உலகச் செய்திகள்

 கடன் உச்ச வரம்பை அதிகரிக்க செனட் சபையில் ஆதரவு வாக்கு

ரஷ்ய தலைநகர் மீது மிகப்பெரும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்

சீன முதல் பயணி விமானம் பறந்தது

சுவீடன் கடலில் தோன்றிய ரஷ்ய உளவு திமிங்கிலம்

துருக்கி ஜனாதிபதி எர்துவான் மேலும் 5 ஆண்டுகள் ஆட்சிக்கு வெற்றி


 கடன் உச்ச வரம்பை அதிகரிக்க செனட் சபையில் ஆதரவு வாக்கு

அமெரிக்காவில் கடன் உச்ச வரம்பை அதிகரிக்க அந்நாட்டு செனட் சபையில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இரு தரப்பு உடன்படிக்கை எட்டப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் கையொப்பத்திற்கு செல்வதற்கான கடைசி தடையையும் இந்த சட்டமூலம் தாண்டியுள்ளது.

வரும் ஜூன் 5 ஆம் திகதி உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்கா கடனை திருப்பிச் செலுத்தாத நிலைக்கு தள்ளப்படுவதை தவிர்க்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த சட்டமூலத்தில் கைச்சாத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பைடனின் ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினருக்கு இடையே இழுபறியை தீர்ப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் இந்த சட்டமூலம் செனட் சபையில் 63–36 என்ற வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இது பிரதிநிதிகள் அவையில் கடந்த புதனன்று (31) நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டினதும் நாட்டின் பொருளாதாரத்தினதும் மிகப்பெரிய வெற்றி என்று பைடன் இதனை வரவேற்றுள்ளார். இந்த சட்டமூலத்திற்கு விரைவில் கையொப்பம் இடப்போவதாக கடந்த வியாழக்கிழமை (01) குறிப்பிட்டார்.

தற்போது அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பு 31.4 பில்லியன் டொலர்களாக உள்ளது. அதை உயர்த்தித் திருத்துவதற்கு இந்த சட்டமூலம் வழிவகுக்கும்.

இந்த சட்டத்தின்படி, 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி வரை அமெரிக்க அரசாங்க கடன் உச்சவரம்பை நீக்குகிறது.

இந்தப் பிரச்சினை இனி 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்தான் மீண்டும் தலைதூக்கும்.

அத்துடன், இது அடுத்த இரண்டாண்டுகளுக்கு அரசாங்க செலவினத்தைக் குறைத்து, சில தேவையான எரிசக்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு அளித்து, கொவிட் தொற்றுக்கான நிதி ஓதுக்கீட்டில் பயன்படுத்தப்படாத நிதியை திரும்பப்பெற அனுமதி அளித்து, உணவு உதவித் திட்டத்தின் கீழ் உதவி பெற எண்ணுவோர் தங்கள் வேலை தொடர்பாக சில தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற இரு கட்சி இணக்கத்தின் பேரில் இந்தச் சட்டம் வரையப்பட்டுள்ளது.

கடன் உச்சவரம்பை உயர்த்தும் சட்டமூலம் சட்டமானால் நிதி நெருக்கடியில் உள்ள அமெரிக்க அரசின் சுமைகள் குறைக்கப்படும் என்றும், இதன் மூலம் அடிப்படை திட்டங்களை அரசு விரிவுப்படுத்தும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.   நன்றி தினகரன் 





ரஷ்ய தலைநகர் மீது மிகப்பெரும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்

உக்ரைன் மீது குற்றச்சாட்டு

ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது உக்ரைன் ஆளில்லா விமானம் மூலம் நேற்று (30) காலை தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது தொடக்கம் ரஷ்ய தலைநகரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது இது முதல் முறையாகும்.

குறைந்தது எட்டு ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி இருப்பதாகவும் பல கட்டடங்களுக்கு சிறு சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் எவருக்கும் மோசமான காயங்கள் ஏற்படவில்லை என்று மொஸ்கோ மேயர் செர்கெய் சொபியானின் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை நடத்தியதாக குற்றம்சாட்டப்படுவதை உக்ரைன் மறுத்துள்ளது.

இதில் உக்ரைனுக்கு நேரடித் தொடர்பு இல்லை, ஆனால் இந்த நிகழ்வை பார்த்து மகிழ்ந்ததாகவும் இது போன்ற சம்பவங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் உக்ரைனிய ஜனாதிபதியின் உதவியாளர் மிகைலோ பொடொல்யாக் தெரிவித்துள்ளார்.

இந்த எட்டு ஆளில்லா விமானங்களும் இடைமறிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

“அவைகளில் மூன்று மின்னணு போர் முறை மூலம் ஒடுக்கப்பட்டு இலக்கில் இருந்து நீக்கப்பட்டன. மேலும் ஐந்து ஆளில்லா விமானங்கள் மொஸ்கோ பிராந்தியத்தில் உள்ள நிலத்தில் இருந்து வானைத் தாக்கும் பான்ட்சிர் எஸ் ஏவுகணை முறை மூலம் சுட்டுவீழ்த்தப்பட்டன” என்று அமைச்சு தெரிவித்தது.

இதில் 30 ஆளில்லா விமானங்கள் தொடர்புபட்டிருந்ததாக ரஷ்ய ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன. வீழ்த்தப்பட்ட அவை கட்டடங்கள் மீது விழுந்ததாக கூறப்பட்டது.

முதலில் மக்கள் குறித்த பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் பின்னர் அவர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்று மொஸ்கோ மேயர் தெரிவித்தார். இருவர் மருத்துவ உதவியை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உக்ரைனியத் தலைநகர் கீவ் மீது கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற சரமாரி ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்தே மொஸ்கோ மீதான தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அந்தத் தாக்குதல்களில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார்.

இருபதுக்கு மேற்பட்ட ஆளில்லா விமானங்களை உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்த நிலையில் விமானப்பாகங்கள் கட்டடம் ஒன்றின் மீது விழுந்து தீப்பற்றியதாக உக்ரைனிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கீவ் மீதான ரஷ்யாவின் உக்கிர ஏவுகணை தாக்குதல்களுக்கு கடுமையான பதில் கொடுக்கப்படும் என்று உக்ரைனிய இராணுவ உளவுப் பிரிவு தலைவர் ஜெனரல் கிரிலோ புடனோவ் எச்சரித்திருந்தார்.

உக்ரைனில் போர் தீவிரம் அடைந்திருந்தபோதும் தற்போது வரை ரஷ்ய தலைநகரில் அமைதிச் சூழலே நிலவி வந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





சீன முதல் பயணி விமானம் பறந்தது

சீனாவில் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம் அதன் முதல் பயணத்தை நேற்று காலை (28) மேற்கொண்டது.

சி919 விமானம் ஷங்ஹாயிலிருந்து பீஜிங்கிற்கு வெற்றிகரமாகப் பறந்ததைச் சீனாவின் அரசாங்கத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. விமானத்தில் 130க்கும் அதிகமான பயணிகள் சுமார் 3 மணிநேரம் பயணம் செய்தனர். அது மீண்டும் பீஜிங்கிற்கு திரும்பியது.

சைனா ஈஸ்ட் விமான நிறுவனம் மேற்படி நிறுவனத்திடமிருந்து 5 விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது.சீனாவின் வர்த்தக விமான கூட்டு நிறுவனம் 164 இருக்கைகள் கொண்ட விமானத்தைக் கட்டியது. ஏர்பஸ், போயிங் நிறுவனங்கள் ஒற்றை நடைபாதையைக் கொண்ட விமானங்களைக் கட்டுவதில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதை உடைக்க சீனா முயற்சிக்கிறது.

சி919 விமானத்தை வாங்குவதற்குத் தற்போது 1,200க்கும் அதிகமான முன்பதிவுகள் உள்ளதாக அது தெரிவித்தது.





சுவீடன் கடலில் தோன்றிய ரஷ்ய உளவு திமிங்கிலம்

ரஷ்யாவால் உளவு பார்க்க பயிற்சி அளிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சேணம் பொருத்தப்பட்ட பெலுகா வகை திமிங்கிலம் சுவீடன் கடற்கரைக்கு அப்பால் மீண்டும் தோன்றியுள்ளது.

இந்த திமிங்கிலம் நோர்வே நாட்டில் தோன்றி அங்கு எச்சரிக்கை அதிகரிக்கபட்ட நிலையில் உளவு பார்க்கும் சாத்தியம் கொண்ட இந்தத் திமிங்கிலத்தை தவிர்க்கும்படி மக்கள் எச்சரிக்கப்பட்டனர்.

இந்தத் திமிங்கிலம் தனது உடலில் உளவு பார்க்கும் கருவிகளை பொருத்திய நிலையில் 2019 ஆம் ஆண்டே முதல் முறை நோர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் திமிங்கிலம் சந்தேகத்திற்கு இடமின்றி பயிற்சி அளிக்கப்பட்ட ஒன்று என்று கடல்சார் உயிரியலாளர்கள் முன்னதாக குறிப்பிட்டிருந்தனர். தனது இயற்கை சூழலில் இருந்து விலகி அசாதாரண வேகத்தில் செல்லும் இந்தத் திமிங்கிலம் குறித்த சந்தேகம் தற்போது வலுத்துள்ளது.   நன்றி தினகரன் 






துருக்கி ஜனாதிபதி எர்துவான் மேலும் 5 ஆண்டுகள் ஆட்சிக்கு வெற்றி

துருக்கியின் நீண்ட கால ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் மேலும் ஐந்து ஆண்டு தவணைக்கு வெற்றியீட்டியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற இரண்டாவது சுற்றுத் தேர்தலில் 69 வயதான எர்துவான் 52.14 வீத வாக்குகளை வென்றிருப்பதோடு அவரை எதிர்த்து போட்டியிட்ட கெமால் கிளிக்டரொக்லு 47.86 வீத வாக்குகளை வென்றதாக அந்நாட்டு உச்ச நீதிமன்ற சபை தெரிவித்துள்ளது.

துருக்கி ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் எவரும் 50 வீதத்துக்கு மேல் வாக்குளை வெல்லாத நிலையிலேயே இரண்டாவது சுற்றுத் தேர்தல் நடைபெற்றது.

“ஒட்டுமொத்த நாட்டினதும் 85 மில்லியன் மக்களும் வெற்றியீட்டியுள்ளனர்” என்று ஆங்காராவில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வெளியில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தமது ஆதரவாளர்களுக்கு முன் எர்துவார் தெரிவித்தார்.

இந்த வெற்றியின் மூலம் தனது 20 ஆண்டு ஆட்சியை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு எர்துவான் நீடித்துள்ளார். அவர் ஏற்கனவே துருக்கியின் நிறுவனரான முஸ்தபா கெமால் அதாதுர்க் 15 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்த ஆட்சிக் காலத்தை விஞ்சி பதவியில் நீடித்து வருகிறார்.

“எமது மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்றையும் நாம் பூர்த்தி செய்துள்ளோம். இறைவன் நாடினால் நாம் கடந்த 21 ஆண்டுகளாக இருந்தது போல் உங்களது நம்பிக்கையை வெல்வோம்” என்று எர்துவான் ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.எர்துவானின் வெற்றியை அடுத்து நாடெங்குமுள்ள அவரது ஆதரவாளர்கள் வீதிகளில் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

துருக்கியை காப்பதற்கான வாழ்வா சாவா போராட்டமாகக் கூறியே எதிர்க்கட்சி இந்தத் தேர்தலில் குதித்தது. இதனால் தேர்தல் பிரசாரங்கள் கடுமையாக இருந்தன.

இந்நிலையில் ஒரு குறுகிய அறிக்கையை வெளியிட்டிருக்கும் எதிர்கட்சி வேட்பாளர் கிளிக்டரொக்லு, “எர்துவானினால் நாடு காத்திருக்கும் பெரும் நெருக்கடி பற்றி உண்மையில் கவலை அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கிளிக்டரொக்லு காண்பித்திருக்கும் மோசமான தேர்தல் முடிவு மற்றும் 2017 தேர்தலுடன் ஒப்பிடுகையில் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற இடங்கள் குறைந்திருப்பது தொடர்பில் அந்தக் கட்சி விசாரணையை நடத்தும் என்று எதிர்பார்ப்பதாக எர்துவான் குறிப்பிட்டுள்ளார்.

600 இடங்களை கொண்ட பாராளுமன்றத்தில் எர்துவானின் ஏ.கே கட்சி 323 இடங்களை வென்றுள்ளது.

2003 ஆம் ஆண்டு பிரதமராக ஆட்சிக்கு வந்த எர்துவான், 2016 ஆம் ஆண்டு தோல்வி அடைந்த இராணுவ சதிப்புரட்சியை அடுத்து பிரதமர் பதவியை அகற்றி அதிகாரம் மிக்க ஜனாதிபதி பதவியை அறிமுகப்படுத்தினார்.   நன்றி தினகரன் 






No comments: