மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிக்கு இடமளிக்கலாகாது!

 Thursday, June 1, 2023 - 6:00am



இலங்கையானது பல மதங்களைக் கடைப்பிடித்தொழுகும் பல மொழிகள் பேசும் பல்லின மக்கள் வாழ்ந்து வரும் ஒரு நாடாகும். இன, மத, மொழி ரீயியிலான பல்வகைமையுடன் இந்நாட்டில் ஐக்கியமாகவும் புரிந்துணர்வுடனும் நீண்ட காலமாக மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் மத்தியில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் நீடித்து நிலைத்திருக்கிறது.

பல மதங்களைப் பின்பற்றி பல மொழிகளைப் பேசும் பல்லின மக்கள் வாழும் எந்தவொரு நாட்டுக்கும் நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது. அது நாட்டின் முன்னேற்றத்திற்கும் சுபீட்சத்திற்கும் இன்றியமையாததாகும்.

இந்நாட்டில் பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் மத, இன நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் சில தனிநபர்களும் சில குழுக்களும் திட்டமிட்ட அடிப்படையில் செயற்படுவது தெரியவந்துள்ளது. இது தொடர்பிலான புலனாய்வுத் தகவல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்களையும் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

இந்நிலையில் நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்‌ஷ, 'தாங்கள் விரும்பிய மதமொன்றைப் பின்பற்றி ஒழுகுவதற்கு யாவருக்கும் உரிமை இருக்கின்ற போதிலும் ஏனையவர்களின் மதங்களை அகௌரவப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை. மத நல்லிணக்கத்திற்கு தடை ஏற்படும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக விழுமியங்களைக் கடைப்பிடிக்கும் ஒரு நாடாகும். இந்நாட்டில் வாழும் எவரும் அவரவர் விரும்பிய மதத்தைப் பின்பற்ற முடியும். அதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது. அதனை இந்நாட்டு அரசியலமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அத்தோடு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரமும் இந்த அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதோடு அந்த சுதந்திரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தைப் பயன்படுத்தி இன, மத நல்லிணக்கத்திற்கும் ஐக்கியத்திற்கும் குந்தகமும் பாதிப்பும் ஏற்படுத்தவோ அவற்றை சீர்குலைக்கவோ முடியாது. அதற்கு அரசியலமைப்பு இடமளிக்கவில்லை.

அதேநேரம் இந்த உரிமைகளைப் பயன்படுத்தி மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். அதற்கு வழங்கப்படக்கூடிய தண்டனை தொடர்பில் தண்டனைச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக வெறுப்பூட்டும் கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்க முடியும் என சட்ட ஏற்பாடுகள் உள்ளன.

இந்நிலையில் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ, 'வேறு ஒருவர் பின்பற்றி ஒழுகும் மதத்திற்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம் என்றும் மதங்களுக்கு அகௌரவம், பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம்' என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் ஊடாக மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படுத்தும் செயற்பாடு எவ்வளவு பாரதூரமான குற்றச்செயல் என்பது தெளிவாகிறது. அதனால் அமைச்சரின் இவ்வேண்டுகோளை மதித்து செயற்படுவது ஒவ்வொருவதும் பொறுப்பாகும். அதுவே சட்டம் ஒழுங்கைப் பேணி நடப்பவர்களின் பண்பு.

அதேநேரம் வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன, 'மக்கள் மத்தியில் இன, மத ரீதியில் பிளவுகளை ஏற்படுத்தி அமைதியையும் சமாதானத்தையும் சீர்குலைப்பதற்கு அரசாங்கம் இனியொரு போதும் இடமளிக்காது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் முன்னேற்பாடாகவே நீதியமைச்சரதும் ஊடக அமைச்சரும் கூற்றுக்கள் விளங்குவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான செயலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டம் பாயத் தயாராவதும் தெளிவாகிறது.

ஜனநாயகப் பாரம்பரியங்களைப் பின்பற்றும் நாடு என்றாலும் பல மதங்களைப் பின்பற்றும் பல மொழிகள் பேசும் பல்லின மக்கள் வாழும் நாடு என்பதை எவரும் மறந்து செயற்படலாகாது. அத்தோடு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரங்கள் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்பட்டுள்ள போதிலும் வேறு ஒருவரின் மதத்தை அகௌரவப்படுத்த இடமளிக்கப்படவில்லை.

அதனால் நாட்டில் நிலவும் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து அற்பநலன்களை அடைந்து கொள்வதற்கு சில தனிநபர்களும் சில குழுக்களும் முயற்சி செய்வது தெரிகின்றது. இக்குழுக்கள் மற்றும் நபர்கள் குறித்து விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம்.

ஆகவே மதநல்லிணக்கத்தைப் பேணி மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அது நாட்டின் முன்னேற்றத்திற்கும் மறுமலர்ச்சிக்கும் பாரிய அடித்தளமாக இருக்கும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.   நன்றி தினகரன் 

No comments: