இலங்கைக்கு 1999 ஆண்டு சென்று திரும்புகையில் அங்கே நேர்ந்திருந்த துரிதமான மாற்றங்களைப் பார்த்து வியப்படைந்தேன்.
அந்த வியப்பு 1997 ஆம் ஆண்டு சென்றிருந்தபோதே ஆரம்பமாகியிருந்தது. இந்த இரண்டு ஆண்டு காலத்திலும் என்னால் வடக்கு
– கிழக்கு மாகாணங்களுக்குச் செல்ல முடியாமல்போனது மிகுந்த கவலையை தந்தது.
அங்கெல்லாம் போர் மேகங்கள்
சூழ்ந்திருந்தன. எங்கள் ஊருக்கு வடக்கிலிருந்து தமிழர்கள் இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்த
காலப்பகுதி அது.
அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த யாராவது ஒருவர்
அவுஸ்திரேலியா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளை சென்றடைந்திருப்பார்கள். அவ்வாறு புலம்பெயர்ந்து சென்றவர்கள் அனுப்பும் பணத்தை வைத்துக்கொண்டு, வீடுகளுக்கு வாடகை முற்பணம் வழங்கி செலவுகளை சமாளித்துக்கொண்டிருந்த சில குடும்பங்களை இந்தப்பயணத்தில் சந்திக்க நேர்ந்தது.
1987 ஆம் ஆண்டு தாயகத்தை விட்டு புறப்பட்டு வந்த எனக்கு
அந்த பன்னிரண்டு வருட காலத்தில் ( 1987 – 1999 ) எங்கள் ஊரிலும் எங்கள்
குடும்பத்திலும் நேர்ந்திருந்த மாற்றங்களும் வியப்பினைத்தந்தது.
எங்கள் குடும்பத்து வீடுகளில்
தொலைபேசி இணைப்பு வந்திருந்தது. இக்காலப்பகுதியில் எங்கள் ஊரில்
தொலைபேசி இல்லாத வீடுகளையே காண்பது அரிது.
மத்திய கிழக்கில் பணியாற்றிக்கொண்டிருந்த எனது இளைய தம்பி ஶ்ரீதரன், நீர்கொழும்பில் ஒரு வீட்டைக் கட்டியிருந்தார்.
நானும் ஒரு வீட்டை 1990 களில் அங்கே வாங்கியிருந்தேன். 1990 வரையில் எங்கள் குடும்பத்திற்கென இருந்தது ஒரே ஒரு வீடு மாத்திரம்தான்.
அந்த வீட்டின் முகவரி:
இலக்கம் 20 , சூரிய வீதி, நீர்கொழும்பு. இந்த வீடு இலங்கை இலக்கிய உலகில் கொஞ்சம் பிரசித்தமானது. இலங்கை – இந்திய எழுத்தாளர்கள் பலர் வந்து சென்ற
வீடு.
இந்த வீட்டில்தான் 1972 காலப்பகுதியில் நாம் ஆரம்பித்த வளர்மதி நூலகம் இயங்கியது. வளர்மதி என்ற கையெழுத்து
சஞ்சிகையும் நடத்தினோம். இங்கு சில இலக்கிய சந்திப்புகளும் நடந்திருக்கின்றன.
1997 ஆம் ஆண்டு சென்றபோது அன்றையதினம் திங்கட்கிழமை
இரவு. அக்காவும் தங்கையும் என்னையும் மகன் முகுந்தனையும் வரவேற்பதற்காக விமான நிலையம்
வந்திருந்தார்கள்.
அவர்கள் எம்மை நேரே அப்போது
அக்காவின் குடும்பத்தினர் வசித்துக்கொண்டிருந்த எங்கள் பூர்வீக வீட்டுக்கு ( 20 – சூரியவீதி ) அழைத்துச்சென்றார்கள்.
அம்மா வாசலில் நின்று உச்சிமோந்து வரவேற்றார்.
மறுநாள் செவ்வாய்க்கிழமை. நானும் மகனும் சற்று தொலைவில் இருக்கும் எனது தம்பி
ஶ்ரீதரன் கட்டிய புதிய வீட்டுக்கு செல்லத் தயாரானோம்.
அம்மா நாள் – நட்சத்திரம்
பார்க்கும் இயல்புள்ளவர். “ தம்பியின் வீடு புதியது. நீ… நீண்ட காலத்திற்கு
பிறகு வந்திருக்கிறாய். இன்று செவ்வாய்க்கிழமை. வேண்டாம். நாளை அங்கே செல்லலாம். “ என்றார்கள்.
“ என்னம்மா சொல்கிறீர்கள்…? உங்கள் கடவுள் படைத்த
நாட்கள் எல்லாம் நல்ல நாட்கள்தானே..? “ என்றேன்.
“ விதண்டா வாதம் பேசாதே. நாளை புதன் கிழமை போகலாம்.
நீ… இன்று அயலில் இருக்கும் உனது நண்பர்களை பார்த்துவிட்டு வா. “ என்றார் அம்மா.
அந்த செவ்வாய்க்கிழமை எனது
பொழுது அம்மா சொன்னவாறே கழிந்தது.
மறுநாள் புதன் கிழமை. தம்பியின் புதிய வீட்டுக்குச் செல்லத்தயாரானேன். எனது மகனையும் தயார்ப்படுத்தினேன்.
அம்மாவைக் காணவில்லை. அக்காவிடம் கேட்டேன்.
“ அம்மா அருகிலிருக்கும் நாற்சந்திக்கு ஓட்டோ அழைத்து
வரச்சென்றிருப்பார்கள் “ என அக்கா சொன்னார்.
“ நடந்துசெல்லும் தூரத்திலிருக்கும் தம்பி வீட்டுக்கு எதற்கு ஓட்டோ “ எனக்கேட்டவாறே நானும் சந்திக்கு வந்தேன். அங்கே
அம்மா ஒரு ஓட்டோ சாரதியுடன் பேசிக்கொண்டிருந்தார்.
“ அம்மா நடந்து போவோம். எதற்கு ஓட்டோ “ என்றேன்.
“ பேசாமல் வா. அவ்வளவு தூரம் நீயும் பேரனும் நடக்கமாட்டீர்கள் “ என்று சொல்லி எம்மை அந்த ஓட்டோவில் அழைத்துச்சென்ற
அம்மா, தம்பி வீட்டுக்கு முன்னால் இறங்கியதும், தனது இடுப்பில் செருகியிருந்த ஒரு மணிபேர்ஸிலிருந்து
40 ரூபாவை எடுத்து ஓட்டோ சாரதியிடம் நீட்டினார்.
அம்மாவின் சேலை முந்தானையில்தான்
முன்னர் சில்லறை நாணயங்கள் இருந்திருப்பதை பார்த்திருக்கின்றேன். தற்போது இடுப்பில் மணிபேர்ஸ். முன்னேற்றம்தான்.
தம்பி வீட்டுக்குள் வந்தபோது எனது மூத்த தம்பி நித்தியானந்தனின் குடும்பத்தினர் அங்கே எம்மை வரவேற்றனர். தம்பிமார் நித்தியானந்தனும் ஶ்ரீதரனும் அப்போது மத்திய கிழக்கில் பணியாற்றிக்கொண்டிருந்தனர்.
ஶ்ரீதரன் தனது மனைவி மகளுடன்
சவூதியில் இருந்தார்.
அதனால், இவரது புதிய வீட்டில்
மூத்த தம்பியின் குடும்பத்தினரும் அம்மாவும் இருந்தனர்.
நான் தம்பியின் பிள்ளைகளை
அணைத்து மகிழ்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, அம்மா எனது கைபற்றி அழைத்துக்கொண்டு தனது
அறைக்குள் வந்தார். அங்கிருந்த ஒரு மர அலுமாரியை திறந்து அங்கிருந்து ஒரு ஆயிரம் ரூபா
நாணயத்தாளை எடுத்து எனது சேரட் பொக்கட்டுக்குள் திணித்தார்.
“ எனக்கு எதற்கம்மா பணம்…? “ என்றேன்.
“ வைத்திரு. நீ அவுஸ்திரேலியன் டொலர்தான் கொண்டுவந்திருப்பாய்.
பிறகு வெளியே சென்று அதனை மாற்றிக்கொள். தற்போதைக்கு உனது கைச்செலவுக்கு இதனை வைத்துக்கொள் “ என்றார் அம்மா.
நான் மூர்ச்சித்து விழவில்லை. ஒரு காலத்தில் நான் காலையில்
வீரகேசரிக்கு வேலைக்குப் புறப்படும்போது, “ தம்பி… ஐம்பது சதம் இருந்தால் தந்திட்டுப்போ..வெற்றிலை வாங்கவேண்டும் “ என்று சொன்ன அம்மாவா, பத்தாண்டு காலத்திற்குள் நான் அவுஸ்திரேலியா வாசியாகி திரும்பி வந்திருக்கும் வேளையில் எனக்கு ஆயிரம் ரூபா நோட்டைத் தருகிறார்.
இதனைத்தான் அரசியல், சமூக,
பொருளாதார மாற்றம் என்பதா…?
வீட்டுக்கு வீடு தொலைபேசி
ஊடாக “ இன்று என்ன சமையல், என்ன கறி “ எனக்கேட்கும் - ஊர் வம்பு பேசும் நாகரீகம் வளர்ந்திருந்ததை அவதானிக்க
முடிந்தது.
வெளிநாடுகளிலிருந்து வரும்
நாணயம் மக்களின் வாழ்வுக்கோலங்களை படிப்படியாக மாற்றிக்கொண்டிருந்தது.
அதுவரை காலமும் நடந்து
சென்றுகொண்டிருந்தவர்களுக்கு சிறிய தூரத்திற்கும் ஓட்டோ தேவைப்பட்டது. எங்கள் நீர்கொழும்பூரில் நான் அப்போது கண்ட காட்சிகள்தான் பறவைகள்
என்ற நாவலை எழுதத்தூண்டியது.
1999 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை சென்றிருந்தபோது, அவுஸ்திரேலியாவிலும் மற்றும் ஜெர்மனி, சுவிட்சர்லாந்திலும் நான் எடுத்த படங்கள் சிலவற்றை எனது தம்பியின் பிள்ளைகளுக்கு காண்பித்துக்கொண்டிருக்கையில், அம்மா குறுக்கே வந்து சொன்னார்கள்.
“ என்னதான் பறவை உயரத்தில்
வானத்தில் வட்டமிட்டுப் பறந்தாலும்,
ஆகாரத்திற்காக தரைக்குத்தான் வரவேண்டும்.
“
அம்மா எதிலும் பொடி வைத்துப்
பேசும் இயல்புகொண்டவர். அம்மாவின் அந்த வாக்கையே முன்வைத்து பறவைகள் நாவலை எழுதத்
தொடங்கினேன்.
சென்னையில் நண்பர் செ.
கணேசலிங்கனின் குமரன் பதிப்பகத்தின் துணையோடுதான் எனது சில கதைத் தொகுதிகள் வெளிவந்தன.
அவர் என்னை நாவல் எழுதுமாறு தூண்டிக்கொண்டேயிருந்தார்.
அதுவரையில் சுமையின் பங்காளிகள்,
சமாந்தரங்கள், வெளிச்சம், எங்கள் தேசம் ஆகிய கதைத் தொகுதிகளை வரவாக்கியிருந்த நான்,
2000 ஆம் ஆண்டில் பறவைகள் நாவலை எழுதத் தொடங்கினேன்.
போர்ச்சூழலினால் வடக்கிலிருந்து நீர்கொழும்பு பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்து வந்தவர்கள்
மற்றும் புலம்பெயர்ந்து சென்றவர்களின் வாழ்வுக்கோலங்களை சித்திரிப்பதற்காக சில பாத்திரங்களை
உருவாக்கி அந்த நாவலை எழுதினேன்.
எங்கள் ஊர் வீதிகள், கோயில்கள், மக்கள் மற்றும் காட்சிகளை இந்த நாவலில் நடமாடவிட்டேன்.
அந்த நாவலில் எனது அம்மாவும்
அக்காவும், தங்கை மகனும், அக்கா மகளும் எனது சில நண்பர்களும் வருகிறார்கள். இவர்கள்தவிர, யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த தமிழர்களும்
முஸ்லிம்களும் வருகிறார்கள்.
2000 ஆம் ஆண்டு எழுதத்தொடங்கிய பறவைகள் நாவலை 2001 ஆம் ஆண்டுதான் நிறைவுசெய்தேன்.
இடையில் சிறுகதைகள், கட்டுரைகளை
தொடர்ந்து எழுதினேன். எங்கள் தேசம் என்ற கதைத்
தொகுப்பும் வெளியாகியிருந்தது. அத்துடன் எனக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களிடமிருந்து
வந்த பல இலக்கிய நயமுள்ள கடிதங்களையும் தொகுத்துக்கொண்டிருந்தேன். மல்லிகை ஜீவா நினைவுகள்
என்ற நூலையும் எழுதத் தொடங்கியிருந்தேன்.
1997 ஆம் 1999 ஆம் ஆண்டுகளில் தாயகம்
சென்று திரும்பிய பின்னர் எனக்கு ஏற்பட்ட உத்வேகத்தினால், தினமும் குறைந்தது பத்துப்பக்கமாவது
கையால் எழுதிக்கொண்டிருந்தேன்.
இக்காலப்பகுதியில் நண்பர்
நடேசன் MANY COMMUNITIES: ONE HUMANITY என்ற சிந்தனையின் அடிப்படையில் உதயம் ஆங்கில
– தமிழ் இருமொழிப்பத்திரிகையை ஆரம்பித்திருந்தார். பலர் இணைந்து ஆரம்பித்த உதயம் பத்திரிகை
1998 ஏப்ரில் மாதம் முதல் வெளிவரத்தொடங்கியது. அதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம்:
Tamil News Pty Ltd.
உதயம் பத்திரிகை கருத்தரங்குகளையும்
நடத்தியது. மெல்பனில் நடந்த கருத்தரங்குகளில் தோழர் லயனல்போப்பகே, கலாநிதி அமீர் அலி
ஆகியோரும் உரையாற்றினர்.
சிட்னியில் நடந்த கருத்தரங்கில்
கலாநிதி பராக்கிரம செனவிரத்தின உரையாற்றினார்.
கவிஞர் அம்பியின் தலைமையில்
“ பத்திரிகையும் சுய தணிக்கையும் “ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தினோம்.
இக்கருத்தரங்கில் செ. பாஸ்கரன்,
ஆசி. கந்தராஜா, சந்திரகாசன், நட்சத்திரன் செவ்விந்தியன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
கூட்டுறவு என்பது இதழ்கள்,
பத்திரிகைகளுக்கு சரிப்பட்டு வராது. உதயம் பத்திரிகையும் கூட்டுறவின் அடிப்படையில்தான்
வெளியானது.
பின்னர் அதில் இணைந்திருந்த
சிலர் படிப்படியாக வெளியேறினார்கள். இறுதியில்
நடேசனே உதயத்தை தாங்கிப்பிடித்தார். பங்குதாரர்களை
ஒரு விருந்துக்கு அழைத்து அவர்களின் பங்குப்பணத்தை மீளக்கொடுத்தார்.
இறுதியில் உதயம் பத்திரிகையின்
தமிழ்ப்பகுதிகளை நானும் ஆங்கிலப்பகுதிகளை நடேசனும் கணேசலிங்கம் என்ற நண்பருமே கவனித்தோம்.
நான் கலை, இலக்கியம், சினிமா சார்ந்த பகுதிகளில் மாத்திரம் கூடுதல் கவனம் செலுத்தினேன்.
நண்பர் எஸ் . கிருஷ்ணமூர்த்தி சினிமா விமர்சனங்கள் எழுதினார்.
தமிழ்நாட்டிலிருந்து மூத்த
பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா,
பாவண்ணன் ஆகியோரும் பத்தி எழுத்துக்களை எழுதினர்.
உதயம் பத்திரிகையை பிடிக்காத
சிலர் அதன் பிரதிகளை கடைகளிலிருந்து தூக்கிச்சென்றனர். மாற்றுச் சிந்தனை சமூகத்தில் தோன்றிவிடலாகாது என்ற மனப்பான்மையில்
வானொலிகளையும் தமது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர்.
அவுஸ்திரேலியாவில் வெளியான
தமிழ் இதழ்கள் பற்றிய அவதானம் எனக்கிருந்தமையால், ஒரு நீண்ட கட்டுரையை எழுதினேன். இக்கட்டுரை
2000 ஆம் ஆண்டில் வெளியான எனது இலக்கிய மடல் நூலில் இடம்பெற்றுள்ளது.
சென்னையிலிருந்து நண்பர்
கணேசலிங்கன் தொடர்ந்தும் என்னை நாவல் எழுதுமாறு வலியுறுத்திக்கொண்டிருந்தார்.
“ சிறுகதைகள், கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், சிறுவர்
கதைகள் எல்லாம் எழுதிவிட்டீர். எப்போது நாவல் எழுதப்போகிறீர்… ? “ என்று கடிதம் எழுதிக்கேட்டிருந்தார்.
பறவைகள் நாவலை முடித்துவிட்டு,
பிரதியை அவருக்கு தபாலில் அனுப்பினேன்.
அப்போது அதனை அவருக்கே
சமர்ப்பணம் செய்யவிருக்கும் எனது விருப்பத்தையும் அவரிடம் தெரிவித்தேன். அந்த மாதம்
2001 டிசம்பர்.
அந்த மாதம் 31 ஆம் திகதி தமிழகத்தின் மூத்த படைப்பாளியும் பாரதி இயல் ஆய்வாளருமான எங்கள் தாத்தா
தொ. மு. சி. ரகுநாதன் திடீரென மறைந்துவிட்டார்.
அவருக்கே பறவைகள் நாவலை
சமர்ப்பணம் செய்யுமாறு கணேசலிங்கன் சொன்னார்.
அவ்வாறே பறவைகள் நாவல்
வெளிவந்தது.
பறவைகள் நாவலுக்கு 2002 ஆம் ஆண்டு இலங்கையில் தேசிய சாகித்திய விருது கிடைத்தது. தற்போதைய ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்கா அவ்வேளையில் பிரதமராகவிருந்தார். அவரே பண்டாரநாயக்கா ஞாபகார்த்த
சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த தேசிய சாகித்திய விழாவில் அதனை வழங்கினார்.
அம்மாவின் வலியுறுத்தலினால்,
மீண்டும் இலங்கை சென்று அம்மாவையும் அழைத்துக்கொண்டு அந்த விருதை வாங்கச்சென்றேன்.
அந்த சான்றிதழும் வெண்கலச்சிலையும்
என்னோடு இருக்கிறது. ஆனால், அம்மா அடுத்த ஆண்டு
( 2003 ) விடைபெற்றுவிட்டார்.
இனிய இலக்கிய நண்பர் செ.
கணேசலிங்கனும் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி சென்னையில் மறைந்தார்.
“ என்னதான்
பறவை உயரத்தில் வானத்தில்
வட்டமிட்டுப் பறந்தாலும், ஆகாரத்திற்காக தரைக்குத்தான் வரவேண்டும். “ எனச்சொல்லி பறவைகள் நாவலுக்கு முதல் அடி எடுத்துக்கொடுத்த அம்மாவும் இன்றில்லை.
தொ.மு. சி. ரகுநாதனும்
இல்லை. செ. கணேசலிங்கனும் இல்லை.
நினைவுகள் மாத்திரம் நெஞ்சைவிட்டு
அகலவில்லை.
( தொடரும்
)
No comments:
Post a Comment