நான் பார்த்து ரசித்த ஸ்வர சாகரம் - யாழ் ராமநாதன் மகளிர் கல்லூரி சிட்னி - செ.பாஸ்கரன்

 .

நேற்றைய தினம் அதாவது செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி 2023 சிட்னியிலே ஸ்வர சாகரம் என்ற நிகழ்வு இடம்பெற்றது. யாழ் ராமநாதன் கல்லூரி பழைய மாணவிகளும், மூளாய் மருத்துவமனை ஆர்வலர்களும் சேர்ந்து இந்த நிகழ்வை அரங்கேற்றி இருந்தார்கள். வழமையாக சிட்னியிலே நிகழ்வுகள் இடம் பெறுவதாக இருந்தால் இந்திய திரைப்பாடகர்கள் அல்லது இலங்கை திரைப்பாடகர்கள் அல்லது அவுஸ்ரேலிய இளம் பாடகர், பாடகிகள் பங்கேற்று இடம் பெறும். இந்த நிகழ்ச்சி இம்முறை சற்று வித்தியாசமாக யாழ்ப்பாணம் கண்ணன் இசைக்குழு என்று அழைக்கப்படுகின்ற திரு.கண்ணன். ஒரு காலத்தில் யாழ்ப்பாணம் மட்டுமல்ல யாழ்ப்பாணம், மட்டக்களப்பு கொழும்பு, தொலைக்காட்சிகள், நாடகங்கள் என்று கால் பரப்பி தன்னுடைய திறமையினால் ஒரு சிறந்த இசை ஆளன் என்று தன்னை நிரூபித்தவர். அவரை அழைத்து இந்த ஸ்வர சாகரம் நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.


நிகழ்ச்சியை அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டு தாபனத்தின் அறிவிப்பாளரும், எழுத்தாளரும் குறிப்பாக இணுவை மண்ணின் மைந்தனுமான திரு கானா பிரபா அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார்கள். பல தெரியாத விடயங்களை தன்னுடைய அறிவிப்பின்போது எடுத்து கூறியிருந்தது, சில விடயங்களை தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருந்தது. குறிப்பாக கண்ணனுடைய பின்புலம் பற்றியும், அவர் ஆற்றிய சேவைகள் பற்றியும், ராமநாதன் மகளிர் கல்லூரி பற்றியும், மூளாய் வைத்தியசாலை பற்றியும் அவர் பல விடயங்களை அறிந்து அதை பகிர்ந்து கொண்டார்.




இந்த நிகழ்ச்சியிலே திரு கண்ணன் அவர்களும் அவரது மகன் சத்தியன் அவர்களும்

இணுவிலிலே வயலின் வித்வானாக மிளிர்ந்து கொண்டிருக்கின்ற கோபிதாஸ்

அவர்களும் கலந்து சிறப்பித்தது ஒரு வித்தியாசமாக இருந்தது. அதோடு இசை

அமைப்பாளர் கண்ணன் அவர்களுடைய மகள்வயிற்று பேத்தியாகிய பவதாரணி,

அதோடு சரிகமப நிகழ்ச்சியிலே எல்லோரையும் தன்னுடைய குரலாலே கவர்ந்த

பின்னணி பாடகி வர்ஷா அவர்கள், இன்று பல நாடுகளுக்கும் சென்று மக்களை

தன் பாடல்களால் கவர்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தில் பின்னணி பாடகர்

அரவிந் ஸ்ரீனிவாஸ் இவர்கள் மூவரும் வருகை தந்திருந்தார்கள்.


இவர்களுக்கு இசை குழுவாக கண்ணன் இசைக் குழுவின் மகன் சத்தியன் கோபாலன் கீபோர்ட் இசையை வழங்கி இருந்தார், கோபிதாஸ் சுந்தரமூர்த்தி வயலின் இசையை வழங்கியிருந்தார் அவரோடு உள்ளூர் கலைஞர்கள் பல மேடைகளை கண்டவர்கள், சிட்னி வாழ் மக்களை அவர்களது இசையால் கவர்ந்தவர்கள் அவர்களும் இணைந்து இருந்தார்கள். பிரவீன் ஜெயராசா ஓக்டோபேட் இசையை இசைக்க, பிரணவன் ஜெய ராசா மிருதங்கம்,தபேலா போன்ற வாத்தியங்களை இசைக்க, லவன் சுபேந்திரன் ரிதம் கிடார் இசைக்க, ராம் மணிவண்ணன் பேஸ்கிட்டார் இசைக்க அகல்யா பாவலன் கீபோர்ட்டை மிக அற்புதமாக கையாண்டார், அத்தோடு இன்னுமொரு இசைக்கருவிளையும் இடையிடையே வாசித்து கரகோசங்களைப் பெற்றுக்கொண்டார், அம்ருத் நாகராஜா டிரம்ஸ் வாசிக்க அந்த இசைக்குழு மேடையிலே மிக அருமையான ஒரு இசையை வழங்கிக் கொண்டிருந்தது.



பல இசை கச்சேரிகளை சிட்னியிலே பார்த்திருக்கின்றேன் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியிலே ஒரு வித்தியாசமாக நிகழ்வை கொடுத்திருந்தார்கள் இந்த நிகழ்ச்சியை தயாரிப்பாளர்கள், குறிப்பாக கார்த்திகாயினி கதிர் அவர்களின் ஏட்பாடென்று பார்த்தவுடன் புரிந்தது. முதல் பகுதியாக இருந்த பாடல்கள் ஈழத்து கவிஞர்களுடைய பாடல்கள், அதிலும் நாடகங்களிலே நாங்கள் பார்த்து ரசித்த பாடல்கள், ஈழத்து கவிதைகள், ஈழத்து நாடகங்களில் பாடப்பட்ட பாடல்கள் என்று எம் மனதை விட்டு அகலாமல் இப்போதும் இருக்கின்ற பாடல்கள். நண்பர்கள் வ.ஐ .ச ஜெயபாலனுடைய கவிதை, சேரனுடைய கவிதை இந்த நிகழ்விலே எடுத்தாளப்பட்டது




மண் சுமந்த மேனியர் என்ற நாடகத்திலே குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் பிரதி எழுத சிதம்பரநாதன் அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட அந்த நாடகத்தில் இருந்து பாடல் ஒலித்தது அதிகாலையில் யாழ்நகர் மீது பனி படிகின்றது' என்ற சேரனின்  பாடல் எல்லோருடைய மனதிலும் தங்கி இருக்கின்ற ஒரு பாடல், அந்த பாடல்கள் எம்முடைய காதில் இன்னும் இசைத்துக்கொண்டிருக்கின்றது அல்லவா, அந்த பாடலை ஸி தமிழில் மிக அற்புதமாக பாடி யாழ் மண்ணுக்கு பெருமை சேர்த்த கண்ணனின் பேத்தியான பவதாயினி அவர்கள் மிக அருமையாக பாடி இருந்தார். முதல் பாடலாக அந்தப் பாடல் இடம் பெற்ற போது உண்மையிலேயே மிக அற்புதமாக யாழ்ப்பாணத்தில் நாங்கள் வாழ்ந்த காலத்துக்கே செல்லக் கூடியதாக இருந்தது.





ஈழத்தின் முக்கியமான கவிஞர்களில் ஒருவரான வ.ஐ .ச.ஜெயபாலனின் கவிதை வரிகளான வெண்மேகம் என்ற அந்தப் பாடலை அரவிந்த் ஸ்ரீனிவாஸ் அவர்கள் பாடியிருந்தார். இந்திய பாடகர்கள் இந்த பாடல்களை மீண்டும் பாடுகின்ற போது அவர்களுடைய குரல் வளமும் கண்ணனுடைய அந்த இசையும் கலந்து வந்த போது உண்மையிலேயே மிக அருமையாக தான் இருந்தது என்று சொல்ல வேண்டும்.




ஒரு கவிதை கண்ணன் அவர்களது இசையிலே வந்த பாடல் "என் மனத் துன்பம் " அந்தப் பாடலை ஜானகினுடைய பாடல்களை எல்லாம் பாடிக்கொண்டிருக்கின்ற அருமையான இளம் பாடகி வர்ஷா எடுத்து வந்தது மிக அருமையாக தான் இருந்தது.



அதேபோல் பல நாடகங்களிலே வந்ததும் கவிதைகளிலே எம்மை கவர்ந்ததுமான "காற்றோடு பேசு என் கண்மணி" என்ற பாடல் நாம் செல்லும் இடமெல்லாம் எம் காதுகளில் ரீங்காரித்துக் கொண்டிருக்கின்ற அந்தப் பாடல் மீண்டும் பவதாரணி உடைய குரலிலே ஒலித்தது. கவிதை உலகின் ஆளுமை மகாகவி உருத்தர மூர்த்தி அவர்களது மகன்தானே சேரன் அவரது பாடல் அல்லவா காற்றோடு பேசு என் கண்மணி அந்த பாடல். அவையில் இருந்த எல்லோரையும் கட்டி போட்டு விட்டது. இது நிகழ்ச்சியினுடைய முதல் பாகமாக இருந்தது.


அதனை தொடர்ந்து திரு கண்ணன் அவர்கள் ஈழத்திலே பல ஆண்டுகள் இசையை கொடுத்துக் கொண்டிருந்த கண்ணன் அவர்களை பாராட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தி அவர் கௌரவிக்கப்பட்டார். பொன்னாடைஜை திரு விக்னேஸ்வரன் அவர்கள் போர்த்தினார். திரு கண்ணன் சில வார்த்தைகள் கூறி நன்றி தெரிவித்தார்.


அவரை நான் சந்தித்து அவரிடம் கீபோர்ட் கற்றதை பற்றி தெரிவித்தபோது வாஞ்சையோடு கைகுலுக்கி பேசினார். அந்த இசை மேதையிடம் முழுதாக கற்றுக்கொள்ள முடியாத சந்தர்ப்பத்தை நினைத்துப் பார்தேன்.





இரண்டாம் பகுதி ஆரம்பிக்கப்பட்டு பல சினிமா பாடல்கள் பாடப்பட்டது.

மிக நல்ல பாடல்கள் மனதுக்குப் பிடித்த பாடல்களை எல்லாம் மூன்று பாடகர்களும்

சேர்ந்து பாடி மக்களை மகிழ்வித்து கொண்டிருந்தார்கள். அதேபோல் கோபிதாஸ்

அவர்கள் வயலினிலே சில பாடல்களை வாசித்தார். பக்கவாத்தியங்கள்

பின்னணியாக முழங்க வயலின் இசையிலே பாடல்கள் ஒலித்தது. அதைக் கேட்டபோது

நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது யாழ்ப்பாணத்தில் திருவிழா நிகழ்ச்சிகளிலே

வயலின் இசை நடக்கின்றது என்று கேள்விப்பட்டவுடன் ஓடி சென்று அந்த வயலின்

இசையை பார்ப்போம். அந்த வேளைகளிலே எம்மை கவர்ந்து கொண்டிருந்தவர்

வயலின் இசை கலைஞர் திரு ராதாகிருஷ்ணன் அவர்கள். அவருடைய உறவினரும்

வயலின் இசை கலைஞருமான கோபிதாஸ் அவர்கள், வான் நிலா நிலா அல்ல

உன் வாலிபம் நிலா என்று அந்த பாடலை வாசித்தபோது மீண்டும் ஒருமுறை

நாங்கள் யாழ் நகர வீதியிலே நடந்து கொண்டிருந்தோம்.




அதை தொடர்ந்து பாடல்கள் பொன்னியின் செல்வன் பட பாடல்கள், மின்சார பூவே

என்ற பாடலோடு வர்ஷா மற்றும் அரவிந்த் வந்தார்கள். மழைத்துளி மழைத்துளி

மண்ணில் சங்கமம் என்ற பாடல் அரவிந்தனுடைய குரலில் மிக அற்புதமாக இருந்தது

எப்படி எம் எஸ் விஸ்வநாதன் உடைய குரலிலேயும் ஹரிஹரனுடைய குரலில் அந்த

பாடலை கேட்டு ரசித்திருந்தோமோ அப்படியே மிக அருமையாக இருந்தது

அந்த பாடல்.



பவதாரணி வித்தியாசமான ஒரு பாடலை எடுத்திருந்தார் அவரோடு சேர்ந்து

மற்றவர்களும் இணைந்து கொண்டார்கள் காண கருங்குயிலே கச்சேரிக்கு

வரியா வரியா என்ற பாடல் எல்லோரையுமே ரசிக்கக் கூடியதாகவும் ஒரு கிராமத்து

இசையாகவும் சபை எங்கும் பரவி இருந்தது. வர்ஷாவினுடைய குரல் கேட்கவும்

வேண்டுமா மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன என்ற பாடலோடு மக்கள்

மனதிலும் மறைந்து கொண்டார். அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அந்த பாடலை

மீண்டும் வயலின் இசையில் கோபிதாஸ் கொண்டு வந்தது மக்கள் மனதிலேயே

மாறாத இடத்தை பிடித்து விட்டது.




அதைத் தொடர்ந்து மூளாய் வைத்தியசாலையிலே வேலை செய்த திரு வேலுப்பிள்ளை

அவர்களை, 40 ஆண்டுகள் சிட்னி மண்ணிலேயே பல சேவைகளை செய்து

கொண்டிருக்கும் அவர்களை கௌரவிப்பதற்காக அழைத்தார்கள் அவரை

பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள். இது மூளாய் மருத்துவமனை சார்பாக

நிகழ்த்தப்பட்டது. அந்த பொன்னாடையை வைத்திய கலாநிதி கதிர் அவர்கள்

திரு வேலுப்பிள்ளை அவர்களுக்கு போர்த்தி கௌரவத்தை கொடுத்தார்.

அதன் பின்பு திரு வேலுப்பிள்ளை அவர்கள் நன்றி உரையையும் தன்னுடைய நினைவுகளையும் அங்கே தான் பணியாற்றிய போது ஏற்பட்ட சுவாரசியமான விடயங்களையும் குறிப்பிட்டு இருந்தார்.



அதன் பின்பு வர்ஷா அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இருவரும் சேர்ந்து ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் என்று பாட மக்களும் சுகமாக ரசித்துக் கொண்டிருந்தார்கள். அடுத்து என்னை மிகவும் கவர்ந்த ஒரு பாடல் எனக்கு எப்போதுமே என் மனதோடு நெருக்கமாக இருக்கும் ஒரு பாடல் எங்கே எனது கவிதை எழுதி மடித்த கவிதை. அந்த பாடலை கோபிதாஸ் அவர்கள் வயலினிலே கொண்டு வந்த போது நெஞ்சம் எங்கோ பறந்து சென்று எங்கோ வட்டமிட்டது.


இப்படி பல பாடல்கள் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு, ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற

பாடல்கள் எல்லாம் தொடர்ந்து இறுதியாக ஈழம் நாட்டுப்பண் பவதாரணி அவர்களுடைய குரலிலே மிக அற்புதமாக ஒலித்தது. நன்றி உரையோடு அந்த நிகழ்வு மிக இனிதாக முடிவு பெற்றது. மக்கள் நிறைவோடு எழுந்து சென்றார்கள்.





பலர் இந்த வித்தியாசமான முறையிலே அந்த காலத்து நிகழ்வுகளையும் அந்த கவிதைகளையும் மீண்டும் நினைவூட்டியதற்காக மகிழ்ச்சியோடு இந்த அமைப்பாளர்களை பாராட்டி இருந்தார்கள். எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் உணவு பரிமாறப்பட்டது. இந்த நிகழ்வு ராமநாதன் கல்லூரி பழைய மாணவிகளால் கொண்டுவரப்பட்டது அந்த ராமநாதன் கல்லூரிக்காகவும் மூளாய் ஆஸ்பத்திரிக்காகவும் நிதி சேகரிப்புக்காக ஏற்படுத்தப்பட்ட அந்த நிகழ்வில் அவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப மக்கள் நிறைந்திருந்தார்கள் அவர்களுடைய விருப்பம் நிச்சயமாக நிறைவேறி இருக்கும். புலம்பெயர்ந்த மண்ணிலே இருந்து அங்கே மக்களுக்காக இந்த நிதியும் அங்கு சென்று சேரும் என்று மகிழ்வோடு எண்ணிக் கொள்வோம் நல்ல ஒரு நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வந்த திருப்தியோடு நான் பார்த்து ரசித்த விடயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகின்றேன்.

இறுதியாக பத்மஸ்ரீ உங்களுக்கு மிகப்பெரிய சலாம். இசையை ரசிப்பதற்கு உங்கள் SOUND System ஆற்றிய பங்கு அளப்பரியது. கைதேர்ந்த Sound operator. வாழ்த்துக்கள்.
























No comments: