கொவிட் பெருந்தொற்றையடுத்து உலகெங்கும் பொருளாதார நெருக்கடி தோன்றியது தவிர்க்கமுடியாததுதான். இதிலிருந்து மீளுவதற்கான செயற் திட்டங்களைத்தான் ஒவ்வொரு நாட்டின் அரசுகளும் மேற்கொள்ளவேண்டும்.
பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் படிக்கும்
மாணவர்களுக்கும் கூட இந்த பொது அறிவு நிச்சயம் இருக்கும். சாதாரண குடிமகன் கூட குடும்பத்தின் வரவு – செலவில் பொருளாதார நெருக்கடி காணும் பட்சத்தில் அநாவசிய செலவுகளை தவிர்க்கத்தான் பார்ப்பார்.
ஆனால், இலங்கை பாராளுமன்றத்தின்
ஆசனங்களில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகளும்,
நாட்டை ஆளும் வர்க்கத்தினரும் என்ன செய்கிறார்கள்,..?
நீண்ட காலமாக நாட்டில்
மின்வெட்டு நடைமுறையிலிருக்கிறது. அதிலும்
பாரபட்சம் நிலவுகிறது. வசதிபடைத்த செல்வந்தர்கள்,
அரசியல் பிரமுகர்கள் வசிக்கும் பிரதேசங்களில்
மின்வெட்டு இல்லை.
மின்வெட்டினால், பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் புறநகரங்களில் வசிக்கும்
மாணவர்கள். கிராமப்புறங்களில் மண்ணெண்ணை விளக்கேற்றி அவர்கள் படிக்க தயாரானாலும் சிறிது காலம் அதற்கும் பற்றாக்குறை
நிலவியது.
இவ்வளவு நெருக்கடிக்குள்ளும்
வாழும் மக்கள்தான் தேர்தல் காலங்களில் அரசியல் வாதிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி,
வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்புகிறார்கள்.
ஆனால், தம்மை நம்பி வாக்களித்தவர்களுக்கு
சிறிதளவேனும் விசுவாசமாகத்தானா இந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும், ராஜாங்க
அமைச்சர்களும் இருக்கிறார்கள்…?
நாட்டிலே தொடர்ந்தும் மின்வெட்டு.
ஆனால், பல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்
இன்னமும் மின் கட்டணத்தை செலுத்தாமலிருக்கின்றனர்.
அவ்வாறு செலுத்தப்படாமல்
நிலுவையிலிருக்கும் மின்கட்டணம் சுமார் 42 கோடி ரூபாய். இவர்களுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து கிடைக்கும்
மாத வருமானம், இதர வேதனங்கள், வாகனங்கள், அவற்றின் சாரதிகளுக்கான சம்பளம், மற்றும் தொலைபேசி
- வீட்டு வசதி உட்பட இதர செலவுகள் என்பன மற்றும் ஒரு பெரிய தொகை.
பாராளுமன்ற அமர்வில் ஒரு தடவை ஆசனத்தில் உட்கார்ந்துவிட்டு எழும்போது
மற்றும் ஒரு வேதனம். இவை அனைத்தும் மக்களிடமிருந்து
சுரண்டப்படும் பணம்தானே..?
இவர்களுக்கு துளியளவும்
இரக்கமே இல்லையா..?
இது இவ்விதமிருக்க, பாராளுமன்றத்தில்
அண்மையில் நடந்த வரவு – செலவுத்திட்ட விவாதங்களின்போது செலவிடப்பட்ட தொகை சுமார் இருபது
கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
மின்கட்டண நிலுவை மற்றும்
வரவு – செலவுத்திட்ட விவாதத்தின்போது செலவிடப்பட்ட பணம் என்பவை பற்றிய செய்திகள்தான்
கசிந்திருங்கின்றன.
வெளியே தெரியாமல் எத்தனை இருக்கிறதோ தெரியவில்லை.
காலிமுகத்திடலில் அன்று
மக்கள் எழுச்சிகொண்டு ஏன் போராடினார்கள்..? அங்கிருந்து கோத்தா கோ என்ற குரல் மேலோங்கி
ஒலித்த அதேசமயம் , பாராளுமன்றத்திலிருக்கும் அனைவரும் வெளியேறவேண்டும், சிஸ்டமே மாறவேண்டும் என்ற குரலும் சன்னமாக ஒலித்ததை
நாம் மறந்துவிட முடியாது.
அதனால்தான், கோத்தபாய ராஜபக்ஷவை
விரும்பாத - பொதுஜன பெரமுன அரசின் மீது வெறுப்புக்கொண்டிருந்த
எதிரணியைச்சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் பிரமுகர்களும் கூட காலிமுகத்திடல்
பக்கம் வருவதை தவர்த்தார்கள்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு
அங்கே வருவதற்கு விருப்பம் இருந்தபோதிலும், அங்கு சென்றால், அங்கிருக்கும் “ அறகலய “ போராட்டக்காரர்கள் தன்னைக் கண்டதும் கேலியாக ஓலம் எழுப்பி சத்தம் போடுவார்கள் எனத் தயங்கினார்.
இந்தப்பின்னணிகளுடன் மற்றும்
ஒரு செய்தியையும் அவதானிக்க முடிகிறது.
உள்ளுராட்சித் தேர்தல்கள்
விரைவில் நடக்கவேண்டும். ஆனால், அது நடந்தால் பலரதும் அரசியல் எதிர்காலம் வெட்ட வெளிச்சமாகிவிடும்.
அதனால்தான் பொதுஜன பெரமுனவைச்சேர்ந்த உள்ளுராட்சி
மன்றங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவை சந்தித்து குறிப்பிட்ட தேர்தலை
நாட்டில் நீடிக்கும் பொருளாதார நெருக்கடியை காரணம் காண்பித்து ஒத்திவைக்குமாறு கோரியிருக்கிறார்கள்.
நாட்டுக்கு இந்த நெருக்கடியை
அழைத்து வந்தவர்கள் யார்..? தொடர்ந்தும் மின்கட்டணத்தை செலுத்தாமல் மின்சார சபையை ஏமாற்றி
வருவது யார்…?
வரவு – செலவுத்திட்ட விவாதத்திற்காக
மக்களின் பணத்தை வீண் விரயம் செய்துகொண்டிருப்பவர்கள் யார்..?
வரவு – செலவுத் திட்ட விவாதம்
13 நாட்கள் நடந்திருக்கின்றன. இதில் ஒரு
நாளன்று கேள்விகள் கேட்கவிருந்த எம். பி.க்கள்
சிலரும் அக்கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டிய அமைச்சர்கள் சிலரும் பாராளுமன்றத்திற்கு
வரவில்லை. எனினும், அன்றைய நாளுக்காக சுமார் ஒரு கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.
ஆளும் வர்க்கம் அதிகார
வர்க்கமாகவும் இருப்பதனால்தான் மக்கள் பொருளாதார நெருக்கடி வந்தவேளையில் வீதிக்கு வந்து
போராடினார்கள். அந்த நெருக்கடி இன்னமும் முற்றாகத்தீரவில்லை.
மின் வெட்டு தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கிறது.
இதற்கெல்லாம் சேர்த்து
தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்ற அச்சத்தில்தான் தேர்தலை ஒத்திவைக்குமாறு ஆளும்வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளுராட்சி
மன்றங்களின் பிரதிநிதிகள் பேசத் தொடங்கியிருக்கின்றனர்.
ஜனாதிபதியிடம் தூது சென்றுள்ளனர்.
இதேவேளை, அரசின் நேரடி நிருவாகத்திலிருக்கும் ஐம்பதிற்கும்
மேற்பட்ட நிறுவனங்கள் தொடர்ந்தும் நட்டத்தில் இயங்கிவருகின்றன. அவற்றில் ஒன்று மின்சார
சபை. ஏனைய முக்கிய நிறுவனங்கள் பெற்றோலிய கூட்டுத்தாபனம். ஶ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ். இவற்றை பயன்படுத்தியவர்களில்
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அடக்கம்.
இவை நட்டத்தில் இயங்குவதற்கு
சீரான நிருவாக கட்டமைப்பு இல்லாதமையே பிரதான காரணம். வேலியே பயிரை மேய்ந்திருப்பதுபோன்று
மின்சார கட்டணத்தை செலுத்தாத அரசியல் வாதிகள் பாராளுமன்றில் இருக்கிறார்கள். இவர்கள்
மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு, நாட்டை மீளக்கட்டி எழுப்புவதற்கு அவதாரம் எடுத்து
வந்துள்ள மாண்புமிகு புதிய ஜனாதிபதி என்ன செய்யப்போகிறார்…?
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரட்டைக் குடியுரிமையை வைத்துக்கொண்டிருப்பவர்கள்
மீதும் இன்னமும் உரிய முறையில் நடவடிக்கையை
அவர் எடுக்கவில்லை.
அதனை சபாநாயகர் பார்த்துக்கொள்ளட்டும்,
உள்ளுராட்சி மன்றத்தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை தேர்தல் ஆணையாளர் பார்த்துக்கொள்ளட்டும்.
நிலுவையிலிருக்கும் கோடிக்கணக்கான
ரூபாய்களை வசூலிக்கும் வேலையை மின்சார சபைத்தலைவர் பார்த்துக்கொள்ளட்டும், நான் எனது
வேலைகளை பார்க்கின்றேன் என அவர் அடுத்த ஜனாதிபதித்தேர்தல் கனவில் இருக்கிறாரோ தெரியவில்லை!?
---0---
No comments:
Post a Comment