Saturday, June 3, 2023 - 12:36pm
- ஒரு விபத்து இடம்பெற்று சற்று நேரத்தில் மற்றொரு பாரிய விபத்து
- 650 பேர் வரை காயம்; மீட்புப் பணிகள் தொடர்வு
- இந்தியாவின் ஒடிசாவிலுள்ள பாலசோரில் சம்பவம்
- தமிழ் நாட்டில் ஒருநாள் துக்கம் அனுஷ்டிப்பு
இந்தியாவின் ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் புகையிரதங்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளது.
இவ்விபத்தில் சுமார் 650 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹவுரா - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய புகையிரதங்கள் மோதிக் கொண்ட இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்தில் தொடர்ச்சியான மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இதனால், அந்த பாதையில் செல்லும் சென்னை - ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட புகையிரத சேவைகள் ஸ்தம்பிதமடைத்துள்ளன.
விபத்தில் 238 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 650 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தென்கிழக்கு ரயில்வே உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.
அதன்படி, காயமடைந்தவர்கள் பாலசோர், கோபால்பூர், காந்தபாரா, சோரோ, பாத்ரக் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சனக் கூட்டம்
விபத்து நடந்த இடத்தில் 200 இற்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் 50 பேருந்துகள் நிறுத்தப்பட்டு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தடம் புரண்ட பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலசோர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை மையத்திற்கு வெளியே மக்கள் கூடியுள்ளனர்.
விபத்து நேர்ந்தது எவ்வாறு?
ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் புகையிரதம், பாலசோர் அருகே பஹானாகா பஜார் ஸ்டேஷன் என்ற இடத்தில் சரக்கு புகையிரதம் ஒன்றின் மீது மோதியதில் அதன் சில பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இந்த பெட்டிகளை புகையிரத ஊழியர்கள் மீட்டு அருகே இருந்த தண்டவாளத்தில் நிறுத்திவைத்துள்ளனர்.
இந்நிலையில், அந்த தண்டவாளத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் வந்த நிலையில் இந்த பேராபத்து இடம்பெற்றுள்ளது.
தமிழ் நாட்டில் ஒரு நாள் துக்கம் அனுஷ்டிப்பு
ஒடிஷா புகையிரத விபத்தில் உயிரிழந்தவர்களுககு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாட்டில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவரது இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், செம்மொழிப் பூங்கா மலர்க் கண்காட்சிக்கு முதல் அமைச்சர் செல்லும் நிகழ்ச்சி இரத்தாகியுள்ளது.
பாலசோர் புகையிரத விபத்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை சென்னையில் மாநில அவசர நிலை நடவடிக்கை மையத்தில் இருந்த படி கண்காணித்து வருகின்றனர்.
அங்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாலசோர் நிலவரத்தை கேட்டறிந்தார்.
விபத்திற்குள்ளான ஹவுரா - சென்னை கோரமண்டல்ஸ் எக்ஸ்பிரஸ் புகையிரதத்தில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் எத்தனை? அவர்களது தற்போதைய நிலை என்ன? அத்தனை பேரின் தற்போதைய நிலவரம் என்ன? பாதுகாப்பாக இருக்கிறார்களா? அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்து தரப்பட்டுள்ளனவா? என்பது குறித்து அவர் கேட்டறிந்தார்.
நேரில் கண்டவர்கள் தெரிவித்த விடயங்கள்
"விபத்து நடந்தபோது 10 முதல் 15 பேர் என் மீது விழுந்தனர். பெருங்குழப்பமாக இருந்தது. நான் மனிதக் குவியலின் அடிப்பகுதியில் இருந்தேன்” என விபத்தில் தப்பிய ஒருவர் தெரிவித்துள்ளார்.
"எனக்கு கையிலும் கழுத்தின் பின்புறத்திலும் காயம் ஏற்பட்டது. நான் ரயில் போகியில் இருந்து வெளியே வந்தபோது, யாரோ ஒருவர் கையை இழந்திருப்பதையும், ஒருவரின் காலை இழந்ததையும், ஒருவரின் முகம் சிதைந்திருப்பதையும் பார்த்தேன்," என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்துள்ளார்.
நேரில் பார்த்த மற்றொருவர், "யாருக்கும் கை இல்லை. யாருக்கும் கால் இல்லை. எல்லோரும் இப்படியே கிடக்கிறார்கள். விபத்து நடந்தபோது யாரும் இல்லை. பயணிகள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவினார்கள். எல்லோரும் பயந்தார்கள். அப்போது யாரை காப்பாற்றுவது என புத்தி கூட வேலை செய்யவில்லை.”
2 வயதுக் குழந்தை உயிருடன் மீட்பு
“எங்கள் இருக்கைக்கு அடியில் இரண்டு வயது குழந்தை உயிருடன் இருந்தது. உயிர் பிழைத்துக் கொண்டது.” என்று மற்றொருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணியில் இராணுவம்
விபத்துக்குள்ளான புகையிரதங்களில் இருந்து உயிருடன் மீண்டவர்களை மீட்கும் பணியிலும், காயமடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியிலும் அந்நாட்டு இராணுவம் உள்ளிட்ட மீட்புப் பணியினர் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் சம்பவ இடத்திற்கு
விபத்து நடந்த இடத்திற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் சென்றுள்ளார். அத்துடன், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளையும் அறிவித்துள்ளார்.
அனுதபாம் தெரிவிப்பு
இவ்விபத்து தொடர்பில் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உயர் மட்ட ஆலோசனை
இப்புகையிரத விபத்து தொடர்பாக பிரதமர் மோடி உயர் மட்ட அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்ற அந்த கூட்டத்தில், விபத்து நேரிட்ட இடத்தில் தற்போதைய நிலவரம், மீட்பு மற்றும் நிவரணப் பணிகளின் நிலை போன்றவை குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நன்றி தினகரன்
No comments:
Post a Comment