இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்.... கிறிஸ்டி நல்லரெத்தினம்


சார்லிக்கு இன்று என் மீது கோபம். அவன் தட்டில் வைத்த எதையும் இன்று சாப்பிடவில்லை. தினமும் நான் கொடுக்கும் அந்த உலர்ந்த கொடிமுந்திரியைக்கூட தொடவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அதுதான் அவன் 'பேஃவரிட்'.....அதைக்கூட.....

 காலையில் இருந்து "உர்ர்ர்.....உர்ர்ர்" என்று ஏதோ விசித்திர சத்தம் வேறு எழுப்பிக்கொண்டேயிருந்தான்.

காலையில் எழுந்ததுமே சார்லிக்கு அருகில் சென்று "ஹலோ சார்லி"


என்பேன். பதிலுக்கு "ஹலோ" என்றுவிட்டு கூட்டின் வாசலுக்கு அருகில் வந்து அமர்ந்துகொள்வான். கூட்டின் கதவுகளை அகலத் திறந்து, ஒரு தொட்டில் இருந்து மழலையை தூக்கும் தாயின் கவனத்துடன், மிகப் பவ்வியமாக சார்லியை என் விரல்கள் மூடிக்கொள்ளும். அவனின் பஞ்சுபோன்ற மிருதுவான இறகுகள் என் விரல்களுக்கு ஒரு இதமான மென்மையை அறிமுகப்படுத்தும். என் பெருவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையே உருவாகும் அந்த இடைவெளியில் அவன் தலையை வெளித்தள்ளி குறுகுறுவென தலையை பல கோணங்களில் திருப்பி ஒரு புதிய உலகைக் கண்டுகொண்ட ஒரு மாலுமியின் வியப்புமிகுந்த கண்டடைதல் அங்கு நடந்தேறும். என் விரல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மெதுவாய் என் கை வழி ஏறி தோளில் அமர்ந்து கொண்டு என் காதின் ஓரங்களை தன் கூரிய அலகுகளால் கவ்வி விடுவிப்பான். இந்த சீண்டல் பல நிமிடங்களுக்கு நடந்தேறும். எஜமானுக்கு வலி ஏற்படுத்தாத 'செல்லச் சீண்டல்' அது. அவனது அன்பின் அடர்த்தியின் அளவுகோல் அது. எல்லைகள் மீறும் போது "சார்லி!!" என நான் எழுப்பும் அழுத்தமான குரலை புரிந்துகொள்ளும் உணர்தல் அவனுக்கு எப்போதும் உண்டு. அவன் உடனே எனது காதை விடுவித்து தன் கால்களை பின்வாங்கி கழுத்தில் இருந்து பின் நகர்ந்து தோளின் ஓரத்தில் அமர்ந்து தன் கழுத்தைத் திருப்பி 'கோபமா?' எனும் பாணியில் என்னை நோக்கி என் அடுத்த கட்டளைக்கு காத்து நிற்பான்.

"வட்ஸ் றோங் வித் யூ?" எனும் என் சொற்களை அவன் புரிந்து கொண்டதாய் எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அப்படி கடிந்து கொண்டதில் எனக்கு ஒரு திருப்தி. ஒரு எஜமானுக்குரிய அதிகாரத்தை உரிய நேரத்தில் பாவித்துவிட்டதால் பிறந்த திருப்தி அது. புறக்கணிக்கப்பட்ட அத்துமீறல்கள் அங்கீகரிக்கப்பட்ட அத்துமீறல்களாய் மாறிவிடக்கூடாது என்பதில் எனக்கு இருந்த கவனம் பற்றி சார்லிக்கு அக்கறையில்லை.

சார்லிக்கு இறகுகளை மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது கத்தரித்து குட்டையாக்கிவிடுவதனால் அவனால் அதிக தூரம் பறக்க முடியாது. வீட்டினுள்ளேயே ஒரு சுற்று பறந்துவிட்டு தன் கூட்டின் மேல் வந்து அமர்ந்து விடுவான். இந்த ஹால் தான் அவன் உலகம். அவனுக்கு உண்ண உணவும் இருக்க இடமும் அமைத்துக்கொடுத்த என்னால் அவனுக்கு வேண்டிய சுதந்திரத்தை மறுக்கவேண்டியதாயிற்கு. நான் மட்டுமா கொடியவன்? மானுடனை மகிழ்விக்க வளர்க்கப்படும் எல்லாப் பிராணிகளும் தம் சுதந்திரத்தை இழந்துதானே வாழ்ந்தாகவேண்டும். சுதந்திர வாழ்க்கையே ருசிக்காமல் வாழ்ந்து மடியும் இந்த ஜீவன்கள் தாம் இழந்தது என்னவென்றே உணரமல் வாழ்ந்து மறைவதுதான் அதிலும் கொடுமை!

சார்லிக்கு அந்த சுதந்திர வாழ்க்கையென்றால் என்னவென்று நிச்சயம் தெரிந்திருக்கும். கூட்டினுள் இருந்துகொண்டே ஜன்னல் கண்ணாடியூடாக வெளியே வேலியில் வந்தமரும் புறாக்களையும், காகங்களையும் சார்லி நிச்சயம் பார்த்திருக்கிறான். அவற்றை கண்டவுடன் விசித்திரமான ஒலிகளை எழுப்பிக் கொண்டே கூட்டினுள் பறந்து உள்ளே அவன் விளையாடுவதற்காக கட்டியிருந்த சிறிய வெள்ளி மணியை கொத்தி ஓசை எழுப்புவான். அல்லது உள்ளே தொங்கும் ஓலையால் பின்னிய மீன் வடிவ அலங்காரத்தை கொத்தி சின்னாபின்னப்படுத்துவான். அவனது விடுதலைப் புரட்சியின் வீரியத்தின் எல்லைகள் இவ்வளவே. வெளியே வந்தமர்ந்த பறவைகள் இது பற்றி அலட்டிக் கொள்ளாமல் தம் சிறகுகளை விரித்து அவற்றை சுத்தம் செய்து, ஓடுபாதையில் தரித்திருக்கும் விமானத்தைப் போல், அடுத்த பயணத்திற்கான ஆயுத்தங்களை செய்துகொண்டிருக்கும். ஜோடியாய் வந்தமர்ந்த கிளிகள் ஒன்றையொன்று கொஞ்சிக் கொண்டே தம்மை சுத்தம் செய்வதில் கண்ணாயிருக்கும். பரந்த வானமே அவைகளுக்கு எல்லை. விண்ணைக் கிழித்து உயரப்பறந்து வீட்டின் கூரைகள் தாண்டி எங்கும் போவோம் எனும் சுதந்திரத்தை சுவைக்கும் காட்டுப்பறவைகள் அல்லவா அவை!

திருமணமான புதிதில் ராதிகா வேண்டும் என்று கேட்டதால் வாங்கிய கிளிதான் சார்லி. இதற்கு சார்லி என்று பெயர் சூட்டியதே ராதிகாதான். சார்லி தென் அமெரிக்க காடுகளில் வாழும் மஞ்சள் நிறம் கலந்த சென்நிற மார்புள்ள பச்சைக் கிழி வர்க்கத்தைச் சேர்ந்தது.

 காலையில் எழுந்ததும் "ஹலோ சார்லி.....குட் மோர்னிங் சார்லி" எனும் ராதிகாவின் அழைப்புகளை முதலில் அலட்சியம் செய்த சார்லி நாளடைவில் "ஹலோ" எனும் பதத்தை மட்டும் கற்றுக்கொண்டான். பாதி வெற்றி கண்டதில் ராதிகாவிற்கு ஒரே குதுாகலம்!

சார்லியின் கூடு பெரியது. அவன் பார்வையில் அது அவனின் 'வன் ரூம் எப்பாட்மென்ட்''. மேல்தட்டில் அவனுக்கு வேண்டிய எல்லா விளையாட்டுப்பொருட்களும் தொங்கும். எல்லாம் பனை ஓலையிலும் முற்றிக் காய்ந்த அறுகம் புல்லை திரித்து செய்தவை. பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கப்பட்டன. அவை அவன் மெல்லிய அலகுகளை சிதைத்துவிடும் என்பதால் இந்த ஏற்பாடு.

கீழ் தட்டில் தொங்கும் ஒரு சிறு கிண்ணத்தில் சார்லிக்கு வேண்டிய தானியங்களும் மறு கிண்ணத்தில் பழவகைகளும் காய்கறிகளும் நறுக்கி வைக்கப்படும். குடிநீர் வைக்க மூன்றாம் கிண்ணம். அங்கு குறுக்கே போடப்பட்டிருக்கும் ஒரு மரப்பாலம்தான் சார்லியின் மலசலகூடம். இந்த இடபேதங்கள் சார்லிக்கு நன்கு புரிந்தவை.

என் தோளில் ஐந்து நிமிடங்கள் அமர்ந்த பின் அவனைத் தூக்கி இந்த மரப்பாலத்தில் வைத்த உடனே தனது "கடன்களை" சட்டென முடித்து விட்டு அடுத்த உலாவிற்கு ரெடியாகிவிடுவான். ஒவ்வொரு ஐந்து, பத்து நிமிடத்திற்கு ஒருமுறை வெளியேற்றாவிட்டால் என் தோள் தான் அவன் கழிப்பிடம். நேரம் தப்பினால் என் தோளில் கழித்துவிட்டு "சொன்னேனோ இல்லையோ" என்பதைப்போல் என்னை பார்த்த நாட்களும் உண்டு.

சார்லி எங்கள் வீட்டிற்கு வந்த புதிதில் இருந்ததோ வேறு ஒரு கூடு. பெரிய விசாலமான ஒன்று அது. ஒரு மாதமாவது அதில் இருந்திருப்பான். ஆனால் சார்லியின் போக்கு அப்போது இன்று போல் இல்லை. எப்போதும் கூச்சலிடுவான். என்னையும் ராதிகாவையும் கண்டால் மருண்டு ஒரு எதிரியை கண்ட பாவனையில் போருக்கு தயாராகும் ஸ்பாட்டனைப்போல் எம்மை தாக்க தயார் நிலையில் இருப்பான். ஏன் இந்த ஆரேக்ஷம்?

புரியவில்லை.

ராகவன்தான் எங்களுக்கு ஒரு இரட்சிப்பு தேவதையாய் ஒரு தீர்வை சொல்லிவைத்தான்.

என்னுடன் கல்லூரியில் படித்த ராகவன் மிருக வைத்தியத்துறையில் பயின்று அதிலும் பறவைகள் பிரிவில் சிறப்பு தேர்ச்சி வேறு பெற்று கண்டியில் பிறைவேற் கிளினிக் வைத்து நடத்துகிறான். 'காப்பாற்று நண்பா' என்று காலில் விழ இவனை விட வேறு யார் இருக்க முடியும்?

சார்லியின் இந்த 'சங்கே முழங்கு' போர் மனப்பான்மைக்கு தீர்வைக்காண எனது முதல் போன் அழைப்பிலேயே அழுது வடிந்தேன்.

" மஸ்ட் சீ பெஃலோ......நான் பார்க்காம ஒண்ணுமே சொல்லமுடியாது .....அடுத்த வாரம் வீட்டுக்கு வரட்டுமா?.....ஒரு வாரம் உன்னால உயிர் வாழ முடியுமா?"

"எஸ்... எஸ்....ப்ளீஸ் கம் ராகவா.....காத்திருப்பேன் நண்பா."

 சார்லி வீட்டிற்கு வந்த நாள் முதல் சமையல் கட்டிலும் மாற்றங்கள் செய்யவேண்டியதாயிற்று. சார்லியை எமக்கு விற்றவனே எமக்கு சில விதிமுறைகளை சொல்லிவைத்தான். நாங்கள் இருந்த இரண்டு அறை 'டவுன் ஹவுஸ்' என்பதால் ஹாலை அடுத்து இருந்த "டானா' போன்று நீண்ட பகுதிதான் சமையலறை. சார்லியின் கூடு இருந்த இடத்தில் இருந்து அதிக தூரமில்லை. எனவே எண்ணைப் புகை, மற்றும் ராதிகா தாளித்து சமைக்கும் போது எழும்பும் அந்த காரமான கடுகு, வெள்ளைப்பூடு மணம் போன்றவை சார்லியின் மென்மையான சுவாச இழையங்களுக்கு கேடு என்று சொல்லிவிட்டான். இனியென்ன.....வீட்டில் தாளிப்பும் அவுட்!

"சார்லி இல்லேண்ணா விதம்விதமா கடுகு சீரகம் எல்லாம் போட்டு சமைச்சு தருவேனோ இல்லையோ டார்லிங்" எனும் ராதிகாவின் கொஞ்சலுக்கு இது நிச்சயம் வழிவகுத்தது என்பது என்னவோ உண்மை!

அடுத்த வாரமே ராகவன், சொன்னதுபோல், ஒரு ஞாயிறு மாலையில் கையில் ஒரு சிறு பழக்கூடையுடன் விஜயம் செய்யத் தவறவில்லை. ஒரு பச்சைநிற டீ சேர்ட்டில் ஒரு மிருக வைத்தியன் என்ற அடையாளங்கள் எதுவும் இன்றி கல்லூரி மாணவனைப்போல் தோன்றிய ராகவன்..... நலம் விசாரிப்பு, மூன்று கப் காப்பி, சிறு சுயசரிதை பரிமாற்றங்களின் பின்.....

" ஓகே, லெட் மி சீ மை பேஷண்ட்" என்றபடி சார்லியின் கூட்டைத் திறந்து மெதுவாக அவனை கைகளில் கிடத்தி அவன் சிறகுகளை விரித்து பரிசோதித்து பின் அவன் கால், அலகு போன்றவற்றையும் உன்னிப்பாக நோக்கிவிட்டு மீண்டும் சார்லியை கூட்டினுள் விடுவித்தான் ராகவன்.

ராதிகாவும் நானும் ஆப்பரேஷன் தியேட்டரின் முன் கவலை மிகுந்த ஆவலுடன் டாக்டரின் அந்த வார்த்தைக்காய் காவல் நிற்கும் சினிமா அம்மாக்களைப் போல் ராகவனின் முகத்தை நோக்குகிறோம்.

"பயப்படறதற்கு ஒன்றும் இல்லை மை டியர் பிஃரண்ட்......ஹி இஸ் ஓகே!"

"அப்படினா? ஏன் இந்த சத்தம்... ஆர்பாட்டம்...என்னையும் ராதிகாவையும் ஒரு எதிரி மாதிரி?"

 ராவகன் சிரித்தபடி "பிழை சார்லியுடையது இல்லவே இல்லை.....இட் இஸ் யூ பீப்பிள்....உங்க தவறு நண்பனே."

"எங்க தவறா?" ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறோம்.

"எஸ்....ஜஸ்ட் லுக்... சார்லியின் கூட்டில் அவன் உட்காரும் அந்த தடி பாருங்க."

இருவரும் கூட்டைப் பார்க்கிறோம்.

எந்த தடியை ராவகன் சொல்கிறான் என்று எமக்கு புரியவில்லை.

"திஸ் வண்..... உயரத்தில் கூட்டின் குறுக்காய் போகிறதே.....தட் ஸ்டிக்."

".....ஆம் அதை ராதிகா 'சர்லியின் சிம்மாசனம்' என்று கேலியாக சொல்வாள். அவனுக்கு பிடித்த உயரமான இடம் அது.....அதில் இருந்து கொண்டுதான் எங்கள் மீது வசைபாடுவான். ஹிஸ் பேஃவறிட் பிளேஸ்."

"ஏன் சார்லியின் 'பேஃவறிட் பிளேஸ்' அது என்று சொல்லட்டுமா?....பறவைகளுக்கு பொதுவாக தமது ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் காண்பிக்கும் பரிமாணங்களில் ஒன்றுதான் உயரம். தான் ஒரு உயரமான இடத்திலோ அல்லது மரத்திலோ அமரும்போது மற்ற பறவைகளை விட, ஏன் மற்ற அனைத்து உயிரினங்களை விட, உயர் ஸ்தானத்தில் இருப்பதாய் தான் எண்ணிக்கொள்ளும். பருந்தும், ராஜாளியும் கூட ஒரு காட்டில் உள்ள மிகவும் உயர்ந்த மரத்தின் உச்சிக் கிளையில் அமர்ந்து கொள்ளும். இது அதற்கு ஒரு திடநம்பிக்கையும் ஒரு வீராப்பையும், எதையும் 'நீ ஒரு பதர்' அப்படீங்கிற நோக்கில் பார்க்கும் கர்வமனப்பான்மையையும் அளிக்கும்."

"புரிகிறது ராவகா....ஆனால் அதற்கும் சார்லியின் இந்த 'ராஜபாட்' நடத்தைக்கும் சம்மந்தம்?"

" இருக்கு மை டியர் பிஃரண்ட்.....ஜஸ்ட் லுக் அட் ஹிஸ் கேஜ்......சார்லியின் கூட்டைப் பார்.... உயரத்தைப் பார்....உங்கள் இருவரின் உயரத்தை விட கூடு உயரமோ இல்லையோ? சார்லி தன், வேஃவரிட் ஸ்போட் என்று நீங்கள் இருவரும் சொன்ன இடத்தில் அமர்ந்து உங்களை அதிகாரம் செய்கிறான். அவன் தன்னை ஒரு கிளியாக அல்ல, ஒரு பருந்தாகவே பார்க்கிறான். அவ்வளவே.....அவனை அந்த இடத்தில் வைத்ததே நீங்கள்தான். உங்க கம்பெனி சீ.. உங்க ஆபீஸ்ல மொட்டை மாடியில் இருந்து அதிகாரம் செய்கிறாரோ இல்லியோ? அதுவே இது!"

"! புரிகிறது ராகவா, சார்லியை நாங்கள்தான் ஒரு உயர்ஸ்தானத்தில் வைத்து அவனுக்கு அந்த தலைக்கனத்தை அறிமுகப்படுத்திவிட்டோம். தன்னுள் மறைந்திருந்த இந்த அதிகார பலத்தை எம்மீது பாவிக்க நினைத்ததால் வந்த வினை இது என்பதை உணரத்தவறி விட்டோம்.

தங்யூ மை ஃபிரண்ட். உயிர் காப்பான் தோழன்னு சும்மா சொல்லலியே!

சரி, சார்லியின் இந்த நடத்தைக்கு காரணத்தை கண்டுபிடித்தாயிற்று. தீர்வையும் சொல்லுங்கள் மந்திரியாரே!"

"இதற்கு ஒரே தீர்வு : சார்லியின் கூட்டின் உயரத்தை குறைத்தாகவேண்டும். வேறு கூடு வாங்க வேண்டிய அவசியமில்லை. இந்தக் கூட்டின் உயரத்தையே அட்ஜெஸ்ட் செய்து விடு. ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள், உங்கள் இருவரின் உயரத்திற்கு கீழ்தான் சார்லியின் 'சிம்மாசனம்' இருக்க வேண்டும். நீங்கள்தான் எஜமான்'......நொட் சார்லி....புரிகிறதா மை ஃபிரெண்ட் ?"

"ஒரு உயிரினத்தின் நடத்தையில் அதன் பரிமாணம் எத்தனை முக்கிய பங்கை வசிக்கிறது என்பதை புரியாமல் இருந்துவிட்டோம் ராவகா. சார்லியை நாம் அது இயற்கையாய் வளர்ந்த சுற்றாடல் இருந்து தனிமைப்படுத்திவிட்டாலும் அதன் உள்மனதில் உறங்கிக் கொண்டிருந்த சமூக அடுக்கின் பரிமாணங்களைப் பற்றி மறந்துவிட்டோம். நாமே சார்லியை சிம்மாசனத்தில் அமர்த்திவிட்டு எமக்கு அவன் அடிபணிய வேண்டும் என எதிர்பார்த்தது எத்தனை மூடத்தனம்? பறவைகளுக்கும் மனேதத்துவ ரீதியான அணுகுமுறை தேவை என்பதை உணர்த்தி விட்டாய் நண்பா!"

 "பரிமாணங்கள் பறவைகளுக்கு மட்டுமல்ல......மனிதர்களையும் நாம் உயர் ஸ்தானத்தில் வைத்து பூஜிக்கும்போது அவர்கள் தம்மை மறந்து எம்மை ஆழ நினைப்பதை நாம் கண்முன்னே காண்கிறோமே" என்ற ராகவனின் வார்த்தைகள்தான் எத்தனை உண்மையானவை!

 அவன் வார்த்தைகளை அங்கீகரிப்பதைப்போல் அடுத்த அபார்ட்மெண்டில் இருந்த வானொலி அந்த மாலையின் அமைதியை கலைத்தது.....

"இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே....."

  

முற்றும்

No comments: