பாருலகில் நீவரமாய் இருக்கின்றாய் பாரதியே ! [ 11-09-2023 ] பாரதியார் நினைவு நாள்

 .மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
         மெல்பேண் .... அவுஸ்திரேலியா

பாரதியின் பாட்டாலே பலபேரும் விழித்தனரே
வேருக்கு நீராக விரைந்துமே சென்றதுவே
பாரதியின் கற்பனையில் பாரதமே இருந்திடினும்
ஊரையெலாம் உலுக்கும்படி உணர்வாக எழுந்ததுவே 

வறுமைதனில் வாடிடினும் வற்றாத கற்பனையால்

நிறைவுடைய கவிதைகளை நீள்புவிக்குத் தந்தானே
வேதத்தை கற்றிடினும் விதம்விதமாய் யோசித்து
பாதகத்தை சாடியதால் பலபேரும் போற்றினரே

பாப்பாவை  பார்த்தவன் பாடிய  பாட்டலெல்லாம்

கேட்பார்க்கு எல்லாமே கீதையாய் இருக்கிறது
மொழிபற்றி பாடியது முழுதுமே உண்மையென
மொழியறிஞர் பாராட்டு முண்டாசுக் கவிஞனுக்கே

பாரதியின் கற்பனையால் பலகவிஞர் நிலையிழந்தார்

ஆழமுள்ள கவிதைகளை அவனெமக்கு தந்தானே
புதுக்கவிதை பொங்கிவர புலவரெலாம் வெகுண்டனரே
புதுவெள்ளம்  போல்கவிதை புறப்பட்டு வந்ததுவே

அழகுதமிழ் பாவாணர் அனைவருமே வியந்தார்கள்

பழகுதமிழ் சொற்களிலே பாரதியின் கவிகேட்டு
சோதனைகள் பலகண்டான் சாதனைகளாக்கி நின்றான்
போதனைகள் பலசொன்னான் புனிதமிக்க  தமிழ்க்கவிஞன்

தெளிவுடனே சேதிகளை செந்தமிழால் பாடிநின்ற

துணிவுநிறை பாரதியை துதிபாடி நிற்போமே
அவனுடைய கவிதைகளை அகமிருத்தி வைப்போம்
தமிழன்னை வாழ்த்துவாள் தமிழுமே மகிழுமன்றோ   

வறுமைத் தடாகத்தில் மலர்ந்திட்ட மாமலரே 

தறிகெட்ட மனிதரை குறிபார்த்த மாகவியே 
விடுதலைச் சிறகுகளை விரித்திட்ட பெருங்கவியே 
வீழ்வேனா எனவுரைத்து வித்தானாய் புரட்சிக்கு 

மடமைத் தனத்துக்கு மாலையிட்டார் மண்டியிட

அடிமைத் தளையிருந்தார் அலறியே ஓடிவிட 
பொடிவைத்து பாட்டிசைத்து போக்கியே நின்றாயே 
பொல்லாதார் வசையெல்லாம் பொசுங்கிவிடச் செய்தனையே  

பாப்பாக்கு பாட்டுரைத்து பலகாரம் கொடுத்தாயே

பாஞ்சாலி கதையெடுத்து பகர்ந்தாயே சுயவுணர்வை 
வருமென்னும் நம்பிக்கை மனமுழுக்க கொண்டதனால்
வருமுன்னே விடுதலைக்கு பாடிவிட்டாய் பள்ளுதனை  

வேதத்தில் திளைத்தாலும் வில்லங்கம் வெறுத்தாயே

பாதகத்தை மிதித்துவிட கோபத்தை விரித்தாயே
சோதனைகள் அத்தனையும் சாதனையாய் கொண்டாயே
சுறுசுறுப்பின் உருவாக சுடராக எழுந்தாயே

மூடத் தனத்தை முற்றாக வெறுத்திட்டாய்

முத்திக்கு வித்தான பக்குவத்தை விதைத்திட்டாய்
வேண்டாத குப்பைகளை வீசியே எறிந்திட்டாய்
வீண்வாதம் செய்வோரை வெந்தணலில் வீசிட்டாய்

பசியுந்தன் கூடவரும் பாட்டதற்கு விருந்தாகும்

பசிகண்டு வெகுண்டதால் பாரழிப்பேன் என்றாயே
பசிபற்றி நீயறிவாய் பசியழிக்க நீபுகன்றாய்
பாரததத்தின் விடிவுக்காய் பட்டினியை யேற்றாயே

அன்னைத் தமிழின் அக்கினிக் குஞ்சானாய்

அமிழ்தமெனத் தமிழை அரியாசனம் வைத்தாய்
அஞ்சாமைக் குணத்தை ஆளுமை ஆக்கினாய்
அடிமை இருளகற்ற ஆகிநின்றாய் ஆதவனாய்

தீர்க்க தரிசனமாய் பலவுரைத்த தமிழ்க்கவியே

திக்கெட்டும் சென்று செல்வங்கள் சேரென்றாய்
சேர்த்த வனைத்தையும் கொண்டிங்கு வந்து
நலந்திகழ நல்லவற்றை பெருக்கென்றாய் பெருங்கவியே

பாடிய பாட்டனைத்தும் பட்டொளி வீசுதையா

பட்டிதொட்டி எல்லாமே பாட்டொலித்து நிற்குதையா
பாமரரும் படித்தவரும் படிக்கின்றார் விருப்புடனே
பாருலகில் நீவரமாய் இருக்கின்றாய் பாரதியே

No comments: