சங்கே முழங்கு - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்


 தமிழ் திரையில் இயக்குனர் திலகம் என்ற சிறப்பு பட்டத்துடன் பல படங்களை இயக்கியவர் கே எஸ் கோபாலகிருஷ்ணன்.இவருடைய வசனங்களை பேசியும் இவர் இயக்கத்தில் நடித்தும் சிவாஜி,ஜெமினி,எஸ் எஸ் ஆர், என்று பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றன.ஆனால் எம் ஜி ஆரின் படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்போ,அல்லது அவரின் படத்தை இயக்கும் சந்தர்ப்பமோ கே எஸ் ஜி க்கு கிட்டவில்லை.பொதுவாக கே

எஸ் ஜியின் படம் என்றால் பக்கம் பக்கமாக வசனங்கள் இருக்கும்,படப்பிடிப்பின் போதே திடீர் தீடீர் என வசனங்கள் மாறும் . அது மட்டுமன்றி படப்பிடிப்பின் போது சிவாஜி உட்பட பல நடிகர்கள் தான் எதிர்பார்த்தது போல் நடிக்காவிட்டால் படப்பிடிப்பு தளத்திலேயே தன்னுடைய அதிருப்தியை வெளிப்படையாக காட்டும் சுபாவம் கொண்டவர் கே எஸ் ஜி . இவை எல்லாம் எம் ஜி ஆரின் படங்களுக்கு பொருந்தாதது.பணமா பாசமா படத்தின் வெற்றியை தொடர்ந்து எம் ஜி ஆரின் நடிப்பில் அவர் இயக்குவதாக தங்கத்தில் வைரம் என்ற படப் பெயருடன் ஓர் விளம்பரம் வெளிவந்தது.ஆனால் படம் வெளிவரவில்லை.


இந்த நிலையில் எம் ஜி ஆரின் நடிப்பில் வள்ளி பிலிம்ஸ் தயாரிப்பில் கலரில் 1972ல் சங்கே முழங்கு என்ற படம் தயாரானது.இந்தப் படத்துக்கு கே எஸ் கோபாலகிருஷ்ணன் வசனங்களை எழுத அவற்றை பேசி எம் ஜி ஆர் நடித்திருந்தார்.தனது வழமையான பாணியில் இருந்து மாறி எம் ஜிஆருக்கு அமைவது போல் அவர் வசனங்களை எழுதியிருந்தார்.பாணி மாறினாலும் கருத்துக்கள் மாறவில்லை.

வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் இருக்கலாம் ஆனால் இதயம் கூட அறியாமல் இருக்குமா, என் முதலாளி ஒரு பெரிய ஆலமரம் அதன் நிழல்ல இளைப்பாற முடியுமே தவிர வளர முடியாது .என்னம்மா சொல்லின் செல்வி இதுதானா நீங்க கற்ற கல்வி போன்ற வசனங்களில் கே எஸ் ஜியின் முத்திரை பளிச்சிட்டது .


எம் ஜி ஆரின் நண்பரான சடையப்ப செட்டியார் ஏற்கனவே தயாரித்த கணவன் படத்துக்கு கதை எழுதி அதில் நடித்திருந்தார் எம் ஜி ஆர்!இப்போது சங்கே முழங்கு செட்டியாரின் இரண்டாவது படமாக உருவானது.இந்தப் படத்தில் தனது வழமையான கதாநாயகிகளை கழற்றி விட்டு லட்சுமியுடன் ஜோடி சேர்ந்தார் எம் ஜி ஆர்.

படத்தில் பல காட்சிகளை தாடி வைத்து தலையில் டர்பான் போட்டு கருப்பு கண்ணாடியுடன் சீக்கியராக எம் ஜி ஆர் ஸ்டைலாக வருகிறார்.அதுமட்டும் அன்றி துடிப்புடனும் நடிக்கிறார்.எவ்வளவு துடிப்பென்றால் ஹிந்தித் திரையுலகில் கவர்ச்சி நடனத்தில் கொடி கட்டி பறந்த ஹெலனுடன் துள்ளாட்டம் போடுகிறார்.சிலர் குடிப்பது போலே நடிப்பார்,சிலர் நடிப்பது போலே குடிப்பார் பாடலில் பாடலின் கருத்தை கேட்பதா அல்லது நடனத்தை பார்ப்பதா என்ற மயக்கம் ரசிகர்களுக்கு!இது தவிர நான் சொல்லித் தர என்ன உள்ளதோ பாடலுக்கும் ஹெலன் ஆடும் ஆட்டம் அச்சா. டான்ஸ் மாஸ்டர் ஏ கே சோப்ராவுக்கு ஒரு சபாஷ்!

படத்தில் மனதை உருக்கும் வாழ்க்கை தத்துவத்தை சொல்லும்

பாடலும் உண்டு.நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கும் நன்றி பாடலில் வரும் வார்த்தைகள் வைரம்.இது தவிர பொம்பளை சிரிச்சா போச்சு,தமிழில் இது ஒரு புதியகலை,இரண்டு கண்கள் பேசும் மொழியிலும் பாடல்களும் உள்ளன.மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் ஸ்கோர் செய்ய டி எம் சௌந்தரராஜன்,எல் ஆர் ஈஸ்வரி இருவரும் அதற்கு ஈடு கொடுத்தார்கள்.படத்தில் ஆறு பாடல்கள்.ஆறையும் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

எம் ஜி ஆருடன் ஜோடி சேர்ந்த லட்சுமி நடிப்பில் மட்டுமன்றி பாடல் காட்சிகளிலும் சோபிக்கின்றார். படத்தில் எம் ஜி ஆருக்கு இணையான பாத்திரம் எஸ் ஏ அசோகனுக்கு.சதித் திட்டம் தீட்டுவது,பிறகு வி கே ராமசாமியிடம் ஆலோசனை கேட்டு புலம்புவது,என்று தன்னுடய பாணியில் அசத்தியிருந்தார் அசோகன்.வக்கீலாக வரும் வி கே ஆர் வில்லன் என்றாலும் கலகப்பூட்டுகிறார்.சோ படத்தில் இருக்கிறார்,அவருக்கு ஜோடியும் இல்லை,நகைச்சுவையும் இல்லை.இவர்களுடன் டி கே பகவதி , கள்ளபார்ட் நடராஜன்,ஜி சகுந்தலா,ஜெய கொவ்சல்யா,பேபி ஸ்ரீதேவி,ஆகியோரும் நடித்தனர்.எல்லாப் படங்களிலும் எப்படியோ நடித்து விடும் வி எஸ் ராகவன் இந்தப் படத்திலும் எம் ஜி ஆரின் வளர்ப்பு தந்தையாக நடித்திருந்தார்.ஆனால் படத்தில் ஜஸ்டின் இல்லாதது ஒரு குறைதான்.


சந்தேக நபர் மறைந்து திரிந்து போலீசில் சேர்ந்து உண்மை குற்றவாளியை கண்டுபிடிப்பதாக அமைந்த கதை 72ல் நம்பமுடியாத விஷயமாக இருந்தது.ஆனால் பத்து.பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக செய்தி வந்தது.கதாசிரியரின் கற்பனைக்கு ஏது எல்லை! படத்தின் கதை பாண்டிச்சேரியில் நடப்பதாக அமைந்த போதும் ஒரு காட்சி கூட பாண்டிச்சேரியில் படமாக்கப்படவில்லை. எம் ஜி ஆரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வி ராமமூர்த்தி இப் படத்தையும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருந்தார்.

ஐம்பது வருடங்களுக்கு முன் வெளிவந்த இந்த படம் சில விஷயங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.தனி கதாநாயகியாக எம் ஜி ஆருடன் லட்சுமி ஜோடி சேர்ந்து நடித்த ஒரே படம் இதுதான்.தாய் சொல்லைத் தட்டாதே படம் தொடங்கி எம் ஜி ஆரின் பல படங்களுக்கு,படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதிய கண்ணதாசன் இறுதியாக அனைத்து பாடல்களையும் எம் ஜி ஆர் படத்துக்கு எழுதியதும் இந்த படத்துக்குத்தான்.கே எஸ் கோபாலகிருஷ்ணன் எம் ஜி ஆருக்கு வசனம் எழுதிய ஒரே படமும் இதுதான்.எம் ஜி ஆருடன் சோ சேர்ந்து நடித்த கடைசி படமும் இதுவேதான்!

எம் ஜி ஆரின் மனம் அறிந்து படத்தை இயக்கும் ப நீலகண்டன் இந்தப் படத்தையும் தொய்வில்லாமல் இயக்கியிருந்தார்.

No comments: