் தேவை

 

பாராட்டி முதுகில் தட்டும்

உங்கள் ஆசிரிய மனம் தேவை

 

எங்கள் பாரம்பரியம் போற்றிக் காக்கும்

உங்கள் சிந்தனையின் கனம் தேவை

அன்பைத் தூவச் சொன்னீர்கள்

அக்கறையைக் காட்டச் சொன்னீர்கள்

இறைவனைப் போற்றச் சொன்னீர்கள்

தமிழைப் போதிக்கச் சொன்னீர்கள்

 

பேசுவதில் உண்மை வேண்டும் எனறீர்கள்

வார்த்தைகளில் கவனம் வேண்டும் என்றீர்கள்

தேவையெனில் மௌனமே நன்று என்றீர்கள்

தேவையற்ற வாக்குறுதிகள் தீமை என்றீர்கள்

 

தேடாமல் கிடைத்த தீந்தமிழே

வேதனை துடைக்கும் மென் விரலே

மெல்ல நடக்கும் வெல்லும் வேகமே

இறுதிவரை நடமாடிய மனிதத் தேனியே

அள்ள அள்ளக் குறையாத அஷ்யபாத்திரமே

 

உங்கள் அன்பில் வாழ்ந்த சந்ததி நாங்கள்

உள்ளம் உருக உங்களை வாழ்த்தி வணங்குகிறோம்

 

என்றும் ஒரு பெண்ணுக்கு அவளது அப்பா வேண்டும்

அவளை ஆண்மையுடன் நேசிக்க

அவளுடைய தேர்வுகளைச் சரி பார்க்க

அவளுக்குத் தீங்கு நேராமல் பாதுகாக்க

அவள் காயப்படும்போது அவளை அமைதிப்படுத்த

என்றும் ஒரு பெண்ணுக்கு அவளது அப்பா வேண்டும்

 

இன்று தந்தையர் தினம்

என் தந்தையை நினைத்துப் பார்க்கிறேன்

 

என் கைகளைப் பிடித்து

என் இதயத்தைத் திறந்தவர் என் அப்பா

அவர் பெயர் பண்டிதர் பொன் கணேசன்

அவர் என் அன்புத் தந்தை

அவருடைய பெயரைத் தாங்கும் நான்

அவரது செல்ல மகள்  

 

எனது அப்பாவை இழந்து

முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டன

ஒரு தந்தையின் அன்பு விட்டுச்சென்ற இடைவெளியை

திரும்பிச் சென்று எவராலும் நிரப்ப முடியாது

 

ஆனாலும் திறந்த கைகளுடன்

என்னைச்சுற்றி எத்தனையோ அப்பாக்கள்


நீங்களும் என் அப்பாதான்

நன்றி அப்பா

 

பேச்சில் நாவலரே

பிள்ளைக் கனியமுதே

எங்கள் செல்லப் பரம்பொருளே

உங்கள் ஆத்மாவுக்கு சாந்தி

உங்கள் ஆத்மாவுக்கு சாந்தி

 No comments: