இலங்கை அரசியல் வழக்கம்போல், இந்த 2022 ஆம் ஆண்டிலும் பலதரப்பட்ட காட்சிகளுடன் கடந்து சென்றுகொண்டிருக்கிறது.
காட்சிகள் மாறியிருந்தாலும்,
மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏதும் மாற்றங்கள்
நேர்ந்திருக்கிறதா.. ? எனப்பார்த்தால், குறிப்பிட்டுச்
சொல்லுமளவுக்கு ஏதும் இல்லை.
ஆனால், பாராளுமன்றத்தின் ஆசனங்களில் அமர்ந்திருக்கும் பிரதிநிதிகளின்
சிந்தனையிலும் செயல்களிலும் மாற்றங்கள் நேர்ந்திருக்கின்றன.
இவர்கள் அனைவரும் அடுத்து வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத்
தேர்தல், மற்றும் பாராளுமன்றத் தேர்தலையொட்டி தங்களுக்குள்ளும் பொது வெளியிலும் மாற்றங்களை நாடி ஓடவேண்டியவர்களாகவே இருக்கின்றனர்.
உரிய காலத்தில் பாராளுமன்றம்
கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று எதிரணிக்கட்சிகள் கூறிவந்தாலும், தமது கட்சி மக்களிடம் மீண்டும் ஆதரவைப் பெற்றுக்கொள்ளுமா..?
என்ற சந்தேகத்தையும் மனதில் சுமந்துகொண்டுதான் வாய்ச்சவடால் பேசுகின்றன.
இவர்களின் நாடித்துடிப்பினை
புரிந்துகொண்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா காய் நகர்த்துகிறார்.
அவருக்கு பல முனைகளிலிருந்தும்
வரும் அழுத்தங்கள்தான் அரசியல் காய் நகர்த்தலை
உந்த வைக்கிறது.
கடந்த பொதுத்தேர்தலில் படுதோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்கா, பாராளுமன்றத்திற்குள் மீண்டும் பிரவேசிப்பதற்கு
ராஜபக்ஷ குடும்பத்தினரின் அரசியல் வீழ்ச்சி மிகவும் பிரதானமான காரணமாக இருந்திருக்கிறது.
இவ்வேளையில், வாட்ஸ் அப்பில் குசும்புத்தனங்களை பதிவேற்றும் ஒரு நபர் காட்சிப்படுத்திய
செய்திதான் நினைவுக்கு வருகிறது.
கோத்தபாய ராஜபக்ஷ பதவியை
துறந்து வெளிநாடுகளுக்கு பறந்து சென்ற காலப்பகுதியில் இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைந்துவிட்டார்.
அதனால், அவரது புதல்வன்
சார்ள்ஸ் இங்கிலாந்தின் அரசரானார்.
இந்த இரண்டு காட்சிகளையும்
ஒப்பிட்டு,
கோத்தா போனதால் இவர் வந்தார்
என ரணிலின் படத்தையும், ஆத்தா போனதால் இவர் வந்தார் என சார்ள்ஸின் படத்தையும் பதிவேற்றி
அந்த அன்பர் குசும்புத்தனம் செய்திருந்தார்.
கோத்தா போனதற்கு அரசியல்
நெருக்கடி காரணம்.
மகாராணி போனதற்கு முதுமை
காரணம்.
எதுகை மேனைக்கு இரண்டு பெயர்களும் உதவியிருக்கிறது.
இது இவ்விதமிருக்க, மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதி விஜித்த கேரத், காலிமுகத்திடல் போராட்டக்காரர்களினால்தான் ரணிலுக்கு நாட்டின் உயர் பதவிகள் கிடைத்தன. அதனால், ரணில் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை வழிபடவேண்டும் எனக்கூறியதும் ரணில் வெகுண்டார்.
தான் எவ்வாறு மீண்டும்
பாராளுமன்றம் வந்தேன் என்பதையும் கூறி, முதலில் பிரதமராகவும் பின்னர் இரண்டு மாதங்களில்
ஜனாதிபதியாகவும் மாறிய கதையையும் அவர் சொல்ல
நேர்ந்திருக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், கடந்துசெல்லும் 2022 ஆம் ஆண்டு
அவருக்கு சுக்கிர திசைதான். அவரது வாழ்வில் காட்சிகள் மாறியிருக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின்
தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் வாழ்வில் மாற்றங்கள் நேர்ந்திருக்கவேண்டிய காலம்
இது. ஆனால், அவரது விதி வேறுவிதமாக அமைந்துவிட்டது.
அதனால், பிரதமர் பதவி தனக்கு
வேண்டும் எனக்கோரி மலர்த்தட்டை ஏந்தியவாறு ராஜபக்ஷக்களிடம் தான் செல்லவில்லை எனக்கூறுகிறார்
சஜித் பிரேமதாச.
இந்தப் பின்னணிகளுடன் ஜனாதிபதி
ரணில் தமிழ்க்கட்சிகளுடன் இனப்பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு முன்வந்துள்ளார்.
இங்கும் இழுபறிகள் தொடருகின்றன.
நாட்டின் தேசியப் பிரச்சினையாக இதுவரையில் இருந்துவரும்
இனப்பிரப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீர்வை பெற்றுத் தரக்கூடியவாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்த அரசுகள் முன்பிருந்தன. ஆனால், அங்கும் இழுபறிகள்தான் தொடர்ந்தன. அதனால் தமிழர் தரப்புக்கு தீர்வு என்பது எட்டாக் கனியாகவே இருந்தது.
தொடர்ந்தும் பதவிக்கு வந்த அரசுத்தலைவர்கள் சொன்ன தீர்வுப்பேச்சுக்கள்
அனைத்தும் அந்தக்கனி புளிக்கும் என்ற நிலைக்கே
தள்ளியது.
இப்போது, அத்தகைய பெரும்பான்மை
இல்லாத சூழ்நிலையில் ஜனாதிபதியாகியிருக்கும் ரணில், இனப்பிரச்சினை தீர்வுக்காக பேச்சுவார்த்தையை மீண்டும்
தொடக்கவிருக்கிறார்.
எனினும் அவர் உள்நோக்கத்துடன்
செயல்படுகிறார் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின்
நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நாட்டின் பொருளாதார மீள் கட்டுமானத்துக்கு அவர் தயாராகவேண்டியிருக்கிறது.
அத்துடன் புலம்பெயர் தமிழ்
சமூகத்தினரையும் தேசிய பொருளாதார மீட்சிக்காக உள்நாட்டில் அவர்கள் மூலதனமிடக்கூடிய
அரசியல் ஸ்திரத்தன்மையையும் காண்பிக்கவேண்டியிருக்கிறது.
இனப்பிரச்சினை தீர்வில்
சில அவதானிப்புகள் தொடருகின்றன.
சமஷ்டி முறையில் தீர்வா, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் அமைந்த
வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்குரிய அதிகார பரவலாக்கலா..? இல்லையேல் ஒற்றையாட்சிக்குள்
தீர்வா..?
இங்குதான் முஸ்லிம் மக்களினதும்,
மலையக மக்களினதும் எதிர்காலம் குறித்த பார்வை
துருத்திக்கொண்டிருக்கிறது.
ஜனாதிபதி ரணில், முதலில் வடக்கின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு
செயலணி அமைக்கவிருப்பதாக சொன்னார்.
அதனால், மலையக தமிழ் கட்சிகளும்
கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் புருவங்களை உயர்த்தின.
ஜனாதிபதியின் உத்தேச பேச்சுவார்த்தை
பற்றிய செய்திகள் கசியத் தொடங்கியதும், தமிழர்களுக்கு
காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கிவிடக்கூடாது எனக் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கிறார்
கடும்போக்காளரான மொட்டுக்கட்சியின் பிரதிநிதி
சரத் வீரசேகர.
இவரைப்போன்ற மற்றும் ஒரு
கடும்போக்காளரான விமல் வீரவன்ஸ, இந்தியாவும் மேற்குலகமும் இலங்கையில் நேர்ந்திருக்கும் பொருளாதார நெருக்கடியை
தமக்கு சாதகமாக்கி, இலங்கையை பொறிக்குள் சிக்க வைக்க முயற்சிக்கின்றன என்று குற்றம்
சுமத்தியுள்ளார்.
இவையெல்லாவற்றையும் அவதானிக்கின்றபோது, ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த சங்கிலித் தொடராக தேசிய இனப்பிரச்சினையே காணப்படுகிறது என்ற முடிவுக்கு
நாம் வரமுடியும்.
ஜனாதிபதி 2022 இறுதிப்பகுதியில் சில நல்ல சமிக்ஞைகளையும் காண்பித்திருக்கின்றார். அதில் ஒன்று அரசியல் கைதிகள் சிலரை பொதுமன்னிப்பின்
கீழ் அவர் விடுவித்திருப்பது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும்
மைத்திரி – ரணில் இணைந்திருந்த நல்லாட்சிக்காலத்தில் நடந்திருக்கவேண்டிய இந்த விடுதலைகள்
தற்போது, வெறும் பாராளுமன்ற பிரதிநிதிகளின்
வாக்குப்பலத்துடன் மாத்திரம் வந்திருக்கும் ரணில் விக்கிரமசிங்காவின் பதவிக்காலத்தில்
நடந்திருக்கிறது.
மற்றது : அண்மையில் மாவீரர் தின நிகழ்வகள் எத்தகை கெடுபிடிகளோ,
சட்டச்சிக்கல்களோ இன்றி வெகு கோலாகலமாக உணர்வெழுச்சியுடன் வடக்கிலும் கிழக்கிலும் நடந்திருக்கும்
காட்சி.
இவ்வாறு 2022 இறுதிப்பகுதி பச்சை ஒளியை காண்பித்தாலும்,
கடும்போக்காளர்களிடமிருந்து ஆங்காங்கே சிவப்பு வெளிச்சமும் ஔிர்கின்றது.
மலரவிருக்கும் புத்தாண்டில்
வரும் தமிழர் திருநாளான தைப்பொங்கலன்றும் மேலும் சில தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாவார்கள்
என்ற நம்பிக்கை வீண்போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய
பொறுப்பு யார் கையில் இருக்கிறது என்பதை நாம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை !
---0----
No comments:
Post a Comment