யாழ்ப்பாணம் - காரைக்கால் கப்பல் சேவைக்கு அனுமதி
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று
இலங்கைக்கு மேலுமிரு புதிய விமான சேவைகள்
பெருந்தோட்ட பிரச்சினைகளை தீர்க்க பிரித்தானியாவின் பங்களிப்பும் அவசியம்
கே. அசோக்குமாருக்கு கலாவிபூஷண விருது
யாழ்.- சென்னைக்கு தினமும் விமான சேவை நடத்த திட்டம்
யாழ்ப்பாணம் - காரைக்கால் கப்பல் சேவைக்கு அனுமதி
ஜூன் 10 முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பு
தென்னிந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கு இலங்கையின் ஹேலீஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10ஆம் திகதி முதல் இந்த சேவையை நடத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் - கே.கே.எஸ். இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவையை ஆரம்பிப்பதில் இழுபறி நீடித்து வருகின்றது.
இதன்போது இந்தியத் தரப்பிலிருந்தே அதற்கான அனுமதிகள் இன்னமும் கிடைக்கவில்லையென அறியமுடிகின்றது.
இதேவேளை, பாண்டிச்சேரியிலிருந்து காங்கேசன்துறைக்கான சரக்குக் கப்பல் சேவையை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடத்துவதற்கான அனுமதி ஹேலீஸ் நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று (03) சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெறும்.
இலங்கை - இந்திய தொடர்பாளர் மணவை அசோகனின் ஏற்பாட்டிலும் மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உப தலைவர் சதீஷ்குமார் சிவலிங்கத்தின் தலைமையிலும் தினகரன் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவரின் முன்னிலையிலும் இந்நிகழ்வு நடைபெறும்.
மு.கருணாநிதியின் திருவுருவப்படத்துக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.
இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் எம்.சிறிதர், தி.மு. மாணவர் அணித் தலைவர் எம்.நாகரத்திரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
சிறப்புரையை இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆற்றுவார். வாழ்த்துரைகளை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்து கலாசார முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி.தேவராஜன், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.யோகராஜன் ஆகியோர் வழங்குவார்கள். நன்றி தினகரன்
இலங்கைக்கு மேலுமிரு புதிய விமான சேவைகள்
ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதியளிப்பு
இஸ்ரேல் ஏர்லைன்ஸ் மற்றும் Arkia ஏர்லைன்ஸ் ஆகிய விமான சேவைகளை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
விமான நிறுவனம் பொதுவாக இரண்டு ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் பயணிப்பதால், இதற்கு முன்னர் இலங்கையில் விமான சேவைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆர்க்கியா எயார்லைன்ஸ் இலங்கைக்கு நேரடி விமான சேவையை மேற்கொள்ளும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இஸ்ரேலில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நன்றி தினகரன்
பெருந்தோட்ட பிரச்சினைகளை தீர்க்க பிரித்தானியாவின் பங்களிப்பும் அவசியம்
பிரித்தானிய தூதுவரிடம் அமைச்சர் ஜீவன் கோரிக்கை
மலையக பெருந்தோட்ட சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பு அவசியமென,அமைச்சர் ஜீவன்தொண்ட மான் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் நேற்று (01) அமைச்சர் ஜீவன் தொண்டமானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பிலே, அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்:நாட்டின் நெருக்கடியான காலகட்டத்தில் பிரித்தானியா வழங்கிய ஒத்துழைப்புக்களை மறக்க முடியாது. மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பிரித்தானியாவின் பங்களிப்பு பிரதானம்.
எனவே, இந்த ஒத்துழைப்பை பெற்றுத்தருவது அவசியம்.மலையக மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புக்களை உருவாக்கும் வழிமுறைகள் மற்றும் அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. நன்றி தினகரன்
கே. அசோக்குமாருக்கு கலாவிபூஷண விருது
சங்கவி பிலிம்ஸ் நிறுவனம் வருடாந்தம் வழங்கும் கலாவிபூஷண விருது சங்கவி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் துரைராசா சுரேஷ் முன்னிலையில் தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் நேற்று தினகரன் ஆசிரியர் பீடத்தில் வைத்து தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் செய்தி ஆசிரியர் கே. அசோக்குமாருக்கு வழங்கும்போது பிடிக்கப்பட்ட படம்.
மன்னார், பேசாலை சங்கவி தியேட்டரின் முகாமையாளர் தனாவும் அருகில் காணப்படுகின்றார். நன்றி தினகரன்
யாழ்.- சென்னைக்கு தினமும் விமான சேவை நடத்த திட்டம்
இந்திய தூதுவருடன் அமைச்சர் நிமல் பேச்சு
யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்துக்கும் இந்தியாவுக்குமிடையே வாரத்தில் 7 நாட்களும் விமான சேவையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தற்பொழுது வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே விமான சேவைகள் இடம்பெறுவதாகவும் இதனை வாரத்துக்கு ஏழு நாட்களாக அதிகரிப்பது தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டிருப்பதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவை அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிலையில் யாழ். பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடமிருந்து எதிர்பார்த்திருப்பதாகவும் இதற்கான கடன் வசதி கிடைத்ததும் விமான நிலையத்தின் விஸ்தரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment