கடவுளை கண்டேன் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 திராவிட முன்னேற்ற கழகம் தமிழக அரசியலில் வேரூன்ற தொடங்கிய காலத்தில் அதன் அங்கத்தவர்களாகவும், அனுதாபிகளாகவும் இருந்த பலர் திரையுலகிலும் ஈடுபட்டு வந்தார்கள். அவர்களில் ஓருவர் தான் கே ஆர் பாலன்.


கலைஞர் கருணாநிதிக்கு ஏதோ விதத்தில் சொந்தக்காரரான இவர் பலவித தொழில்களில் ஈடுபட்டிருந்தார். கண்ணதாசன் தொடங்கி நடத்திய தென்றல் திரை என்ற பத்திரிகையை விலைக்கு வாங்கி அதனையும் சில காலம் நடத்தி விட்டு கண்ணதாசனின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் கண்ணதாசனுக்கே விற்றும் விட்டார். இது தவிர ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வந்தார். இந்த பாலன் தனது பெயரிலேயே பாலன் பிக்சர்ஸ் என்ற ப

ட நிறுவனத்தை ஆரம்பித்து முதன் முதலில் தயாரித்த படம் தான் கடவுளை கண்டேன்.

இந்தப் படத்தில் நடிப்பதற்கு முதலில் ஒப்பந்தமானவர் புரட்சி நடிகர் எம் ஜி ஆர். ஆனால் படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுதவும் , நகைச்சுவைக்கு சந்திரபாபுவும் , டைரக்ட் செய்ய ஏ எஸ் ஏ சாமியையும் பாலன் , எம் ஜி ஆரின் அனுமதி இன்றி ஒப்பந்தம் செய்திருந்தார். அன்றைய சூழலில் இவர்கள் மூவருடனும் எம் ஜி ஆருக்கு மனஸ்தாபம் இருந்து வந்த காரணத்தால் படத்தில் நடிக்க எம் ஜி ஆர் மறுத்து விட்டார். ஆனால் பாலன் அசரவில்லை. உடனடியாக வளர்ந்து வரும் நடிகரான கல்யாணகுமாரை ஒப்பந்தம் செய்து படத்தை தயாரித்து வெளியிட்டு விட்டார்!

கிராமத்தில் சமூக சேவகனாக சுற்றி வரும் ரத்தினம் நல்லவன் ஆனால் முரடன். பணக்காரரான பூபதியின் பகை ரத்தினத்துக்கு ஏற்படுகிறது . இதனால் அவன் தங்கை கனகாவின் திருமணமும் நின்று விடுகிறது. தான் பூபதியின் மகள் என்பதை சொல்லாமல் ரத்தினத்தை காதலிக்கிறாள் சித்ரா. அவனது முரட்டுத்தனத்தையும் மெல்ல மெல்ல மாற்றுகிறாள். இதனைத் தொடர்ந்து இராணுவத்தில் சேருகிறான் ரத்தினம். மீண்டும் ஊர் திரும்பும் அவனுக்கு பல சிக்கல்கள் காத்திருக்கின்றன. அதனை எவ்வாறு சமாளிக்கிறான் என்பதே மீதிக் கதை.

கதாநாயகன் ரத்தினமாக வரும் கல்யாணகுமார் தனது வழமையான நடிப்புடன் முரட்டுத்தனமான வேசத்தையும் இதில் வெளிப்படுத்தி இருந்தார். ஆனாலும் அவரின் நடிப்பு சுமார்தான். சித்ராவாக வரும் தேவிகா துடுக்காகவும், அழகாகவும் வந்து நம்மை கவருகிறார். சோகத்தை கொட்ட சௌகார் ஜானகி. அவருக்கு ஜோடி முத்துராமன். இவர்களுடன் குமாரி ருக்மணி, டி எஸ் முத்தையா, ஜெமினி சந்திரா, கரிக்கோல் ராஜு ஆகியோரும் நடித்தனர்.

இவர்களின் கதை ஒருபுறம் இருக்க இன்னுமொரு கதையும் படத்துடன் இணைந்து நகருகிறது. எம் ஆர் ராதா, எம் ஆர் ஆர் வாசு, சந்திரபாபு, நாகேஷ், கொட்டப்புளி ஜெயராமன் இவர்கள் பண்ணும் அட்டகாசம், கூத்து மிகை என்றாலும் சிரிக்க வைக்கிறது. படத்தின் ஓட்டத்துக்கும் துணை புரிகிறது. இந்தப் படம் மீண்டும் திரையிட்ட காலத்தில் விளம்பரங்களில் இவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது.

படத்தின் பாடல்களை கண்ணதாசன் இயற்ற கே வி மகாதேவன் அருமையாக இசையை வழங்கி இருந்தார். தீபத்தை வைத்துக் கொண்டு திருக்குறளும் படிக்கலாம் பாடல் கருத்தாழம் மிக்கதாக சுசிலாவின் குரலில் அமைத்தது. அண்ணா அண்ணா சுகம் தானா பாடல் சகோதரியும், காதலியும் தங்கள் உரிமையை வலியுறுத்தும் புதுமையான பாடலாக எழுதப் பட்டு அதனை ஜமுனாராணியும், சுசிலாவும் குழைவாக பாடியிருந்தார்கள். இது தவிர விடிய விடிய பேசினாலும் தூக்கம் வராது, உங்கள் கைகள் உயரட்டும் , பாடல்களும் கவரும் படி அமைந்தன. சந்திரபாபுவும், சுகுமாரியும் ஆடிப் பாடும் கொஞ்சம் தள்ளிக்கணும் பாடலில் சந்திரபாபுவின் ஸ்டைல் சூப்பர்!


படத்துக்கு கதை வசனம் எழுதியவர் கருணாநிதியின் உறவினரான சொர்ணம். கதை சுமாராக அமைந்த போதும் வசனங்கள் கருத்துடனுடன் அமைந்தன. படத்தொகுப்பை ஜம்பு கவனித்துக் கொண்டார். ஆர் என் பிள்ளை ஒளிப்பதிவு செய்திருந்தார். அனுபவமிக்க இயக்குனரும் , எம் ஜி ஆருக்கு முதல் முதலில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கொடுத்தவருமான ஏ எஸ் ஏ சாமி படத்தை டைரக்ட் செய்திருந்தார். ஆனாலும் அவரது அனுபவ முத்திரையை காணவில்லை.

கடவுளைக் கண்டேன் சுமாராக ஓடிய போதும் , இதே படத்தின்
சாயலைக் கொண்டு அடுத்த ஆண்டு சிவாஜி நடிப்பில் முரடன் முத்து வெளிவந்தது. இதிலும் தேவிகாவே கதாநாயகியாக நடித்திருந்தார்.


முதல் படத்திலேயே எம் ஜி ஆருடன் முரண்பட்டு , அவருக்கு பதில் கல்யாணகுமாரை நடிக்க வைத்து படம் எடுத்த பாலன் அடுத்த ஆண்டே எம் ஜி ஆருடன் உறவை சரி செய்து கொண்டு அவர் நடிப்பில்

தாயின் மடியில் படத்தை தயாரித்து வெளியிட்டார். ஆனால் என்ன கண்ணதாசன், சந்திரபாபு, சாமி மூவரும் அந்த படத்தில் இல்லை!


No comments: