ஏற்றுமதிக்கு தயாராகும் குரங்குகளும் இறக்குமதியாகும் கடன் உதவிகளும் ! அவதானி


என்னமோ தெரியவில்லை.  இலங்கையில் குரங்குகளின் வகிபாகம் ஐதீகத்திலிருந்தே தொடங்கியிருக்கிறது.

இந்திய வனத்தில் மேய்ந்துகொண்டிருந்த மானைப் பிடித்துத் தாருங்கள் என்று சீதாப் பிராட்டியார், கேட்டதனால் வந்த வினையால்  அத்தருணத்தில் இரவணனால் அவள் சிறைப்படுத்தப்பட்டு இலங்காபுரியின் அசோக வனத்தில் வைக்கப்பட்டாள்.

அவளை மீட்டுவருவதற்கு இராமர் அனுப்பிய தூதுவர் குரங்கு இனத்திலிருந்து வந்த அனுமார்.  அவரோ இராவணனின் சேவகர்களினால் வாலில் நெருப்பு வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.  பழி தீர்க்க அவர் லங்காவை தகனமாக்கினார்.  இராமாயணத்தில் லங்கா தகனம் பகுதியும்


முக்கியமானது.

இந்த ஐதீகக் கதைகள் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரும்  தொடர்ந்திருப்பதை அறிவீர்கள்.  கலவர காலத்தில்  தீய சக்திகள் சிறுபான்மை இனத்தவரின் சொத்துக்களுக்கு நெருப்பு வைத்தன.  அந்தத்  தீய சக்திகள் யாழ். பொது நூலகத்தையும் விட்டு வைக்கவில்லை. அவ்வேளையில் அது கண்டும் மௌனமாக அமைதி காத்திருந்தவரான  ரணில் விக்கிரமசிங்காவின் வீட்டு நூலகத்தையும் கடந்த ஆண்டு கோத்தா கோ போராட்டத்தில்  தீய சக்திகள் எரித்தன.

இலங்கைக்கு  தூதுவனாக வந்த அனுமார், இறம்பொடையில் சிலையாக கோயில் கொண்டுள்ளார். இராவணனால் சிறை வைக்கப்பட்ட சீதாப்பிராட்டிக்கும் கோயிலிருக்கிறது. இராமருக்கும் கோயில் இருக்கிறது.

இவர்கள் சிலையாக குடியிருக்கும் பிரதேசங்களில் மாத்திரமின்றி,  பொலன்னறுவை, கேகாலை,  தம்புள்ளை, முல்லைத்தீவு முதலான வனம் சார்ந்த பகுதிகளில்  குரங்குகளின் பிறப்பு வீதம் அதிகம்.  இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் சிறிய உடைமைகளையும் அவை பறித்துக்கொண்டு மரத்தில் தாவி ஏறிவிடும்.

சிறுவயதில் நாம் படித்த தொப்பி வியாபாரி கதையைப்போன்று எதனையாவது குரங்கை நோக்கி விட்டெறிந்தால், தான் பறித்து வந்ததை அதுவும் விட்டெறியும்.

நாட்டில் பெருகியிருக்கும் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்போகிறார்கள் என்ற செய்தி பரவலாக வெளியானதும்  சமூக வலைத்தளங்களில்  “ மீம்ஸ்   “ பதிவேற்றும் நவீன கலைஞர்கள் தங்கள் குசும்புத்தனத்தை தொடங்கிவிட்டனர்.

குதிரைப் பந்தயத்திடலில் என்ன நடக்கிறது..?  என்பதே தெரியாமல்,  ஓடும் குதிரைகள் போன்று,  இலங்கையில் சுதந்திரமாக தாவித்தாவி ஓடித் திரிந்து  உயிர்வாழ்வதற்காகவும் தம் பசி போக்குவதற்காகவும்  வாழ்ந்துகொண்டிருக்கும்  குரங்குகளும் தற்போது இலங்கை அரசின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றவிருப்பதை அறியாமலிருக்கின்றன.

இந்த ஜீவராசிகள் தொடர்பாக இவற்றை வாங்கவிருக்கும் சீனாவுடன்  பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கிறது இலங்கை  அரசு.  எப்பொழுதும் சீனாவுக்குப் போட்டியாக களம் இறங்கும் அமெரிக்காவும் குரங்குகளை கேட்டு இலங்கையுடன் பேசுவதற்கு தயாராகியிருக்கிறது.

இவ்வாறு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பான விவாத அரங்கும் ஊடகங்களில் ஆரம்பமாகிவிட்டன.

இவை செறிந்து வாழும் பிரதேசங்களில்  வேட்டைத் தொழிலில் ஈடுபட்டவர்கள்,  குரங்குகளையும் வேட்டையாடி  “ தொங்கு மான் இறைச்சி  “ என்ற பெயரில் விற்றனர் என்ற கதையும் முன்னர் உலாவியது.

குரங்குகளினால் தென்னைப் பயிர் உட்பட பல பயிர்கள் சேதமடைவதாக பொதுமக்களின் புகாரும் நீண்டகாலமாக தொடருகிறது.

சீனாவுக்கு ஒரு இலட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பான வழிமுறைகளை ஆராய்வதற்காக குழுவென்றை அமைப்பதற்கான அமைச்சரவை பத்திரமும் தயாரிக்கப்படவிருக்கிறது.


கேகாலை மாவட்டத்தில் சுமார் எட்டு இலட்சம் மக்கள் இருப்பதாகவும், அதே சமயம் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குரங்குகளும் அங்கே சீவிப்பதனால், அவற்றின் தொல்லையினால் இங்கிருக்கும் விவசாயிகளும் தோட்டப்பயிர் செய்கையாளர்களும் பாதிக்கப்பட்டிருப்பதனாலும், இவர்கள் குரங்கு ஏற்றுமதியை முழு மனதுடன் ஆதரிக்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் பெருகிய ஒட்டகங்கள் அதிகம் நீரை அருந்துவதனால், அதன் உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கு  ஆயிரக்கணக்கில் ஒட்டகங்களை சுட்டுக்கொல்வதற்கு அந்த நாட்டின் அரசு முடிவெடுத்திருந்தது. இந்தப்பெரிய கண்டத்திற்கு 235 வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்து கடற்படையினர்,  அங்கிருந்த குற்றவாளிகளை கைதிகளாக அழைத்து வந்து இறக்கினர்.

அதனால், ஆஸ்திரேலியாவுக்கு கைதிகள் கண்ட தேசம் எனவும் ஒரு பெயர் இருக்கிறது.  அவ்வாறு வந்தவர்களின் சந்ததியினர்தான் இங்கே நீண்ட நெடுங்காலமாக தாமுண்டு தம் பாடுண்டு என வாழ்ந்த ஒட்டகங்கள் அதிகம் தண்ணீரை அருந்துவதனால் கொல்வதற்கு தீர்மானித்தனர்.

இப்போது முதல் தடவையாக  குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு தயாராகியிருக்கும் இலங்கை, தனது ஐதீகத்தை திரும்பிப்பார்க்குமேயானால்,  குரங்குகளின் வகிபாகத்தையும் தெரிந்துகொள்ள முடியும்.

தனது மனைவியை  மீட்பதற்கு தன்னுடன் அழைத்து வந்த


வானரப்படைதான்,  கற்களை சுமந்து  கடலைக்கடக்க பாலம் அமைத்தன.  அதனால் இராமர் பாலம் தோன்றியது என்பது ஐதீகம்.

அவ்வாறு பாலம் அமைத்தும் காவியத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு இனம் இன்று இலங்கை அரசின் பொருளாதார தேவைக்காக ஏற்றுமதிப் பண்டமாகியிருக்கிறது.

அதே வேளை சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, மற்றும் சீனா, அமெரிக்கா,  இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, உட்பட ஐரோப்பிய நாடுகளிடம் கடனுதவி கேட்டு கையேந்தி நிற்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான பங்களாதேஷையும் இலங்கை இதுவிடயத்தில் விட்டு வைக்கவில்லை.

கடனுதவி வழங்க முன்வரும் நாடுகளின் பிரதிநிதிகளை கைகூப்பியும், கைகுலுக்கியும் வரவேற்கும் இலங்கை அரசின் பிரதிநிதிகள்,  மறுபுறத்தில் உள்நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருந்த குரங்குகளை ஏற்றுமதி செய்யும்போது கைகூப்பி வணங்கி வழியனுப்பி வைக்கப்போவதில்லை.

முன்னர் தேயிலையையும் இரப்பரையும் கொக்கோவையும் வெளிநாடுகளுக்கு  ஏற்றுமதி செய்துகொண்டிருந்த இலங்கை,  பின்னாளில் தேங்காயையும் முட்டையையும் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது.

இப்போது,  குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்வந்துள்ளது.

இனி, குரங்குகளும் இலங்கையின்  ஏற்றுமதி  பொருளாதாரத்தில்  ஒரு அங்கம்தான். 

75 வருட ஆட்சியாளர்கள் எம்மை எங்கே கொண்டு சென்று விட்டுள்ளனர் பாருங்கள் !   பொருளாதார  நெருக்கடியினால், எங்காவது வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல மாட்டோமா ? என மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கும்போது,  இதுபோன்ற எந்த ஏக்கமும் அற்று சுதந்திரமாக மரத்துக்கு மரம் தாவிக்கொண்டிருந்த குரங்குகளை வாழ்த்தி  விடைகொடுப்போம்.  எங்கிருந்தாலும் வாழ்க !

---0---

 

 

 

 

 

No comments: