எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 62 சிங்கப்பூர் பொது நூலகத்தை தரிசிக்க வாருங்கள் ! தர்மிஷ்டரின் ஆட்சியில் எரிந்த யாழ். பொது நூலகமும், கொழும்பில் எரிந்த ரணிலின் நூலகமும் ! ? முருகபூபதி


சிங்கப்பூர் பொது நூலகம் பற்றி,  அந்த 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேலும் தெரிந்துகொண்ட செய்திகளை சொல்லாமல்  இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடரை கடந்து செல்ல முடியாது.

சிங்கப்பூரில் பொதுமக்கள், அரச துறையினர், தகவல் தொடர்பூடகத்துறையினர், மாணவர்கள், ஆய்வாளர்கள் உட்பட அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் இந்த நூலகம் சிறந்த தகவல் மையமாக விளங்குகிறது.

நண்பர்கள் மூர்த்தியும் புஷ்பலதா நாயுடுவும் என்னை அந்த


பிரமண்டமான கட்டிடத்தின் ஒன்பதாவது தளத்திற்கு அழைத்து வந்தார்கள். அங்கே சீன, மலாய், தமிழ் பிரிவுகள் இருந்தன. தமிழ்ப்பகுதியில் ஆயிரக்கணக்கான நூல்களும் ஏராளமான இதழ்களும் காணப்பட்டன.

தமிழ்ப்பிரிவில் மொழி, கலை, இலக்கியம் என மூன்று பகுதிகளை வகுத்திருந்தார்கள். மொழிப்பகுதியில் தமிழின் வரலாறு, சுவடிகள், இலக்கண நூல்கள் அகராதிகள் என்பனவும்,

 கலைப்பகுதியில் நாட்டுப்புறக்கலைகள்,  நாட்டுப்புற பாடல்கள், தெருக்கூத்துக்கள், நாடக வரலாறு, மேடை நாடகத்துறை சம்பந்தமான நூல்கள், கர்நாடக இசை வரலாறு, கீர்த்தனைகள், திரைப்பட வரலாறு, திரைப்படத்துறையினரின் நினைவுகள் சார்ந்த ஆவணங்கள், திரையிசைக் கலைஞர்கள் வரலாறு என்பனவும்,

இலக்கியப்பகுதியில் சங்ககால இலக்கியம் முதல், இன்றைய நவீன இலக்கியம் வரையிலான இலக்கியத்தின் பல கூறுகளும் இடம்பெற்றிருந்தன.

வார, மாத இதழ்களுக்கென ஒரு தனிப்பிரிவு இயங்குகிறது. இலங்கை, இந்தியா, மலேசியா உட்பட பல நாடுகளிலிருந்தும் இதழ்கள் தருவிக்கப்படுகின்றன.

ஒரு பல்லூடக மையமும்  ( Multimedia Centre )  இங்கு இயங்குகிறது.

சிங்கப்பூர் பொது நூலகத்தை முழுமையாக பார்ப்பதற்கு ஒரு நாள் போதாது. இங்கு என்னை பெரிதும் கவர்ந்த ஒரு தளம்தான் சிங்கப்பூர் இலக்கிய முன்னோடிகளின் காட்சியகம். இதன் தமிழ்ப்பிரிவை உருவாக்குவதில் புஷ்பலதா நாயுடு வழங்கிய ஆத்மார்த்திகமான பங்களிப்பு மகத்தானது. இந்த காட்சியகம் ஏனைய நூலகங்களுக்கு முன்னோடியாகவும் திகழக்கூடும் என்பது எனது சிற்றறிவு.

சிங்கப்பூரின் தமிழ் இலக்கிய முன்னோடிகள் சிலரது பெரிய அளவிலான அழகிய உருவப்படங்களும் அவர்கள் பெற்ற விருதுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

அருகிலே – சுவரில் பொருத்தப்பட்டிருந்த ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, நூலகம் இயங்கும் நேரங்களில் தொடர்ச்சியாக இந்த இலக்கிய முன்னோடிகளைப்பற்றி காட்சிப்படுத்திக்கொண்டிருக்கிறது. இக்காட்சியகம் ஆவணகமாகவே திகழுகிறது.


யாழ். பொது நூலகம் 1981 இல் எரிக்கப்பட்டபோது சர்வதேச ரீதியாக எழுந்த அதிர்வலை நீண்டகாலம் நீடித்தது. அன்றைய ஆட்சியாளர்களின் வரலாற்றில் இது மாபெரும் கறை. அத்துடன், பின்னாளில் அதனை திருத்தியமைத்து புதுப்பொலிவுடன் இயங்கவைப்பதற்காக திறப்புவிழா நடத்த முற்பட்டபோது, அதனைத் திறக்கவிடாமல் செய்வதற்கு இழுபறி அறிக்கைகளை விடுத்துக்கொண்டிருந்தனர் காகித வீரர்கள்.  அப்போது நடந்த ஆணவ உச்ச செயற்பாடுகள் பற்றி அறிவீர்கள்.

யாழ். பொது நூலகத் திறப்புவிழா தொடர்பாக ஏட்டிக்குப்


போட்டியாக விதண்டாவாதம் எழுப்பிய அறிக்கையாளர்கள், சிங்கப்பூருக்கு ஒரு தடவை வந்து இங்கிருக்கும் பொது நூலகத்தை பார்க்கவேண்டும்.

யாழ்.பொது நூலகத்தை எரித்தவர்களும் முடிந்தால் சிங்கப்பூருக்கு வந்து இந்த நூலகம் எவ்வாறு  அமைந்துள்ளது. எப்படி இயங்குகிறது என்பதைப் பார்த்தாவது பாவசங்கீர்த்தனம் செய்துகொள்ளவேண்டும்.

இதுபற்றி 2006 ஆம் ஆண்டு ஜூன் மாத மல்லிகை இதழிலும் எழுதியிருந்தேன்.


2022 ஆம் ஆண்டு காலிமுகத்திடல் போராட்ட காலத்தில் கொழும்பில் ரணில் விக்கிரமசிங்காவின் இல்லத்தில் அவரது சேகரிப்பிலிருந்த பெருந்தொகையான புத்தகங்கள் எரிக்கப்பட்டன. இன்று வரையில் அதன் சூத்திரதாரிகள் யார் என்பது தெரியவில்லை.

அப்போது ரணில் விக்கிரமசிங்கா கண்ணீர் சிந்தினார். அவரது மாமனார் ஜே. ஆர். ஜெயவர்தனாவின் பதவிக்காலத்தில் யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்ட வேளையில் வண . பிதா தாவீது அடிகளார் அந்தக்கொடுமையை தாங்கமுடியாமல் மாரடைப்பு வந்து மடிந்தார்.

அந்த ஜே. ஆர். தான் 1977 இல்  பதவிக்கு வந்தபோது இலங்கையை சிங்கப்பூராக்குவோம் என்றும் சொன்னவர்.

மீண்டும் சிங்கப்பூர் பொது நூலகத்திற்கு வருகின்றேன்.

இங்கு தமிழ்ப் பிரிவுக்குச்சென்றபோது, எமக்கு யார் எழுதிய


எந்தப்புத்தகம் தேவை என்பதை அங்குள்ள அலுவலரிடம் கேட்கவேண்டிய அவசியம் இல்லை. அனைத்தும் அங்குள்ள கணினிகளில் இருக்கின்றன. குறிப்பிட்ட எழுத்தாளரின் பெயரில் வரும் முதல் மூன்று அல்லது நான்கு எழுத்துக்களை தட்டினால் சகல விபரங்களும் கணினித் திரையில் தோன்றும்.

புத்தத்தின் பெயர் – எந்த நூலகத்தில் இருக்கிறது..?                            ( சிங்கப்பூரில்  25 இற்கும் மேற்பட்ட உப நூல் நிலையங்கள் இயங்குகின்றன. ) முதலான விபரங்கள் மாத்திரமின்றி, புத்தகம் தவறியிருந்தால், அதுபற்றிய குறிப்பும் வருகிறது.

அக்காலப்பகுதியில் கொழும்பில் டொமினிக் ஜீவாவின் மல்லிகைப்பந்தல் பதிப்பகமும் இயங்கிக்கொண்டிருந்தமையால், புஷ்பலதா நாயுடுவிடம் அதன் முகவரியும் கொடுத்தேன்.

இலங்கை எழுத்தாளர்களின் புத்தகங்களை பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் ஶ்ரீதரசிங் ஊடாக பெற்றுக்கொள்வதாகவும் அவர் சொன்னார்.

இந்தப்பதிவில் மல்லிகை ஜீவாவையும் ஶ்ரீதரசிங்கையும் என்னையும்  வாசகர்கள் பார்க்கலாம்.


அன்று 2006 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 24 ஆம் திகதிதான் சிங்கப்பூர் பொது நூலகம் சென்றேன். அன்றைய தினம்தான் ஜெயகாந்தனின் பிறந்த தினம். மூர்த்தி இதனை எனக்கும் புஷ்பலாதாவுக்கும் நினைவுபடுத்தினார். ஜெயகாந்தனின் பிறந்த தினத்தை அன்று நாம் மூவரும் சிங்கப்பூரில் ஒரு உணவு விடுதியில் கொண்டாடினோம்.

அப்போது ஜெயகாந்தனுக்கும் பிறந்த தின வாழ்த்துக் கூறினோம்.  நண்பர் மூர்த்திக்கு இலங்கை , தமிழக எழுத்தாளர்கள் பலருடன் நெருக்கமான நட்புறவு இருந்தது. அத்துடன் சில சினிமா கலைஞர்களுடனும் தொடர்பிலிருப்பவர். சிவாஜிகணேசன் மறைந்த பின்னர் இவர் பேராசிரியர் கா. சிவத்தம்பியை நரேட்டராக வைத்து எடுத்த ஆவணப்படம் குறிப்பிடத்தகுந்தது. ஜெயகாந்தன் - உலகப்பொது மனிதன் என்ற ஆவணப்படத்தையும், தயாரித்தவர். மூர்த்தி எடுத்த கூலி என்ற குறுந்திரைப்படம் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியிருக்கிறது.

சிங்கப்பூருக்கு வீட்டு வேலைகளுக்காக வரும் பணிப்பெண்களின்  ஒரு வெட்டு முகத்தோற்றத்தை சித்திரித்த திரைப்படம்தான் கூலி.

மாமனாரின் அஸ்தியை சிங்கப்பூர் கடலில் கரைத்து அந்தியேட்டிக்கிரியைகள் முடிந்ததும், மலேசியாவுக்கு செல்ல ஆசைப்பட்டேன்.

என்வசம் அவுஸ்திரேலியா கடவுச்சீட்டு இருந்தமையால் விசா எடுக்கவேண்டிய அவசியமிருக்கவில்லை.

( தொடரும் ) 
No comments: