உலகச் செய்திகள்

13,000 உக்ரைன் துருப்பினர் பலி

உக்ரைன் போர்: புட்டினுடன் பேசுவதற்கு பைடன் தயார்

குழப்பத்தை தவிர்க்க இம்ரான் கான் பேரணியை கைவிட முடிவு

அல்சைமர் நோய்க்கான மருந்தில் முன்னேற்றம்

சீன முன்னாள் ஜனாதிபதி ஜியாங் சமின் காலமானார்


13,000 உக்ரைன் துருப்பினர் பலி

ரஷ்ய ஆக்கிரமிப்பு ஆரம்பித்தது தொடக்கம் 13,000 வரையான உக்ரைனிய படையினர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

10,000 மற்றும் 13,000க்கும் இடைப்பட்ட துருப்பினர் கொல்லப்பட்டனர் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியின் ஆலோசகரான மிகைலோ பொடொலியக் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழப்புகள் பற்றி உக்ரைன் தகவல் அளிப்பது மிக அரிதாக இருக்கும் நிலையில் பொடொலியக்கின் இந்தக் கருத்தை அந்நாட்டு இராணுவம் உறுதி செய்யவில்லை. தினசரி 100 முதல் 200 உக்ரைனிய படையினர் கொல்லப்படுவதாக அவர் கடந்த ஜூன் மாதம் கூறியிருந்தார்.

உக்ரைனிய தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பொடொலியக், பொதுமக்களின் உயிரிழப்பு கணிசமாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.   நன்றி தினகரன் 






உக்ரைன் போர்: புட்டினுடன் பேசுவதற்கு பைடன் தயார்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர விருப்பம் இருந்தால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோனுடன் சேர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற பைடன், புட்டின் அதனை இன்னும் செய்யவில்லை என்று வலிறுயுத்தினார்.

ரஷ்யாவின் போருக்கு எதிராக தொடர்ந்து நிற்பதாக இரு தலைவர்களும் இதன்போது தெரிவித்தனர். ஏற்க முடியாத சமரசத்திற்கு உக்ரைனை ஒருபோதும் வலியுறுத்தமாட்டோம் என்று பிரான்ஸ் தலைவர் குறிப்பிட்டார். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கு பின்னர் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், உக்ரைனின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்க தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக உறுதி பூண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ,; உக்ரைனியப் போரைத் தடுத்துநிறுத்தும் வாய்ப்பை மேற்கத்திய நாடுகள் தவறவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

நேட்டோ கூட்டணி விரிவுபடுத்தப்படுவதை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யா முன்மொழிந்தது புறக்கணிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனுக்குச் சிறப்புப் பாதுகாப்புத் தகுதி கொடுக்கும்படி ரஷ்யா பரிந்துரைத்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். மேற்கத்திய நாடுகள் உக்ரைன் போரில் நேரடியாகப் பங்குவகிப்பதாக லாவ்ரோவ் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ரஷ்யா தொடர்ந்து தயாராய் இருப்பதாக அவர் கூறினார்.

ரஷ்யாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த, மேற்கத்திய நாடுகள் உக்ரைனுடன் கூட்டுச் சதியில் ஈடுபடுவதாகத் லாவ்ரோவ் சொன்னார். அவை ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாய் விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.   நன்றி தினகரன் 






குழப்பத்தை தவிர்க்க இம்ரான் கான் பேரணியை கைவிட முடிவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், குழப்பம் ஏற்படும் அச்சம் காரணமாக தலைநகர் இஸ்லாமாத்தை நோக்கிய ஆதரவாளர்களின் நீண்ட பேரணியை கைவிட்டுள்ளார். முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சட்டமன்றங்களில் இருந்து தமது கட்சி வெளியேறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

‘இஸ்லாமாபாத்துக்கு செல்லாமல் இருக்க நான் முடிவு செய்தேன். அது பெரும் அழிவை ஏற்படுத்தி நாட்டுக்கே இழப்பை உருவாக்கும் என்பது எனக்குத் தெரியும்’ என்று படுகொலை முயற்சியில் இருந்து உயிர்தப்பிய பின் முதல் முறை பொதுவெளியில் தோன்றிய இம்ரான் கான் ஆதரவாளர்கள் முன் தெரிவித்தார்.

ராவல்பிண்டியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பேரணியில் பெரும் திரளான மக்கள் ஒன்று திரண்டனர். இந்த ஆதரவாளர்கள் தலைநகரை நோக்கி ஊர்வலமாகச் செல்ல திட்டமிட்டிருந்தனர். இது பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தும் சூழலிலேயே பேரணியை கைவிட இம்ரான் கான் தீர்மானித்துள்ளார்.

கடந்த மே மாதம் இம்ரான் கான் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தில் நடத்திய பேரணி வன்முறையில் முடிந்தது.   நன்றி தினகரன் 






அல்சைமர் நோய்க்கான மருந்தில் முன்னேற்றம்

அல்சைமர் நோயினால் மூளையில் ஏற்படும் அழிவை மெதுவாக்கும் முதல் மருந்தின் சோதனையில் சாதகமான முடிவு கிடைத்துள்ளது. பல தசாப்தங்கள் நீடித்த தோல்விக்குப் பின்னரே இந்த மருந்தை கண்டுபிடிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்.

எனினும் இந்த மருந்தில் சில பாதகமான நிகழ்வுகள் பதிவாகி இருக்கும் நிலையில் அதன் பாதுகாப்பு பற்றியும் தொடர்ந்து கவலை உள்ளது.

லெகானமாப் என்ற அந்த மருந்தை மருந்து தயாரிப்பு நிறுவனங்களான இஸ்சய் மற்றும் பயோஜின் என்ற நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இந்த மருந்தின் 3ஆம் கட்ட சோதனை முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதில் அல்சைமர் பாதிக்கப்பட்டோரிடம் ஏற்படும் அறிவாற்றல் மற்றும் செயல்பாட்டு சரிவை லெகானமாப் மருந்து 27 வீதம் குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் உருவாகும் நச்சுத்தன்மை வாய்ந்த பீட்டா – அமிலாய்டு புரதங்களின் திட்டுகளை நீக்கும் வகையில் லெகானமாப் மருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 





சீன முன்னாள் ஜனாதிபதி ஜியாங் சமின் காலமானார்

தியானன்மன் சதுக்க போராட்டங்களின் பின் ஆட்சிக்கு வந்த சீன முன்னாள் ஜனாதிபதி ஜியாங் சமின் தனது 96ஆவது வயதில் காலமானார் என்று சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

இரத்தப் புற்றுநோய் மற்றும் உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் ஜியாங் நேற்று (30) நண்பகல் மரணமடைந்ததாக சின்ஜியாங் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சீனா சர்வதேச அளவில் பெரும் புறக்கணிப்பை எதிர்கொண்ட 1989 தியானன்மன் சதுக்க ஜனநாயக ஆதரவு ஆர்ப்பட்டங்கள் முடக்கப்பட்ட சம்பவத்தின் பின் ஆட்சிக்கு வந்த ஜியாங்கின் கீழ் சீனா ஒரு வலுவான பொருளாதார சக்தியாக உருவெடுத்தது.

அவர் 1993 தொடக்கம் 2003 வரை சீன ஜனாதிபதியாக பதவி வகித்தார்.   நன்றி தினகரன் 






No comments: