மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியை கட்டுப்படுத்தும் ஏற்பாடு

 Wednesday, May 31, 2023 - 6:00am



நாட்டில் மதநல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான முயற்சிகள் சமீப நாட்களாக முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கிய கொவிட் 19 பெருந்தொற்று அச்சுறுத்தல், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இயல்புநிலைகளின் பாதிப்பு, அந்நிலைமை சீரடைந்த சொற்ப காலத்திற்குள் 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தோடு தோற்றம் பெற்ற பொருளாதார நெருக்கடி என்பன நிலவிய காலப்பகுதியில் இவ்வாறான முயற்சிகள் எதுவும் இடம்பெற்றதாக இல்லை. அவை தொடர்பில் எவரும் சிந்தித்ததாகவும் தெரியவில்லை.

ஆனால் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி வங்குரோத்து நிலையை அடைந்திருந்த நாடு கட்டம் கட்டமாக மீட்சி பெற்று பொருளாதார மறுமலர்ச்சிக்குள் பிரவேசித்திருக்கும் இன்றைய சூழலில்தான் இம்முயற்சிகள் வெளிப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துவரும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் பயனாக நாடும் மக்களும் அடைந்துவரும் பிரதிபலன்களின் பயனாக அவர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் ஏற்பட்டுள்ளன. ஜனாதிபதி முன்னெடுக்கும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் உள்நாட்டில் மாத்திரமல்லாமல் சர்வதேச மட்டத்திலும் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளன.

இவ்வாறான சூழ்லில் இவ்விதமான முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது என்றால் அவை ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை குழப்புவதற்கான சூழச்சிகளா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி தலைமையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் சூழலில் மதநல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றால் அவை நிச்சயம் திட்டமிட்ட சூழச்சிகளாகவே இருக்கும் என்பதுதான் மக்களின் கருத்தாக உள்ளது.

கொவிட் 19 பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியினால் நாடு அசாதாரண நிலைக்கு உள்ளாகி இருந்த சூழலில் இவ்வாறான முயற்சிகளுக்கான எந்தவித அடையாளமுமே நாட்டில் காணப்படவில்லை.

ஆனால் பல்லின, பல மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் இந்நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி பாடுபட்டு வரும் சூழலில்தான் மதநல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலான இம்முயற்சிகள் திடீரென தோற்றம் பெற்றுள்ளன. அவற்றில் வடக்கின் சில பிரதேசங்களில் இடம்பெற்றுள்ள சில சம்பவங்கள், போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய உரை, நதாசா எதிரிசூரியவின் சர்ச்சைக்குரிய நகைச்சுவைப் பேச்சு, பத்தரமுல்ல, இமதுவ, அகுலுகஹ பிரதேசத்தில் புத்தர் பெருமான் சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டி உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதோடு புத்தர் பெருமான் சிலை கவிழ்க்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கவையாகும். இச்சம்பவங்கள் பல மட்டங்களதும் அவதானத்தைப் பெற்றுள்ளன.

இவ்வாறான சூழலில் ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெற்றுள்ள புலனாய்வுத் தகவலில், மதநல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் கடந்த சில தினங்களாக இடம்பெறும் சம்பவங்கள் தற்செயலானவை அல்ல. மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தி நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்குள் இட்டுச்செல்லும் வகையில் சில குழுக்கள் திட்டமிட்டு செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி வங்குரோத்து நிலையை அடைந்திருந்த நாடு கட்டம் கட்டமாக மீட்சி பெற்று மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசிக்க வழிசெய்துள்ள ஜனாதிபதிக்கு மாபெரும் பாதிப்பாகவே இம்முயற்சி நோக்கப்பட வேண்டும். அதுவே நாட்டின் உண்மையான அமைதியையும் பொருளாதார மறுமலர்ச்சியையும் விரும்பும் எல்லா மக்களினதும் கருத்தாகும்.

இவ்வாறான நிலையில் குறித்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இவ்விதமான முயற்சியில் ஈடுபடும் குறித்த நபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் கடும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவென பொலிஸ் மாஅதிபருடன் கலந்துரையாடி விஷேட பொலிஸ் பிரிவை ஸ்தாபிக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆலோசருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

நிச்சயம் இது காலத்திற்கு அவசியமான நடவடிக்கையாகவே இருக்கும். பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கான முயற்சியானது இந்நாட்டையின் முன்னேற்றத்தையும் சுபீட்சத்தையும் விரும்பாததன் வெளிப்பாடாகும். அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படலாகாது. அதனால் இம்முயற்சிகள் ஆரம்ப கட்டத்தியே கட்டுப்படுத்தப்பட வேண்டும். நாட்டின் அமைதி நல்லிணக்கத்திற்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் அதுவே பக்கபலமாக இருக்கும்.   நன்றி தினகரன் 

No comments: