அஞ்சலிக்குறிப்பு: சிறுகதை இலக்கியத்தில் அழகியலை ஆராதித்த குப்பிழான் ஐ. சண்முகன் முருகபூபதிஅண்மைக்காலமாக , காலை விடியும்போது இன்று என்ன செய்தி வரப்போகிறதோ? என்ற யோசனையுடன்தான் துயில் எழுகின்றேன்.

இந்த யோசனை கொவிட் பெருந்தொற்று பரவிய காலத்திலிருந்து தொடருகின்றது.

அடுத்தடுத்து எமது கலை, இலக்கிய குடும்பத்திலிருந்து பலரும் விடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இயல்பாகவே மரண பயமும் வருகின்றது.

கடந்த 24 ஆம் திகதி காலை விடிந்தபோது, சிட்னியில் வதியும்


எழுத்தாளரும் வானொலி ஊடகவியலாளருமான இலக்கிய நண்பர் கானா. பிரபாவிடமிருந்து  வந்த குறுஞ்செய்தியில், எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் முதல் நாள் 23 ஆம் திகதி மறைந்துவிட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  என்ன நடந்தது? என நான் தொலைபேசி ஊடாக கேட்பதற்கு முன்பே, அவர்  என்னைத் தொடர்புகொண்டு  இந்த  துயரச் செய்தியை மேலும் ஊர்ஜிதப்படுத்திச் சொன்னார்.

இறுதியாக சில வருடங்களுக்கு முன்னர் வடமராட்சிக்கு சென்றிருந்தபோது,  இலக்கிய நண்பர் தெணியானுடன், குப்பிழான் ஐ. சண்முகனை பார்க்கச்சென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

இருவரும் இல்லாத வடமராட்சிக்குத்தான் இனிவரும் காலங்களில் வரப்போகின்றேன் என்பதை நினைக்கும்போது சோகம் மனதை அழுத்துகிறது.

தனது பெயரின் தொடக்கத்தில்  குப்பிழான் என்ற  பூர்வீக ஊரின் பெயரை சண்முகன் பதிவுசெய்துகொண்டிருந்தாலும், அவரது வாழ்க்கை பெரும்பாலும் கழிந்தது, கரணவாயில்தான்.

1970 களில் நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் அவர் கொழும்பு மலே வீதியில் அமைந்திருந்த அரசாங்க பரீட்சைத் திணைக்களத்தில்  எழுதுவினைஞராக பணியாற்றிக்கொண்டிருந்தார்.  அதே வீதியில் அமைந்திருந்த  இலங்கை ஆசிரியர் சங்க பணிமனையில் நான் சிறிது காலம் வேலை செய்துகொண்டிருந்தபோது குப்பிழான் சண்முகனை அடிக்கடி சென்று பார்ப்பேன்.

அக்காலப்பகுதியில் செளந்தர்ய உபாசகர் என வர்ணிக்கப்பட்ட தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் தி. ஜானகிராமனின் எழுத்துக்களை படிக்குமாறு என்னைத் தூண்டியவர்தான் குப்பிழான் ஐ. சண்முகன்.

அதனால், தி. ஜா. வின் உயிர்த்தேன்,  அக்பர் சாஸ்திரி,  மலர் மஞ்சம், யாதும் ஊரே , அம்மா வந்தாள், மரப்பசு முதலானவற்றை அக்காலப்பகுதியிலேயே படித்தேன். நானும் தி. ஜா.வின் தீவிர வாசகனானேன்.

சண்முகன், கொழும்பில் அப்போது இயங்கிய கலை, இலக்கிய நண்பர்கள் கழகத்திலும் இணைந்திருந்தார்.  அவரும் கவிஞர் என அறிந்து எங்கள் நீர்கொழும்பூர் விஜயரத்தினம் கல்லூரியின் பழைய மாணவர் மன்றம் நடத்திய  நாமகள் விழா கவியரங்கிற்கும் அவரை அழைத்திருந்தேன்.


அன்றைய தினம் நிகழ்வுக்கு கல்வி அமைச்சில் பணியாற்றிய அதிகாரியும் இலக்கிய ஆர்வலருமான திரு. இர. சிவலிங்கமும் அவரது பாரியாரும் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

சண்முகன்,  அலை இலக்கிய சிற்றேட்டிலும் இணைந்திருந்தார். அலை வெளியீடாக அவரது கோடுகளும் கோலங்களும் அப்போது வெளியானது.

அச்சமயம் யாழ். பல்கலைக்கழகத்தின் தலைவராக விளங்கிய பேராசிரியர் க.கைலாசபதியும்,  நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு நடந்தவேளையில்,  எமது மூத்த எழுத்தாளர் கே. டானியல் அவர்களின் இல்லத்தில் நடந்த இராப்போசன விருந்துபசாரத்தின்போது என்னோடு உரையாடுகையில்  இந்நூல் பற்றி சிலாகித்துச்சொன்னார்.

ஒரு எழுத்தாளரின் பொய்யான புகாரினை நம்பி, சண்முகன்


மறைமுகமாக என்னைப்பற்றி அலை இதழில் எழுதியபோது அதன் பிரதம ஆசிரியர் அ. யேசுராசாவிடம் நான் முறையிட்டேன்.

பின்னர் அலை ஆசிரியர் குழு அந்த விடயத்தில் தீவிரமாக ஆராய்ந்து உண்மையை தெரிந்துகொண்டு என்னிடம் மன்னிப்பும் கோரியது.

எனினும்  அலை ஆசிரிய பீடத்திலிருந்தவர்கள் பின்னர் கருத்து முரண்பாடுகளினால் பிரிந்தனர். ஆயினும் அவர்கள் அனைவருடனும் நான் தொடர்ந்தும் நட்புறவை பேணிவந்தேன்.

குப்பிழான் சண்முகனின் மறைவின்போது கடந்த காலங்கள் மனதில் வந்து அலைமோதுகின்றது.

1946 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி குப்பிழானில் பிறந்திருக்கும் சண்முகன், தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் படிக்கின்ற காலத்திலேயே  ( 1965 ) இலக்கியப் பிரதிகள் எழுதத் தொடங்கியவர். அவர் தனது உள்ளார்ந்த ஆற்றலை  வற்றிப்போகவிடாமல் தொடர்ந்து எழுதினார். 


கொழும்பில் எம். டீ. குணசேனா பத்திரிகை நிறுவனம் அக்காலப்பகுதியில் வெளியிட்ட ராதா வார இதழில்  சிறுகதை எழுதத் தொடங்கி, அதன்பின்னர் மல்லிகை, ஈழநாடு,  சிரித்திரன், அஞ்சலி, அலை, கற்பகம், வீரகேசரி ஆகியனவற்றிலும் எழுதினார்.

1970 களில் கொழும்பில் பணியாற்றிக்கொண்டிருந்த சண்முகன், அதன்பின்னர் 1980 களில் ஏனைய பிரதேசங்களில் ஆசிரியப்பணியில்  ஈடுபட்டுவிட்டு, இறுதியில் யாழ்ப்பாணத்திற்கே இடமாற்றம்பெற்றுச் சென்றார்.  

நானும் 1987 இல் புலம்பெயர்ந்து வந்தபின்னர் அவரை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் இல்லாமல் போயிற்று. எனினும் அவரது எழுத்துக்களை இதழ்களிலும் அவர் வெளியிட்ட நூல்களிலும்  படிக்க முடிந்தது.

யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட திரைப்பட வட்டம் முதலான அமைப்புகளிலும் அவர் அங்கம் வகித்தவர்.  சில திரைப்பட விழாக்களிலும் கலந்துகொண்டவர்.

அதிர்ந்து பேசாத இயல்பினைக்கொண்டிருந்த சண்முகன்,  ஈழத்து தமிழ் சிறுகதைத் துறையில் குறிப்பிடத்தகுந்த ஒருவர்.  இதனை பல இலக்கிய விமர்சகர்கள் தமது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

1970  கால கட்டத்தில்,  அழகியலை கவனிக்காமல்,  பிரசார


வாடையுடன் கதைகள் எழுதப்பட்டவேளையில்,  சண்முகன் அதற்கு தனது கதைகளில்  முக்கியத்துவம் வழங்கினார். அதனால்  ஈழத்து தமிழ் சிறுகதை வளர்ச்சிக்கு வளம் சேர்த்த ஒருவராகவும் அவதானிக்கப்பட்டவர்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்,   சிறுகதைகள் எழுதத் தொடங்கிய என்னிடம் நண்பர் குப்பிழான் சண்முகன்,               ‘   “  தி. ஜானகிராமனின் எழுத்துக்களை படியுங்கள்  “  என்று ஏன் சொன்னார்?  என்பதற்குரிய பதிலை அவரது சிறுகதைகளிலிருந்தே பெற்றுக்கொண்டேன்.

புனைவு இலக்கியத்தில் அழகியலை ஆராதித்த எமது இனிய நண்பர் குப்பிழான் ஐ. சண்முகனுக்கு தொலைவிலிருந்து எமது இதய அஞ்சலி.  அன்னாரின் அன்புத்துணைவியாரதும் குடும்பத்தினரதும்  துயரத்தில் நானும் பங்கேற்கின்றேன்.

---0---

 

  
No comments: