உலகச் செய்திகள்

உக்ரைன் சரணடையாது 

பிரபல ஈரான் நடிகை கைது

ஜி20 மாநாட்டில் புட்டின் பங்கேற்பு

பலஸ்தீனிய சட்டத்தரணி இஸ்ரேலால் நாடுகடத்தல்

இஸ்ரேலில் தீவிர வலதுசாரி அரசை அமைக்க ஒப்பந்தம்


உக்ரைன் சரணடையாது 

உக்ரைன் ஒருபோதும் சரணடையாது என்று அமெரிக்கா விஜயம் மேற்கொண்ட அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது உறுதி அளித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்குப் பின்னர் முதல் வெளிநாட்டு விஜயமாகவே செலன்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ளார். இதில் உக்ரைனுக்கான அமெரிக்காவின் இராணுவ உதவி நன்கொடையில்லை என்றும் அது எதிர்கால பாதுகாப்புக்கான முதலீடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றம் அவரது பேச்சை பலத்த கரவொலியோடு வரவேற்றது. அமெரிக்கா தொடர்ந்து உதவி நல்கும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் உறுதி கூறினார். உக்ரைனில் நீடிக்கும் பத்து மாதப் போரில் இராணுவ வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்லாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அகதிகளின் எண்ணிக்கை எட்டு மில்லியனை நெருங்குகிறது. அவர்களில் 90 வீதத்தினர் பெண்களும் சிறுவர்களும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.   நன்றி தினகரன் 

பிரபல ஈரான் நடிகை கைது

அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு அளித்த ஈரானின் பிரபல நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொய்யான தகவலை பரப்பியதாக குற்றம்சாட்டியே டரானே அலிதூஸ்தி என்ற நடிகை கைது செய்யப்பட்டதாக ஈரானிய அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த வாரம் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆடவர் ஒருவர் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை கண்டித்திருந்தார்.

அலிதூஸ்தி ஒஸ்கார் விருது வென்ற ‘தி சேல்ஸ்மன்’ என்ற திரைப்படத்தில் நடித்தவராவார்.

ஈரானில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நாட்டில் பதற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

ஜி20 மாநாட்டில் புட்டின் பங்கேற்பு


இந்தியாவில் நடைபெறும் ஜி20 அமைப்பு நாடுகளின் தலைவர்களது உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பங்குபற்றுவார் என்று அந்நாட்டின் ஜனாதிபதி நிபுணர்கள் பணியகத்தின் பிரதித் தலைவர் ஸ்வெட்லானா லுகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஜி20 அமைப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதைத் தவிர்த்துக் கொண்ட போதிலும் இந்தியாவின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் அவர் கலந்து கொள்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜி 20 அமைப்பின் தலைமைப் பதவியை இந்தியா ஏற்றுள்ளது. அதனை அடையாளப்படுத்தும் வகையிலான முதலாவது கூட்டமொன்று உதய்பூரில் நடைபெற்றது.   நன்றி தினகரன் 


பலஸ்தீனிய சட்டத்தரணி இஸ்ரேலால் நாடுகடத்தல்

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என குறிப்பிட்டு பலஸ்தீன மற்றும் பிரான்ஸ் மனித உரிமை சட்டத்தரணி ஒருவரை இஸ்ரேல் நாடு கடத்தியுள்ளது.

37 வயதான சலாஹ் ஹமூரி என்ற அந்த சட்டத்தரணி நேற்றுக் காலை பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு பிரான்ஸுக்கு விமானம் ஏற்றப்பட்டுள்ளார்.

அவர் ஜெரூசலத்தில் வாழ்ந்தவராவார். பயங்கரவாத அமைப்பு ஒன்றில் அங்கம் வகிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு அவர் குடியிருக்கும் உரிமையும் நீக்கப்பட்டுள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை ஹமூரி நிராகரிப்பதோடு, இதனை உரிமைக் குழுக்கள் கண்டித்துள்ளன.

எனினும் இஸ்ரேலியர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த ஹமூரி திட்டமிட்டதாக இஸ்ரேலிய உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஹமூரி தனது தாய் வழியால் பிரான்ஸ் குடியுரிமையை பெற்றவராவார். ஜெரூசலத்தில் குடியிருக்கும் உரிமையை அவர் வைத்திருந்தார். எனினும் இந்த உரிமையை இஸ்ரேலிய நிர்வாகத்தால் அகற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

இஸ்ரேலில் தீவிர வலதுசாரி அரசை அமைக்க ஒப்பந்தம்

இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை காணாத தீவிர வலதுசாரி அரசு ஒன்றை அமைப்பதற்கு உடன்படிக்கை எட்டப்பட்டதை அடுத்து பென்ஜமின் நெதன்யாகு மீண்டும் அதிகாரத்திற்கு திரும்யுள்ளார்.

கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் வெற்றியீட்டிய நெதன்யாகு ஆறாவது தவணைக்காக பிரதமராக பதவி ஏற்கவுள்ளார். அவரது கூட்டணியில் அரபு எதிர்ப்பு இனவாத செயலில் ஈடுபட்டதற்காக குற்றங்காணப்பட்ட தீவிர வலதுசாரி கட்சிகளும் உள்ளடங்கியுள்ளன. இந்த புதிய அரசு ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் இஸ்ரேலின் பிடியை அதிகரிக்கும் என்று பலஸ்தீனர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

'(புதிய அரசை அமைக்க) என்னால் முடிந்தது' என்று நெதன்யாகு ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசை அமைப்பதற்கு ஜனாதிபதி இசாக் ஹர்சொக் விதித்த காலக்கெடு புதன்கிழமை நள்ளிரவில் முடிவதற்கு சில நிமிடங்கள் இருக்கும்போதே புதிய அரசுக்கான உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரச்சினைக்கு சர்வதேச தீர்வாக உள்ள இரு நாட்டுக் கொள்கையை நெதன்யாகுவின் கூட்டணி கட்சிகள் நிராகரிக்கின்றன. இதில் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் மூன்றாவது அதிக இடங்களைப் பிடித்த மாதவாத சியோனிச கட்சி மேற்குக் கரையை இஸ்ரேல் தனது ஆட்புலத்திற்குள் இணைத்து அங்கு பரந்த அளவு அதிகாரங்களை பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது. 1967 போரில் மேற்குக் கரை, கிழக்கு ஜெரூசலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. இங்கு தற்போது 600,000க்கும் அதிகமான யூதக் குடியேறிகள் வாழ்கின்றனர். இந்தக் குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்திற்கு எதிரானதாகும்.

இந்நிலையில் ஆட்சி அமைக்கவுள்ள புதிய அரசின் சீர்திருத்தத் திட்டங்கள் குறித்து சட்டமா அதிபர் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மீறிச் செயற்பட எம்.பிக்களுக்கு அதிகாரம் அளிப்பது இஸ்ரேலிய ஜனநாயகத்தை அச்சுறுத்தும் செயல் என கூறுகின்றனர்.   நன்றி தினகரன் No comments: