உலகச் செய்திகள்

‘கொவிட் இன்னும் ஓயவில்லை’ சுகாதார அமைப்பு எச்சரிக்கை 

ஆண்டின் இறுதியில் உலகம் சாதனை வெப்பநிலையை எதிர்கொள்ள வாய்ப்பு

உலகின் ‘இராட்சத ரொக்கெட்’ நடுவானில் வெடித்துச் சிதறியது

ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை விட இந்திய மக்கள்தொகை 3 மில். அதிகம்

சீன அமைச்சர் புட்டினுடன் பேச்சு


‘கொவிட் இன்னும் ஓயவில்லை’ சுகாதார அமைப்பு எச்சரிக்கை 

கொவிட்–19 இன்னமும் தீர்மானிக்க முடியாத நோயாகவே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

நோய் எந்தப் போக்கில் செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நாளாகலாம். அதற்குமுன் அது மேலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 28 நாட்களில் 23,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 3 மில்லியன் பேருக்கு நோய் தொற்றியுள்ளது. பரிசோதனை குறைந்துள்ள நிலையில் அந்த எண்ணிக்கை பெரிது என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.

கொவிட்–19 நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் இன்னமும் அதிக மரணங்கள் ஏற்படுகின்றன, அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர் என்று நெருக்கடிக்கால பணிப்பாளர் மைக்கல் ரயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மூன்று மாதத்துக்கு ஒருமுறை சந்திக்கும் கொவிட்–19 நெருக்கடிக்காலக் குழு அடுத்த மாத ஆரம்பத்தில் கூடவுள்ளது.   நன்றி தினகரன்





ஆண்டின் இறுதியில் உலகம் சாதனை வெப்பநிலையை எதிர்கொள்ள வாய்ப்பு

Saturday, April 22, 2023 - 2:32pm

எல் நினோ வானிலை நிகழ்வு திரும்பும் அபாயம்

காலநிலை மாற்றம் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட எல் நினோ வானிலை நிகழ்வு காரணமாக 2023 அல்லது 2024இல் உலகின் சராசரி வெப்பநிலையில் அதிகரிப்பு ஏற்படலாம் என்று காலநிலை விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உலக வெப்பநிலை சற்று குறைவாக இருந்த பசிபிக் பெருங்கடலில் எல் நிேனா வானிலைப் போக்கின் மூன்று ஆண்டு நிகழ்வுக்குப் பின், இந்த ஆண்டு பிற்பகுதியில் அதன் எதிர்நிலையாக உள்ள வெப்பமான எல் நினோ போக்கு மீண்டும் திரும்பவுள்ளது.

எல் நினோவின்போது, பூமத்திய ரேகையில் மேற்கு நோக்கி வீசும் காற்று மெதுவாக வீசுவதோடு சூடான நீர் கிழக்குப் பக்கம் தள்ளப்பட்டு, வெப்பமான மேற்பரப்பு பெருங்கடலின் வெப்பநிலையை அதிகரிக்கிறது.

“2022இல் ஐரோப்பாவில் வெப்பநிலை சாதனை அளவுக்கு அதிகரிப்பதற்கு எல் நினோ காரணமாக இருந்த அதேநேரம் காலநிலை மாற்றம் பாகிஸ்தானில் கடும் மழையால் பயங்கர வெள்ளத்தை உருவாக்கியதோடு ஆர்டிக் கடலில் பனிக்கட்டி அளவு சாதனை நிலைக்கு குறைந்தது.

உலகின் சராசரி உலகளாவிய வெப்பநிலை தற்போது தொழில் புரட்சிக்கு முன்னரை விடவும் 1.2 பாகை அதிகம் உள்ளது. உலகின் பிரதான கரியமில வாயு உமிழ்வு நாடுகள் அதனைக் குறைக்க உறுதி அளித்தபோதும், உலக கரியமில வாயு உமிழ்வு கடந்த ஆண்டு தொடர்ந்து அதிகரித்துள்ளது.உலக வெப்பநிலை அதிகரிப்பு 2023இல் நடக்குமா அல்லது 2024இல் நடக்குமா என்பது இன்னும் அறியப்படாதுள்ளது. ஆனால் அது நிகழும் என்று நான் நினைக்கிறேன்” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கொப்பனிக்கஸ் காலநிலை மாற்ற சேவையின் பணிப்பாளர் கார்லோ பவுடெம்போ தெரிவித்துள்ளார்.

பிந்திய போரியல் கோடையில் எல் நினோ நிலைமை திரும்பும் என்று காலநிலை மாதிரிகள் கணிப்பதோடு ஆண்டு இறுதியில் வலுவான எல் நினோ ஒன்று உருவாக சாத்தியம் இருப்பதாகவும் பவுடெம்போ குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிக வெப்பமான ஆண்டு 2016 ஆக பதிவானதோடு அது வலுவான எல் நினோ நிகழ்வுடன் தொடர்புபட்டுள்ளது. இந்தப் போக்கு இன்றியும் காலநிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டுகளில் கடுமையான வெப்பநிலை பதிவாகி வருகிறது.

கடந்த ஆண்டு எட்டாவது அதிக வெப்பம் கொண்ட ஆண்டாக பதிவாகி இருந்தது. பசுமையில்ல வாயு உமிழ்வுகளால் இயக்கப்படும் நீண்ட கால வெப்பமயமாதல் போக்கை பிரதிபலிப்பதாக அது இருந்தது.

இம்பீரியல் கல்லூரி லண்டனின் கிரான்தம் நிறுவகத்தின் மூத்த விரிவுரையாளர் பிரடரிக் ஒட்டோ கூறியதாவது, “கடுமையான வெப்ப அலைகள், வரட்சி மற்றும் காட்டுத்தீ உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே அனுபவித்து வரும் காலநிலை மாற்ற தாக்கங்களை எல் நினோ வெப்பநிலை மேலும் மோசமாக்கலாம்” என்றார்.   நன்றி தினகரன் 





உலகின் ‘இராட்சத ரொக்கெட்’ நடுவானில் வெடித்துச் சிதறியது

Saturday, April 22, 2023 - 6:00am

உலகின் பெரும் செல்வந்தர் இலொன் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் புதிய இராட்சத ரொக்கெட்டான ஸ்டார்ஷிப் தனது முதல் பயணத்தில் நடுவானில் வெடித்துச் சிதறியது.

அமெரிக்காவின், டெக்சாஸ் கிழக்குக் கடற்கரையில் இருந்து கடந்த வியாழக்கிழமை (20) சோதனை முயற்சியாக ஆளில்லாமல் புறப்பட்ட இந்த ரொக்கெட்டின் விபத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுவரை உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ரொக்கெட்டான இது இரண்டு, மூன்று நிமிடங்கள் பறந்த நிலையில் கட்டுபாட்டை இழந்து வெடித்தது.

தனது நிறுவனம் சில மாதங்களில் மீண்டும் சோதனை முயற்சியை மேற்கொள்ளும் என்று மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.”ஸ்டார்ஷிப் இன் சோதனை ஓட்டத்தை ஒட்டி, ஸ்பேஸ்எக்ஸ் குழுவுக்கு வாழ்த்துகள். இதில் நிறைய பாடம் கற்றுக் கொண்டேன், சில மாதங்களில் அடுத்த சோதனை ஓட்டம் நடைபெறும்” என்று இலொன் மஸ்க் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில்் தெரிவித்துள்ளார்.

ஸ்டார்ஷிப் ரொக்கெட் 394 அடி (120 மிற்றர்) உயரத்துடன் 33 எஞ்சின்களைக் கொண்டுள்ளது. இதன்மூலம் பூமியின் சுற்றுப்பாதை, நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை விண்வெளிக்கு ஏப்ரல் 17 ஆம் திகதி செலுத்த திட்டமிட்டு பின்னர் பல்வேறு காரணங்களால் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை விட இந்திய மக்கள்தொகை 3 மில். அதிகம்

இந்த ஆண்டு நடுப்பகுதியில் மூன்று மில்லியன் மேலதிக மக்களுடன் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை இந்தியா முந்தவுள்ளதாக ஐ.நா நேற்று வெளியிட்ட கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டின் நடுப்பகுதியில் 1.4257 பில்லியன் கொண்ட சீன மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் இந்திய மக்கள் தொகை 1.4286 பில்லியனாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் உலக மக்கள் தொகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன முன்னாள் தலைவர் மாவோ சேதுங்கின் பெரும் அழிவை ஏற்படுத்திய விவசாயக் கொள்கைகள் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியால் இறந்த சூழலில், 1960களின் பின் முதல் முறையாக கடந்த ஆண்டு சீன மக்கள் தொகை சுருங்கியது.

இந்த வீழ்ச்சிக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் உயர்கல்வி பெற்ற பெண்களின் எண்ணிக்கை அதிகரித்ததை காரணமாக பலர் குறிப்பிடுகின்றனர்.

மக்கள் தொகை அதிகரிப்பு அச்சத்தால் 1980களின் நடுப்பகுதியில் செயற்படுத்திய ‘ஒரு குழந்தை கொள்கையை’ சீனா 2016 ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவந்ததோடு 2021 இல் ஒரு தம்பதிக்கு மூன்று குழந்தைகளை பெற அனுமதித்தது.

பிறப்பு விகிதம் வீழ்ச்சி கண்டு தொழில்படையும் வயது முதிர்வுக்கு உள்ளாகும் சூழலில் சீன மக்கள்தொகை வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் திட்டங்களை பல பிராந்தியங்கள் அறிவித்தபோதும் அந்த முயற்சிகள் தொடர்ந்தும் தோல்வியை சந்தித்து வருகின்றன.

மறுபுறம் 2011 தொடக்கம் சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில் எத்தனை மக்கள் உள்ளனர் என்ற உத்தியோகபூர்வ தரவு இந்தியாவிடம் இல்லை. தசாப்தத்திற்கு ஒருமுறை சனத்தொகை கணக்கெடுப்பு முன்னெடுக்கப்படுகின்றபோதும் கொரோனா தொற்று காரணமாக 2021 கணக்கெடுப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் இந்தியாவின் அரசியல் சூழல் காரணமாக இந்தப் பாரிய செயற்பாடு விரைவில் நடத்தப்பட வாய்ப்பு இல்லை என்று நம்பப்படுகிறது.

ஐ.நாவின் புதிய அறிக்கைப்படி 2023 நடுப்பகுதியில் உலக மக்கள் தொகை 8.045 பில்லியனைத் தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் உலக மக்கள்தொகையில் இந்தியா மற்றும் சீனாவில்் மூன்றில் ஒரு பங்கினர் வசிக்கின்றனர்.

கடந்த ஜூலையில் ஐ.நா வெளியிட்ட புள்ளிவிபரப்படி, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் எதிர்வரும் தசாப்தங்களில் மக்கள்தொகை வீழ்ச்சி காணும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

ஆபிரிக்க மக்கள்தொகை 2100 இல் 1.4 பில்லியனில் இருந்து 3.9 பில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு இதன்மூலம் அந்தப் பிராந்தியத்தில் உலக மக்கள்தொகையில் சுமார் 38 வீதமான மக்கள் வாழ்வார்கள். தற்போது அங்கு சுமார் 18 வீதமான மக்கள் வாழ்கின்றனர்.

அதிக கருத்தரிப்பு விகிதத்தைக் கொண்ட நாடுகள் அனைத்தும் ஆபிரிக்காவில் உள்ளன. இதில் நைகர் (6.7), சாட் (6.1), கொங்கோ (6.1), மாலி (5.8) மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு (5.8) முதலிடங்களில் உள்ளன. மிகக் குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட பகுதிகளாக ஹொங்கொங் (0.8), தென் கொரியா (0.9), மகாவு மற்றும் சான் மரினோ (1.1) மற்றும் அரூபா மற்றும் சீனா (1.2) உள்ளன.

ஐரோப்பாவை பெரும்பான்மையாகக் கொண்ட 10 மில்லியனுக்கும் அதிகமாக மக்கள் வசிக்கும் எட்டு நாடுகளின் மக்கள்தொகை கடந்த தசாப்தங்களில் சுருங்கியுள்ளன.

ஜப்பானிலும் மக்கள்தொகை வீழ்ச்சி கண்டு வருகிறது. 2011 மற்றும் 2021 க்கு இடைப்பட்ட காலத்தில் அந்த நாடு மூன்று மில்லியன் மக்களை இழந்துள்ளது.

இதேநேரம் ஒட்டுமொத்த உலக மக்கள்தொகை 40.4 பில்லியன் என்ற உச்சத்தை தொட்ட பின்னர் 2090களிலேயே சரிவை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்ப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 




சீன அமைச்சர் புட்டினுடன் பேச்சு

சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்பூ மொஸ்கோவில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில் இரு நாடுகளின் இராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லீ ஷாங்பூ, இரு இடதுசாரி கொள்கையுடைய நாடுகளுக்கும் வலுவான நட்பு இருப்பதாக தெரிவித்தார்.

சீன–ரஷ்ய நட்பில் எந்தவித எல்லையும் இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின்போது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கய் சோய்குவும் உடன் இருந்தார்.   நன்றி தினகரன் 

கடந்த மாதம் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மொஸ்கோவில் புட்டினை சந்தித்துப் பேச்சு நடத்தியமை குறிப்பிடத்தக்கது.



No comments: