இலங்கைச் செய்திகள்

 யாழ் - சென்னை விமான சேவை 12 இல் ஆரம்பம்

சுற்றுலா தலமாகும் மட்டக்களப்பு மாவட்டம்

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நல்லாசி வேண்டி விசேட பூசை வழிபாடுகள்

விடுதலைப்புலிகள் என தெரிவிக்கப்படும் 3 வெவ்வேறு வயதுடையவர்களின் என்புக்கூடுகள் மீட்பு

 இலங்கையர் ஒருவர் 10,000 டொலர் இந்திய ரூபாவை வைத்திருக்க அனுமதி

ரணில் விக்ரமசிங்க சட்டத்தரணியாகி 50 வருடங்கள் பூர்த்தி; பாராட்டு விழா


யாழ் - சென்னை விமான சேவை 12 இல் ஆரம்பம்

பயணச்சீட்டு நேற்று முதல் வழங்கப்படுகிறது

யாழ். பலாலி சென்னை விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது விமானம் (12) காலை 10.15 மணிக்கு பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கும். இவ்விமானம், மீண்டும் பிற்பகல் ஒரு மணிக்கு  இங்கிருந்து சென்னை நோக்கிப் புறப்படும்.

வாரத்துக்கு நான்கு நாட்கள் இந்தச் சேவை நடைபெறுமென வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் சுனிஸ் திஸநாயக்க தெரிவித்தார்.

இந்த விமான சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதால், வட மாகாணத்தின் சுற்றுலா பணியக அதிகாரிகள் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை பார்வையிட்டனர்.

யாழ்.பலாலி – சென்னைக்கான விமான சேவை டிக்கற் வழங்கும் முற்பதிவு நேற்று முதல் ஆரம்பமானது.   நன்றி தினகரன் 




சுற்றுலா தலமாகும் மட்டக்களப்பு மாவட்டம்

2023 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு திட்டம் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று உயர்மட்ட கலந்துரையாடல்

அரச காணிகளை அடையாளம் காணவும் தீர்மானம் மட்டு மாவட்டத்தை 2023 இல் சுற்றுலா  தலமாக மாற்றுவதே நோக்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, காணிகளை அடையாளம் காணும் கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (30) நடைபெற்றது.

இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெருகல் தொடக்கம் மட்டக்களப்பு வரையான கரையோர பிரதேசத்தில், அரச மற்றும் தனியார் காணிகளை அடையாளம் காண்பது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.  இந்தப் பிரதேசத்தை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்து மட்டக்களப்பை 2023 ஆம் ஆண்டில் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே. கருணாகரன் உட்பட பல பிரதேச செயலாளர்கள் ZOOM தொழில்நுட்பத்தினூடாக இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் டபிள்யூ.ஏ. சூலானந்த பெரேரா, வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.சி.எம். ஹேரத் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.   நன்றி தினகரன்






மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நல்லாசி வேண்டி விசேட பூசை வழிபாடுகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நல்லாசி வேண்டி பம்பலப்பிட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார் பழைய கதிரேசன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளை நடத்தினர்.

சர்வதேச இந்துமத பீடத்தின் ஏற்பாட்டில் ஆலய தர்மகர்த்தா இராஜேந்திர செட்டியார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.

கெளரவ அதிதியாக இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் வை.அனிருத், முன்னாள் ஜனாதிபதியின் இந்து சமய விவகார இணைப்பாளர் கலாநிதி இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன் அரசியல் பிரமுகர்கள், சமயத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சமய வழிபாட்டில் கலந்து கொண்டதன்பின் ஆலய நிர்வாகத்தினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர். ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பூஜை வழிபாடுகளை நடத்தினார்.   நன்றி தினகரன் 






விடுதலைப்புலிகள் என தெரிவிக்கப்படும் 3 வெவ்வேறு வயதுடையவர்களின் என்புக்கூடுகள் மீட்பு

- சயனைட் குப்பிகள், புலிகள் இலக்கத்தகடு மீட்பு
- அருகில் எறிகணையின் பாகமும் மீட்டெடுப்பு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, உடையார் கட்டு குரவில் பகுதியில் விடுதலைப்புலிகள் என இனம் காணப்பட்ட முன்று வகையான மனிதர்களின் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியினை பண்படுத்தும் போது கடந்த நவம்பர் 20ஆம் திகதி, மனித  எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன.

இது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றில் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நேற்று (30) அதனைத் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் சட்டவைத்திய அதிகாரி றொஹான், தடயவியல் பொலிசார், கிராம அலுவலகர், பொலிசார் முன்னிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்போது மூன்று வகையான மனித எச்சங்களின் மாதிரிகள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
நிலத்தில் தறப்பாளால் சுற்றப்பட்ட நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளன.

மனித எச்சங்களுடன் துப்பாக்கி ரவைகள் மற்றும் உடைகள், என்பன காணப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளின் சயனைட், இலக்கத்தகடு என்பனவும் இதன்போது குறித்த பகுதியில் இருந்து மீட்னப்பட்டுள்ளன. அதில் ஒரு சயனைட் முழுமையாகவும் மற்றைய இரண்டு சயனைட்களும் பகுதியளவிலும் காணப்பட்டுள்ளது.

செபமாலை ஒன்றும், ஞ என தொடங்கும் இலக்கத்தகடும் இதில் காணப்படுகின்றது. நீள காற்சட்டை, மேற்சட்டை மற்றும் பெண்களின் உள்ளாடையுடன் ஒரு எச்சமும்,மற்றுமொரு எச்சம் சிறுவயதுடைய ஒருவருடையது என்றும் மற்றையது பெரியவர் ஒருவருடையது எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் எறிகணை ஒன்றின் ஒரு பகுதியும் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மனித எச்சங்களை மரபணுசரிசோதனையின் பின்னர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு  சட்டவைத்திய அதிகாரிக்கு நீதிபதி பணித்துள்ளார்.

(புதுக்குடியிருப்பு விசேட நிருபர்) - நன்றி தினகரன் 






இலங்கையர் ஒருவர் 10,000 டொலர் இந்திய ரூபாவை வைத்திருக்க அனுமதி

இலங்கையின் கோரிக்கைக்கு இந்திய அரசு அங்கீகாரம் வழங்கியதாக தகவல்

 

இலங்கையர் ஒருவர் 10,000 டொலர் பெறுமதியான இந்திய ரூபாவை (INR) வைத்திருக்க அனுமதிக்கும் புதிய ஒழுங்குமுறைக்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய ரூபாவை வெளிநாட்டு நாணயமாக அனுமதிக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு, இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் நேற்று தெரிவித்தன.

ஆசிய நாடுகளில் இந்திய ரூபாவை பிரபலப்படுத்தவும், அமெரிக்க டொலரில் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வசிப்பவர்கள் இப்போது இந்திய ரூபாவை மற்றொரு நாணயமாக மாற்றிப் பயன்படுத்த முடியுமென்றும், இதை செயல்படுத்துவதற்கு, இலங்கையிலுள்ள வங்கிகள் இந்திய வங்கியுடன் (Nostro account) நொஸ்ட்ரோ கணக்குகளை” ஆரம்பிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

(நாஸ்ட்ரோ கணக்கு என்பது ஒரு வங்கி மற்றொரு வங்கியில் வெளிநாட்டு நாணயத்தில் வைத்திருக்கும் கணக்கைக் குறிக்கிறது)

இலங்கை வங்கிகளின் கடல்கடந்த வங்கி அலகுகள், (OBU) வதிவிடமில்லாதவர்களிடமிருந்தும் சேமிப்பு மற்றும் வைப்புகளை ஏற்க அனுமதிக்கப்பட்டுள்ளமை மற்றொரு முக்கியமான அம்சமாகுமென இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஊடக அறிக்கைகளின்படி, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பணம் அனுப்புதல் உட்பட அனைத்து நடப்புக் கணக்கு பரிவர்த்தனைகளும் இலங்கையில் வசிப்பவர்கள் மற்றும் வசிக்காதவர்களுக்கிடையில் மேற்கொள்ளப்படலாம்.

இந்த ஏற்பாட்டை சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா அங்கீகரித்த போதிலும், இலங்கை மத்திய வங்கி நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக ரூபாவை அறிவிக்கவில்லை.   நன்றி தினகரன் 






ரணில் விக்ரமசிங்க சட்டத்தரணியாகி 50 வருடங்கள் பூர்த்தி; பாராட்டு விழா

- அனைத்து பேதங்களையும் புறந்தள்ளிவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்காக கைகோர்க்க ஜனாதிபதி அழைப்பு

இன, மத மற்றும் மக்களின் கவலைகள் கொண்ட கடந்த காலத்தை நோக்கி புறந்தள்ளிவிட்டு 75ஆவது சுதந்திர தினத்தின்போதாவது நாடடின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளை தவிர்த்துக் கொள்ள முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கலந்துரையாடப்பட்டது போல நாட்டிலுள்ள சட்டத்தரணிகள் பங்களிப்புச் செய்தால் இந்த இலக்கை அடைய முடியுமென்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும், இது எளிதான விடயம் அல்லாத போதும் சாதிக்க முடியாத விடயம் என்பதற்கில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் அரசியல்வாதிகளால் மட்டும் இதனை சாதிக்க முடியாது என்றும் இதற்கு சட்டத்தரணிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்க சட்டத்தரணியாகி 50 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் நேற்று (03) இரவு ஷங்கிரிலா ஹோட்டலிலுள்ள லோட்டஸ் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதிக்கான கௌரவிப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஒட்டுமொத்த அமைப்பு முறையும் இளைய தலைமுறையினரால் கேள்விக்குட்படுத்தப்படும்போது நாம் அனைவரும் சவாலுக்கு உள்ளாக நேரிடுகிறது. இது பொருளாதார சவாலிலும் பார்க்க பாரதுரமானது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த கால காயங்களை ஆற்றுவதா அல்லது அதனை மேலும் வளரவிடுவதா என தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பம் தற்போது நாட்டுக்கு கிடைத்துள்ளது.

நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்காமல் இன, மத வேறுபாடு மற்றும் மக்களின் சில யதார்த்தமான கவலைகளால் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டிலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் ஒன்று சேர்ந்தால் அனைத்து பாரிய பிரச்சினைகளையும் பின்தள்ளிவிட்டு 75ஆவது சுதந்திர தின நிகழ்வின்போது நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இது தத்தமது கருத்துக்களுக்கு வரவேற்பளிப்பதற்கும் மக்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை உள்ளடக்கிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதற்கும் அதேவேளை அரசியலமைப்புக்குட்பட்ட அரசாங்கமொன்றை முன்னெடுத்துச் செல்வதற்கும் வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முதற் பெண்மணி தலைமை பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவுக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேராவினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோரும் உரையாற்றினர்.
ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா வரவேற்புரையையும் சட்டத்தரணி குஷான் டி அல்விஸ் நன்றியுரையையும் ஆற்றினர்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய, சட்டம், சிறைச்சாலைகள் விவகார மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபஷ, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் எதிர்கட்சித் தலைவரும் மூத்த பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்சன யாபா, சந்திம வீரக்கொடி, உதய கம்மன்பில, எம்.ஏ. சுமந்திரன், லக்ஷ்மன் கிரியெல்ல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் ஆலோசகர் அகில விராஜ் காரியவசம், ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி. ஆர். எச்.எஸ். சமரதுங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் கே.பி.தயாரத்ன, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன, ஐ.தே.க பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, நவீன் திஸாநாயக்க, ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர் சென்ட்ரா பெரேரா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.  நன்றி தினகரன் 



No comments: