அவளொரு வெளிச்சம் போன்றவள்... (வித்யாசாகர்) குவைத்!

 யிரே..  


யார் நீ? தெரியாது
தெரிய நான் முயலவில்லை

எனக்குப் பயணம்; இந்தக் காற்றைப்போல


வெளிச்சத்தைப் போல
கடல் பாயும் நதியாக நீள்கிறது.

இடையே கேள்வி இல்லை
நீ யாரென்று.
சிந்திக்கவேயில்லை
நீ யாரென்று.

எனக்கு நீ பெண்ணாக இருக்கிறாய்
ஆணாகவும் இருக்கிறாய்
உறவாக இருக்கிறாய்
நட்பாகவுமிருக்கிறாய்,
காதலூருகிறது; அன்பு நிறைகிறது;
உயிர் நிறைக்கிறாய் என்னுள்.

நான் தேடாமலே
காணுமிடமெல்லாம் காண்கிறேன் உன்னை
பிறகு, எங்கு நான்; நீ யாரென்று கேட்க ?

காற்றைச் சுவாசிக்கும்
லப்டப் போல
உள்ளே இசைக்கிறேன் உன்னை
உயிர்வரை தொடுகிறாய்
வீணையைப்போல மீட்டுகிறேன்
உள்ளே ஆனந்த ஒலி யெழுப்புகிறாய்
பரவசம் ஒளிர்கிறது எங்கும்
எல்லாம் நினைவில் நிகழ்கிறது
உணர்வில் தெரிகிறது
கனவு இல்லை
பொய் இல்லை
அப்பட்டமாய் நிகழ்கிறது; உன்மத்தம் கொள்கிறாய்
ஏதோவொன்று மறைந்து
ஏதோ ஒன்றாக மாறுகிறது
ஆனால் அது நீயில்லை, அவளில்லை, அவன் மட்டுமுமில்லை
எல்லோரிடமும் நிகழ்கிறது உனக்கான அன்பு;

மழை சோவென்று பெய்யும் குளுமை
கற்பூரம் எரிந்து சுவாலை அசையும் நளினம்
ஒரு சிநேகத்தோடு பூனை பார்க்கும் கனிவு
நாயொன்று வாள் குழைத்து
ம்ம்.. ம்ம்மென்று துள்ளும் நேசம்
காற்றசைந்து தரையுதிரும் பூவிதழின் தொடுதல்
வானம் வெளுக்கத்துவங்கும் காலையில்
இலையுதிர்க்கும் பனித்துளி ஈரம்
கடல் தள்ளும் நுரை வெடிக்கும் சத்தம்
கரையும் காகம்; பறக்கும் கிளிகள்; எங்கோ பேசிக்கொண்டேயிருக்கும்
ஊர்க்குருவியென எல்லாம்
நினவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது உன்னை

உன்னிடம் மனம் பேசுகிறது
அதுவாக நீரில் ஊரும்
ஒளி போல்
உணர்வுள் அணி செய்கிறது
அழகு பூக்கிறது
அன்பின் உயிர் சத்தம் கேட்கிறது

உனக்குள்ளும்
எனக்குள்ளும்
ஏதோ நிகழ்கிறது
நீ யார்?
நீ நதியாகிறாய், இசையாகிறாய்
வண்ணம் தெளிக்கிறாய்
வானில் பறக்கிறாய்
மண்ணுள் துளிர்க்கிறாய்
மழையில் நனைகிறேன் நீ நனைகிறாய்
பேசுகிறேன் நீ பேசுகிறாய்
யார் யாரோ போல் தெரிகிறாய்
எங்கும் அன்பு எதிலும் அன்பு
அன்பொன்றே வேதம் அன்பொன்றே அழகு
அன்பு மட்டுமே எல்லாம்போல்;

நீயும் அப்படித்தான்
அன்பின் ஆழம் நீ
அன்பின் அழகு சொட்டும்
நீர்த்துளி நீ
ஒரு காற்ருக்குமிழ் வெடித்து சிதறும்
மாயமற்ற வண்ண யெழில்;

கொஞ்சம் நில்லேன்,

எப்படியோ,
உணர்வின் உயிரிழை போல் இசையும்
சில உன் நினைவை சுமக்க
மனம் மறுப்பதேயில்லை
கொஞ்சமும் சலிப்பதுமில்லை
காதல் நிகழ்ந்துகொண்டே யிருக்கிறது
உன்னிடம் அன்பு தீர்வதே யில்லை;

ஏன், சிலரிடம் இப்படி ?
சிலரைக் காண்கையில் மட்டும்
ஏனிப்படி ?
ஏன் இது நிகழ்கிறது? அறிவு சிந்திக்கத்தான் செய்கிறது
மனம் தான், மனம் தான், மனம் அது தான்
அது அப்படித்தான் போலும்,
அன்பின் தீ கனன்று எரியும் கிணறது மனம்
பேராழக் கடல்; அன்பை கடல் அணைப்பதேயில்லை

அன்பு நீளும்...

இந்தக் காற்றும்
வெளிச்சமுமாய் நீளும்...

நீளட்டும்
நீ வா; போவோம்
நீயும் நானும் அந்தக் காற்றோடிருப்போம்
வெளிச்சத்தோடிருப்போம்
வானும் மண்ணும் போல
இப் பிரபஞ்சமெங்கும் நிறைந்திருப்போம்; நீக்கமற!!  
-------------------------------------------------------

வித்யாசாகர்

வாட்சப் செய்ய - பேச - 09840502376

No comments: