எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 61 இறந்தவரின் அஸ்தியை வீட்டினுள் வைத்து பிரார்த்தனை ! அயோத்தி திரைப்படத்தின் ஊடாக நனவிடை தோய்தல் !! முருகபூபதி


எனது இந்தத் தொடரின் கடந்த 60 ஆவது அங்கத்தை படித்திருந்த சிலர்,  மின்னஞ்சலிலும்  வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசியிலும் தொடர்புகொண்டு,  தத்தமது கருத்துக்களை சொன்னார்கள்.

ஒரு சிலர் சினிமா பார்ப்பதுபோன்றிருந்ததாகவும் குறிப்பிட்டனர்.

அந்த அங்கத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் யாவும் உண்மை.  ஏற்கனவே அறிமுகமில்லாத ஒரு நாட்டில், ( பிலிப்பைன்ஸ் – சிபு தீவில் ) அம்மக்கள் எம்மிடத்தில் காண்பித்த கரிசனையை  என்றைக்குமே என்னால் மறக்க முடியவில்லை.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் நாம் அங்கிருந்த அந்த சில நாட்களில் எம்மீது பொழிந்த பாசத்தைப் பற்றி  அவர்களுக்குப்  புரியாத எனது தாய்மொழியில்தான் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

அங்கே நின்ற அந்த சில நாட்களில் நான் அவர்களின் மொழியில் சில சொற்களை கேட்டு தெரிந்துகொண்டு பேசியபோது   எனது உச்சரிப்பை ரசித்து அட்டகாசமாக சிரித்தார்கள்.

எனது மனைவியின் அப்பாவின் இறுதி நிகழ்வை நாம் முடித்துக்கொண்டு அவர்கள் ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் வீடு திரும்பினோம்.

வரும் வழியில்,  இறுதி நிகழ்வின்போது, நாம் அமரருக்கு செய்த சடங்கில் பயன்படுத்தப்பட்டவற்றை ( வாய்க்கரிசி உட்பட ) கடலில் கலந்துவிட்டு, வீட்டுக்கு வந்து,  ஒவ்வொருவராக குளித்துக்கொண்டிருந்தோம்.

நான் அந்த வீட்டின் முன் கூடத்திலிருந்து ,  மனைவியின் தங்கை சூரியகுமாரியின் ஏக புதல்வன்  காரூண்யனுக்கு வேடிக்கை காண்பித்துக்கொண்டிருந்தேன். அப்போது அவனுக்கு  மூன்று வயதுதான் இருக்கும்.  என்னோடு நெருக்கமாக ஒட்டிக்கொண்டான்.

அப்போது அந்த வீட்டிலிருந்த ஒரு பத்து வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை வெளி வாயிலிலிருந்து விரைந்து வந்தாள்.

அவளது கையிலே ஊதா நிறத்தில் சிறிய பெட்டகம் இருந்தது.

 “ அங்கிள்… அவர்கள் கொண்டுவந்து கொடுத்துவிட்டுச்செல்கிறார்கள்  “ என்றாள். வாங்கிப்பார்த்தேன்.

மாமனாரின் அஸ்தியுள்ள பெட்டகம்.  நான் அதனை பவ்வியமாக எடுத்து வந்து அந்த வீட்டின் பிரதான கூடத்தில் இருந்த யேசுநாதர் – தேவமாதா  உருவச்சிலைகளுக்கு முன்பாக வைத்தேன்.

அந்த வீட்டின் மூத்த மகள் மரியா உடனே அதற்கு அருகில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்தார். 

எமது சைவர்களின் வீடுகளில் இவ்வாறு மறைந்தவர்களின் அஸ்தியை உள்ளே கொண்டுவரமாட்டார்கள்.  அதனை கடலில் கரைப்பதற்குரிய குறிப்பிட்ட நாள் வரும் வரையில் வெளியேதான் வைத்திருப்பர். பெரும்பாலும் மயானத்தின் அலுவலக அறையில்தான் இருக்கும்.

ஆனால், பிலிப்பைன்ஸில்,  இந்த நடைமுறைகள் ஏதுமின்றி,  வீட்டினுள்ளே மாமனாரின் அஸ்தி வைக்கப்பட்டது.

அப்போது ஏப்ரில் ஈஸ்டர் காலம்.  அந்த வீட்டிலிருந்தவர்களின்


ஏற்பாட்டில் தினமும்  மாலை வேளையில் சூரியன் மறையும் பொழுதில்  சிலர் வெளியிலிருந்து வந்து யேசுபிரானின் சிலைக்கும்  அஸ்தியிருந்

த பெட்டகத்திற்கும் முன்னால் முழந்தாளிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

அவர்களின் பிரார்த்தனை எமக்குப் புரியவில்லை.  அந்த பிரார்த்தனை தினமும் அவ்வாறு நடந்தது.  நாமும் அங்கே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தோம்.

அக்காலப்பகுதியில் யேசுபிரானின் திருப்பாடுகள் காட்சியை வெளியே மிகப்பெரிய மைதானத்தில் அம்மக்கள்  ஒரு நாள் நடத்தினார்கள்.  நாமும் சென்றிருந்தோம்.

சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் அவர்களுடன் நடந்தோம்.

மாமனாரின் இளைய மகளும் பேரனும் துபாய்க்கும், நானும் மாலதியும் மாலதியின் தம்பி விக்னேஸ்வரனும் சிங்கப்பூருக்கும் புறப்படுவதற்கான ஏற்பாடுகளை கவனித்தோம்.

மாமனாரின் அஸ்தியை விமானத்தில் எடுத்துச்செல்வதற்கான அனுமதிக்குத் தேவைப்பட்ட  பத்திரங்களையும் அந்தச்  சகோதரி மரியா ஏற்பாடு செய்து கொடுத்தார்.

குடிவரவு – குடியகல்வு திணைக்களம், மற்றும் சுகாதார


திணைக்களம் ஆகியனவற்றிலெல்லாம் அனுமதி பெறவேண்டியிருந்தது.  எந்தச்சிக்கலுமின்றி அனைத்து ஏற்பாடுகளும் சுமுகமாக நடந்தன.

நாம் விடைபெறுவதற்கு முதல்நாள் இரவு அந்த வீட்டின் முற்றத்தில்  விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  பலரும் வந்திருந்தனர்.  தினமும் அங்கே வந்து பிரார்த்தனை பாடல்களை பாடியவர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

அவர்கள் மத்தியில் அவர்களின் மொழியிலேயே நான் நன்றி சொல்வதற்கு ஆசைப்பட்டேன்.  அங்கிருந்தவர்களில் சிலர் ஆசிரியைகளாக இருந்தனர். அவர்கள் மரியாவின் மூத்த சகோதரிமார்.

நான் சொல்லவேண்டியதை ஆங்கிலத்தில் சொன்னதும், அவர்கள் தமது மொழியை   ஆங்கிலத்திலேயே எழுதித்தந்தனர்.


எனது உச்சரிப்பைக்கேட்டு அவர்கள் அனைவரும் அட்டகாசமாகச் சிரித்தனர்.

நாம்  விடைபெற்று சிபு விமான நிலையம் சென்றோம்.  அவர்களின் கண்ணீர் இன்னமும் எனது கண்களில் தங்கியிருக்கிறது.

இந்த உண்மைக்கதையை சமகாலத்தில் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகவிருக்கும் அயோத்தி திரைப்படம் வெளிவந்துள்ள காலப்பகுதியில் உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.

எமது தமிழக இலக்கிய நண்பர், எழுத்தாளர்  எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய மூலக்கதையிலிருந்து பிறந்திருக்கிறது அயோத்தி திரைப்படம்.

ஒரு வட இந்திய இந்து குடும்பத் தலைவியின் பூதவுடலை தமிழ் நாட்டிலிருந்து அனுப்பி வைப்பதற்கு ஒருவர் எந்த பிரதியுபகாரமும் எதிர்பார்க்காமல் மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் பற்றிய கதைதான் அயோத்தி.

இறுதிவரையில் அந்த மனிதநேயவாதி ஒரு இஸ்லாமியர் என்பது


அந்த வட இந்திய இந்துக் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல ரசிகர்களாகிய எமக்கும் தெரியாது.

வட இந்திய அந்த இந்து குடும்பத்தலைவன், அந்தத்  தமிழ்நாட்டு இஸ்லாமிய சகோதரனை ஆரத்தழுவி கண்ணீர் சிந்துவார்.

மனிதம் இந்த உலகில் எங்கெல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கிறது பாருங்கள்.

அப்படி ஒரு காட்சியை அன்று 2006 ஆம் ஆண்டு இதே ஏப்ரில் மாதம்  பிலிப்பைன்ஸ் சிபு தீவில்  நான் கண்டேன்.

நாம் மூவரும் அமரரின் அஸ்தியுடன் விமானம் ஏறினோம்.

சிங்கப்பூரில் சில நாட்கள்.

எங்கே சென்றாலும், நான் செல்லும்  நாடுகளில் கலை, இலக்கிய ஊடகவியலாளர்களை தேடுவதுதான் எனது முதல் வேலை !

மறைந்த மாமனாருக்கு சிங்கப்பூரில் வதியும் சில எழுத்தாளர்களையும் நன்கு தெரியும்.  அவர்களில்  கண்ணபிரான், கனக லதா ஆகியோரும் முக்கியமானவர்கள்.

இவர்கள்  அடுத்தடுத்து துக்கம் விசாரிப்பதற்காக எம்மைத்தேடி வந்தார்கள். 


கண்ணபிரான் பற்றி அண்மையில் எனது முதல் சந்திப்பு தொடரிலும் எழுதியிருக்கின்றேன்.  1990 ஆம் ஆண்டு சென்னைக்கு சென்று திரும்பியவேளையில் அவரை முதலில் சந்தித்தேன்.  நானும் பிலிப்பைன்ஸிலிருந்து வந்திருப்பதை அறிந்ததும் விரைந்து வந்தார்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். இந்த பயணத்தின்போது அவர் சுமார் ஐந்து மணிநேரம் எம்முடன் உரையாடிக்கொண்டிருந்தார்.

ஈழத்து இலக்கிய உலகம், புலம்பெயர்ந்தோர் இலக்கியம், தமிழக இலக்கியச்சூழல், சிறு பத்திரிகைகள், எழுத்தாளர்கள், எழுத்தும் வாழ்க்கையும்… இப்படி பலதும் பத்தும் பேசினோம்.

 அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் சிங்கப்பூரின் தமிழ் கலை, இலக்கிய உலகம் பற்றிய அறிமுகத்தையே கண்ணபிரான் எனக்கு தந்துவிட்டார்.

மல்லிகை ஜீவாவின் வாழ்க்கைச்சரிதம் படித்து தான் பிரமித்துப்போனதாகவும், அதேசமயம் ஜீவா, சில பக்கங்களில் சில விடயங்களை வெளிப்படையாகச் சொல்லாமல், மறைமுகமாக பதிவுசெய்துள்ளார் என்ற கருத்தையும் சொன்னார்.

அன்று கண்ணபிரான் எனக்குத்தந்த தகவல்களின் அடிப்படையில், சிங்கப்பூர் தேசிய நூலகத்தையும் பார்க்கவேண்டும் என்ற ஆவல் எனக்குள்  பிறந்தது.

சிங்கப்பூர் தமிழ்முரசு நாளிதழில் நீண்ட காலம் ஆசிரிய பீடத்தில் பணியாற்றும் செல்வி கனகலதா இலக்கிய ஆர்வலரான இளைஞர் ஈழத்து நாதனுடன் எம்மைப் பார்க்க வந்தார்.

கனகலதா எங்கள் நீர்கொழும்பூரில் பிறந்தவர். அவரை அவரது குழந்தைப்பருவம் முதல் நன்கு அறிவேன்.  நான் அவரை 2006 இல்  சிங்கப்பூரில்  சந்தித்த காலப்பகுதியில் அவரது கவிதைத் தொகுதியை ( பாம்புக்காட்டில் ஒரு தாழை ) தமிழ் நாடு காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருந்தது.

தமிழக – இலங்கை – அவுஸ்திரேலியா எழுத்தாளர்கள் பலருடன் இலக்கிய நட்புறவிலிருப்பவர்.  இலங்கை நூல்கள் சிங்கப்பூர் வாசகர்களுக்கு சீராக கிடைப்பதற்கு ஆக்கபூர்வமான வழிவகைகளை ஆராயவேண்டும் என்றார்.

ஈழநாதன் அச்சமயத்தில் www. noolaham.net   இணையத்தளத்தில் இயங்கிக்கொண்டிருந்தார்.

இவர்பற்றி அந்த சந்திப்புக்குப்பின்னர் மல்லிகையிலும் சில குறிப்புகள் எழுதியிருக்கின்றேன்.

இவர் தொழில் நிமித்தம் அயலில் ஒரு நாட்டிற்குச் சென்றசமயம் எதிர்பாரதவகையில்  மாரடைப்பு வந்து  உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியையும் இங்கே தெரிவிக்கின்றேன்.

வாழ்ந்திருக்கவேண்டியவர் .   அற்பாயுள் மரணங்களை ஜீரணிப்பது மிகவும் கடினம்.

சிங்கப்பூர் என்றவுடன் எம்மவர்களுக்கு Shopping தான் உடனே நினைவுக்கு வரும். விதவிதமான ஆடை , ஆபரணங்கள், அழகு சாதனங்கள், மின்சார உபகரணங்கள் வாங்குவதற்காக உலகின் பல பாகங்களிலுமிருந்து பயணிகள் சிங்கப்பூருக்கு  வருவார்கள்.

இவர்களில் எத்தனை சதவீதத்தினர் சிங்கப்பூரில் கம்பீரமாக  வானுயர்ந்து எழுந்திருக்கும் தேசிய நூலகத்தின் பக்கம் சென்றிருப்பார்கள்..?

சிங்கப்பூருக்கு பயணப்படும் எம்மவருக்கு,  குறிப்பாக எமது எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.  சிங்கப்பூர் விக்ரோரிய வீதியில் அமைந்திருக்கும் தேசிய நூலகத்தையும் ஒரு தடவை தரிசியுங்கள்.

2006 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 24 ஆம் திகதி அந்த நூலகத்தின் தமிழ்ப்பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த திருமதி புஷ்பலதா நாயுடுவையும்  கலை, இலக்கிய ஆர்வலர் கனடா  மூர்த்தியையும் முதல் தடவையாக சந்தித்தேன்.

அவர்கள் எனக்கு அந்த நூலகம் பற்றி பல தகவல்களை சொன்னார்கள். பின்னாளில் கனடா மூர்த்தி பற்றி தனியாக ஒரு விரிவான பதிவே எழுதியிருக்கின்றேன். இவர்களுடன் இன்றும் தொடர்பிலிருக்கின்றேன்.

நண்பர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள்.

1951 ஆம் ஆண்டளவில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட அந்த நூலகம் 1960 இல் விரிவடைந்திருக்கிறது. சிங்கப்பூரியரான டொக்டர் லீ கொங் சியான் என்பவர் பெரும் செல்வந்தர்.  அவரது பெயரில் ஒரு தர்ம ஸ்தாபனம் இயங்குகிறது.

இந்த ஸ்தாபனம் இந்தத்  தேசிய நூலகத்தின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் 60 மில்லியன் டொலர்களை வழங்கியிருக்கிறது.

அந்த பிரமாண்டமான கட்டித்தில் அன்று நின்றுகொண்டிருந்தபோது எனக்கு 1981 ஆம் ஆண்டு மே மாதம் எரிக்கப்பட்ட யாழ். பொது நூலகமும்  .நண்பர் பேராசிரியர் எம். ஏ. நுஃமானின் புத்தரின் படுகொலை கவிதையும் உடன் நினைவுக்கு வந்தது.

( தொடரும் )

letchumananm@gmail.com

 

 

 

 

No comments: