உலகச் செய்திகள்

 அமெரிக்கா–தென் கொரியா இடையே அணு உடன்பாடு

உண்ணாவிரத வழிபாட்டில் உயிரிழப்பு 95 ஆக உயர்வு

சூடானிலிருந்து 1,687 பேரை வெளியேற்றியது சவூதி

உலக மக்கள் தொகையில் இந்த வாரம் சீனாவை பின்தள்ளி இந்தியா முதலிடம்

நோர்வேயில் விழுந்த சுவீடனின் ரொக்கெட்


அமெரிக்கா–தென் கொரியா இடையே அணு உடன்பாடு


அமெரிக்காவும் தென்கொரியாவும் புதிய விரிவுபடுத்தப்பட்ட அணுச்சக்தி உடன்பாட்டை அறிவித்துள்ளன. வட கொரியாவிடமிருந்து அச்சுறுத்தல் தொடரும் வேளையில் இரு நாடுகளும் புதிய உடன்பாட்டைச் செய்துள்ளன.

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் முதல்முறை உத்தியோகபூர்வ பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்தித்தபோது விரிவான புதிய உடன்பாடு பற்றி அறிவிக்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளில் முதல்முறை அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல்களைத் தென் கொரியாவில் நிறுத்த அமெரிக்கா திட்டமிடுவதாக பைடன் கூறினார். வட கொரியா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் புவியீர்ப்பு ஏவுகணைகளை அடிக்கடி சோதித்து வரும் சூழலில் அமெரிக்கா இவ்வாறு கூறியது.

தென் கொரியா தன்னிச்சையாக அணுவாயுதத் திட்டத்தைத் தொடராது என்று யூன் மீண்டும் உறுதியளித்தார். உடன்பாட்டின் ஓர் அங்கமாக, புவியீர்ப்பு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா தென் கொரியாவுக்கு அனுப்பும். 1980களுக்குப் பின் முதல்முறை அத்தகைய நீர்முழ்கிக் கப்பல் அனுப்பப்படவுள்ளது.   நன்றி தினகரன் 
உண்ணாவிரத வழிபாட்டில் உயிரிழப்பு 95 ஆக உயர்வு

கென்யாவில் பட்டினியால் மரணித்த வழிபாட்டுடன் தொடர்புபட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தமது உறவினர்கள் பற்றி தகவல் அறிய நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டுள்ளனர்.

கென்யாவின் துறைமுக நகரான மலின்டிக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியிலேயே பல டஜன் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சமயக் குழு தலைவரான போல் மக்கன்சி நிதன்கே, தம்மை பின்பற்றுவோரை பட்டினியில் மரணித்து கடவுளைக் காண பிரசாரம் செய்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது. டாக்சி ஓட்டுநராக இருந்த இந்த மதப் போதகர் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை 150 சிறுவர்கள் உட்பட 311 பேர் காணாமல் போனவர்களாக பதிவாகி உள்ளனர் என்று கென்யாவின் செஞ்சிலுவை சங்க அதிகாரி ஒருவரான ஹசன் மூசா தெரிவித்துள்ளார்.

“நாம் கண்டுபிடிக்க வேண்டிய இன்னும் எத்தனை சடலங்கள், எத்தனை புதைகுழிகள் இருக்கின்றன என்று எமக்குத் தெரியவில்லை” என உள்துறை அமைச்சர் கிதுரே கின்டிகி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“800 ஏக்கர் பரப்பளவில் உள்ள பண்ணை முழுவதும் பொலிஸாரின் கண்காணிப்பில் உள்ளது. பண்ணையின் அனைத்து பகுதிகளிலும் பொலிஸார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்போது இந்தக் காட்டுப் பகுதியில் இருந்து பல வழிபாட்டளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். உண்ணாவிரதம் இருந்ததால் அவர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர்கள் உணவு கொடுத்தால் சாப்பிட மறுப்பதாகவும், முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொள்ள மறுப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே உண்ணாவிரதம் மேற்கொண்ட சிலர், பொலிஸாரின் தேடுதல் வேட்டைக்கு பயந்து அருகில் உள்ள காட்டுப்பகுதியில் புதருக்குள் மறைந்துள்ளதாகவும், அவர்களை பொலிஸார் மீட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளுர் மக்கள் இந்த புதைகுழி இருக்கும் பகுதிக்கு வந்து தமது உறவினர்களும் காணாமல்போயிருப்பது பற்றி முறையிட்டு வருகின்றனர்.

இதில் ஹாபெல் பராசி என்பவர் தனது சகோதரியைத் தேடி வந்துள்ளார். தனது சகோதரி 2013இல் இந்த மதப்பிரிவில் இணைந்த நிலையில் தனது குழந்தைகளையும் அழைத்து இந்த காட்டுப்பகுதிக்கு வந்ததாகவும் 2020 ஆம் ஆண்டு தொடக்கம் அவர்களை காணவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் உயிருடன் இருப்பார்கள் என்று நான் நம்பவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 
சூடானிலிருந்து 1,687 பேரை வெளியேற்றியது சவூதி

போர் இடம்பெறும் சூடானில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,687 பேரை ஏற்றி புறப்பட்ட கப்பல் ஒன்று நேற்று (26) சவூதி அரேபியாவை சென்றடைந்துள்ளது. இது அந்த நாடு இதுவரை மேற்கொண்ட மிகப்பெரிய வெளியேற்ற நடவடிக்கையாக உள்ளது.

சூடானில் கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் சவூதி அரேபியா வான் மற்றும் கடல் மார்க்கமாக பல சுற்று வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சூடான் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சவூதிக்கு சொந்தமான கப்பல் துறைமுக நகராக ஜித்தாவை அடைந்ததாக சவூதி வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் 13 சவூதி நாட்டவர்களுடன் மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்க பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களும் இருப்பதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சூடானில் இருந்து சவூதிக்கு தமது நாட்டின் 560 பிரஜைகளை வெற்றிகரமாக வெளியேற்றியதாக இந்தோனேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

சூடான் இராணுவத் தளபதி அப்தல் பத்தா அல் புர்ஹான் மற்றும் பலம்மிக்க துணை இராணுவப் படையான விரைவு உதவிப் படையின் தளபதி மொஹமத் ஹம்தான் டக்லோ இடையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடே அந்நாட்டில் கடும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உக்கிர மோதல்களில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை குறைந்து 459 பேர் கொல்லப்பட்டு 4,000 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மத்தியஸ்தத்தில் போர் தரப்புகளுக்கு இடையே ஏற்பட்ட மூன்று நாள் போர் நிறுத்தத்தால் தலைநகர் கார்டூமில் சற்று அமைதி திரும்பியபோதும் வான் தாக்குதல்கள் பற்றி செய்தி வெளியாகி இருப்பதோடு பிரதான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் மின் உற்பத்தி நிலையம் ஒன்றை கைப்பற்றியதாக துணை இராணுவப் படை குறிப்பிட்டுள்ளது.

இந்தப் போர் காரணமாக சூடானில் இருந்து வெளிநாட்டினர்கள் மற்றும் இராஜதந்திரிகளை வெளியேற்றும் செயற்பாடு தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இதில் சவூதி அரேபியா பிரதான பங்காற்றி வருகிறது.

இதுவரை 2000 இற்கும் அதிகமான வெளிநாட்டினர்கள் உட்பட சூடானில் இருந்து 2,148 பேரை சவூதி அரேபியா வெளியேற்றி இருப்பதாக சவூதி வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 

உலக மக்கள் தொகையில் இந்த வாரம் சீனாவை பின்தள்ளி இந்தியா முதலிடம்

ஐ.நா புதிய தகவல்

இந்த வார இறுதியில் உலக மக்கள் தொகையில் சீனாவை பின்தள்ளி இந்தியா முதலிடத்திற்கு முன்னேறும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் முடிவில் இந்தியாவின் மக்கள்தொகை 1,425,775,850 ஐ எட்டும் என்று புதிய தரவு காட்டுகிறது. இந்த ஆண்டு நடுப்பகுதியிலேயே சீனாவை முந்தி இந்தியா உலக மக்கள்தொகையில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று ஐ.நாவின் மற்றொரு அமைப்பு குறிப்பிட்டிருந்தது.

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையினர் இந்த ஆசிய நாடுகளில் உள்ளனர்.

‘சீனா மிக விரைவில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற தனது அந்தஸ்த்தை இழக்கும்’ என்று ஐ.நாவின் பொருளாதார மற்றும் சமூக விவகார திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா மக்கள்தொகை நிதியம் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், 2023 நடுப்பகுதியில் சீனாவை விடவும் இந்தியாவில் 2.9 மில்லியன் மக்கள் அதிகமாக இருப்பார்கள் என்று குறிப்பிட்டது.

சீனாவில் பிறப்பு வீதம் அண்மையில் வீழ்ச்சி கண்டதோடு, 1961க்குப் பின்னர் முதல் முறையாக கடந்த ஆண்டு அதன் மக்கள்தொகை சுருங்கியது.

இந்த நூற்றாண்டின் இறுதிக்கு முன்னர் சீன மக்கள்தொகை 1 பில்லியனுக்குக் கீழ் வீழ்ச்சி அடையும் என்று ஐ.நா குறிப்பிட்டுள்ளது. ‘இதற்கு மாறாக இந்திய மக்கள்தொகை பல தசாப்தங்களுக்கு தொடர்ச்சியாக வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் 1950 இல் ஒரு பெண் சராசரியாக 5.7 பிள்ளைகளைப் பெற்ற நிலையில் தற்போது அது 2.2 ஆக இந்தியாவிலும் கூட கருவுறுதல் விகிதம் வீழ்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் நவம்பரில் உலக மக்கள்தொகை 8 பில்லியனைத் தாண்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 
நோர்வேயில் விழுந்த சுவீடனின் ரொக்கெட்

Thursday, April 27, 2023 - 6:02pm

வடக்கு சுவீடனில் இருந்து அந்நாட்டு விண்வெளி நிறுவனத்தால் ஏவப்பட்ட சோதனை ரொக்கெட் ஒன்று செயலிழந்து அண்டை நாடான நோர்வேயில் விழுந்துள்ளது.

பூமிக்கு மேல் 250 கிலோமீற்றரில் ஈர்ப்பு விசையற்ற பகுதியில் மேற்கொள்ளப்படும் சோதனைக்காகவே இந்த ரொக்கெட் ஏவப்பட்டுள்ளது. எனினும் அந்த ரொக்கெட் எதிர்பார்த்ததை விடவும் சற்று நீளமானதாகவும் மேற்கு நோக்கி சென்றதாகவும் அந்த விண்வெளி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ரொக்கெட் நோர்வேயின் மல்செல்வ் மாநகரசபை பிராந்தியத்தில் மனிதர்கள் இல்லாத பகுதியில் கடந்த திங்கட்கிழமை விழுந்துள்ளது.

இது தொடர்பில் மன்னிப்புக் கேட்டிருக்கும் சுவீடன் விண்வெளி நிறுவனம் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. எனினும் சுவீடன் இது பற்றி தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கத் தவறிவிட்டதாக நோர்வே அதிகாரிகள் குறைகூறியுள்ளனர்.   நன்றி தினகரன் 


No comments: