இருவர் உள்ளம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 தனது வசீகரமான வசனங்கள் மூலம் தமிழ் திரைப் பட ரசிகர்களை


தன் பக்கம் சுண்டி இழுத்தவர் கலைஞர் மு கருணாநிதி. இவர் வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா, மலைக்கள்ளன் , போன்ற படங்கள் திரையுலகில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தின. அவர் எழுதிய வசனங்களை மனனம் செய்து பேசி மகிழ்ந்தவர்கள் ஆயிரக்கணக்காணோர் . அடுக்கு மொழியில் ஆவேசமாக பேசக் கூடிய வசனங்களை எழுதி வந்த கருணாநிதி அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் 1963ம் ஆண்டு வெளிவந்த இருவர் உள்ளம் படத்துக்கு , காலத்துக்கு ஏற்றாற் போல்

அளவுடன் வசனங்களை எழுதி ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளிக் கொண்டார். அவரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவின் தொடக்கம் இவ்வாண்டு ஜூன் 3 ம் திகதி முதல் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது!


பிரபல நாவலாசிரியை லக்ஷ்மி எழுதிய பெண் மனம் நாவல் , இந்திய திரைத்துறையின் முன்னோடிகளில் ஒருவரான எல் வி பிரசாத்தின் தயாரிப்பிலும், டைரக்க்ஷனிலும் இருவர் உள்ளமாக படமானது. ஆனாலும் படத்தின் ஆரம்பத்தில் எல்லாருடைய பெயர்களும் காட்டப்பட்ட போதும் கதையை எழுதிய லக்ஷ்மியின் பெயர் காண்பிக்கப் படவே இல்லை! புகழ் பெற்ற பல தலைகள் படத்தில் இடம் பெற்ற போதும் எழுத்தாளரின் பேர் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

படத்தின் நாயகன் செல்வம் செல்வத்தில் மிதப்பவன், நாளுக்கு நாள் புதுப் பெண்களுடன் கொட்டம் அடிப்பவன், அப்படிப்பட்டவனின் காதலை டீச்சர் சாந்தா துச்சமென உதரித் தள்ளுகிறாள். அவள் அவனை உதாசீனம் செய்ய செய்ய அவனுக்கு அவள் மீது காதல் பெருகுகிறது. தன் குடும்ப செல்வாக்கினால் அவளை மணந்து கொள்கிறான் செல்வம். ஆனால் சாந்தா முதல் இரவிலேயே அவனை நிராகிக்கிறாள். பெண் மனம் அவனை கணவனாக ஏற்க மறுக்கிறது. நீண்ட முயற்சிக்கு பின் இருவர் உள்ளமும் ஒன்று சேர தயாராகும் போது செல்வம் மீது கொலைப் பழி ஒன்று சுமத்தப்படுகிறது. அதில் இருந்து அவன் மீள சாந்தா எப்படி உதவுகிறாள் என்பதே மீதிக் கதை.

லக்ஷ்மியின் கதைக்கு திரைக்கதையை அமைத்து வசனம் எழுதினார் கருணாநிதி. சிவாஜி, சரோஜாதேவி இருவரும் வசனங்களுக்கு உயிர் கொடுத்தனர். படத்தில் கதா பாத்திரத்தை பொறுத்தவரை சிவாஜியின் பாத்திரத்தை விட சரோஜாதேவியின் பாத்திரமே முக்கியத்துவம் பெறுகிறது. அதன் சிறப்பறிந்து அதனை மிக நேர்த்தியாக செய்திருந்தார் சரோஜாதேவி. சிவாஜியை அலட்சியம் செய்யும் போதும், பார்வையாலேயே எரிக்கும் போதும், அவரின் நடிப்பு பரிணமிக்கிறது. சிவாஜியும் பத்திரத்துடன் ஒன்றிப் போகிறார். இருவர் நடிப்பும் உச்சம் தொடுகிறது.


எம் ஆர் ராதா நல்லவராக வந்து , டி பி முத்துலெட்சுமியுடன் சேர்ந்து சிரிக்க வைக்கிறார். புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை என்ற பாடலிலும் நடித்து அசத்தினார். அவர்களின் நகைச்சுவைக்கு முன் எஸ் ராமராவ், ஏ கருணாநிதி, லக்ஷ்மிராஜ்யம் ஆகியோரின் நகைச்சுவை வேஸ்ட்.
டி ஆர் ராமச்சந்திரனுக்கு வித்யாசமான வேடம். சிவாஜியின் தந்தையாக வரும் ரங்காராவ் நடிப்பில் கம்பீரம் காட்டுகிறார். தாயாக வருபவர் சந்தியா! இவர்களுடன் பத்மினி பிரியதர்சினி, பாலாஜி, கொட்டப்புளி ஜெயராமன், பகோடா காதர் , ஜெயந்தி ஆகியோரும் நடித்தனர்.

படத்துக்கு மேலும் மெருகூட்டியது கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள். பாடல்களுக்கு இசை கே வி மகாதேவன். படத்தில் எட்டுப் பாட்டுக்கள். அனைத்தும் கதையோடு இணைந்து அமைந்தன. கண்ணெதிரே தோன்றினாள் , அழகு சிரிக்கிறது, ஏன் அழுதாய் , கண்ணே கண்ணே கலங்காதே, இதய வீணை தூங்கும் போது, ஆகிய பாடல்கள் ரசிகர் உள்ளங்களில் இன்றும் நிலைத்துள்ளன . கே எஸ் பிரசாத் படத்தை ஒளிப்பதிவு செய்தார்.

சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் முதல் சினிமா துறையில் ஈடுபட்டு

பல மொழிகளில் படங்களை தயாரித்து இயக்கியவரும், பிரசாத் ஸ்டுடியோ அதிபருமான எல் வி பிரசாத் படத்தை நேர்த்தியாக இயக்கி இருந்தார். சிவாஜியும் அவரிடம் பெட்டிப் பாம்பாக அடங்கி அருமையாக நடித்திருந்தார். படமும் நூறு நாட்களுக்கு மேல் ஓடி ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தது.

No comments: