காஞ்சித் தலைவன் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 தமிழில் சிறந்த சரித்திர நாவல்களை எழுதி பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் ஆதரவை பெற்றவர் அமரர் கல்கி. இவர் எழுதிய பார்த்திபன் கனவு திரைப்படமாக அறுபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. இப்போது அவரின் மற்றைய மகோன்னதமான நாவலான பொன்னியின் செல்வன் படமாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று பெற்றுள்ளது. கல்கி எழுதிய மற்றும்மொரு சரித்திர நாவலான சிவகாமியின் சபதம் வாசகர்களின் ஆதரவை பெற்ற போதும் அது படமாக்கப்படவில்லை. ஆனால் அறுபது ஆண்டுகளுக்கு முன் சிவகாமியின் சபதத்தின் நாயகனான காஞ்சியை ஆண்ட பல்லவ சக்ரவர்த்தி நரசிம்ம பல்லவனின் கதையை ஆதாரமாகக் கொண்டு கலைஞர் கருணாநிதி ஒரு கதையை எழுதி அதற்கு வசனங்களையும் தீட்டினார். அந்த படம் தான் காஞ்சித் தலைவன். திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்த வரை காஞ்சித் தலைவன் என்றால் அது அக்கட்சியின் தலைவரான அறிஞர் அண்ணாதான். அவரை போற்றும் வண்ணம் படத்துக்கு காஞ்சித் தலைவன் என்று கருணாநிதி பேர் சூட்டினார். ஆனால் படத்தில் காஞ்சித் தலைவன் வேறு யாருமல்ல , புரட்சி நடிகர் எம் ஜி ஆர்தான்! நரசிம்ம பல்லவர் வேடத்தில் அவர் நடித்திருந்தார்.

கற்பனைப் பாத்திரமான சிவகாமி என்ற நடனப் பெண்ணை

உருவாக்கி அவள் மீது நரசிம்மருக்கு காதல் ஏற்பட்டு அவள் பொருட்டு வாதாபி மீது போர் தொடுத்து அவர் வெற்றி வாகை சூடுவதாவாக கல்கியின் நாவல் அமைந்திருந்தது. ஆனால் கருணாநிதி வேறு வகையில் படத்தின் கதையை அமைத்திருந்தார். பல்லவ நாட்டின் மீது போர் தொடுக்க சமயம் பார்த்து காத்திருக்கும் வாதாபி அரசன் புலிகேசி தனது சதித் திட்டத்தின் ஓர் அங்கமாக சோழ குமாரியை பல்லவ நாட்டிற்கு அனுப்புகிறான். பல்லவ நாட்டில் கலகம் உண்டாக்க வரும் சோழ குமாரி பல்லவனின் அழகு,ஆற்றல், வீரம் எல்லாவற்றையும் கண்டு மயங்கி அவன் மீது காதல் வசப்படுகிறாள். இதனை பல்லவனின் மந்திரி பரஞ்சோதி எதிர்க்கிறான் . இதனால் அவனுக்கும், பல்லவனின் தங்கை பூங்குழலிக்கும் இடையிலான காதல் முறிகிறது. அதே சமயம் இலங்கை அரசன் மானா இலங்கையில் எல்லாவற்றையும் இழந்து பல்லவனிடம் அடைக்கலம் கேட்டு வருகிறான். இவ்வாறு பலவித அரசியல், குடும்ப சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் நரசிம்மன் எவ்வாறு வெற்றி பெறுகிறான் என்பதே கதை.

நரசிம்ம பல்லவராக வரும் எம் ஜி ஆர் அலட்டலில்லாத நடிப்பை வழங்குகிறார் . தங்கையின் துயர் கண்டு வேதனைப் படும் போது சோகரசத்தையும் வெளிப்படுத்துகிறார். சோழகுமரியாக வரும் பி பானுமதி பாத்திரத்துடன் ஓட்ட மறுக்கிறார். யாருடைய சிபாரிசில் அவர் படத்தில் இடம் பெற்றாரோ தெரியவில்லை. ஆனாலும் எம் ஜி ஆருடன் அவர் இணைந்து நடித்த கடைசிப் படம் இதுவாகும். பரம்ஜோதியாக வரும் எஸ் எஸ் ராஜேந்திரன் கலைஞரின் அடுக்கு மொழி வசங்களை பேசி பாராட்டைப் பெறுகிறார். அவருக்கு ஜோடி விஜயகுமாரி. எம் ஆர் ராதா ஒற்றனாக வந்து சதி செய்கிறார். புலிகேசியாக வரும் அசோகன் ஏனோ மிகை நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

இவர்களுடன் வளையாபதி முத்துகிருஷ்ணன், மனோரமா, எஸ் ராமராவ், டி ஏ மதுரம், ஜி சகுந்தலா, செந்தாமரை ஆகியோரும் நடித்திருந்தனர். படத்தை ஜி துரை ஒளிப்பதிவு செய்திருந்தார். எம் ஜி ஆர் போடும் மல்யுத்தம் நன்றாக படமாக்கப்பட்டது. பிற்காலத்தில் சிறந்த இயக்குனராக அறியப்பட்ட மகேந்திரன் இந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

படத்துக்கு இசையமைத்தவர் கே வி மகாதேவன். அண்ணன் , தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்த ஆலங்குடி சோமுவின் ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. எம் ஜி ஆர் , விஜயகுமரி இருவரும் உருக்கமாக பாடலுக்கு நடித்திருந்தார்கள். கே டி சந்தானத்தின் கண் கவரும் சிலையே மென்மையாக ஒலித்தது. வானத்தில் வருவது ஒரு நிலவு என்ற டூயட் பாடல் எஸ் எஸ் ஆர் , விஜயகுமாரி நடிப்பில் இனிமையாக அமைந்தது.

எம் ஜி ஆர் நட்சத்திர நடிகரான பிறகு நடித்த படங்களில் இந்தப் படத்தில் தான் அவருக்கு கதாநாயகியுடன் டூயட் பாடல் பாடும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை! ஒரு கனவுக்காட்சியிலாவது டூயட் பாடல் ஒன்றை இணைத்திருக்கலாம்!

படத்தின் வசனங்களை கருணாநிதி , எம் ஜி ஆர் நடிக்கும் படம் என்பதற்கு ஏற்ப அமைத்திருந்தார் . ஆனாலும் எஸ் எஸ் ஆர், விஜயகுமாரி இருவரும் கருணாநிதியின் வசனங்களுக்கு உயிர் கொடுத்தனர். வசனங்களும் சுவையாக அமைந்தன.

மேகலா பிக்சர்ஸ் சார்பில் கருணாநிதி, முரசொலி மாறன்,

காசிலிங்கம் மூவரும் படத்தை தயாரித்தனர். மேகலா பிக்சர்ஸ் தயாரித்த எல்லாப் படங்களையும் இயக்கிய
ஏ காசிலிங்கம் இந்தப் படத்தையும் இயக்கினார்.

பல்லவ நாட்டிற்கும், சாளுக்கிய நாட்டிற்கும் (இன்றைய கர்நாடகா) இடையில் நடக்கும் போர் என்பதால் படம் தணிக்கை சபையினால் பலவித உபத்திரவங்களுக்கு உள்ளானது. காஞ்சித்

தலைவன் என்பது அண்ணாவை குறிப்பதாக சொல்லி படத்தின் பெயரை மாற்றும்படி வற்புறுத்தப்பட்டது. இறுதியில் பலவித வெட்டு குத்துகளுக்கு உள்ளாகி வெளியான படம் வர்த்தக ரீதியில் சாதிக்கவில்லை. அதன் பிறகு ஏழாண்டுகளுக்கு எம் ஜி ஆருக்கு வசனம் எழுதி அவர் நடிப்பில் படம் தயாரிக்காத கருணாநிதி 70ம் ஆண்டில்தான் எங்கள் தங்கம் படத்தை தயாரித்தார்!No comments: