இலங்கைச் செய்திகள்

250,000 டொலர் முதலீடு: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு 5 அல்லது 10 வருட Golden Visa 

தொழில்நுட்பக் கோளாறு, முப்பது மணிநேரம் தாமதமான விமானம்

அரச விரோத செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது

தப்புல டி லிவேரா சார்பில் நேற்று சட்டத்தரணி ஒருவர் TIDயில் ஆஜர்

நுவரெலியாவில் மலர்க் கண்காட்சி


250,000 டொலர் முதலீடு: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு 5 அல்லது 10 வருட Golden Visa

நாட்டிலுள்ள உள்ளூர் வங்கியொன்றில் 2,50,000 அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் சுற்றுலாப் பயணிக்கு ஐந்து அல்லது பத்து வருட காலங்களுக்கான கோல்டன் விசாவை விநியோகிப்பதுடன் குடியுரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்கும் புதிய வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

அதிகரித்த வருமானம் கொண்ட சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைப்பதற்கான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த புதிய வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள தாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள ப்ளொக்சென் மத்திய நிலையத்தை நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கோல்டன் விசாவைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுடனும் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளிடம் விசா ஒன்றுக்காக 60 டொலர்கள் அறைவிடப்பட்டு வருவதாகவும் அந்த வகையில் கடந்த காலங்களில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளிடம் ஒன் எரைவல் விசா இலவசமாக வழங்கப்பட்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த 60 டொலர் காரணமாக சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு விருப்பம் தெரிவிப்பதில்லை என்றும் அதன் மூலம் ஆயிரக்கணக்கில் டொலர்களை செலவு செய்யும் உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவது தவிர்க்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.இலங்கையானது வங்குரோத்து நிலையை அடைந்துள்ள நிலையில்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்று நாட்டின் பொருளாதாரத்தை நிலையானதாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சந்தர்ப்பத்தில் சுற்றுலாத்துறை மற்றும் கல்வித்துறையை இணைத்துக் கொண்டு இவ்வாறான புதிய வேலைத் திட்டங்களை ஆரம்பிப்பது காலத்திற்கு பொருத்தமானது என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த காலங்களில் வீதியில் இறங்கி போராட்டங்களை மேற்கொண்டவர்களின் எதிர்பார்ப்பை தற்போது அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 





தொழில்நுட்பக் கோளாறு, முப்பது மணிநேரம் தாமதமான விமானம்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளான ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம், சுமார் 30 மணி நேரம் தாமதமாக நேற்று (17) காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கடந்த (15) அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் விமான நிலையத்துக்குச் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL 605 என்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.இதனால்,இவ்விமானம்

நேற்றுக் காலை 07.40 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானத்தில் 05 சிறுவர்கள், 17 பணியாளர்கள் உட்பட 218 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 06 பொறியியலாளர் குழுவொன்று கடந்த (15) அவுஸ்திரேலியா சென்று இந்த விமானத்தை சீர்செய்து உரிய திருத்தங்களை மேற்கொண்ட பின்னர், விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.   நன்றி தினகரன் 




அரச விரோத செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது

ஜனநாயகத்தை தவறாக வழி நடத்த எவருக்கும் இடமில்லை

எந்த ஒரு அரசாங்கமும் அத்தகைய செயற்பாடுகளுக்கு இடமளிக்காது

சுதந்திர மக்கள் பேரவை பிரதிநிதிகளிடம் மஹா சங்கத்தினர் தெரிவிப்பு

ஜனநாயகத்தை தவறாக வழி நடத்தி அரச விரோத செயற்பாட்டை உருவாக்க எவரேனும் முயற்சி செய்வார்களாயின் அதற்கு இடமளித்து அரசால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரச நிர்வாகத்தை மேற்கொள்ளும் போது சில தேவைகளுக்கமைய சட்டங்களை நிறைவேற்றி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் வணக்கத்திற்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்தை அளவுக்கதிகமாக அனுபவித்தால் நாட்டில் பிரச்சினை ஏற்பட்டு அரசாங்கமும் மக்களும் சிரமத்துக்குள்ளாக நேரிடுமென நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான

டலஸ் அழகப் பெரும, பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ், டிலான் பெரேரா, வசந்த யாப்ப பண்டார, உதயன கிரிந்திகொட, முன்னாள் நகர சபை உறுப்பினர் ஆனந்த சனத்குமார ஆகியோர் நேற்று (20) அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து மல்வத்தை, அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் இருவருக்கும் தெரிவிப்பதற்காக அவர்கள் அவ் விஹாரைகளுக்கு விஜயம் செய்தனர்.

மல்வத்த மகாநாயக்க தேரர் அதிவணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்து விடயங்களை தெரிவித்த பின்னர் டலஸ் அழகப் பெரும உள்ளிடோர் அஸ்கிரிய விகாரைக்கு சென்று அதிவணக்கத்துக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர்.இவ் வேளையில் அஸ்கிரிய பிரிவின் அனு நாயக்கர் வணக்கத்துக்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி, ஆவணப்படுத்துனர் மெதகம தம்மாநந்த, சிரேஷ்ட செயற்குழு சங்க சபை உறுப்பினர் கொடகம மங்கள ஆகிய தேரர்களும் அங்கு சமுகமளித்திருந்தனர்.அங்கு கருத்து தெரிவித்த அஸ்கிரிய அனு நாயக்கர், இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் நாட்டுக்கு பாதிப்பு நிலைமை ஏற்படுமானால் அது தொடர்பாக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் விடயங்களை குறிப்பிட்டு மக்களை அறிவுறுத்துவது மக்களின் பிரதிநிதிகளின் பொறுப்பு என சுட்டிக்காட்டினார். ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் போலவே பேச்சு சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த வாதமும் இல்லை என்றும் சுதந்திரத்தை அதிகமாக அனுபவிப்பதால் சிக்கல் ஏற்படும் என்றால் அங்கு ஏதோ பிரச்சினை உள்ளதென அவர் தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் மூலம் கிடைக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி நடவடிக்கையில் ஈடுபடுவதால் பல சிக்கல்கள் உருவாகி அரசு போன்று பொதுமக்களும் சிரமத்துக்குள்ளாவதால் அவ்வாறான சந்தர்ப்பங்களில் அதனை கட்டுப்படுத்த பல சட்டங்களை கொண்டு வர அரசாங்கத்துக்கு நேரிடுகிறதென தம்மதஸ்ஸிசி தேரர் தெரிவித்தார்.

இன்று எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் அன்று அரசாங்கக் கட்சியிலிருக்கும் போது நாட்டின் தேவைக்காக பல சட்டங்களை கொண்டு வந்துள்ளதையும் அவர் இங்கு ஞாபகப்படுத்தினார். ஏதேனும் ஒரு சட்டத்தால் மக்களின் வாழ்க்கை சுதந்திரத்திற்கு, ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்படுமானால் அதற்கு எதிராக செயல்பட வேண்டும் எனவும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக மேலும் ஆராய்ந்ததன் பின்னர் அது தொடர்பாக உறுதியான கருத்தை தெரிவிப்பதே சிறந்ததென அனுநாயக்க தேரர் தெரிவித்தார்.

இந்த சட்டத்தில் குறைகள் காணப்பட்டால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் அடிப்படைப் பொறுப்பு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவ செய்யும் உறுப்பினர்களுக்கே உள்ளதெனவும் மகா சங்க தேரர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்ய முடியாது என்பதால் அது தொடர்பான கருத்துக்களை மாத்திரமே தெரிவிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக அதிகளவு பேசப்பட்டு வருவதால் மகா சங்கத்தினரிடம் ஆலோசனை நடத்த முன்வந்திருந்தாலும் சில சட்டங்கள் பாராளுமன்றத்தில் மகாசங்கத்தினரின் கருத்தைக் கேட்காமலேயே நிறைவேற்றப்பட்டுள்ளதாக தம்மதஸ்ஸி தேரர் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 

 



தப்புல டி லிவேரா சார்பில் நேற்று சட்டத்தரணி ஒருவர் TIDயில் ஆஜர்

07 பக்க எதிர்ப்பு ஆட்சேபனையும் கையளிப்பு

பயங்கரவாத தடுப்புப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் நேற்றைய தினம்,முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக

அவரது சட்டத்தரணியே ஆஜரானார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலத்தை பதிவு செய்து கொள்வதற்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவில் ஆஜராகுமாறு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், அவருக்குப் பதிலாக நேற்றைய தினம் அவர் சார்பில் சட்டத்தரணி ஒருவரே ஆஜரானார்.

வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, இவ்விடயம் தொடர்பில் மேற்படி குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான ஏழு பக்கங்கள் அடங்கிய எதிர்ப்பு ஆட்சேபனையை நேற்றைய தினம் பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு சமர்ப்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் பாரிய சதித்திட்டம் இடம்பெற்றுள்ளதென்ற சர்ச்சைக்குரிய கருத்தை, முன்னாள் சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா 2021 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தார்.

அதேவேளை, இத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்காக நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, கடந்த 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது. அதன் பிரதியொன்றை அப்போதைய சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேராவிடம் கையளிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதன் பின்னர், சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா 2021 ஆம் ஆண்டு சட்ட மாஅதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த அவர் இக்குண்டுத் தாக்குதலின் பின்னணியில் பாரிய சதித்திட்டம் இடம்பெற்றிருந்ததாகவும் அது தொடர்பில் சாட்சிகள் ஊடாக கண்டறியப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதையடுத்து முன்னாள் சட்ட மாஅதிபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டுமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பல சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்  நன்றி தினகரன் 



நுவரெலியாவில் மலர்க் கண்காட்சி

வசந்த காலத்தை முன்னிட்டு வருடந்தோறும் நுவரெலியா மாநகரசபை ஏற்பாடு செய்யும் மலர்க் கண்காட்சி இவ்வருடமும் விக்டோரியா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று (17) திங்கட்கிழமை இம்மலர்க் கண்காட்சி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நுவரெலியாவில் தற்போது வசந்த காலத்தை முன்னிட்டு நடைபெறும் களியாட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் வருவது அதிகரித்துள்ளது. இதன் ஒரு கட்டமாகவே வருடந்தோறும் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இம்முறை விக்டோரியா பூங்கா நவீன மயப்படுத்தப்பட்டு , புதிய அரியவகையான பூக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை வரை நடைபெறும் இந்த மலர் கண்காட்சியில் சுமார் 150 இற்கும் மேற்பட்ட பங்குபற்றுநர்கள் இணைந்துள்ளனர். அரச மற்றும் தனியார் பிரிவுகளிலிருந்து பல போட்டியாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.இம்மலர் கண்காட்சிப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு பணப்பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இம்மலர் கண்காட்சியில், பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ திஸாநாயக்க , நுவரெலியா மாநகரசபை விசேட ஆணையாளர் திருமதி சுஜீவ போதிமான , முன்னாள் மாநகரசபை முதல்வர் மஹிந்த தொடபேகம மற்றும் நுவரெலியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் மாநகரசபை முன்னாள் உறுப்பினர்கள், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.   நன்றி தினகரன் 




No comments: