இலங்கைச் செய்திகள்

 வசந்த கரன்னாகொட மற்றும் அவரது குடும்த்தினருக்கு அமெரிக்கா நுழைய தடை

வெடுக்குநாறி மலையில் மீண்டும் திருவுருவச்சிலைகள் பிரதிஷ்டை

கச்சதீவில் புத்தர் சிலை அகற்றப்பட்டு விட்டது

இந்திய சுற்றுலா பயணிகள் இனி இந்திய ரூபாவை பயன்படுத்தலாம்

நுவரெலியா சீதையம்மன் ஆலய சிறப்பை குறிக்கும் விசேட தபாலுறை வெளியீடு


வசந்த கரன்னாகொட மற்றும் அவரது குடும்த்தினருக்கு அமெரிக்கா நுழைய தடை

- இது தொடர்பில் வெளி விவகார அமைச்சு கவலை
- நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இவ்வேளையில் இம்முடிவு துரதிஷ்டவசமானது
- நல்லிணக்கம், பொருளாதார மேம்பாட்டை மேற்கொள்வது தொடர்ந்தும் இடம்பெறும்

கடற்படைத் தளபதியாக இருந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில், அட்மிரல் ஒப் தி ப்லீட் வசந்த கரன்னாகொட மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிப்பதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடமேல் மாகாணத்தின் தற்போதைய ஆளுநரான அட்மிரல் ஒப் தி ப்லீட் வசந்த கரன்னாகொட தொடர்பில் நேற்றையதினம் (26) அமெரிக்கா எடுத்த தீர்மானத்திற்கு இலங்கை வருந்துவதாக, வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்றையதினம் (27) இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் இலங்கை கவலைகளை வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் வெளி விவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் நீண்டகால இருதரப்பு பங்காளி என்ற வகையில், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் அமெரிக்காவின் இத்தகைய ஒருதலைப்பட்சமான நடவடிக்கையானது, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதில் இலங்கை எடுத்துள்ள முழுமையான அணுகுமுறைக்கு எதிரானதாகும்.

நாட்டின் ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்கக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள உறுதியான முன்னேற்றத்தின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளிவருவது துரதிஷ்டவசமானது.

ஆயினும் இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும், நல்லிணக்கம், பொருளாதார மீட்சி மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளில் இலங்கை தொடரும் என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.   நன்றி தினகரன் 
வெடுக்குநாறி மலையில் மீண்டும் திருவுருவச்சிலைகள் பிரதிஷ்டை

நீதிமன்றம் உத்தரவிட்டதாக சுமந்திரன் தெரிவிப்பு

வவுனியா வெடுக்குநாறி மலையிலிருந்து அகற்றப்பட்ட சிலைகளை மீண்டும் அங்கு பிரதிஷ்டை செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியா நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் தேவராசா சுபாஜினி முன்னிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, ஜனாதிபதி சட்டத்தரணி

எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவித்த போது, "வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்ள ஏற்கனவே நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்ததுடன், நேற்று முன்தினம் அங்கு வழிபாடுகள் நடத்தப்பட்டன. எனினும், விக்கிரகங்களின்றி அங்கு வழிபாடுகள் நடத்தப்பட்டமை தொடர்பிலும் வெடுக்குநாறி மலையிலிருந்த திருவுருவச் சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் ஆகியன பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த வவுனியா நீதவான், வெடுக்குநாறி மலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட விக்கிரகங்களை அதே இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்யுமாறும் பூஜை பொருட்களை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். தொல்லியல் திணைக்களத்தின் மேற்பார்வையுடன் திருவுருவச் சிலைகள் மீள பிரதிஷ்டை செய்யப்பட வேண்டுமெனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். பூஜை வழிபாடுகளுக்கு எவ்வித இடையூறுகளையும் விளைவிக்காதிருப்பதற்கும் அங்கு பாதுகாப்பு மேற்பார்வைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கும் பொலிஸாருக்கு நீதிமன்றத்தால் உத்தவிடப்பட்டுள்ளது. அத்துடன், வெடுக்குநாறி மலையிலிருந்த விக்கிரகங்கள் சேதப்படுத்தியமையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதை துரிதப்படுத்துவதற்கும் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.

வவுனியா விசேட நிருபர் - நன்றி தினகரன் 
கச்சதீவில் புத்தர் சிலை அகற்றப்பட்டு விட்டது

கடற்படையினர் ஆயருக்கு தெரிவிப்பு

கச்சதீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டு விட்டதாக, யாழ். மாவட்டச் செயலாளருக்கு கடிதம் மூலம் யாழ். ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

இந்த சிலை அகற்றப்பட்ட விடயத்தை கடற்படையின் உயரதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளதாகவும் அங்கு

அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டு விட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளதாகவும் யாழ். மாவட்டச் செயலாளருக்கு யாழ். ஆயர் இல்லம் அனுப்பி வைத்துள்ள அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது. இவ்விடயத்தை அமைதியான முறையில் தீர்த்துவைக்க ஒத்துழைப்பு நல்கிய கடற்படை உயரதிகாரிகளுக்கும் மற்றும் கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் என்றும், ஆயர் இல்லம் அந்தக் கடித்தில் குறிப்பிட்டுள்ளது. யாழ். ஆயர் இல்லம் சார்பில் யாழ்ப்பாணம் மறை மாவட்ட குரு முதல்வர் பி.ஜோசப்தாஸ் ஜெபரட்ணம், யாழ். மாவட்டச் செயலாளருக்கு இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளதுடன், தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

யாழ்.விசேட நிருபர் - நன்றி தினகரன் 


இந்திய சுற்றுலா பயணிகள் இனி இந்திய ரூபாவை பயன்படுத்தலாம்

- இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் தெரிவிப்பு

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த முடியுமென, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இணைய நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், நியமிக்கப்பட்ட நாணயமாக இந்திய ரூபாயை உருவாக்குவது, இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக தீர்வுக்கு உதவுவது மட்டுமல்லாமல், இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுமென்றும் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 

நுவரெலியா சீதையம்மன் ஆலய சிறப்பை குறிக்கும் விசேட தபாலுறை வெளியீடு


நுவரெலியா சீதையம்மன் ஆலயத்துக்கான விசேட ஞாபகார்த்த தபாலுறை ஒன்று பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரால் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற இவ்விசேட நிகழ்வில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலயத்தில் தியான நிலையம் ஒன்றிற்கான அடிக்கல்லையும் அவர்கள் நட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்தியிருந்த பிரதமர் தினேஷ் குணவர்தன,

இலங்கையில் முன்னொருபோதுமில்லாதவகையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி நிலையின்போது இந்தியா இலங்கையுடன் துணைநின்றமையை நினைவூட்டியிருந்த அதேவேளை, இந்த தியான நிலையம் மனித மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த அபிவிருத்திக்கும் பங்களிப்பு வழங்குமெனவும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இந்தியாவிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் குழாம் இங்கு பிரசன்னமாகியுள்ளமையை இச்சந்தர்ப்பத்தில் மெச்சிய உயர் ஸ்தானிகர், பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியா மற்றும் இலங்கை இடையில் பகிரப்பட்டு வரும் நாகரீக அடிப்படையிலான மரபுகள் மற்றும் பெறுமானங்களுக்கான தூதுவர்களாக இந்த பக்தர்கள் திகழ்வதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். 

யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகளை மீள ஆரம்பித்தமை மற்றும் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கான அறிவித்தல் போன்றவற்றின் ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்காக உயர் ஸ்தானிகர் பிரதமருக்கு தனது நன்றியினையும் தெரிவித்திருந்தார்,   மேலும் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளில் இராமயண யாத்திரையின் சிறப்பு குறித்தும்,  மிகவும் நெருக்கமான உறவைக்கொண்டிருக்கும் இரு அயல் நாடுகளினதும் மக்களிடையிலான தொடர்புகளை மேலும் வலுவாக்குதலின் முக்கியத்துவம் குறித்தும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

இராமாயணத்தில் கூறப்படும் அஷோக வனத்தின் முக்கியத்துவத்தினை இந்த ஆலயம் பிரதிபலிப்பதாக நம்பப்படுவதுடன் குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த பக்தர்கள் பெருமளவில் இந்த ஆலயத்துக்கு வருகை தருகின்றமையும் இரு நாட்டு மக்களிடையிலும் காணப்படுகின்ற மிகவும் பழைமைவாய்ந்ததும் பரந்ததுமான உறவின் மற்றொரு எடுத்துக்காட்டாகும்.   நன்றி தினகரன் 


No comments: